
பட அதிபரை அதிரவைத்த இயக்குனர் சிவா!
சினிமாவைப் பொறுத்தவரை நல்ல கதைகளில் நடிக்கின்றனரோ இல்லையோ, அதிக சம்பளத்துடன் யார் நடிக்கின்றனரோ அவர்கள் தான் முன்னணி கதாநாயகன் என்றொரு பேச்சு இருக்கிறது. அதனால், விஜய் மற்றும் அஜித் ஆகியோர், படத்துக்குப் படம் தங்களது சம்பளத்தை உயர்த்தி வருவது போன்று, படங்களின் பட்ஜெட்டையும் உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில், வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை, 100 கோடியில் தயாரிக்க திட்டமிட்டனர். இதனால், அப்படத்தை தயாரிக்கவிருக்கும் ஏ.எம்.ரத்னம் பதறிப்போனார். காரணம், அஜித் படங்களுக்கு அவ்வளவு வியாபாரம் கிடையாது என்பதால், ஒருவழியாக இயக்குனர் சிவாவிடம் பேசி, இப்போது, 80 கோடியில் படத்தை தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், இப்போது, 'சரி' என்று தலையாட்டி விட்டு பின், தயாரிப்பு செலவை, 100 கோடிக்கு இழுத்து விடுவரோ என்று அச்சப்படுகிறார்.
— சினிமா பொன்னையா
அளவுகோல் வைத்த ஸ்ருதிஹாசன்!
இந்தியில் ஸ்ருதிஹாசன் நடித்த முதல் படமான, லக் படத்திலேயே டூ பீஸ் நீச்சல் உடைதரித்து, பாலிவுட்டை கலக்கினார். அதையடுத்து படத்துக்குபடம் அவரது கிளாமர் எல்லை விஸ்தரிக்கப்பட்டு அது ஆபாசமாகியது. இந்நிலையில், தெலுங்கில் நடித்த சில படங்களின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியானதால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார் ஸ்ருதிஹாசன். அவருக்கு எதிராக மாதர் சங்கங்களும் கொடி பிடித்தன. அதனால், தற்போது கவர்ச்சி விஷயத்தில் அடக்கி வாசிக்க முடிவெடுத்துள்ளார். 'இனிமேல், எந்த படமாக இருந்தாலும் ஒரு அளவுகோல் வைத்து நடிக்கப் போகிறேன். என்னதான் கதைக்கு தேவை என்று கூடுதல் கவர்ச்சிக்கு இயக்குனர்கள் அடிபோட்டாலும், இதுதான் என் எல்லை என்று உறுதியாக இருப்பேன்...' என்கிறார் ஸ்ருதி. சூடு கண்ட பூனை அடுப்படிக்கு செல்லாது!
— எலீசா
ஜர்னலிசம் படிக்கும் மீரா நந்தன்!
வால்மீகி படத்தில் நடித்த மீராநந்தன், தற்போது சரத்குமார் நடிக்கும், சண்டமாருதம் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு சினிமா மீது பெரிய நம்பிக்கை இல்லை. சினிமா வாய்ப்புகள் குறையும் நேரத்தில், ஏதாவது மீடியாக்களில் நிருபராக பணியாற்ற ஆசைப்படுகிறார். அதனால், தற்போது மணிப்பால் யுனிவர்சிட்டியில் தொலைதூர கல்வி மூலம், மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசம் படித்து வருவதால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில், லட்சுமிமேனனைப் போன்று மீராநந்தனும் புத்தகமும், கையுமாகத்தான் காட்சி தருகிறார். காலத்துக்கு தக்கப்படி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
— எலீசா
அனிருத் காட்டில் மழை!
விஜய்யின், கத்தி படத்திற்கு இசையமைத் திருக்கும் அனிருத், தனக்கு முன் இருந்த பல முன்னணி இசையமைப்பாளர்களை பின்தள்ளி, முன்னணி இடத்துக்கு வந்து விட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் யுவன் சங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் சமீபத்திய பாடல்களை விட, அனிருத்தின், கத்தி படப் பாடல்கள் தான் இப்போது வரை, ஹிட் லிஸ்டில் உள்ளது. இதனால், இதுவரை, ஹைகிளாஸ் இசை கொடுத்து வந்த இசையமைப்பாளர்களும், அடுத்து, அனிருத் ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க முடிவெடுத்திருக்கின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
ஆந்திராவைச் சேர்ந்த அந்த ஸ்ரீ நடிகை, மெரினா நடிகருடன் நடித்தபோது, அவர் சிறிய கதாநாயகர் என்பதால் கண்டுகொள்ளாமல் இருந்தவர், இப்போது அவர் பெரிதாக வளர்ந்து நிற்பதால், அவரது ஆஸ்தான நடிகையாகி விட வேண்டும் என்று, கூடுதல் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால், நடிகரின் உறவாடலும் அதிகரித்து விட்டது. விளைவு, ஏற்கனவே ஒரு நடிகையுடன் நடிகர் உறவாடி வந்தபோது, அவரது குடும்பத்தில் வீசிய காற்று, தற்போது மறுபடியும் வீசத் துவங்கியுள்ளது.
அங்காடித்தெரு நடிகை கோடம்பாக்கத்தில் தீவிர பட வேட்டை நடத்துகிறார். ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்த அந்த, களவாணி நடிகருடன் மீண்டும் இணைந்திருக்கும் அம்மணி, இரண்டாம் தட்டு நடிகைகள் சிலரது வாய்ப்புகளையும் வேட்டையாடத் துவங்கியிருக்கிறார். இதனால், அந்த ப்ரியமான நடிகைக்கு பெருத்த தலைவலியாயிருக்கிறது. அதனால், தனக்கு நெருக்கமான இயக்குனர்களை தக்க வைத்துக்கொள்ள படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.
துளிகள்!
* அஜித்தின், என்னை அறிந்தால் படத்தில் அனுஷ்கா, த்ரிஷாவைத் தொடர்ந்து, இப்போது, பார்வதி நாயரும் மூன்றாவது நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.
* புதிதாக ஒப்பந்தமாகும் புதிய படங்களில் நடிக்க, சம்பளத்தை திடீரென்று உயர்த்தியுள்ளார் ஸ்ரீதிவ்யா.
* ப்ரியா ஆனந்துக்கு போரடித்தால், ஷாப்பிங் மால்களுக்கு சென்று விடுவார். அப்போது, தன்னுடன் சில தோழிகளையும் கூட்டிச்சென்று, அன்றைய பொழுதை ஜாலியாக கழிப்பார்.
அவ்ளோதான்!

