
அன்புள்ள அம்மாவுக்கு,
என் வயது, 44; மத்திய ஆயுத காவல் படையில், தலைமை காவலர் பதவியிலிருந்து, தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். வாழ்க்கையில் சந்தோஷமும், மனநிம்மதியும் இன்றி வாழும் எனக்கு வழிகாட்டுங்கள். 1991ல் பணிக்கு சேர்ந்தேன். 1995ல், திருமணம் நடந்தது. 1997ல், ஒரு பெண் குழந்தையும், 2000ம் ஆண்டில், ஆண் குழந்தையும் பிறந்தது. 2005 முதல் மனைவி மற்றும் குழந்தைகள், கிறிஸ்துவ மதத்துக்கு மாறி விட்டதால், 2008ல் விவாகரத்து வாங்கி விட்டேன். குழந்தைகள் இரண்டும், அவள் வசம் உள்ளனர்.
அடுத்து, 2009ல், இரண்டாவது திருமணம் செய்தேன். என் மனைவிக்கும், இரண்டாவது திருமணம் தான். அவளுக்கு, 12 வயதில், ஒரு பெண் இருக்கிறாள். அப்படி இருந்தும் வரதட்சணை, சீர் என எதுவும் வாங்காமல், மிக எளிமையாக கோவிலில் திருமணம் நடந்தது.
என் மனைவிக்கு, 15 வயதிலேயே சொந்த மாமாவுடன் திருமணம் நடந்து, மனக்கசப்பின் காரணமாக, ஒரு பெண் குழந்தையுடன் பிரிந்து விட்டாள். பின், 2009ல் என்னுடனான திருமணத்திற்கு பின், நான்தான் அந்த குழந்தையை பத்தாம் வகுப்பு வரை, அசாமிலும், தமிழகத்திலும் படிக்க வைத்தேன். நான் வீட்டிற்கு ஒரே மகன். எனக்கு, இரண்டு வீடுகள் மற்றும் காலி மனைகள் உள்ளன. என் தந்தையார், கடந்த ஆண்டு மறைந்து விட்டதால், தாயார் மட்டுமே உள்ளார். நான் வெளியூரில் வேலையில் இருப்பதால், என் மனைவி கீழ் போர்ஷனிலும், என் தாயார் மாடியிலும் இருந்தனர்.
எனக்கு மாமியார் இல்லை; மாமனார் கோவில் அர்ச்சகர். மாதத்திற்கு பத்து நாட்கள் இங்கு வந்து தங்கி, என் மனைவியிடம் ஏதாவது சொல்லிக் கொடுத்து விட்டு போய் விடுவார். நான் விடுமுறையில் வரும் போது எல்லாம் சண்டை போடுவாள். மாடியில் இருக்கிற என் தாய், தகப்பனாரை பார்க்கச் சென்றால், அதற்கும் பயங்கர சண்டை போடுவாள். எப்போது விடுமுறை முடியும் கிளம்பலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பேன். மாமனார் அடிக்கடி வந்து தங்குவதால், ஒரு முறை சத்தம் போட்டேன்.
தற்போது, 23 ஆண்டுகள் செய்த வேலையை விட்டு நிம்மதியாக குடும்பத்தோடு இருக்கலாம் என, விருப்ப ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்தால், தற்போது மனைவி அவள் சொந்த ஊரில் அவள் அப்பாவுடன் இருக்கிறாள். நான் கூப்பிட்டாலும் வர மறுக்கிறாள். கணவனை விட, அப்பா தான் முக்கியம் என்று அப்பாவுடனேயே இருக்கிறாள். நான் குழந்தையையும், இவளையும் காண செல்லும் போது, பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசி, ஒருநாள் கூட என்னை அங்கு தங்க விட மாட்டாள். தற்போது, மகளை விடுதியில் சேர்த்து விட்டாள். அவளும் அதே பள்ளியில் தான் ஆசிரியையாக பணிபுரிகிறாள். நான் மாத செலவுக்கு வேண்டிய பணத்தை அனுப்பி விடுகிறேன். 23 ஆண்டுகளாக, குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்த எனக்கு, இப்போது சேர்ந்து வாழ ஒரு வாய்ப்பு கிடைத்தும், மனைவி இதுபோன்று இருப்பதால் நிம்மதி, சந்தோஷமில்லாமல் இருக்கிறேன். அவள், என்னுடன் சேர்ந்து வாழ, என்ன வழி உள்ளது. வயதான என் தாயாரை தனியே விட்டு, மனைவிக்கு அடிமையாக வாழ, எனக்கு மனம் வரவில்லை. எனக்கு, இவளை விவாகரத்து செய்ய மனமில்லை. கடந்த, 2011ல் எங்களுக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். அவனையும், என்னிடம் ஒட்டவிட மாட்டேன் என்கிறாள். மேலும், காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் என்னைப் பற்றி, அவதூறாக புகார் கொடுத்துள்ளாள். எப்படி இவளுடன் வாழ்வது என்ற மனச் சிதைவுடன் வாழ்ந்து வருகிறேன். நல்லமுறையில், நாங்கள் வாழ்வதற்கு ஒரு வழி கூறுங்கள்.
அவளுக்கு,'வாரமலர்' படிக்கும் பழக்கம் உள்ளதால் தான் இக்கடிதத்தை எழுதி உள்ளேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்புள்ள சகோதரருக்கு,
திருமணம் செய்து மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழாமல், 23 ஆண்டுகள் வெளிமாநிலத்தில் வேலை பார்த்துள்ளீர்கள். தூரதேசத்து விருந்தாளி போல, ஆண்டிற்கு ஒரு முறை வந்து போகும் கணவனின் மீது, மனைவிக்கு பாச பிணைப்பு எப்படி வரும்? அதனாலேயே, உங்களது இரு திருமணங்களும், நீங்கள் எதிர்பார்த்த சந்தோஷத்தை உங்களுக்கு தரவில்லை. ஒவ்வொரு பணியும், ஒவ்வொரு விதமான தொழில் துயரத்தை பரிசளிக்கும்.
எனக்கு தெரிந்து, போலீஸ் வேலை பார்க்கும் எந்த ஆணும் நிம்மதியாக வாழவில்லை; அவர்களது குடும்பமும் நிம்மதியாக இல்லை. மந்திரித்து வைத்த முட்டை போன்றது, போலீஸ் பணி. தினமும், பனிரெண்டு மணி நேர வேலை விடுமுறை அடிக்கடி கிடைக்காது, குற்றவாளிகளை, கையாண்டு கையாண்டு மனமும், உதடுகளும் இரும்பு போல் இறுகிப்போகும். பணியில் இருக்கும் போது காட்டும் முரட்டு முகமே வீட்டிலும் தொடரும்.
உங்களது முதல் மனைவி, கணவன் இல்லாத தனிமையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்; மன ஆறுதல் தேடியிருக்கிறார். அனேகமாக, அவளது தோழி மூலம், அவருக்கு கிறிஸ்தவ மதம் அறிமுகமாயிருக்கலாம். முதல் மனைவிக்கும், உங்களுக்கும் நடந்த விவாகரத்திற்கு, முழுக் காரணம், உங்களது பணி தான்.
உங்களது இரண்டாவது மனைவி, விஷயத்துக்கு வருவோம். உங்களுக்கு இருக்கும் சொத்துகள் மீது, அவருக்கு பெரியதாய் விருப்பம் இல்லை. நீங்கள் மாதாமாதம், குடும்பச் செலவிற்கு அனுப்பும் பணத்தின் மீதும் ஈடுபாடில்லை. தனிமை, அவரை வாட்டி வதைத்திருக்கிறது.
பசிக்கு கிடைக்காத உணவு, அகால வேளையில் கிடைத்து என்ன பயன்? அந்த வெறுமையில் தான், உங்களது மனைவி உங்களை வெறுத்து ஒதுக்கி, பெற்றோர் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார்.
சகோதரரே... எந்த தாய், தந்தையும் தங்கள் குழந்தையின் வாழ்க்கையை கெடுக்க நினைக்க மாட்டார்கள். வயதான உங்கள் மாமனார், தன் மகளிடம் இருக்கலாம் என வந்து தங்கினால் என்ன? அவருக்குத் தான் வேறு யார் உள்ளார்? உங்களுக்கு உங்கள் தாயார் மேல் எத்தனை கரிசனம் உள்ளதோ அதே அளவு, உங்கள் மனைவிக்கும் அவர் தந்தை மேல் கரிசனம் இருக்காதா? பெற்ற பாசம் என்பது ஆண் பிள்ளைகளுக்கு தான் இருக்க வேண்டுமா? பெண்ணாய் பிறந்து ஒருவனை மணந்து விட்டால், அவள் பெற்றோர் மேல் உள்ள பாசத்தையுமா துடைத்து எறிய வேண்டும்?
திருமண பந்தத்தில், ஆண், பெண் இருவருமே பரஸ்பரம் இரு பக்கத்து உறவினர்களிடமும் வேறுபாடு காட்டாத அன்பைச் செலுத்த வேண்டும். அப்போது தான், அவர்கள் இல்லறமும், ஆத்மார்த்தமான மகிழ்ச்சியுடன் இருக்கும். உங்கள் மாமனார் மேல் உங்களுக்கு ஏற்படும் கசப்புணர்வே, உங்கள் மேல் எதிரொலிக்கிறது. அதை தவிருங்கள்.
உங்களது வெளியூர் பணி, உங்கள் மனைவியை ஒருவிதமாய் பாதித்திருக்கிறது என்றால், உங்களது நெருப்பு தோய்ந்த அதிகாரத் தோரணை வார்த்தைகள் வேறுவிதமாய் பாதித்திருக்கின்றன. ஒரு மானுக்கும், ஒரு சிங்கத்திற்கும் திருமணம் நடந்திருக்கிறது. சிங்கத்தின் சுபாவமும், கர்ஜனையும் மானை மிரளவே வைக்கும். மானை அனிச்சையாக குலை நடுங்க வைக்கிறோமே என்று சிங்கத்திற்கு புரியாது. உங்களது கர்ஜனைகளால் தான், காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் புகார் செய்திருக்கிறார் உங்கள் மனைவி.
வாரமலர் இதழ் படிக்கும் பழக்கமுள்ள உங்கள் மனைவிக்கு சில வார்த்தைகள்:
என் அன்புக்குரிய குட்டியம்மா... கொதித்து எழுந்தது போதும், அமைதி பெறு. உன் கணவர் தான் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, உன்னுடனேயே இருக்க ஓடி வந்து விட்டாரே... இன்னும், ஏன் அவரை தண்டிக்கிறாய்? திருமணமான பெண்ணுக்கு, கணவன் வீடு தான் சாசுவதம். தந்தை வீட்டில் தவமிருந்தது போதும். அவரை, உனக்கு இணக்கமாக்கு. உன் மாமியாரை கூடுதல் சுமையாக பாவிக்காதே; அவரது இருப்பை அங்கீகரி. நீ ஒரு ஆசிரியை; பொறுப்பில்லாத ஒரு முரட்டு மாணவனை திருத்துவது போல, கணவனை உன் கட்சிக்கு மாற்று. நாளை உன் மகள் படித்து, வேலைக்கு போய் திருமணத்திற்கு தயாராவாள். அப்போது, உன் கணவனின் பங்களிப்பு மிக அவசியம்.
ஒருவரை கடுமையாக தண்டிக்க ஒரே வழி, அவரை மன்னிப்பது தான். உன் போலீஸ் கணவனை மன்னித்து ஏற்றுக்கொள். மீதி வாழ்நாளாவது அர்த்தபூர்வமாய் கழியட்டும். வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

