PUBLISHED ON : நவ 30, 2014

'குற்றால டூரில் பெரும்பாலும் பெண் வாசகிகளே அதிகம் இருக்கின்றனரே... ஏன், ஆண் வாசகர்கள் அதிகம் வருவது இல்லையா?' என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம். பொதுவாக டூருக்கு தேர்வு செய்யும் போது, ஆண்-பெண் விகிதம் சமமாகத்தான் இருக்கும். ஆனால், நேரில் போய் டூர் பற்றிய விவரங்கள் மற்றும் செய்துள்ள ஏற்பாடுகளை பற்றி சொன்னதும், 'இவ்வளவு விரிவான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு செய்து, எங்களால் கூட கூப்பிட்டு போக முடியாது; நாங்க ஆம்பளைங்க, எப்ப வேணும்ன்னாலும் பார்த்துக்குவோம். ஆனால், இப்படி ஒரு வாய்ப்பு பெண்களுக்கு அமையவே அமையாது. அதனால், நீங்க கூடப்போயிட்டு வாங்க'ன்னு தன் அம்மாவையோ, அக்கா, தங்கையையோ, தங்கள் வீட்டு இன்னொரு தாய்க்குலத்தையோ தன் மனைவியோடு அனுப்பி வைப்பர். இதன் காரணமாகவே, கடைசி நேரத்தில் வாசகிகளின் எண்ணிக்கை அதிகரித்து விடும்.
ஆனால், 2003ல் வெங்கடேசன், நந்தகுமார், ரவிக்குமார், கண்ணன், சீனிவாசன், ரத்தினசாமி, விக்னேஷ் என்று ஆண்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. 'நாங்களே தான் வருவோம்...' என்று சொல்லி வந்திருந்தனர்.
இதன் காரணமாக, கொஞ்சமும் ஓய்வு இல்லாமல், அருவி குளியல் மட்டுமின்றி தென்காசி காசிவிசுவநாதர் கோவில், சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, மூலிகை தோட்டம், குண்டாறு அணை போன்ற பல இடங்களுக்கும் சென்று வந்தோம். அத்துடன், அந்துமணி கொடுத்த குறிப்பில் இருந்த குற்றாலம் சித்திரசபையை பார்ப்பதற்கும் கிளம்பினோம்.
சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட புதுப்பொலிவுடன், பளபளப்பாக காணப்படும் சித்திரசபைக்குள் இன்று நுழைய வேண்டும் என்றால் தனிக்கட்டணம் கட்டுவதுடன், உள்ளே மொபைல் போன் கேமராவில் கூட படம் எடுக்க முடியாது. அவ்வளவு கட்டுப்பாடு உள்ளது. ஆனால், 2003ல் அந்த பக்கம் யாருமே போக மாட்டார்கள். ஆனால், அந்துமணி சொல்லி விட்டாரே என்று போனபோது பூட்டிக் கிடந்தது.
பிறகு சித்திரசபையை நிர்வகிக்கும் குற்றாலநாதர் கோவில் நிர்வாக அதிகாரியின் அலுவலகம் போய் சொன்னதும், சாவியை தேடி கண்டுபிடித்து தந்ததுடன், ஒரு ஆளையும் அனுப்பினர். வந்தவர் கதவை திறந்துவிட்டு போய் விட்டார். வாசகர்கள் அந்த இடத்தை அணுஅணுவாக ரசித்ததுடன், அந்த அபூர்வ மூலிகை படங்களை விதவிதமாய் படமும் எடுத்துக் கொண்டனர்.
அப்போது எடுத்த படங்களும், வாசகர்கள் சித்திரசபைக்குள் எடுத்துக்கொண்ட படங்களும் பொக்கிஷம்!
சித்திரசபையை சுற்றிவரும் போது, வழிகாட்டி இல்லாத காரணத்தால், சிவன் நடனமாடும் ஒரு மூலிகை ஓவியத்தை காட்டி, அதன் சிறப்பு பற்றி எனக்கு தெரிந்த அளவிற்கு விவரித்தேன். அமைதியாக ஆர்வமாக கேட்டார் ஒரு வாசகி. கொஞ்ச நேரம் கழித்து திரும்ப வந்த அந்த வாசகி, அதே படத்தை காண்பித்து, 'இந்த ஓவியத்தோட விசேஷம் என்ன சார்...' என்று கேட்டார்.
'ஏம்மா... இப்பதானே மூச்சு வாங்க சொன்னேன்...' என்றதும், 'போங்க சார் பொய் சொல்லாதீங்க; நான் இப்பதான் வர்றேன்...' என்றார்.
அவர் சொன்னதும், நான் சொன்னதும் உண்மைதான்.
அந்த வருட டூரில் தீபா-சிவகாமி என்ற இரட்டை சகோதரிகள் கலந்து கொண்டனர். உயரம், நிறம், பேச்சு என்று சட்டென கண்டுபிடிக்கமுடியாதபடி அந்த இரட்டை சகோதரிகள் காணப்பட்டனர். அதில் ஏற்பட்ட குழப்பமே அது!
இந்த குழப்பம் பல இடங்களில் நீடித்தது. தீபா சாப்பிட்டு முடித்து ஹாயாக உட்கார்ந்து இருப்பார். அடுத்த பந்திக்காக சிவகாமி பசியோடு காத்திருப்பார். கீதா மெஸ் சந்திரசேகர் ரொம்ப அன்போடு, சாப்பிட்டு முடித்த தீபாவையே திரும்ப சாப்பிடக் கூப்பிட்டு வருவார். 'இல்லங்க நான் சாப்பிட்டுட்டேன்...' என்றால், 'என்ன கோபமா இருந்தாலும் அதை சாப்பாட்டில் காட்டக் கூடாதும்மா; வா வந்துடு...' என்று அன்பு காட்ட ஆரம்பித்துவிடுவார். இதையெல்லாம் காதில் புகைவர பார்த்துக்கொண்டிருக்கும் சிவகாமி, 'இங்க ஒருத்தி பசியோடு உட்கார்ந்திருக்கேன்; யாரும் கூப்பிடமாட் டேங்கிறீங்க. சாப்பிட்டவளையே மாத்தி மாத்தி கூப்பிட்டுகிட்டு இருக்கீங்க...' என்பார் பொய்க் கோபத்துடன்.
இவர்கள் இப்படி என்றால் உடுமலைப் பேட்டையில் இருந்து வந்திருந்த வாசகி பாலாமணி இன்னும் கொஞ்சம் வித்தியாசமானவர்.
அப்போது எல்லாம் ஐந்தருவிக்கு மேலே உள்ள பழத்தோட்ட அருவிக்கு விசேஷ அனுமதி வாங்கி, வாசகர்களை மட்டும் அழைத்து போவோம். கீழே இருந்து ஒரு கிலோமீட்டர் மலைப்பாதையில் நடந்துதான் போக வேண்டும். வழியெல்லாம் பச்சை பசேல் என்று ஒரே காடாக இருக்கும். காட்டு மரங்கள் உதிர்த்த இலையை சுருட்டி, நாயனம் வாசிப்பது போலவே வாசித்து அசத்தினர். தில்லானா மோகனாம்பாள் படத்தில் நடிகை மனோரமா வாசிக்கும் டப்பாங்குத்து பாணியிலான வாசிப்பை வாசித்து காட்டி பிரமாதப்படுத்தினார்.
கடந்த, 2003-ல் இப்படி என்றால், எந்த வருடத்திற்கும் இல்லாத ஒரு விசேஷம், 2004லும் உண்டு. அந்த சிறப்பு அந்த வருடம் மட்டும் நடந்தது. அது என்ன என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.
— அருவி கொட்டும்.
எல்.முருகராஜ்
குற்றாலமும், எட்வின் பாலையாவும்...
விருதுநகரில் வசிக்கும், 80 வயது எட்வின் பாலையா என்ற வாசகர், கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதோ அது:
'பசுமை நிறைந்த நினைவுகளே' பகுதியை விடாமல் படித்து வருகிறேன்; நன்றாக உள்ளது. அதிலும், பெட்டிச் செய்தியில் வரும் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் பற்றிய தகவல்கள், அருமையாகவும், பிரமிப்பாகவும் உள்ளது.
காரணம், கடந்த 50 ஆண்டுகளாக குற்றாலம் போய் வருகிறேன். சீசனுக்கு மட்டுமல்ல, மாதம் மாதம் சில சமயம் மாதத்தில் இருமுறை கூட போய் வருவேன். என் நோக்கம் குளியல் அல்ல; அங்கே வீசும் காற்றுக்கு நான் அடிமை. அந்த காற்றில், அந்த தென்றலில், அந்த பூமியில் கொஞ்ச நேரம் உலாவிவிட்டு வந்தாலே, மனதிற்குள் இனம் தெரியாத சுகம் ஏற்படும். என் மன, உடல் ஆரோக்கியத்தின் ரகசியமும் அதுதான்.
குற்றாலத்தின் அருமையை எனக்குள் விதைத்தவர் என் தாயார் தேவபாக்கியம். அவர் ஒரு குற்றாலபிரியை. அவரது சிறுவயதில் அதாவது, 1925-ல் தென்காசியில் இருந்து குற்றாலம் போய்வருவது அக்காலகட்டத்தில் அவர்களுக்கு, 'அட்வென்ச்சர் ட்ரிப்'பாக இருந்துள்ளது.
எப்போது வேண்டுமானாலும் குற்றாலத்தை நம்பி போகலாம், அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டேதான் இருக்கும் என்பார். அதேபோல நெல்லி மற்றும் கனிகளை மரத்தில் ஏறி பறிக்க வேண்டாம்; கேட்பாரற்று கீழே விழுந்து கிடக்குமாம்.
இப்படி அவர் சொல்லி சொல்லி எனக்குள் ஏற்படுத்திய குற்றால மகிமையை, என் அடுத்தடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்பட்டேன். அந்த வேலையை வாரமலர் இதழ் சரியாக செய்து வருகிறது. குறிப்பாக, அந்துமணிக்கு என் அநேக நன்றியையும், ஆசீர்வாதத்தையும் சொல்லுங்கள், என்று எழுதியுள்ளார்.

