PUBLISHED ON : மார் 11, 2018

ரஜினியின் அரசியல் படம்!
கபாலி படத்தை தொடர்ந்து, காலா படத்திலும் தாதாவாக நடித்துள்ள ரஜினி, அடுத்தபடியாக, பீட்சா படத்தை இயக்கிய, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படம், ஒரு சாமானியரின் கதையில் உருவாகியிருந்த நிலையில், தற்போது, ரஜினி அரசியலில் பிரவேசிக்க இருப்பதால், தன் அரசியல் கொள்கை குறித்த காட்சிகளையும், இப்படத்தில் இணைக்குமாறு கூறியுள்ளார். அதனால், ரஜினியின் இந்த புதிய படம், அவரது அரசியல் பிரசார படமாக இருக்கும் என்கின்றனர்.
— சினிமா பொன்னையா
இந்தி படங்களை ஓரங்கட்டிய சன்னி லியோன்!
பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி, சன்னி லியோன், தமிழில் ஜெய் நடித்த, வடகறி படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதையடுத்து, தற்போது, வடிவுடையான் இயக்கத்தில், வீரமாதேவி என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக, வாள் சண்டை மற்றும் கத்தி சண்டை பயிற்சி எடுத்து வந்த சன்னி லியோனுக்கு, விரைவில் குதிரையேற்றப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இது, தன் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்பதால், தற்போது, எந்த ஒரு இந்தி படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல், வீரமாதேவி படத்திற்காக, முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார். கிடைக்காத சரக்கு கிடைத்ததைப் போல்!
— எலீசா
குண்டாக மாறும் அஞ்சலி!
பேரன்பு, காளி மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்து, மீண்டும் பிசியாகி வரும் அஞ்சலி, சில இயக்குனர்களின் சொல்லை கேட்டு, தன் உடல் எடையை குறைத்து, ஸ்லிம் ஆனார். ஆனால், அவரது ரசிகர்களோ, 'மெலிந்த அஞ்சலியை எங்களுக்கு பிடிக்கவில்லை; குண்டு அஞ்சலி தான் பிடிக்கிறது...' என்று சொல்ல, ரசிகர்களின் கருத்தை உயர்வாக மதித்து, மீண்டும் சதை போட்டு, குண்டாக மாற போவதாக கூறுகிறார். அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
— எலீசா
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா ஜோடியின், 29வது படம்!
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இருவரும் இணைந்து, 28 படங்களில் நடித்துள்ளனர். மேலும், உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இறுதியில், 'என் அடுத்த படைப்பு, கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு' என்று குறிப்பிட்டிருந்தார், எம்.ஜி.ஆர்., ஆனால், அந்த படத்தை இயக்கவில்லை. இந்நிலையில், தற்போது, எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இருவருமே உயிருடன் இல்லாத நிலையில், அவர்களை மீண்டும் இணைத்து, கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற அனிமேஷன் படமொன்று தயாராகி வருகிறது. இதில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் நம்பியார், நாகேஷ் மற்றும் தேங்காய் சீனிவாசன் போன்ற நடிகர்களும் அனிமேஷன் வடிவில் நடிக்கின்றனர்.
— சி.பொ.,
கறுப்பு பூனை!
* இதுவரை, இயக்குனர்கள் சொல்வதை போலவே நடித்து வந்த பையா நடிகை, சமீபகாலமாக, அவர்கள் சொல்லும் காட்சியை, தன் பாணிக்கு மாற்றி நடிக்கிறார். இதனால், படப்பிடிப்பு தளங்களில் இயக்குனர்களுக்கும், நடிகைக்குமிடையே மோதல் வெடித்து வருகிறது. நடிகையின் இந்த போக்கு தொடர்வதால், சில இயக்குனர்கள், நடிகை மீது அதிருப்தியடைந்து, அவரைப் பற்றி தவறான கருத்துகளை சினிமா வட்டாரங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
* உச்ச நடிகருடன், மூன்றெழுத்து படத்தில் நடித்த மும்பை நடிகையை, வேறு சில இள வட்ட நடிகர்களின் படங்களில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தது. ஆனால், நடிகையோ, உச்ச நடிகருடன் நடித்த பின், வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்தால், 'இமேஜ்' போய் விடும் என்று சொல்லி, அப்படங்களை தவிர்த்து விட்டார். அத்துடன், முதல் தர வரிசையில் இருக்கும் நடிகர்களுடன் நடிப்பதற்காக தற்போது தீவிர பட வேட்டையை முடுக்கி விட்டுள்ளார்.
சினி துளிகள்!
* சந்திரமவுலி படத்தில், கார்த்திக்கும் அவரது மகன் கவுதம் கார்த்திக்கும், ரெஜினாவுடன் இணைந்து ஒரு பாடலில், 'ரொமான்ஸ்' செய்துள்ளனர்.
* கபாலி நாயகி, ராதிகா ஆப்தே, ஒரே நேரத்தில், மூன்று இந்தி படங்களில் நடிக்கிறார்.
* பார்ட்டி படத்தை அடுத்து, டாவு என்ற படத்தில் நடிக்கிறார், கயல் சந்திரன்.
* கண்ணே கலைமானே படத்தில், சென்டிமென்டான வேடத்தில் நடிக்கிறார், தமன்னா.
* அதர்வா நடிக்கும், பூமராங் என்ற படம், விவசாயிகள் பிரச்னையை கதை களமாகக் கொண்டு உருவாகிறது.
* பக்கா மற்றும் துப்பாக்கி முனை படங்களை தொடர்ந்து, அசுர குரு என்ற படத்தில் நடிக்கிறார், விக்ரம் பிரபு.
- அவ்ளோதான்!
