PUBLISHED ON : மார் 11, 2018

காஞ்சி பரமாச்சாரியார் ஒரு பிரசங்கத்தின் போது கூறியது: லாட்டரி சீட்டில் லட்ச ரூபாய் பரிசு விழுந்தால், ஒருவன், 'ஹா' என்று ஒரு கணம் திகைத்துப் போய் உட்கார்ந்து விடுவான். அப்போது, சுவாசம் நின்று, மூர்ச்சையாகி, நினைவும் இல்லாமல் போய் விடுகிறது. சில வினாடிகளுக்கப்புறம், 'அப்பாடி...' என்று சுவாசம் வெளிப்படுகிறது. அளவுக்கு மீறி இன்பம் வந்தாலும், துக்கம் ஏற்பட்டாலும், சுவாசம் நின்று, நினைவு அற்று விடுகிறது.
இதிலிருந்து, சுவாசம் அடங்கினால் நினைவு அற்று விடும். நினைவு அற்றால் சுவாசம் அடங்கி விடும் என்று தெரிகிறது. பிரணாயாமம் செய்து, மூச்சை அடக்கி, அதன் வழியே மனசை அடக்கச் சொல்வதன் தத்துவம் இதுவே!
இதே போல் உள்ளத்தில் துன்பமோ, பக்தியோ அதிகமானால் கண்ணில் நீர் வழிகிறது. இதிலிருந்து மனசுக்கும், கண்ணுக்கும் சம்பந்தம் இருப்பது தெரிகிறது. கோபம் வந்தால் உதடு துடிக்கிறது; மனசுக்கும், உதட்டுக்கும் சம்பந்தம் இருப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது, இப்படியே கண் சிவப்பது, கை, கால் ஆடுவது எல்லாம் மனதின் ஓட்டத்தை பொறுத்து நடக்கின்றன.
அதாவது, உள்ளே ஏற்படும் உணர்ச்சிக்கு ஏற்ப, வெளியே சில காரியங்கள் ஏற்படுகின்றன. இதையே திருப்பி, வெளியே சில காரியங்களை செய்தால், அதனால், உள்ளே இன்ன இன்ன விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று பெரியவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மிலிட்டரிக்காரன், 'யூனிபார்ம் போட்டாலே வீரத்தன்மை வருகிறது...' என்கிறானல்லவா... அப்படியே, பக்தி, சாந்தம், சத்தியம் வரவேண்டும் என்றால் வெளியே சில சின்னங்களைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறினர், நம் பெரியோர்.
அவை, வெளி வேஷம் என்று நினைத்தால், வெறும் வேஷமாகவே போய் விடுகின்றன. 'ஆத்மார்த்தமாக ஜீவனைப் பரிசுத்தம் செய்து கொள்வதற்காகவே விபூதி, ருத்திராட்சம் போன்ற சின்னங்களை அணிகிறேன்...' என்று நினைத்தால், உண்மையிலேயே உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது. புறச் சின்னங்களும் ஆத்மாவுக்கு பயன்படுகின்றன.
கி.வா.ஜகன்னாதன், ஒரு கட்டுரையில்: நான், காபி சாப்பிடுவதில்லை; எனினும், காபியின் சுவையை அறியாதவன் அல்ல. இளமையில் சாப்பிட்டேன்; பின், விட்டு விட்டேன். என் ஆசிரியர், உ.வே.சா., காபி சாப்பிடுவதுண்டு. அவர், இளம் பிராயத்தில் காபி சாப்பிடவில்லை; பின், தம் தந்தைக்கு தெரியாமல் சாப்பிட்டார்.
பிற்பகல் நேரத்தில், அவர் காபி பருகும்போது, நான் அருகில் இருப்பேன். 'உனக்கு கொடுக்காமல் சாப்பிடுறேனே...' என்று வருந்துவார். அதனால், அவர் கொடுக்கும் காபியை அருந்தினேன். பின், இருவேளையும் காபி சாப்பிடத் துவங்கினேன். அவர், அமரரான பின், மறுபடியும் காபியை விட்டு விட்டேன்.
மீண்டும் காபி சாப்பிட துவங்கியபோது, என் அன்னை இருந்தார். அப்போது ஒரு விசித்திரத்தைக் கவனித்தேன். பகல் உணவு நேரம் வந்தால், எவ்வளவு நேரமானாலும், உண்ணாமல் எனக்காக காத்திருப்பார், என் அம்மா. ஆனால், காபி விஷயத்தில் அப்படியில்லை; எனக்கு கொடுக்காமலேயே சாப்பிட்டு விடுவார். அப்போது தான் காபியின் வலிமையை உணர்ந்தேன். தாயன்பையும் மாற்றும் கொடிய பானம்; பற்றை மறக்கச் செய்யும் ஞான தீர்த்தம் அது என்று!
நடுத்தெரு நாராயணன்
