PUBLISHED ON : மார் 11, 2018

வெற்றியின் வெளிச்சத்தை...
தள்ளிப்போடும் எண்ணத்தை
கிள்ளிப் போடுங்கள்!
ஏனென்றால்
தள்ளித் போடுவது
வேலைகளை மட்டுமல்ல
உங்களின்
வெற்றிகளையும் தான்!
'நாளை பார்க்கலாம்' என்று
எண்ணும்போதே
வெற்றியின் விலாசத்தை
தொலைக்கத்
துவங்கி விடுகிறீர்கள்!
உழைப்பதை
தள்ளிப் போடும்போது
உயர்வின் படிக்கட்டுகளை
உடைக்கத்
துவங்கி விடுகிறீர்கள்!
நன்றி சொல்வதை
தள்ளிப் போடும்போது
நல்ல மனிதர் பட்டியலிலிருந்து
விடுபடத்
துவங்கி விடுகிறீர்கள்!
வாழ்த்துவதை
தள்ளிப் போடும்போது
கிளைகளாய் விரியும்
உறவுகளின் வேர்களை
வெட்டத்
துவங்கி விடுகிறீர்கள்!
ஆறுதல் சொல்வதை
தள்ளிப் போடும்போது
குற்ற உணர்வை
நெஞ்சில் குடியேற்ற
துவங்கி விடுகிறீர்கள்!
பாராட்டுவதை
தள்ளிப் போடும்போது
மகிழும் தருணத்தை
மரணப்படுத்தி விடுகிறீர்கள்!
கட்டணம் செலுத்துவதை
தள்ளிப் போடும்போது
அபராதத்திற்கு
அடிக்கல் நாட்டத்
துவங்கி விடுகிறீர்கள்!
ஆம்...
கடமைத் தள்ளிப் போகும்போது
கடன் பத்திரத்தில்
கையொப்பமிடத்
துவங்கி விடுகிறீர்கள்!
எனவே
தள்ளிப் போடும் எண்ணத்தை
கிள்ளிப் போடுங்கள்...
வெற்றியின் வெளிச்சத்தை
வாழ்வெல்லாம்
அள்ளிக் கொள்ளுங்கள்!
— கவிதாசன், கோவை.
