தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : மார் 11, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 11, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது, 36; கணவர் வயது, 39. அரசு பணியில் உள்ளார்; நான் இல்லத்தரசி. பிளஸ் 2 வரை படித்துள்ளேன். எங்களுக்கு, 9 மற்றும் 6 வயதில் இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு முன், வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்திருக்கிறார், கணவர். இவ்விஷயம் வீட்டிற்கு தெரிந்து, பெரிய பிரச்னையாகி, அப்பெண்ணை விட்டு விலகி வந்துள்ளார். அவரது உறவினர் மூலமாக, இவ்விஷயம் எனக்கு, சமீபத்தில் தான் தெரிந்தது. தினமும், இரவில் மது அருந்துகிறார்; பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக அவரே கூறுகிறார்.

நான், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள்; ஒரு தம்பி, பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கிறான். இரு மகள்களின் எதிர்காலத்தை நினைத்து, இவரது கொடுமைகளை தாங்கி, பொறுமையாக உள்ளேன். இப்போது, தன் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு, அவளை திருமணம் செய்ய போவதாகவும், என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறும் கூறுகிறார். இரு பெண் குழந்தைகளுடன், எங்கே செல்வது என, தெரியவில்லை.

இவரது குணத்தால், மாமனார் - மாமியார் தனியாக வசிக்கின்றனர். சிறிய ஓட்டலில், பகுதி நேர கேஷியராக உள்ளார், மாமனார். வீட்டு விசேஷங்களுக்கு சமையல் செய்து தருகிறார், மாமியார். அவர்களாலும், உதவி செய்ய இயலாத நிலை.

ஏதாவது தொழில் கற்று, காலுான்ற கால அவகாசம் தேவைப்படுகிறது; மகள்களின் படிப்பு எக்காரணத்தாலும் பாழாகக் கூடாது என, நினைக்கிறேன்.

இந்த இக்கட்டிலிருந்து மீள, நல்ல வழி காட்டுவீர்கள் என, நம்புகிறேன்.

— இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்பு மகளுக்கு —

தமிழகத்தில், ஆட்சியாளர்கள் மதுவை ஆறாய் ஓடச் செய்துள்ளதன் விளைவு, பெரும்பாலான ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். இத்தகைய ஆண்களுக்கு, புகை பிடித்தல், பான்பராக் போடுதல், சூதாட்டம், திருமண பந்தம் மீறிய உறவுகளில் ஈடுபாடு மற்றும் சந்தேக குணம் போன்றவை வந்து விடுகிறது. தொடர்ந்து, தங்களது மற்றும் குடும்ப அங்கத்தினர் வாழ்க்கையை நரகம் ஆக்கி விடுகின்றனர். உன் கணவனும் இதே பிரிவை சேர்ந்தவன் தான்.

ஒரு பெண், திருமணம் ஆனவளோ, ஆகாதவளோ பொருளாதார சுதந்திரம் பெற்று, சொந்த காலில் நிற்பது நலம். ஒவ்வொரு பெண்ணுமே திருமணத்திற்கு முன், குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பை முடித்திருத்தல் பாதுகாப்பானது. திருமணத்திற்கு பின், புகுந்த வீட்டின் சூழல் பார்த்து வேலைக்கு போகலாம்.

அரசுப் பணியில் இருக்கும் உன் கணவன், சட்டப்படி உன்னை விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்வது சாத்தியமில்லை. குடியால் சிறிது சிறிதாய் ஆண்மையை இழந்து கொண்டிருக்கும் குடிநோயாளி கணவர்கள், 'எனக்கு நிறைய பெண் தோழிகள் உள்ளனர்; நான், உன்னை விட அழகான பெண்ணை மணக்கப் போகிறேன்...' என, பீலா விடுவர். எதற்கும், உன் கணவனின் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்.

உன் கணவன் குடிபோதையில் இல்லாதபோது, 'இந்த வீட்டில் எனக்கு பாதி உரிமை உள்ளது; நான் எதற்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டும்... குடிபோதையில், என்னிடம் பிற பெண்களைப் பற்றி பேசினால், வாயில் சூடு போட தயங்க மாட்டேன். நான், உன்னை விட்டு, வேறொரு ஆணுடன் குடும்பம் நடத்தப் போகிறேன் எனக் கூறினால், நீ தாங்குவாயா... என்னை கொடுமைப்படுத்தினால், உன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன்...' என மிரட்டு.

உன் மிரட்டலுக்கு பணியவில்லை என்றால், மெய்யாலுமே உன் கணவன் மீது புகார் கொடு. உன் கணவனை கூப்பிட்டு, தகுந்த முறையில் கண்டித்து அனுப்புவர், போலீசார்.

தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் பட்டப்படிப்பு படி. மாமியாருடன் சேர்ந்து, சமையல் தொழிலில் ஈடுபடு. இத்தொழிலை முறையாக செய்தால், பெரிய அளவில் வெற்றி பெறலாம். உன் கணவன் திருந்தும் வரை, நீயும், உன் குழந்தைகளும் மாமனார் - மாமியாருடன் வசியுங்கள்.

சமையல் தொழில் பிடிக்கவில்லை என்றால், உன் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடிக் கொள். கூடவே, கம்ப்யூட்டர் கற்றுக்கொள். மகள்கள் படிப்பில் அகலக்கால் வைக்காமல், அவர்களை அரசுப் பள்ளியில் சேர்.

ஐந்தாண்டு திட்டம் போட்டு, இளங்கலை பட்டமும், பி.எட்., பட்டமும் பெற்று, டெட் தேர்ச்சி முடித்தால், பள்ளியில் ஆசிரியையாகலாம்.

உன் கணவனோடு சமாதானம் ஏற்பட்டாலும், தொடர்ந்து படி. பயந்தால் ஓட ஓட விரட்டுவர்; குனிந்தால், குட்டிக்கொண்டே இருப்பர். நிமிர்ந்து நில்; புலம்பியவர்களுக்கு நாளைய பொழுது நல்லதாய் விடியாது; போராடியவர்களுக்கே சூரியன் பதக்கமாய் கிடைக்கும்!

வாமன அவதாரம் எடுத்து, இறுதி காலடியை கணவனின் தலையில் பதி!

— என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us