PUBLISHED ON : மார் 11, 2018

அந்த, மல்டி நேஷனல் கன்சல்டன்சி கம்பெனியின் ஜி.எம்., யோகேஷிடம், ''மனிதனோட பலம், மனசுலயா, உடம்புலயா?'' என்று கேட்டாள்.
''மனசுல தான் மேடம்...'' என்றான், யோகேஷ்.
''குட்; இந்தாங்க, உங்க அப்பாயின்மென்ட் ஆர்டர்...'' என்று கவரை நீட்ட, அதை வாங்கிய யோகேஷ் முகத்தில் சூரியனின் பிரகாசம்.
''ரொம்ப தேங்க்ஸ் மேடம்...'' என்றான் சந்தோஷத்துடன்!
பின், வெளியே வந்து, மொபைல் போனில் தன் அப்பா ஆனந்தனைக் கூப்பிட்டு, ''அப்பா... எனக்கு வேலை கிடைச்சுருச்சு,'' என்றான்.
அடுத்த, ஒரு மணி நேரத்தில், ஸ்வீட் பாக்சுடன் வீட்டில் ஆஜரானான், யோகேஷ்.
''அப்பா... மொத்தம், 200 பேரை வடிகட்டி, கடைசி பத்து பேர்ல நான் ஜெயிப்பேன்னு நினைக்கலப்பா... காட் இஸ் கிரேட்,'' என்றான்.
''ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...'' என்றவர், மனைவி ஜெயந்தியிடம் திரும்பி, ''இனிமே நம்ம பையன பத்தி கவலை வேணாம்; பெரிய கம்பெனி, நல்ல சம்பளம்... 10 வருஷம் வேலை பாத்தா போதும்; வாழ்க்கையில செட்டிலாயிடலாம்,'' என்றார்.
''எல்லாம் கடவுளோட அனுக்கிரகம்,'' என்றாள், மனைவி.
''பைனல் இன்டர்வியூ யாரு செஞ்சாங்கப்பா...'' என்று கேட்டார், ஆனந்தன்.
''ஆடியோ வாய்ஸ்ல எம்.டி., பண்ணாங்கப்பா... ஆனா, ஜி.எம்., தான் ஆர்டர் கொடுத்தாங்க... அவங்க, மாற்றுத் திறனாளின்னு நினைக்கிறேன்,'' என்றதும், சட்டென்று முகம் மாறிய ஆனந்தன், ஏதும் பேசாமல் எழுந்து உள்ளே சென்றார்; புரியாமல் யோகேஷ் பார்க்க, ஜெயந்தி, யோகேஷிடம், 'அமைதியாய் இரு...' என்பது போல் சைகை காட்டி, கணவனை பின் தொடர்ந்தாள்.
உள்ளே, டேபிள் மீது தலை கவிழ்ந்திருந்தார், ஆனந்தன். ஆறுதலாக அவரது தலையை தடவிய, ஜெயந்தி, ''ஏதோ, ஒரு சின்ன மனஸ்தாபத்துல செஞ்ச தப்ப, இன்னுமா நெனச்சுகிட்டிருக்கீங்க...'' என்றாள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் -
குடும்ப நல நீதிமன்றத்தில், கவுன்சிலிங் அறையில், ஆனந்தனும், ரேணுகாவும் அமர்ந்திருந்தனர்.
எதிரிலிருந்த வக்கீல், 'இங்க பாருங்க ரேணுகா மேடம்... நீங்கதான் விட்டுக் கொடுத்து போகணும்... வாழ்க்கையில தப்பு செய்யாதவங்கன்னு யாரும் கிடையாது. அதுவும், கணவன் - மனைவி சேர்ந்தே வாழ்றவங்க... எப்பவும், நுால் பிடிச்ச மாதிரி சீரா இருக்க முடியாது. கொஞ்சம் கோபம், வெறுப்பு, கிண்டல் எல்லாம் இருக்கத் தான் செய்யும். அதுல சில வார்த்தைகள் காயப்படுத்தும்... அத, ரொம்ப சீரியசா எடுத்துட்டு, உறவே வேண்டாங்கறது தப்பு; நல்லா யோசிச்சு, அப்புறமா வாங்க...' என்றார்.
'சாரி ரேணு... லட்சம் தடவ கூட மன்னிப்பு கேட்கறேன்... ப்ளீஸ்... நாம பிரிய வேணாம்...' என்று கெஞ்சினான், ஆனந்தன்.
ரேணுகாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. வக்கீலிடம், 'சார்... நான், டைவர்ஸ் அப்ளை பண்றதுக்கு முன், ஆயிரம் தடவ யோசிச்சுட்டேன்... இது தான் என் முடிவு. ஒரு, 'டிவி' டாக் ஷோவுல நான் பங்கு பெற்ற போது, 'மாற்றுத்திறனாளிக்கு ஆதரவா பேசறாங்க... தங்களுக்குன்னு வரும்போது, அவங்கள ஏத்துக்க மாட்டாங்க'ன்னு பேசினேன். அப்ப, எதிர்ல இருந்த இவர், எழுந்து, 'நான் உங்கள மேரேஜ் பண்ணிக்கறேன்; நீங்க ரெடியா'ன்னு கேட்டாரு. நானும், சரின்னுட்டேன். ஆனா, இவரு குடும்பத்துக்கு இது பிடிக்கல. ஆனாலும், முதல் ஆறு மாசம் எந்த பிரச்னையும் இல்ல; நான், லக்கின்னு தான் பீல் பண்ணினேன். வாக்கர் வெச்சிருந்த எனக்கு, மூவிங் வீல் சேர் வாங்கி கொடுத்தாரு. அடுத்த கட்டமா குழந்தை விஷயத்துல, எனக்கு கொஞ்சம் மெடிக்கலா பிராபளம் இருந்துச்சு. அப்பதான் இவரு, 'பீல்' பண்ண ஆரம்பிச்சாரு... என்னாலயும் ஆஸ்பிடலுக்கு ட்ரீட்மென்டுக்கு அலைய முடியல... பின், சின்னச் சின்ன விஷயங்கள்ல எரிச்சல் காட்டினாரு. பைனலா ஒரு ஆர்க்யூமென்ட்ல, 'என்னால ரெண்டு குறைகள தாங்க முடியாது'ன்னு சத்தம் போட்டாரு...
'அதுவரைக்கும், என் ஊனத்தை குறையா நினைக்காம தான், என்னை திருமணம் செய்திருக்காருன்னு நினைச்சேன். ஆனா, இந்த பேச்சுக்கு பின் தான், என் ஊனத்தை ஒரு குறையா நினைக்கிறார்ன்னு புரிஞ்சது. ஒரு லைவ் ஷோவுல, மன முதிர்ச்சி இல்லாம, கல்யாணத்துக்கு ஓ.கே., சொல்லிட்டாருன்னு புரிஞ்சுகிட்டேன். போகப் போக இந்த பிரச்னை கூடவே வரும்ன்னு நம்பறேன். அதுதான், இந்த பந்தத்திலிருந்து விலக முடிவு செய்துட்டேன். எனக்கு எத்தனை கவுன்சிலிங் கொடுத்தாலும் மாற மாட்டேன்...' என்று சொல்லி, 'விருட்'டென்று தன் வீல் மூவிங் சேரில் வெளியேறினாள், ரேணுகா.
ஒரே ஆண்டில் இருவரும் பிரிந்தனர். கடைசியாக கோர்ட் வாசலில், 'ஆனந்தன்... எனக்கு உங்க மேல கோபம் இல்ல; நீங்க, என் குறையை சுட்டிக் காட்டினது மூலம், தனியா நின்னு வாழ்ந்து காட்டணும்ன்னு ஒரு வேகம் வந்திருக்கு.
'எனக்கு கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உண்டு... பேங்க்ல லோன் போட்டு சின்னதாக, பி.பி.ஓ., ஆரம்பிக்க போறேன். எனக்கு இந்த உத்வேகத்த கொடுத்தது, உங்க வார்த்தைக தான். அதனால, உங்களுக்கு குற்ற உணர்ச்சி வேணாம்; இப்பவும், உங்க அத்த மக ஜெயந்தி உங்களுக்காக காத்துகிட்டிருக்கா... அவள கல்யாணம் செய்து, சந்தோஷமா இருங்க...' என்று சொல்லி சென்று விட்டாள், ரேணுகா.
ஏற்கனவே, தன் குறையால் காயமடைந்திருந்த ரேணுகாவின் உள்ளத்தில், தன் வார்த்தைகளும் காயப்படுத்தியிருப்பதை உணர்ந்தான், ஆனந்தன்.
சில ஆண்டுகளில், பெற்றோரின் விருப்பத்திற்காக, ஜெயந்தியை மணந்தான்.
பின், தன் வாழ்க்கையில் சந்தித்த எந்த மாற்று திறனாளியிடமும் கருணை காட்ட மறந்ததில்லை, ஆனந்தன்.
நண்பர்கள் உதவியுடன் வங்கியில் லோன் வாங்கிய ரேணுகா, அவுட்சோர்ஸிங் முறையில், புராஜெக்ட் எடுத்து, சிஸ்டம் உதவியுடன் முடித்துக் கொடுத்தாள். அதில் கிடைத்த லாபத்தில், வேறு ஒரு கம்பெனியின் பங்குகளை வாங்கினாள். அதிர்ஷ்டமும் அவளுக்கு கைகொடுக்க, ஐந்து ஆண்டுகளில் அவள் வளர்ச்சி அபாரமானது.
''என்னங்க என்ன யோசனை... இந்தாங்க காபி,'' என்று கணவனை உலுக்கி, காபியை கொடுத்துச் சென்றாள், ஜெயந்தி.
'என் மகனுக்கு வேலைக்கான ஆர்டரை கொடுத்தவர், ஒரு மாற்றுத் திறனாளி... அதுவும், ஜி.எம்., லெவலில் இருக்கிறார்ன்னா, அதற்கு எவ்வளவு உழைப்பு வேணும்... உடல் தகுதியை விட, மூளையை பயன்படுத்தி முன்னேறுவது எவ்வளவு சிறப்பு...' என்று யோசித்தபடி, காபி பருகினார், ஆனந்தன்.
அவருக்கு, ஜி.எம்., ஐ பார்க்க வேண்டும் போலிருந்தது; அனுமதிப்பார்களா... யோகேஷிடம் கேட்டால், மறுத்து விடுவான்.
ஒரு வாரத்திற்கு பின், யாருக்கும் சொல்லாமல் திடீரென்று யோகேஷின் கம்பெனிக்கு சென்றார்.
ரிசப்ஷனிஸ்ட்டிடம் விவரத்தை சொன்னதும், ''சார்... நீங்க யோகேஷ் பாதர்; சரி, ஏன், ஜி.எம்.,ஐ பாக்கணும்... காரணம் கேட்பாங்களே...'' என்றாள்.
''தேங்க்ஸ் சொல்லணும்ன்னு சொல்லுங்க... ப்ளீஸ்...''
அந்த பெண் சிறிது யோசித்து, ''சரி... வெயிட்டிங் ஹால்ல உட்காருங்க... கடைசியா போகலாம்.''
வெயிட்டிங் ஹாலில் சென்று அமர்ந்தார், ஆனந்தன். மேலும் பலர், ஜி.எம்.,ஐ காண காத்திருந்தனர்.
கடைசியாக, ஆனந்தனுக்கு அழைப்பு வரவே, உள்ளே சென்றார்.
''ப்ளீஸ்... உட்காருங்க,'' என்றாள், ஜி.எம்.,
ஆனந்தன் அமரவில்லை; கண்களில் நீர் சுரந்தது.
ஜி.எம்.,க்கு புரியவில்லை... ''என்ன சார்... எதுக்கு பீல் பண்றீங்க... ப்ளீஸ் டேக் யுவர் சீட்... என்ன விஷயம்ன்னு சொல்லுங்க,'' என்றாள்.
''மேடம்... என் பையன் யோகேஷுக்கு, இந்த கம்பெனியில வேலை கொடுத்திருக்கீங்க... ரொம்ப நன்றி... அத சொல்லத்தான் வந்தேன்,'' என்றார்.
''நீங்க, நன்றி சொல்லணும்னா, எங்க, எம்.டி.,க்குதான் சொல்லணும்... பைனலா பத்து பேரை செலக்ட் பண்ணி, எம்.டி.,க்கு அனுப்பினேன்... அவங்கதான் உங்க மகனை செலக்ட் செய்தாங்க,'' என்றாள்.
பின், ஏதோ நினைத்தவளாய், தன் லேப் - டாப்பை திறந்து, வெப் கேமராவை ஆன் செய்தாள். பின், அதனிடம், ''அம்மா... நம்ம ஆபீசுல புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிற யோகேஷோட அப்பா உங்களுக்கு நன்றி சொல்லணுமாம்,'' என்றபடி, 'லேப் - டாப்'பை ஆனந்தன் பக்கம் திருப்பினாள். திரையில், வயதான ரேணுகா புன்முறுவல் பூத்தாள்; அவளைப் பார்த்ததும் அதிர்ந்தார், ஆனந்தன்.
''சார்... இவங்க தான் எங்க, எம்.டி., என்னோட அம்மா... நான் அவங்களோட வளர்ப்பு மகள்,'' என்றாள், ஜி.எம்.,
என்ன பேசுவதென்று புரியாமல் ஆனந்தன் விழிக்க, ரேணுகா, ''ஹலோ ஆனந்தன்... எப்படியிருக்கீங்க... கடைசி பத்து பேர்ல உங்க மகனோட புரொபைல் பிடிச்சிருந்தது... உங்க மகன்னும் தெரிஞ்சது. உங்க கூட, ஆறு மாசம் சந்தோஷமா வாழ்ந்தேன். அத மறக்க முடியாதே... எனக்கு சில கசப்பான அனுபவங்கள், வேதனைகள், வார்த்தைகளை எல்லாம் கேட்க வேண்டியிருந்தாலும், அதெல்லாம் இப்போதைய என் வளர்ச்சிக்கு எரு மாதிரி பயன்பட்டிருக்குங்கறது தான் உண்மை. அதற்கான நன்றியாத் தான், உங்க மகன, என் கம்பெனியில சேர்த்துக்கிட்டேன்,'' என்று கூறி, சட்டென்று கணினி திரையில் மறைந்தாள், ரேணுகா.
சொல்ல முடியாத உணர்வுகளால் தாக்கப்பட்டார், ஆனந்தன். ஆனாலும், தான் காயப்படுத்திய சொற்களை, குப்பை என்று புறம் தள்ளாமல், அதை எருவாக்கி, வாழ்க்கையில் சாதித்து, தன்னை போன்றவளையே மகளாக தத்தெடுத்து, உலகிற்கு எடுத்துக்காட்டாய் திகழும் ரேணுகா, ஒரு காலத்தில் தனக்கு மனைவியாய் இருந்தவள் என்ற நினைவே, அவருக்கு பெருமையாக இருந்தது.
அதே உணர்வுடன் வீடு திரும்பினார், ஆனந்தன்.
கீதா சீனிவாசன்
