
பாலிவுட்டில், 'என்ட்ரி' கொடுக்கும், விக்ரம்!
தமிழ் சினிமாவில் உள்ள விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என, பலரும் தெலுங்கு சினிமாவில் 'என்ட்ரி' கொடுத்துள்ள நிலையில், பாலிவுட்டில், கங்கனா ரணாவத் முக்கிய வேடத்தில் நடிக்கும், சீதா என்ற சரித்திர படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார், விக்ரம்.
மணிரத்னம் இயக்கிய, பொன்னியின் செல்வன் படத்தில், விக்ரம் நடித்துள்ள ஆதித்ய கரிகாலன் என்ற வேடத்தில், அவரது நடிப்பை பார்த்து தான், ஹிந்தி பட வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. அதனால், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மீண்டுமொரு சரித்திர படத்தில் நடிக்க இருக்கிறார், விக்ரம்.
— சினிமா பொன்னையா
ஆறுதல் கொடுக்கும், மொபைல் போன்!
'முன்பெல்லாம் மனசுக்கு வேதனை தரும் ஒரு சம்பவம் நடைபெற்றால், அதை யாரிடத்தில் பரிமாறிக் கொள்வது, மனசை ஆசுவாசப்படுத்திக் கொள்வது எப்படி என்பது, மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்.
'தற்போது அப்படி அல்ல. ஏதாவது வேதனை தரும் பிரச்னை நடந்தால், உடனே தோழியரின் மொபைல் எண்ணை அழுத்தி, அதை அவர்களிடம் பகிர்ந்து, பிரச்னைக்கு ஒரு தீர்வையும், ஆறுதலையும் ஏற்படுத்திக் கொள்கிறேன்.
'அந்த வகையில், எனக்கு தற்போது மொபைல் போன் தான், ஈடு இணையற்ற மிகச்சிறந்த தோழியாக இருக்கிறது. யாரையும் தேடிச் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே, என் பிரச்னைகளுக்கு ஆலோசனை மற்றும் ஆறுதல் தேடிக் கொள்ளவும் மொபைல் போன் பயன்படுகிறது...' என்கிறார், நடிகை சாய் பல்லவி.
— எலீசா
சஞ்சய் எடுத்த, திடீர் முடிவு!
நடிகர் விஜயின் மகன் சஞ்சய், சினிமாவில், 'ஹீரோ'வாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ இயக்குனராக அறிமுகம் ஆவதற்கு தயாராகி வருகிறார்.
வெளிநாட்டில் டைரக் ஷன் சம்பந்தமாக படித்து முடித்த, சஞ்சய், தன் தந்தை விஜயை வைத்து முதல் படத்தை இயக்கப் போவதில்லையாம்.
'என் தந்தையை வைத்து படம் இயக்கினால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அதனால், விஜயால் தான் அந்த வெற்றி எனக்கு கிடைத்ததாக கூறுவர்.
'அதன் காரணமாகவே, வேறு நடிகர்களை வைத்து, என் முதல் படத்தை இயக்குவேன். அப்படி யாரை வைத்து நான் இயக்கினாலும் கண்டிப்பாக, 'ஹிட்' படம் கொடுப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி ஒரு, 'மெகா ஹிட்' படத்தை கொடுத்த பிறகு தான், என் தந்தை விஜயை வைத்து படம் இயக்குவேன்...' என்கிறார், சஞ்சய்.
— சி.பொ.,
காதல், 'கிசுகிசு' பற்றி, ராஷ்மிகா மந்தனா!
தெலுங்கு நடிகர் விஜய தேவர கொண்டாவுடன், 'கிசுகிசு'க்கப்பட்டு வரும், ராஷ்மிகா மந்தனா, அது குறித்து கூறுகையில், 'தெலுங்கில் என் முதல், 'ஹிட்' பட நாயகன், விஜய தேவரகொண்டா என்பதால், அவரிடம் அதிகப்படியான, 'பிரண்ட்ஷிப்' வைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் அவ்வப்போது ஹோட்டலுக்கு செல்வோம்.
'இதை சிலர், எங்களுக்குள் காதல் இருப்பதாக, 'கிசுகிசு' வெளியிடுகின்றனர். இவர்களுக்கு, நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. விஜயதேவர கொண்டா மட்டுமின்றி, என்னுடன் நடிக்கும் அனைத்து, 'ஹீரோ'களையும் அவர்களுடன் நடிக்கும்போது அந்த படங்களுக்காக காதலிப்பதோடு சரி, அதன்பின், அவர்கள் அனைவருமே எனக்கு நண்பர்கள் மட்டுமே. அதனால், அவர்களுடன் என்னை இணைத்து பேசுவதை விட்டு விடுங்கள்...' என்று, சில, 'மீடியா' நண்பர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
- எலீசா
கதை வசனகர்த்தாவான, யோகிபாபு!
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும், யோகி பாபு, சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதே சமயம், 'டூயட் பாடும் கதாநாயகனாக மட்டும் ஒரு போதும் நடிக்க மாட்டேன்...' என்று கூறி வருகிறார்.
இந்நிலையில், கதையின் நாயகனாக நடிக்கும் ஒரு படத்திற்கு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார், யோகி பாபு.
'என் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை தொகுத்து, இந்த கதையை எழுதி இருக்கிறேன். இதுவரை காமெடியனாக, கதையின் நாயகனாக வெற்றி பெற்ற நான், இந்த படத்தில், கதை வசனகர்த்தாவாகவும் வெற்றி பெறுவேன்...' என்று, தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.
- சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* முன்வரிசை நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால், தற்போது, மெட்ரோ படத்தில் நடித்த, சிரிஷுடன் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார், ஹன்சிகா.
அவ்ளோதான்!