
உணவு இல்லாவிட்டால் உயிர்கள் இல்லை. ஆகவே மறந்தும் கூட, அடுத்தவர் உண்ணும் உணவைக் கெடுக்கக் கூடாது. மீறினால், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான, மணிமேகலை கூறுகிறது:
காயசண்டிகை எனும் வித்தியாதரப் பெண்மணி, ஆகாயத்தில் பறக்கும் சக்தி பெற்றவள். கணவருடன், பொதிய மலையின் அழகைப் பார்க்க வந்தாள்.
இருவரும் இயற்கை அழகுகளை ரசித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு விருச்சிகன் என்ற முனிவர் வந்தார்.
பனம் பழம் போல தோற்றமளிக்கும், பெரிய நாவல் பழத்துடன் வந்த முனிவர், அந்த பழத்தை ஒரு தேக்கு இலையில் வைத்து விட்டு, நீராடச் சென்றார்.
அதைப் பார்த்த காயசண்டிகை, தீவினை துாண்டியதாலும் ஆணவத்தாலும், அந்த நாவல் பழத்தைக் காலால் எட்டி உதைத்துச் சிதைத்தாள்.
சற்று நேரத்தில் நீராடி முடித்து, பழத்தை உண்ணும் விருப்பத்துடன் வந்த முனிவர், சிதைந்து போயிருந்த பழத்தைக் கண்டார். என்ன நடந்திருக்கும் என்ற உண்மை விளங்கியது.
அவருக்கு, கோபம் வந்து, 'பெண்ணே... சிறப்பான நாவல் மரம் ஒன்று, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தரும், தெய்வத்தன்மை வாய்ந்த ஒப்பற்ற பழம் இது. இதை உண்பவர், 12 ஆண்டுகள் பசி இல்லாமல் இருப்பர்.
'நானோ, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்ணும் நியமம் உடையவன். அப்படிப்பட்ட நான், உணவாக உண்ணும் பழத்தைச் சிதைத்து விட்டாய். இதன் காரணமாக, நீ, ஆகாயத்தில் பறக்கும் சக்தியை இழக்கக் கடவாய்.
'யானைத் தீ எனும், பசி நோயால் பெருந்துன்பம் அடைவாய். மறுபடியும், 12 ஆண்டுகளுக்குப் பின் பழுக்கும் அந்த நாவல் பழத்தை, நான் உண்ணும் காலம் வரை, நீ பெரும் பசியால் துன்பப் படுவாய். நாவல் பழத்தை நான் உண்ணும் அந்த நாளன்று, உன் பசிப்பிணி விலகும்...' என்று, சாபம் கொடுத்தார், முனிவர்.
அதன்படி, 12 ஆண்டுகள் காயசண்டிகை, பசியால் படாதபாடு பட்டாள். 12 ஆண்டுகளுக்கு பின் நாவல் பழத்தை உண்டார், முனிவர்.
அதே வேளையில், மணிமேகலை வந்து, தன்னிடம் இருந்த அமுத சுரபியில் இருந்து, தன் கையால் எடுத்து காயசண்டிகைக்கு உணவளிக்க, அவள் பசிப்பிணி தீர்ந்தது.
இந்நிகழ்வைத் தன் வரலாறு கூறலாகவே காயசண்டிகை, மணிமேகலையிடம் சொன்னாள்.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
குலதெய்வத்தால் தான் சந்ததி காப்பாற்றப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை தரிசிப்பது அவசியம்.