
அக்., 31 - இந்திரா நினைவு நாள்
க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:
கடந்த, 1970ல், ரஷ்யா சுற்றுப்பயணம் செய்தார், பிரதமர் இந்திரா. அங்கு, அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில், 'ரஷ்யா, எல்லா நாடுகளையும், தன் உறவு நாடுகளாகவும், எல்லா மக்களையும் தன் உறவினராகவும் எண்ணி மகிழ்கிறது...' என்று குறிப்பிட்டனர்.
ஏற்புரையில், இந்த கருத்தை சுட்டிக்காட்டி பேசிய இந்திரா, 'உங்கள் ரஷ்யா இன்றைக்கு சொல்லும் இந்த கருத்தை, எங்கள் இந்தியாவில், தமிழகத்தில் வாழ்ந்த புலவர் பெருமான், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்...' என்றார்.
புறநானுாற்றில், கனியன் பூங்குன்றனார் பாடிய, 'யாரும் ஊரே, யாவரும் கேளீர்' என்ற பாடலை நினைவில் வைத்து இந்திரா கூறியதை கேட்டு, பிரதமர் கோசிஜின் மட்டுமல்ல, ரஷ்ய மக்கள் அனைவரும் வியந்தனர்.
மு.அப்பாஸ் மந்திரி எழுதிய, '200 அறிஞர்கள் காத்திருக்கிறார்கள்' நுாலிலிருந்து:
கடந்த, 1971ல், இந்திய - பாகிஸ்தான் போர் நடந்தது. பாதிக்கப் பட்டவர்களுக்கு அளிக்க, நிவாரண நிதியாக, ஆறு கோடி ரூபாய் நிதி வசூல் செய்து, அப்போதைய பிரதமர் இந்திராவிடம் கொடுத்தார், தமிழக முதல்வராக இருந்த, கருணாநிதி.
நிதி வழங்கும் விழாவின்போது, 'உத்தரப் பிரதேசத்தை விட சிறிய மாநிலமான, தமிழகம் ஆறு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளது. இது, உ.பி., மாநிலம் கொடுத்துள்ள தொகையை விட அதிகம்...' என்றார், கருணாநிதி.
இதைக் கேட்டதும், உ.பி., மாநிலத்தை சேர்ந்தவரான இந்திரா, 'உ.பி., மாநிலத்தை விட, தமிழகம் கொடுத்துள்ள தொகை, மிக அதிகம் தான். அதேசமயம், உ.பி., மாநிலத்தின் நிலையையும் நான் சொல்ல வேண்டும்.
'உ.பி., மாநிலம், தமிழகத்தை விட பெரிய மாநிலம் தான். ஆனால், அது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. இந்திய - பாக்., போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை உ.பி.,யில் தான் அதிகம்...' என்று சொல்லிச் சமாளித்தார்.
இந்தியாவின் பிரதமராக, ஜவஹர்லால் நேரு இருந்தபோது, ஜப்பான் நாட்டிலிருந்து, அவருக்கு ஒரு கடிதம் வந்தது.
'நேரு மாமா, உங்கள் அன்புப் பரிசாக எங்களுக்கு ஓர் யானைக்குட்டி அனுப்பி வையுங்கள்...' என்று எழுதியிருந்தனர், சில ஜப்பானியக் குழந்தைகள்.
குழந்தை உள்ளம் படைத்த நேரு, அந்த கடிதத்தை படித்து மகிழ்ந்தார். உடனே, அழகிய யானைக் குட்டி ஒன்றை வரவழைத்து, அதற்கு, 'இந்திரா' என்று, தன் மகளின் பெயர் சூட்டி, 1950ல், ஜப்பானியக் குழந்தைகளுக்காக அனுப்பி வைத்தார்.
சில ஆண்டுகள் கழித்து, ஜப்பான் சென்றபோது, 'இந்திரா' யானையை, ஒரு மிருகக்காட்சி சாலையில் கண்டு மகிழ்ந்தார், நேரு.
அந்த, 'இந்திரா' யானை, பாரத பிரதமராக இருந்த, இந்திரா, சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட, அக்., 31, 1984 அன்று காலை, ஜப்பானிய மிருகக்காட்சி சாலையில், திடீரென இறந்து விட்டது.
- நடுத்தெரு நாராயணன்