sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

குருஷேத்திரம்!

/

குருஷேத்திரம்!

குருஷேத்திரம்!

குருஷேத்திரம்!


PUBLISHED ON : அக் 30, 2022

Google News

PUBLISHED ON : அக் 30, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''உங்க பெரியப்பாவின் கடைசி பையன் கல்யாணத்துக்கு, அவசியம் போகணுமா?'' ஆங்காரமாய், ஒலித்தது, தனத்தின் குரல்.

''இதப்பத்தி, நாம நிறைய பேசிட்டோம். எனக்காக, கொஞ்சம் அமைதியாய் இரு, தனம். முகூர்த்தம் முடிஞ்சதும், வந்து விடுவேன்.

''சீக்கிரமா கிளம்பு வருண், நேரமாச்சு. தலை பரட்டையா இருக்கு. கல்லுாரிக்குப் போனா, தலைக்கு எண்ணை வைக்க கூடாதா?'' பெரிய மகனை விரைவுபடுத்தினார், மாதவன்.

எண்ணெய் வைத்து, தலையை சீவி, அலமாரியில் இருந்து எடுத்த கருப்பு நிற பேன்ட்டில் கால்களை நுழைத்தான்.

'சே... இது தம்பி தருண் பேன்ட்...' என, கழற்றி வீசியவன், வேறு உடை அணிந்து வெளியே வந்தான்.

''ஒண்ணா, ரெண்டா... முழுசா முள்ளங்கி பத்தையாட்டம், 10 ஆயிரம் ரூபாயை முழுங்கினவங்க; அதுவும் பவுன், 1,000 ரூபாய் வித்த காலத்தில. இன்னைக்கு மதிப்பு, 3 லட்சம் பெறும்; ஏமாத்துக்கார பயலுக. அவங்க வீட்டு விசேஷத்துக்கு நாம போகணுமா?'' கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள், தனம்.

''அழறதை நிறுத்து, எனக்கு தோசை ஊத்து; நீயும் சாப்பிடு. அப்பாவின் திருப்திக்கு, அவங்க ரெண்டு பேரும், கல்யாணத்துக்கு போயிட்டு வரட்டும்,'' அம்மாவை சமாதானப்படுத்தினான், பள்ளி இறுதி படிக்கும், தருண்.

''அம்மா போயிட்டு வரேன்,'' என்றபடி, அப்பாவுடன் இணைந்து பேருந்து நிலையத்திற்கு, நடக்கத் துவங்கினான், வருண்.

''பெரிய தாத்தா வீட்டுடன், அப்படி என்னம்மா தகராறு?'' கேட்டான், தருண்.

'ப்ளாஷ் - பேக்' கதையை சொல்ல ஆரம்பித்தாள், தனம்:

தாய் தகப்பனுக்கு ஒரே பிள்ளை, மாதவன். சூட்டிகையான பையன். பள்ளி இறுதி ஆண்டு படிக்கும்போது, பேருந்து விபத்தில், பெற்றோரை இழந்தான். ஒண்டிக்கொள்ள சிறிய வீடு இருந்தது.

பெரியப்பா சுந்தரத்திடம், 'காலேஜ் படிக்கணும்ன்னு ஆசை பெரியப்பா. படிக்க உதவி செய்யுங்க, என் வீட்டிலிருந்து சமைச்சு சாப்பிட்டு, படிக்கிறேன்...' என்றான்.

'என் தம்பி, அதான் உன் அப்பா, உனக்கு கடன் ஏதும் வைக்கலை. உனக்காக சொந்த வீடு வச்சிருக்கான். எனக்கு மூணு பிள்ளைங்க, ஊரைச்சுத்தி ஏகப்பட்ட கடன். என்னால, உன்னை படிக்க வைக்க முடியாது...'ன்னு, நிர்தாட்சண்யமாய் மறுத்தார்.

எதிர்காலத்தை நினைத்து கலங்கிய மாதவனுக்கு, 'ஸ்காலர்ஷிப்'பில், கல்லுாரியில் சேரவும், மாலையில், நுாலகத்தில் வேலை பார்க்கவும், ஏற்பாடு செய்து கொடுத்தார், அவன் வகுப்பு ஆசிரியர் கணேசன்.

கால் வயிற்று கஞ்சி கிடைத்தது. காலையில் கல்லுாரி, மாலையில் வேலை, இரவில் படிப்பு, முழுமூச்சாய் உழைத்தான், மாதவன்.

'என் தம்பி, இவனை அனாதையா விட்டுட்டு போயிட்டான். என் பிள்ளைகளை கூட படிக்க வைக்காம, நான் இவனைப் படிக்க வைக்கிறேன்...' என, ஊராரிடம் வெத்துச் சவடால் அடித்தார், பெரியப்பா.

இளங்கலைப் படிப்பு முடிந்ததும், வங்கித் தேர்வில் வெற்றி பெற்று, பணியில் சேர்ந்தான், மாதவன். அவனின் ஒழுக்கத்தையும், திறமையையும் கண்டு, மகள் தனலட்சுமியை, மாதவனுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பினார், மேனேஜர் கந்தசாமி.

பெரியப்பாவை தவிர, தனக்கு வேறு யாரும் இல்லை என, நினைத்த மாதவன், கந்தசாமியை, சுந்தரத்திடம் அனுப்பினான். சுந்தரத்தின் மனம், பொறாமைத் தீயில் வெந்தது.

'என்ன இருந்தாலும், மாதவன் அனாதை தான். உங்க பெண் ஜாதகத்தை, என்னிடம் கொடுங்க. -என் மகன் ஜாதகத்துக்கு பொருத்தம் பார்ப்போம்...' என, விஷம் தோய்ந்த சொற்களை, கந்தசாமியிடம் உதிர்த்தார், சுந்தரம்.

'எல்லாப் பொருத்தமும் பார்த்துட்டேன். கல்யாண ஏற்பாடுகளை நானே செய்றேன். நீங்க, பெரியவரா வந்து நின்னா போதும்...' என கூறினார், கந்தசாமி.

பேருந்தில் போகும்போது, அப்பாவிடம் அதே குடும்பக் கதையை, கேட்டுக் கொண்டிருந்தான், வருண்.

திருமணம் முடிந்த புதிது, மாதவனுக்கு, பக்கத்து ஊருக்கு மாற்றலானது. போக வர, தவணையில் இருசக்கர வாகனம் ஒன்று வாங்கினான். ஒருநாள் காலை, மாதவன் வீட்டிற்கு வந்தார், சுந்தரம். மாலையோடு வாசலில் நின்ற இருசக்கர வாகனத்தை வெறித்தார்.

ஏதோ வேலையாய், வெளியே வந்த தனம், 'வாங்க மாமா...' என, வரவேற்றாள்.

காலை இளம் வெயிலில், அவள் கழுத்திலிருந்த கனமான ரெட்டை வடச் சங்கிலி மின்னியது. பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தார். அவர் எதிரே, 'டிவி' மற்றும் அடுக்களையில், மிக்சி, கிரைண்டர் கண்ணில் பட்டதும், மனம் கொதித்தது.

'என்னடா, வீடே படாடோபமா இருக்கு?'

'பக்கத்து ஊருக்கு வேலைக்கு போக, காலையில் கிளம்பினால், இரவு தான் வர முடியுது. அதுவரை தனத்துக்கும் பொழுது போகணுமே. கருப்பு, வெள்ளை 'டிவி' தான், பெரியப்பா...'

'சரி --சரி... காசைக் கரியாக்க, ஏதோ ஒரு காரணம். என் மகளுக்கு, அதான் உன் தங்கச்சி உமாவுக்கு, கல்யாணம் முடிவாகி இருக்கு. நகை வாங்க, நீ, 10 ஆயிரம் ரூபாய் கொடு...' என்றார்.

'நல்ல விஷயம் தான், பெரியப்பா. ஆனால், அவ்வளவு பணம் ஏது... சேமிப்பில் இருந்த பணத்தோடு, இந்த பொருட்களை எல்லாம் தவணை முறையில் தான் வாங்கினேன்...'

'உன் பெண்டாட்டி, கழுத்தில் மின்னுதே, இந்த நகையை அடமானம் வச்சு, பணத்தைக் கொடு. ஆறே மாசத்துல, நான் மீட்டுத் தர்றேன்...' உத்தரவாய் சொன்னார்.

'அது, தனத்தின் அம்மா வீட்டில் போட்ட நகை...' என்றான்.

பத்து கல்யாண பத்திரிகைகளை எடுத்து டீபாயில் போட்டு, 'உனக்கு வேண்டியவங்களுக்கு, நல்லா மொய் செய்றவங்களா பார்த்து கொடு. நகை வாங்க, பணத்திற்கு சீக்கிரம் ஏற்பாடு செய்...' என, கையில் ஒரு பத்திரிகையை கொடுத்து, வா என்று அழைக்காமல், அதிகாரம் செய்தபடி கிளம்பி விட்டார்.

ரெட்டை வட சங்கிலியை, அடகு வைத்து, 10 ஆயிரம் ரூபாயை, சுந்தரத்திடம் கொடுத்தான், மாதவன்.

உமாவின், திருமணம் முடிந்தது.

இரண்டு மாதம், நகை கடனுக்கு வட்டி கட்டினான், மாதவன்.

'நாம வாங்கிக் கொடுத்த கடனுக்கு, மாமா தானே வட்டி கட்டணும். நம் வீட்டு சாமான்களுக்கு தவணை கட்டி, வீட்டுச் செலவை பார்க்கிறதுக்குள்ள, எனக்கு மூச்சு முட்டுது...' பொரிந்து தள்ளினாள், தனம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை -

பெரியப்பா வீட்டுக்கு போனான், மாதவன்.

'வராதவன் வந்திருக்க... என்னடா விஷயம்?' என வரவேற்றார்.

'பெரியப்பா, நகைக்கு வட்டி...' இழுத்தான்.

'அதெல்லாம், கரெக்டா கட்டிடு; மருமகள் அப்பா போட்ட நகை. மீட்டு கொடுக்கணும்ல்ல...' என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

வாயடைத்து திரும்பினான்.

பெரியப்பா மகன்கள் இருவரும், சிறிதாய் தொழில் ஆரம்பித்தனர். மகள் கல்யாணத்திற்கு கொடுத்த முறையிலேயே, மூத்த மகன் கல்யாணத்திற்கும், பத்து கல்யாண பத்திரிகைகளை, மாதவன் வீட்டில் போட்டார். வழக்கம்போல, மாதவனை அழைக்கவில்லை.

'முறையான அழைப்பு இல்லை; பெரிய மாமா வீட்டுத் திருமணத்திற்கு வரமாட்டேன்...' என, மாதவனுடன் சண்டை போட்டாள், தனம்.

'அண்ணன் திருமணத்திற்கு, தம்பியை யாராவது அழைப்பரா... நாமே போய் உரிமையோடு, திருமண வேலைகளை செய்யணும்...' என்று கூறி, தனத்தை அழைத்துப் போனான்.

பெரியப்பாவின் மூத்த மகன் திருமணம் முடிந்தவுடன் கிளம்பும்போது, சுந்தரத்திடம், 'மாமா, நகையை அடகு வச்சு, அஞ்சு வருஷம் ஆச்சு மீட்டுக் கொடுங்களேன்...' என்றாள், தனம்.

'ஆம்பளைங்க விவகாரத்தில், நீ ஏன் மூக்கை நுழைக்கிற. அவ்வப்போது ஐநுாறு, ஆயிரம்ன்னு, மாதவன்கிட்ட குடுத்து, கணக்கை முடிச்சுட்டேன். அவன் நகையை திருப்பாம இருந்தா, நான் என்ன செய்றது...' துண்டை உதறி தோளில் போட்டு, விறுவிறுவென்று கிளம்பினார், சுந்தரம்.

மாதவனின் கண்கள் இருண்டன. தனத்தின் அடி வயிறு கலங்கியது. இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

தனம் தான் அடிக்கடி அதைப் பற்றி புலம்புவாள்.

பேருந்து இரைச்சல்களுக்கிடையே, ''உங்களுக்கு கோபம் வரலையாப்பா?'' எனக் கேட்டு, அப்பாவின் தோளில் கை போட்டான், வருண்.

''பெரியப்பா மேல் சொல்ல முடியாத அளவு வருத்தம் தான். அவர், பணத்தைக் கொடுத்துட்டேன்னு சொன்ன ராத்திரி, என்னால துாங்க முடியல. நெஞ்சுல பாறாங்கல்லை வச்ச மாதிரி இருந்தது. புத்தியை தெளிவாக்கி, நிதானமா யோசிச்சேன்.

''என்னை ஏமாற்றுவதில், பெரியப்பாவிற்கு அற்ப சந்தோஷம். என் பொருளை பிடுங்கியதில், அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால், நான் தவறு ஏதும் செய்யவில்லை; தப்பு செய்தவர் மகிழ்வோடு இருக்கும்போது, உதவி செய்த நான் ஏன் வருந்தணும்.

''எங்கள் நகையை கொள்ளைக்காரனா கொண்டு போனான், இல்லையே... என் தங்கைக்குதானே பயன்பட்டது. இதில் வருத்தப்பட என்ன இருக்கு. நான் உழைத்து, நகையை மீட்கலாம் என்று, என் மனதில் இருந்த கோபதாபங்களை வெளியே தள்ளி, நிம்மதியாக துாங்கினேன்.''

''அம்மா எப்படி சரியானாங்க?''

''அந்தக் கவலையிலிருந்து, தனத்தை மீட்டது, நீ பிறந்தபோது தான்,'' என்றான், மாதவன்.

அச்சு அசலாய், மாதவனின் அப்பா சாயலில் இருந்தான், மகன். இந்த மகிழ்வை யாருடன் கொண்டாட முடியும். இனிப்பு வாங்கி, பெரியப்பாவின் வீட்டுக்கு ஓடினான்.

அச்சமயம் பெரியப்பாவும், மகன்கள் வழியில் பேத்திகளை பெற்றிருந்தார். வருண் தான், அந்தத் தலைமுறையில் குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு.

'பெரியப்பா, இந்தாங்க ஸ்வீட். உங்களுக்கு பேரன் பிறந்திருக்கான்...'

அடிவயிற்றிலிருந்த பொறாமைத் தீ சீறி, பெரியப்பாவின் முகத்தில் படர்ந்தது. அவரது மூத்த மகன் தான், குழந்தையை வந்து பார்த்துவிட்டு போனான்.

''அம்மா... துணி அலமாரியை, அண்ணன் எப்படி அலங்கோலப்படுத்தி இருக்கிறான். இங்கே பார், பேன்ட்டில் எண்ணெய் கறை,'' என, சிணுங்கியபடி அறையைச் சுத்தம் செய்யத் துவங்கினான், தருண்.

''அண்ணன் தானே தருண், ஏதோ அவசரத்தில் செஞ்சுட்டான்; சரி விடு.''

''அதன்பின், நீ பெரிய தாத்தாவை, பார்க்கவே இல்லையாம்மா?''

''இரண்டு குடும்பத்திற்கும், உறவினர்கள் பொது தானே, வீட்டு விசேஷங்களில் சந்திப்போம். அப்போதெல்லாம், குழந்தையான வருணை துாக்கிக் கொண்டு போவார், உன் அப்பா.

''உறவினர்கள் மத்தியில் நின்று கொண்டு, 'பேரன், தம்பியைப் போலவே இருக்கான். எப்படியோ, அவன் போனாலும் தம்பி குடும்பத்தை நல்லபடியா ஆளாக்கிட்டேன்...' என்று, வராத கண்ணீரை மேல் துண்டால் துடைத்து, நாடகம் போடுவார்.

''ஆனால், என் முகத்தில் மட்டும், முழிக்க மாட்டார். நானும் அவரை ஏறிட்டு பார்க்க மாட்டேன்,'' என்றாள்.

''அம்மா, நான் சொல்றதை பொறுமையா கேளு. தப்பு செய்தது, பெரியப்பா. அவரால் உன் முகத்தை, ஏறிட்டு பார்க்க முடியவில்லை; அது நியாயம். ஒரு தவறும் செய்யாத நீ, விசேஷங்களில் கலந்து கொள்ளாமல், ஏன் ஒதுங்கிப் போகிறாய்?''

''துஷ்டனைக் கண்டு துார விலகினேன்.''

''அது சரிம்மா... ஆனால், அவர் பழகும் சொந்தங்களிடம், நீ பழகக் கூடாது என்பதில்லையே... அவருக்கு நாலு மனுஷங்க இருந்தால், உனக்கு இரண்டு பேராவது இருப்பர். அவர்களிடம் உன் நியாயத்தை எடுத்துக் கூறியிருக்கலாமே...

''நீ, பெரிய தாத்தாவை பார்த்து, பயந்து விலகியதை, புரிந்து கொள்ளாத சொந்தக்காரர்களிடம், அகம்பாவி, கர்வி என்று பெயர் எடுத்து விட்டாயே.''

''சொந்தங்களிடத்தில் எட்ட முடியாத தொலைவு நான் சென்றதன் தவறு, இப்போது புரிகிறது, தருண்.''

''பெரியப்பாவின் மகன், முறைப்படி வெற்றிலை, பாக்கு வைத்துதானே, நம்மை அழைத்தார். காலம் கடக்கவில்லை அம்மா... நல்ல பட்டுப் புடவையை கட்டிக்கொள். நீங்கள் மீட்டெடுத்த ரெட்ட வட நகையை கழுத்தில் போட்டுக்கோ; நாம் இருவரும் பைக்கில், திருமணத்திற்குப் போவோம்,'' என்றான்.

தெளிவு வந்தது, தனத்திற்கு. பைக்கில் கிளம்பினர்.

பேருந்திலிருந்து இறங்கி, திருமண மண்டபத்தை நோக்கி, நடந்து கொண்டிருந்த மாதவனுடன், இருவரும் இணைந்தனர். மாதவனுக்கு மனம் கொள்ளா பூரிப்பு. ஆரவாரமாய் அவர்களை வரவேற்றார், பெரியப்பாவின் மூத்த மகன்.

மண மேடைக்கு எதிரே, நாற்காலியில் தளர்ந்து போய், கைத்தடியுடன் அமர்ந்திருந்தார், பெரியப்பா. நால்வரும் போய் அவர் அருகில் நின்றனர்.

''பெரியப்பா...'' தழுதழுத்த குரலில் அழைத்தான், மாதவன்.

கண்களின் மேல் கை வைத்து, ''யாரு?'' என்று நிமிர்ந்து பார்த்தார்.

அவரின் பார்வை, தனத்தின் மேல் பதிந்தது. தனலட்சுமியின் கழுத்தில் இருந்த நகையின் ஒளியில், அவரது கண்கள் கூசியது.

அவர்களை பார்க்க முடியாமல், அவரது தலை தானாகக் கவிழ்ந்தது.

டி.பழனீஸ்வரி

புனைப்பெயர்: பழனீஸ்வரி தினகரன்

வயது: 58.

படிப்பு: பிளஸ் 2. தமிழ் வார, மாத இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. லட்சியம்: நிறைய சிறுகதைகள் எழுத விருப்பம்

கதைக்கரு பிறந்த விதம்: நகையை உறவினரிடம் பறி கொடுத்தவர், நீண்ட வாக்குவாதத்திற்கு பின், அன்றிரவு நிம்மதியாக உறங்க, நகையை ஏமாற்றியவர் உறக்கம் வராமல் தவித்ததை பார்த்தபோது இக்கதையை எழுத தோன்றியது.






      Dinamalar
      Follow us