PUBLISHED ON : ஜூலை 16, 2023

படக்கூலியை உயர்த்திய, வடிவேலு!
'ஹீரோ'வாக, வடிவேலு நடித்த, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தோல்வியடைந்த நிலையில், தற்போது, குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள, மாமன்னன் படம், 'ஹிட்' அடித்துள்ளது. இதன் காரணமாக, வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க திட்டமிட்டு வரும், வடிவேலு, முந்தைய படத்தில், ஏழு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர், அடுத்து நடிக்கும் படங்களில், 10 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளார்.
சம்பள விஷயத்தில், தயாரிப்பாளர்கள், இவரிடம் பேரம் பேசினால், 'சினிமாவுக்கு வந்து சில, 'ஹிட்' படங்களை கொடுத்த நடிகர்களுக்கே, 20 கோடி, 30 கோடி கொடுக்கும்போது, 35 வருட சீனியர் நடிகரான எனக்கு, 10 கோடி தருவதற்கு கசக்கிறதா?' என்று எகிறுகிறார்.
— சினிமா பொன்னையா
ஜோதிகாவின் வெறித்தனம்!
தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி என, பல மொழிகளிலும் நடித்து வரும், ஜோதிகா, தன் உடற்கட்டை கட்டுக்கோப்பாக்க, பயிற்சியாளர் மூலம் தீவிர ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம், அடுத்தபடியாக, எதிரிகளை பறந்து பறந்து பந்தாடும், 'ஆக் ஷன்' வேடங்களில் அதிரடி காட்டுவதோடு, மிடுக்கான தோற்றத்தில், இளவட்ட நடிகையருக்கே சவால் விடுவதற்கும் தான்.
அந்த வகையில், 45 வயதில், ஜோதிகா வெறித்தனமாக களத்தில் இறங்கியிருப்பது, பாலிவுட்டில், 'செகண்ட் இன்னிங்சில்' கொடி நாட்டி வரும் பல நடிகையருக்கு, அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
— எலீசா
ரகசிய திருமணத்தை மறுக்கும், ரகுல் பிரீத்சிங்!
தற்போது தமிழில், இந்தியன்- 2 படத்தில் நடித்து வரும், ரகுல் பிரீத் சிங், ஹிந்தி பட தயாரிப்பாளர், ஜாக்கி பக்னானி என்பவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியான போது, அதை ஒத்துக் கொண்டார்.
தற்போது, 'காதலரை, ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான செய்தியை மறுக்கிறேன். அதோடு, நடிகையர் பெரும்பாலும் காதலை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை.
'அதேபோல், எங்களுக்கிடையே திருமணம் எதுவும் நடைபெறவில்லை. அப்படி நடைபெற்றிருந்தால், அதை நான் வெளிப்படையாகவே அறிவிப்பேன். மற்றவர்களை போன்று மூடி மறைக்கும் பழக்கம் எனக்கு எப்போதுமே கிடையாது...' என்கிறார், ரகுல் ப்ரீத் சிங்.
— எலீசா
ராசி கண்ணாவை கைவிட்ட, கோலிவுட்!
ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விஷால் என, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக, நடித்த போதும், ராசி கண்ணா நடித்த எந்த படங்களும், 'ஹிட்' ஆகவில்லை. இதையடுத்து அவர், கவர்ச்சி சுனாமியாக உருவெடுத்தும், கோலிவுட்டில் யாருமே கண்டு கொள்ளவில்லை.
தோல்வி, 'சென்டிமென்ட்' துரத்தி அடித்த காரணத்தால், தற்போது பாலிவுட்டில் முகாமிட்டுள்ளார், ராசி கண்ணா. அங்கு போன வேகத்திலேயே, ஒரு படத்தை தட்டி துாக்கியவர், 'ஹிந்தியில் கொடி நாட்டிய பிறகு, தமிழ் சினிமா பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டேன்...' என்று, தனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி அலைக்கழித்த, சில இயக்குனர்களிடம், ஆவேசமாக கூறி இருக்கிறார்.
எலீசா
மாறி விட்டார், சுனைனா!
முன்பெல்லாம், ரசிகர்களை கண்டாலே, தெறித்து ஓடுவார், காதலில் விழுந்தேன் பட நாயகி, சுனைனா. ரெஜினா படத்தில், கதையின் நாயகியாக நடித்திருந்தார். அந்த படம் வெளியான தியேட்டர்களுக்கு சென்று, ரசிகர்களுடன், 'செல்பி' எடுத்துக் கொண்டதுடன், கை குலுக்கி, தன் இயல்பு தன்மையை வெளிப் படுத்தியுள்ளார்.
அதோடு, 'இனி வரும் காலங்களில், மக்கள் பிரச்னைகளை சொல்லும் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களில் ஒருவராக என்னை வெளிப்படுத்தப் போகிறேன்...' என்கிறார்.
— எலீசா
சம்பளத்தை குறைத்த ரஜினி!
தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த் தான், நீண்ட காலமாக அதிகப்படியான சம்பளம் வாங்கி வந்தார். அந்த வகையில், அண்ணாத்த படத்தில் நடிப்பதற்கு, 110 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். ஆனால், அந்த படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது.
அதனால், ஜெயிலர் படத்தில் நடிக்க, 80 கோடி மட்டுமே வாங்கி இருக்கிறார். இதையடுத்து தான் நடிக்க உள்ள படங்களிலும் இதே சம்பளத்தை வாங்க, அவர் முடிவெடுத்துள்ளார். ரஜினி, தன் சம்பளத்தில், 30 கோடி ரூபாயை குறைத்திருப்பது, தயாரிப்பாளர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
இதேபோல், தோல்வி படங்களை கொடுத்து வரும் மற்ற, 'ஹீரோ'களும் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், கோலிவுட்டில் எழுந்திருக்கிறது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
சுள்ளான் நடிகரை பொறுத்தவரை, தன்னை விட்டு விலகி நிற்கும் அம்மணிகளை கூட, அவுட்டோருக்கு செல்லும் இடங்களில் தட்டி துாக்கி விடுவார். ஆனபோதிலும், அவருடன் அந்த பீரியட் படத்தில் நடித்து வரும், டான் நடிகை, நடிகரின் நிழல் கூட தன் மீது படாமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
கடுப்பான சுள்ளான், ஒருநாள் அவுட்டோரில், சரக்கு அடித்து, நள்ளிரவில் அம்மணியின் ஹோட்டல் அறை கதவை தட்டிய போது, அதிர்ச்சியடைந்த நடிகை, கத்தி கூச்சலிட்டார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சுள்ளான், 'எனக்கே டேக்கா கொடுக்கிறீயா? உன்னை தமிழ் சினிமாவில் வளரவே விட மாட்டேன் பார்...' என்று, கடுமையாக எச்சரித்தார். மேலும், மேற்படி நடிகைக்கு படம் கொடுக்க இருந்த இயக்குனர்களை தொடர்பு கொண்டு, அந்த வாய்ப்புகளை தட்டித்துாக்கி பலத்த, 'ஷாக்' கொடுத்திருக்கிறார்.
சினி துளிகள்!
* தனுஷ் நடித்து வரும், கேப்டன் மில்லர் படம், சுதந்திரப் போராட்ட கால கதைக் களத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், அவருக்கு ஜோடியாக, பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
அவ்ளோதான்!
