தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மனம் புண்பட பேசினால்...

மனம் புண்பட பேசினால்...

மனம் புண்பட பேசினால்...


PUBLISHED ON : ஜூலை 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கங்கை நதியிலிருந்து, 6 கி.மீ., துாரத்தில் இருந்த சத்தியவிரதம் எனும் கிராமத்தில், தினமும் மாலை வேளைகளில் கதாகாலட்சேபம் நடக்கும். பகவானின் அருள் குணங்களை விவரிக்கும் அக்கதையை, ஏராளமானோர் கேட்பர்.

அவர்களில் புண்ணியதாமா என்பவரும் ஒருவர்; தீவிரமான பக்தர்.

'எப்போது மாலை நேரமாகும்?' என, காத்திருந்து, கதை கேட்கப் போய் விடுவார். மற்ற நேரங்களில் எல்லாம், கங்கையில் நீராட வரும் பக்தர்களை வரவேற்று உபசரித்து, உணவு அளிப்பதிலேயே காலத்தைக் கழித்து வந்தார். பல ஆண்டுகள் இவ்வாறே கடந்தன.

ஒருநாள், தொலைதுாரத்திலிருந்து வந்த யாத்திரிகர் இருவர், புண்ணியதாமா வீட்டில் வந்து தங்கினர். அவர்களை வரவேற்று உபசரித்து, உணவு படைக்கும் வேளையில், 'கங்கை இங்கிருந்து எவ்வளவு துாரம்?' என கேட்டனர், யாத்திரிகர்கள்.

'அந்தக் கணக்கெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருநாள் கூட, நான் கங்கையில் நீராடியதில்லை. அருகில் தான் உள்ளதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்...' என்றார், புண்ணியதாமா.

அதைக் கேட்ட யாத்திரிகர் இருவரும், 'இவரைப் போன்ற பாவி யாரும் கிடையாது. இவ்வளவு பக்கத்தில் இருந்தும், கங்கையில் நீராடியதில்லை என்கிறாரே... இப்படிப்பட்டவர் வீட்டில் நாம் தங்கியதே பாவம்...' என்று சொல்லி, கைகளை உதறியபடியே எழுந்து வெளியேறினர்.

'இந்த பாவியின் வீட்டில் தங்கிய பாவத்தை, கங்கையில் நீராடித்தான் போக்க வேண்டும்...' என்று, கங்கையை நெருங்கியவர்களுக்கு, அதிர்ச்சி.

கங்கையில் ஒரு துளி நீர் கூட இல்லை.

'அம்மா கங்காதேவி... நாங்கள் ஏதோ தவறு செய்து விட்டோம். எங்களை மன்னித்து அருள்செய் தாயே...' என்று கதறினர், யாத்திரிகர்கள்.

'உத்தமமான அந்த புண்ணியதாமாவை இழிவாகப் பேசி, அவர் மனதை வருத்தப்படுத்தி விட்டீர். உத்தமமான அந்தப் புண்ணியதாமாவின் பாத துளி, என் மேல் படாதா- என்று தானே காத்துக் கொண்டிருக்கிறேன்.

'நல்லவர்கள் மனம் புண்படும் படியாகப் பேசியதற்கு பரிகாரமே கிடையாது. போய், அந்தப் புண்ணியதாமாவிடமே மன்னிப்பு கேளுங்கள்...' என்று கூறி மறைந்தாள், கங்கை.

யாத்திரிகர் இருவரும் தவறை உணர்ந்து, புண்ணியதாமாவிடம் போய், அவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். புண்ணியதாமாவும் அவர்களை மன்னித்து, தாம் கேட்கும் கதாகாலட்சேபத்தை இரண்டு ஆண்டுகள் கேட்கச் செய்தார்.

அதன்பின், மூவருமாக போய் கங்கையைப் பார்க்க, பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது. மூவரும் நீராடினர்.

இக்கதை, கிருத யுகத்தின் இறுதியில் நடந்தது.

என்னதான் விபரம் தெரிந்தவர்களாக, -திறமைசாலிகளாக இருந்தாலும், அடுத்தவர் மனம் புண்படும்படியான அமில வார்த்தைகளை வீசக்கூடாது -என்பதை உணர்த்தும், கங்கையின் பெருமையை சொல்லும் பல கதைகளில் இதுவும் ஒன்று.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us