PUBLISHED ON : ஆக 13, 2023

வில்லன் வேடத்துக்கு,'ரிஸ்க்' எடுத்த, விஜய் சேதுபதி!
தமிழில், பேட்டை, மாஸ்டர், விக்ரம் மற்றும் தெலுங்கில், உப்பெனா என, விஜய் சேதுபதி வில்லனாக நடித்த நான்கு படங்களுமே அவருக்கு, 'ஹிட்'டாக அமைந்தன. இந்நிலையில், ஹிந்தியில் ஷாருக்கானுடன், ஜவான் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
'நான் ஏற்கனவே வில்லனாக நடித்த நான்கு படங்களையும் விட, ஜவான் படம், இந்திய அளவில் என்னை மெகா மற்றும் பிரமாண்ட வில்லனாக்கப் போகிறது என்பதால், மிகவும், 'ரிஸ்க்' எடுத்து நடித்துள்ளேன்.
'பாலிவுட் வில்லன்கள் யாரும் வெளிப்படுத்தாத மாறுபட்ட, 'பர்பாமென்ஸ்'சை கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு காட்சியையும் ஒன்றுக்கு பத்து முறை ஒத்திகை பார்த்து நடித்திருக்கிறேன். அதனால், ஜவான் படம், என்னை இந்திய அளவில் உச்சபட்ச வில்லனாக உயர்த்தும்...' என்கிறார்.
சினிமா பொன்னையா
தனுஷ் படத்தில், ராஷ்மிகா!
தமிழில், ராஷ்மிகா மந்தனா நடித்த, சுல்தான் மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இதனால் தான், விஜயுடன் நடித்த பிறகும் எந்த இயக்குனர்களும் அவர் பக்கம் திரும்பவில்லை.
இருப்பினும், சில முன்னணி இயக்குனர்களை துரத்தி வந்த ராஷ்மிகா, தற்போது, தனுஷ் நடிக்கும், பான் இந்தியா படத்தை கைப்பற்றி விட்டார்.
'தமிழில், முதல் இரண்டு படங்களும், என்னை ஏமாற்றிய போதும், தனுஷுடன் நான் நடிக்கும் படம், கண்டிப்பாக, 'சூப்பர் ஹிட்'டாக அமையும். இந்த படத்தில், 'கிளாமரு'க்கு பஞ்சம் வைக்காமல், 'பர்பாமென்ஸ்' ரீதியாகவும், அழுத்தமாக என்னை தமிழக ரசிகர்களின் மனதில் பதிய வைக்கப் போகிறேன்...' என்கிறார், ராஷ்மிகா.
— எலீசா
'செக்சி'யான உடல் கட்டுக்காக மாதம், ரூ. 1லட்சம்!
தற்போது, 35 வயதாகும் டாப்ஸி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். அதோடு, காதல், கல்யாணம் போன்ற வதந்திகளில் சிக்காமல், 'எஸ்கேப்' ஆகி, தன், 'செக்சி' ஆன உடல் கட்டை தொடர்ந்து, 'மெயின்டெயின்' பண்ணி வருகிறார்.
இதுகுறித்து கேட்டால், 'இப்போது வரை, நான், 'மோஸ்ட் வான்டட்' நடிகையாக இருக்கிறேன் என்றால், அதற்கு என் திறமை மட்டுமே முக்கிய காரணம் அல்ல. என், 'செக்சி' ஆன உடல் கட்டும் தான்.
'இதற்காக, என், 'டயட்டீஷிய'னுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்து வருகிறேன். அவர் சொல்லும் உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வருகிறேன். என், 'செக்சி' ஆன உடல் கட்டுக்கு, இவையெல்லாம் தான் முக்கிய காரணம்...' என்கிறார், டாப்ஸி.
— எலீசா
சந்தானத்தின் தில்லு!
காமெடியனாக இருந்த சந்தானம், 'ஹீரோ' ஆன பிறகு, அவர் நடித்த, தில்லுக்குதுட்டு படத்தை தவிர, மற்றவை பெரிதாக வெற்றி பெறவில்லை. இருப்பினும், தன்னை எந்த தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்ய வந்தாலும், ஐந்து கோடி ரூபாய்க்கு தம்படி கூட குறைக்க கூடாது என்று, கறாராக சொல்லி விடுகிறார், சந்தானம்.
'நீங்கள் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லையே...' என்று, தயாரிப்பாளர்கள் கேட்டால், 'பெரிதாக ஓடவில்லை தான். ஆனபோதும், நான் நடித்த எந்த படமும், இதுவரை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை. அதனால் தானே நீங்களும் என்னை ஒப்பந்தம் பண்ண வந்திருக்கிறீர்கள்...' என்று சொல்லி, வாயடைக்கிறார், சந்தானம்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
உலக நடிகருக்குள்ளும் ஒரு இயக்குனர் இருப்பதால், அவ்வப்போது கதை மற்றும் காட்சிகளில் தன் கற்பனைகளையும் உள்ளே திணிப்பது, அவரது வழக்கம். அதிலும், இளவட்ட இயக்குனர்கள் என்றால், அவர்கள் கதை சொல்லும்போதே, அதில் தனக்கு தோன்றும் விஷயங்களையும் திணித்து, தான் விரும்பிய கதையாக அதை மாற்றி விடுவார், உலக நடிகர்.
அந்த வகையில், தல நடிகரை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய, அந்த மூன்றெழுத்து இயக்குனர், தன்னை வைத்து இயக்கும் படத்தின் கதையையும் பெரிய அளவில் மாற்றியுள்ளார்.
இதன் காரணமாகவே, 'என் கதையை, அவரது கதை போன்று மாற்றி விட்டார். அதனால், இந்த படம் வெளியாகும்போது, என் படமாக இல்லாமல், உலக நடிகரின் படமாக தான் இருக்கப் போகிறது. பெரிய நடிகரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, என் ஒரிஜினாலிட்டியை இழந்து விட்டேன்...' என்று, தன் உதவி இயக்குனரிடம் சொல்லி புலம்புகிறார், மேற்படி இயக்குனர்.
சினி துளிகள்!
* அஜித் நடிப்பில், நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை அடுத்தடுத்து இயக்கிய, எச்.வினோத், அடுத்தபடியாக, கமல் நடிப்பில் அவரது, 234வது படத்தை இயக்கப் போகிறார்.
* பாரதிராஜா இயக்கிய முதல் படமான, 16 வயதினிலே படம் துவங்கி, அவர் இயக்கிய, 11 படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்தார், இளையராஜா. நாடோடி தென்றல் படத்துக்கு பிறகு, அவர் படங்களுக்கு இசையமைக்கவில்லை. இந்நிலையில், 31 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் மகன் மனோஜ் இயக்கத்தில், பாரதிராஜா நடிக்கும், மார்கழி திங்கள் படத்திற்கு, இசையமைக்கிறார், இளையராஜா.
அவ்ளோதான்!
