PUBLISHED ON : ஆக 13, 2023

அன்பு மகளுக்கு —
நான், 75 வயது மூதாட்டி. கணவர், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
என் மகளை, டாக்டர் வரன் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தோம். மூன்றே மாதத்தில், அவள் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது.
மாப்பிள்ளைக்கும், அவனை விட வயதில் மூத்த டாக்டர் பெண்மணிக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்திருக்கிறது. திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்திருக்கிறது.
இதையறிந்த என் மகள் கேட்டபோது, முதலில் மழுப்பி உள்ளார். தொடர்ந்து தட்டிக் கேட்டதும், 'நான் அப்படித்தான் இருப்பேன்...' என்று கூறியுள்ளான், அவள் கணவன்.
விஷயம் தெரிந்ததிலிருந்து, என் மகளை, 'டார்ச்சர்' செய்ய ஆரம்பித்தான். அடி, உதையும் கிடைத்துள்ளது. விஷயம் கேள்விப்பட்டு, போலீசில் புகார் செய்தோம். பண பலமும், செல்வாக்கும் அவனுக்கு சாதகமாக இருக்க, எந்த நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில், விவாகரத்து கொடுத்துவிட்டு, எங்காவது சென்று விடுமாறு, மகளை மிரட்ட, 'நான் எந்த தவறும் செய்யாதபோது, ஏன் விவாகரத்து கொடுக்க வேண்டும்...' என, அங்கேயே இருந்தாள்.
ஒருநாள் இரவு, மகளுக்கு மயக்க ஊசி போட்டு, கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து விட்டு, வெளியே போய் இருக்கிறான். மகள், அரைகுறையாக தெளிந்த நிலையில், எனக்கு போன் செய்து விஷயத்தை கூறிக் கொண்டிருக்கும் போதே, லைட்டை போட, அதிலிருந்து கிளம்பிய மின்பொறி பட்டு, கேஸ் சிலிண்டர் வெடித்து, இறந்து போனாள்.
மீண்டும் அவன் மீது புகார் செய்து, மகள் சாவுக்கு அவன் தான் காரணம் என்று சில ஆதாரங்களை காட்டியதும், போலீஸ் நடவடிக்கை எடுத்து, அவனை கைது செய்தனர். சில வாரங்களிலேயே தன் செல்வாக்கால், ஜாமின் பெற்று வெளியே வந்து, வழக்கை வாபஸ் வாங்க வற்புறுத்தி, இப்போது எங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறான்.
'ஆள், பண பலம், அதிகாரம் கொண்ட அவனை, இனியும் எதிர்க்க வேண்டாம். நம் வீட்டு பெண்ணே போய் விட்டாள். இனி, அவனை பழிவாங்க வேண்டுமா?' என்று கூறி, ஒதுங்கி விட்டனர், மகன்கள்.
என் மகளின் இறப்புக்கு நீதி கிடைத்தே ஆகணும் என்று, வயது மற்றும் உடலில் பல்வேறு நோய்களுடனும் போராடி வருகிறேன்.
எனக்கு நியாயம் கிடைக்குமா, மகளே!
— இப்படிக்கு,
உன் அம்மா.
அன்புள்ள அம்மா —
உங்கள் மகளின் கொலை வழக்கு தொடர்பாக, சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்...
1. வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடைபெறுகிறதா? முதல் தகவல் அறிக்கையும், குற்ற பத்திரிகையும் குற்றவாளிக்கு சாதகமான விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதா? உங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதி பற்றி, நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் உலவும் பொது அபிப்ராயம் உங்களுக்கு சாதகமாக உள்ளதா? கொலையாளி இன்னும் மருத்துவராக பிராக்டிஸ் பண்ணுகிறானா?
2. வழக்கின் போக்கு எப்படி இருக்கிறது? அரசு தரப்பு வழக்கறிஞர், வழக்கை நடத்துகிறாரா? அரசு தரப்பு வழக்கறிஞருக்கும், குற்றவாளி தரப்பு வழக்கறிஞருக்கும், குற்றவாளிக்கும் இடையே ரகசிய தொடர்பு இருப்பதாக சந்தேகம் வருகிறதா?
3. வழக்கை தீவிரமாக நடத்த வேண்டிய மகன்கள் ஏன் ஒதுங்கிக் கொண்டனர்... சுயநலமா அல்லது கொலையாளியால் மிரட்டப்பட்டனரா?
4. வழக்கை நடத்த ஆகும் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்... வீட்டு செலவுக்கும் மருத்துவ செலவுக்கும் வழக்கு செலவுக்கும் போதுமான பண வசதி உங்களுக்கு இருக்கிறதா?
5. ஒரு கொடூரனுடன் இருந்து போராடி சாவதைவிட, உங்கள் மகள் ஆரம்பத்திலேயே அவனை விட்டு பிரித்து உங்களுடன் வாழ வந்திருக்கலாமே? பிரச்னைகளை மகள் முன்னமே சொல்லியும் நீங்கள் அசட்டையாக இருந்துவிட்டீர்களா அல்லது உங்கள் மகள் பிரச்னைகளை மூடிமறைத்து விட்டாளா?
6. நீதிமன்ற தண்டனையும், இறை தண்டனையும் அந்த கொடூரனுக்கு சேர்ந்தே கிடைக்க, தினம் தினம் இறைவனை வேண்டுகிறீர்களா?
7. ஒரு வழக்கை, கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரை, முழுமையாக விசாரித்து, இறுதி தண்டனை கிடைக்க, 20 ஆண்டுகள் கூட ஆகலாம். தாமதிக்கபட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி இல்லையா? அதுவரை நீங்கள் தாக்கு பிடித்து வழக்கை நடத்துவீர்களா?
உங்களுக்கு ஒரு யோசனை கூறுகிறேன் செயல்படுத்துங்கள்.
நீதிபதியை தனியாக சந்தித்து காலில் விழுந்து கதறுங்கள். உங்களின் கண்ணீர், குற்றவாளியை தண்டிக்கும் தீர்ப்பை எழுத வைக்கும். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கும் விதத்தில், கண்ணீரால் நீதிமன்றத்தை மூழ்கடியுங்கள்.
சாட்சிகள், பிறழ்சாட்சி ஆகிவிடாமல், அவர்களை உங்கள் பக்கம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். கொலையாளியின் மிரட்டலை, நீதிமன்றத்தில் வாய் மொழி மற்றும் எழுத்து மூலமாக புகார் செய்து, அவனின் ஜாமினை ரத்து செய்ய வையுங்கள்.
அரசு தரப்பு வழக்கறிஞருடன் மனம் விட்டு பேசுங்கள். மொத்தத்தில் சூழ்ச்சிக்காரனுக்கு சூழ்ச்சிகாரனாய் நீங்கள் செயல் படவேண்டும். புறநானுாற்று வீரக்கிழவி என்பதை, உங்கள் செயல்பாடுகள் மூலம் நிரூபியுங்கள்.
உங்கள் மகன்களிடம், 'கீழமை நீதிமன்றத்தில் கொலையாளிக்கு பாதகமான தீர்ப்பை பெற்றுத் தருகிறேன். கொலையாளி மேல்முறையீடு செய்தால், அப்போது வழக்கை நடத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. கிழவியின் வீரத்தில் பத்தில் ஒரு பங்குடன் செயல்படுங்கள்...' என கூறுங்கள்.
— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.
