தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/விளை நிலம்!

விளை நிலம்!

விளை நிலம்!


PUBLISHED ON : ஆக 13, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 13, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேலை முடிந்து சேறு படிந்த கால்களோடு வந்த சண்முகம், வெளியே தொட்டியிலிருந்த தண்ணீரை எடுத்து, கால்களை கழுவி, உள்ளே வந்தார்.

சண்முகம் வந்ததை அறிந்து, ஒரு டம்ளர் பாலுடன் வந்தாள், சிவகாமி.

அவர் கையில் கொடுத்து, ''என்னங்க, நாற்று நடும் வேலை முடிச்சாச்சா?'' என்றாள்.

''ஆச்சு சிவகாமி. 30 நாள் நாத்த பிடுங்கி, நிலத்தில் நட்டாச்சு. நிலத்தை உழுது, தழைச்சத்து, தொழு உரம் போட்டு சமன்படுத்தி வச்சது, வசதியாக இருந்துச்சு. இனி, நீர் பாய்ச்சி பராமரித்தால், 180 நாட்களில் அறுவடைக்குத் தயாராயிடும். என்ன சிவகாமி சிரிக்கிற?'' என்றார், சண்முகம்.

''உங்க மகன் போன் பண்ணி, 'அப்பா என்னம்மா முடிவு பண்ணியிருக்காரு'ன்னு கேட்டான். நீங்க என்னடான்னா, நாத்து நட்டுட்டு வந்திருக்கீங்க.''

''பொன் விளையற பூமி, சிவகாமி. பூமி தாய் தான், நம் குடும்பத்தை வாழ வச்சிட்டிருக்கா... அவளை நம்பித்தானே, நம் வாழ்க்கை நகருது. மகன் இன்னைக்கு படிச்சு, பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறான்னா, அவனை உருவாக்கியதும் அவள் தான்,'' என்றார், சண்முகம்.

''புரியுதுங்க... காலம் காலமாக விவசாயியாக இருந்து, நிலத்தில் பாடுபட்டு, உங்க உழைப்பை மூலதனமாக்கி, குடும்பத்தை நல்லவிதமா வாழ வச்சிட்டிருக்கீங்க. இப்ப நம் பிள்ளை தலையெடுத்திட்டான்.

''கல்யாணமாகி பேரன், பேத்தி வந்தாச்சு. நல்ல நிலையில் இருக்கான். 'உழைச்ச வரைக்கும் போதும், வந்து என்னோடு இருங்க'ன்னு கூப்பிடறான். அது நியாயம் தானே... அது மட்டுமில்லை, நிலத்தையும் நல்ல விலை பேசி வித்துடலாம்ன்னு சொல்றான். நீங்க தான் இன்னும் முடிவு சொல்லலை,'' என்றாள், சிவகாமி.

மகன் போன மாதம் வந்தபோது சொன்னது, சண்முகத்தின் நினைவில் வந்து போனது.

'அப்பா, பக்கத்து ஊரில் சிமென்ட் பாக்டரி வரப்போகுது. வசிக்க வீடு கட்டித் தரப் போறாங்களாம். கிராமத்து பக்கம், கிடைக்கிற இடங்களை நல்ல விலை கொடுத்து வாங்கறாங்க. நம் நிலம் ரோடு பக்கத்தில் இருக்கு. இப்ப கொடுத்தா, நல்ல விலை கிடைக்கும்.

'நீங்க உழைச்ச வரைக்கும் போதும். அம்மாவை அழைச்சுக்கிட்டு என்னோடு வந்திடுங்க. வெயில், மழைன்னு பார்க்காமல், வியர்வை சிந்த, சேற்றுக் காலோடு உழைத்த உங்களை, உட்கார வச்சு சோறு போடணும்ன்னு நினைக்கிறேன். தயவுசெய்து நல்ல முடிவாக சொல்லுங்கப்பா...' என, சொல்லி இருந்தான்.

''இருக்கட்டும் சிவகாமி, இந்த ஒரு போகம் நெல் அறுவடை செய்வோம். அப்புறம் பார்க்கலாம்,'' என்றார்.

கணவன் இன்றும் பதில் சொல்லாதது, சிவகாமிக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது.

இரவு நிலவு ஒளியில், வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தார், சண்முகம்.

கடந்து வந்த பாதை மனதில் நிழலாடியது.

'சண்முகம் நிலத்தை, 'ஒத்திக்கு' வாங்கி, நல்ல முறையில் பாடுபட்டு, மூன்று போகம் நெல் விளைச்சலை பார்க்கிறே. நல்ல மகசூல் கிடைக்குது. சந்தோஷம்பா... இந்த நிலத்தை உனக்கே கிரையம் பேசி வித்துடலாம்ன்னு இருக்கேன். என்னப்பா சொல்றே?'

விழிகள் விரிய முகமலர்ந்து அவரைப் பார்த்தான்.

'ரொம்ப சந்தோஷம் ஐயா... என் ஆயுசு இருக்கிற வரை, இந்த நிலத்தை என் தாயாகப் பார்த்து, நல்ல முறையில் பாதுகாப்பேன்...'

அவர் வாழ்க்கைக்கு ஊன்றுகோலாய் இருந்தது, அந்த நிலம் தான். சண்முகத்தின் அசராத உழைப்பு, அவர் வாழ்க்கையை நல்லவிதமாக நடத்த உதவியது.

அருகில் வந்தமர்ந்த சிவகாமி, ''என்னங்க, நான் ஒண்ணு சொல்லட்டுமா?''

''சொல்லதானே பக்கத்தில் வந்து உட்கார்ந்திருக்கே, சொல்லு...'' என, புன்னகைத்தார்.

''நம் குமரன் நினைப்பது சரிதான்ங்க... இன்னும் எத்தனை நாளைக்கு தான், நாம் இந்த கிராமத்தில் இருப்பது... பேரன், பேத்திகளோட கொஞ்ச காலமாவது வாழ்ந்துட்டு போகணுங்க.''

''உன் ஆசை புரியுது, சிவகாமி. நிச்சயம் நல்ல முடிவாக எடுப்பேன்; கவலைப்படாதே. நம்ப முத்தப்பன்கிட்ட சொல்லி, குமரனுக்கு விபரமாக ஒரு கடிதம் போட்டிருக்கேன். எனக்கு தான் எழுதப் படிக்கத் தெரியாதே... பதில் வரட்டும், பொறுமையா இரு,'' என்றார்.

அன்பு குமரனுக்கு,

அப்பாவின் அன்பு கடிதம். நீ நேரில் பேசியது, அம்மாவிடம் போனில் சொன்னது, எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தேன். என் மனதில் இருப்பதை உன்னிடம் தெரியபடுத்துகிறேன்.

சிறு வயதில் பெற்றவர்களை இழந்தவன், நான். உறவினர் அணைப்பில் வளர்ந்தேன். பெரிய மனம் படைத்த நல்லவர், நான் ஆர்வமுடன் விவசாய நிலத்தில் உழைப்பதைப் பார்த்து, அவர் நிலத்தை எனக்கே விற்றார்.

என் தலையெழுத்தை மாற்றியது, அந்த பூமி தான். மனதில் உத்வேகம், கடுமையாக உழைத்தேன். பொன் விளையும் பூமியாக மாறியது. பிறகு, என் கல்யாணம். தவமாய் நீ பிறந்தது. மனம் நிறைந்து வாழ்ந்தேன்.

சேறு படிந்த கால்கள், எனக்கு கம்பீரத்தையே தந்தது. ஒரு விவசாயி என்று சொல்வதில் பெருமைப் படுகிறேன்.

இப்போது உன் முடிவையும் வரவேற்கிறேன். பெற்ற தாய், தந்தையை வயதான காலத்தில் அருகில் வைத்து பாதுகாக்கும் உன் எண்ணம் பாராட்டுக் குரியது. அதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்.

உனக்கு முகுந்தனை ஞாபகம் இருக்கிறதா... என்னைப் போல பெற்றவர்களை இழந்து, உறவினர்கள் தயவில், விவசாய படிப்பு படிக்கிறான். அவன், போன முறை வீட்டிற்கு வந்தபோது என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தான்.

'பெரியப்பா, எனக்குன்னு யாருமில்லை. படிச்ச படிப்பை மூலதனமா வச்சு, விவசாயத்தில் புதுமைகளைக் கையாண்டு, நல்ல விளைச்சலைத் தரணும்ன்னு நினைக்கிறேன். ஆனால், எனக்குன்னு ஒரு துண்டு நிலம் கிடையாது. யாருக்காவது, உங்க நிலத்தை விட்டு தரணும்ன்னு நினைச்சா தயவுசெய்து எனக்கு கொடுங்க பெரியப்பா.

'முழு மூச்சாக பாடுபட்டு, நல்ல விளைச்சல் தந்து, நிலத்துக்குரிய தொகையை கொஞ்சம், கொஞ்சமாக கட்டாயம் திருப்பித் தந்திடுவேன்.

'இன்னும் ஆறு மாசத்தில் என் படிப்பு முடிஞ்சிடும். நல்ல பதிலாகச் சொன்னால், பொன் விளையற அந்த பூமியை, உங்களை போலவே நல்ல முறையில் பாதுகாப்பேன் பெரியப்பா...' என்று, கூறி சென்றான்.

விளைநிலங்கள் எல்லாம், கான்கிரீட் கட்டடங்களாக மாறிட்டு வருதுப்பா. விவசாய நிலம் இப்படி குறைஞ்சு போனால், உணவு உற்பத்தி எப்படி நடக்கும். அதுதான் என் மனசுக்கு கவலையா இருக்கு.

இப்பவும் சொல்றேன், உன் முடிவு தான் என் முடிவு. வயதான காலத்தில் பிள்ளைகளை அனுசரிச்சு வாழணும். நீ, விருப்பப்பட்டால், விற்பதற்கு ஏற்பாடு செய் குமரா... நான் தடுக்க மாட்டேன். நானும், அம்மாவும் உன்னுடன் வந்து இருப்பதில் எங்களுக்கு பரிபூரண சம்மதம்.

ஆனால், ஒவ்வொரு மனுஷனும், ஒரு வாய் கவளம் சோற்றை எடுத்து வைக்கும்போது, அதை விளைவிக்க பாடுபட்ட விவசாயியை நினைச்சு பார்க்கணும்.

ஒரு நாட்டின் வளமே, விவசாயத்தில்தான் இருக்கு. என் ஆதங்கத்தை தான் வெளிப்படுத்தினேன். நீ ஒன்றும் தப்பாக எடுத்துக்க வேண்டாம் குமரா...

உன் பதிலை எதிர்பார்க்கும், உன் அப்பா.

''இந்தாங்க, உங்க மகன் உங்ககிட்ட தான் பேசணுமாம்,'' போனை, கணவனிடம் தந்தாள், சிவகாமி.

''அப்பா, உங்கள் கடிதம் பார்த்தேன். நீங்க, என் அப்பா மட்டுமில்லை; ஒரு நல்ல விவசாயி என்பதையும் புரிஞ்சுக்கிட்டேன். நம் நிலத்தை முகுந்தன்கிட்ட ஒப்படைக்கலாம். நம் விளைநிலம் என்னைக்கும் பொன் விளையுற பூமியாகவே இருக்கட்டும்.

''முகுந்தன் வந்த பிறகு, நீங்க தாயாக நேசிக்கிற நம் நிலத்தை பத்திரமாக ஒப்படைச்சுட்டு, இங்கே வாங்க. உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திட்டு இருக்கோம்பா...'' என்றான், குமரன்.

பெருமிதத்துடன், சேறு படிந்த தன் கால்களை பார்த்தார், சண்முகம்.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us