PUBLISHED ON : ஏப் 03, 2022

பாலைவன ஒட்டகங்களுக்கு புல், ரொட்டி கொடுத்து மகிழ்ந்தனர், பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதியர். ஒட்டக பால் கறந்து கொடுக்க, சுவைத்தனர். மேலும், பாலைவனத்தில் வெயில் - குளிரில் ஒட்டகத்தை பராமரித்து வரும் தமிழர்களுக்கு சாப்பாடு பொட்டலங்கள், கையோடு வாங்கிப் போய் வினியோகித்தனர்.
உத்தியோகத்திற்கு அப்பாற்பட்டு பொது வாழ்வில் சாதிக்க முடிகிறதென்றால், அதற்கு காரணம் எழுத்து. அதில்லை என்றால் நானில்லை. இந்த பெயர், புகழ், சமூக சேவை அனைத்திற்கும் அடித்தளம் அதுவே.
எழுத்தில் பெயர் எடுக்க என்ன தான் உருண்டு புரண்டு முயன்றாலும், கை கொடுத்தவர்களையும், துாக்கி வளர்த்த ஏணிகளையும் பற்றி சுவையான தகவல்கள் நிறைய உண்டு.
எங்கள் வீட்டில் பத்திரிகை படிப்பரே தவிர, எழுத்துக்கும், அவர்களுக்கும் ரொம்ப துாரம்.
விவசாய குடும்பம். அஞ்சல் அலுவலகம் கூட இல்லாத குக்கிராமம். பஸ் உண்டு; ஆனால், ஊருக்குள் வராது. மெயின் ரோடிலிருந்து, அரை கி.மீ., நடக்கணும்.
எழுத்தின் மேல் ஆர்வம் எழுந்ததே சுவாரஸ்யம்.
பள்ளியில் - அதுவும் பெரம்பலுார் அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தில், சிறுமலர் உயர்நிலை பள்ளியில் தான், இந்த ஊற்று ஆரம்பம்!
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் நடப்பதற்கும், அதை நான் தொடர்ந்து கொண்டிருப்பதற்கும் இந்த பள்ளி தான் காரணம்.
ஒன்பதாம் வகுப்பு வரை, 'கல்கண்டு, ராணி, அம்புலிமாமா, கோகுலம், அணில், இரும்புக்கை மாயாவி' என புத்தகத்திற்கிடையே ஒளித்து வைத்து படிப்பதுண்டு. சகோதரர் ஜெயக்குமார், தன் வகுப்பில் கிடைக்கும் பத்திரிகைகளை எனக்கும் படிக்க தருவார். 'பேசும்படம், பொம்மை' போன்ற சினிமா இதழ்களும் அதில் அடக்கம்.
அப்புறம் அதுவே, 'குமுதம், விகடன், கல்கி' என, வளர்ச்சி கண்டபோது, சோவின், 'துக்ளக்' இதழை என் மூத்த சகோதரர், வாங்கி வந்து அறிமுகப்படுத்தினார்.
அன்று ஆரம்பித்தது தான், இந்த எழுத்து பித்து!
சோவின் நகைச்சுவை, நையாண்டி, துணிச்சலான, சமூக அக்கறையுடனான விமர்சனங்கள் என, அந்த பக்கங்கள் ரொம்பவே ஈர்த்தன. அதேமாதிரி, சமூக அவலங்களின் மேல் கோபம் உள்ள எனக்கு, 'துக்ளக்' துாண்டுகோலாக இருந்தது.
பொதுவாக, பள்ளியில் பத்திரிகைகளுக்கு அனுமதியில்லை; அடி விழும். திருட்டுத்தனமாய் பிள்ளைகள் வாங்கி வரும் இதழ்களை படித்து முடிக்கும் முன், ஹாஸ்டல் வார்டன் பிடுங்கிக் கொண்டு போய் படிப்பார்.
ஆனால், தலைமை ஆசிரியரோ, 'துக்ளக், டைஜஸ்ட்' போன்ற இதழ்களை படித்துவிட்டு, பிள்ளைகளும் படிக்கட்டும் என, வரவேற்பறையில் பரப்பி வைப்பார். நானோ அதுவரை காத்திருக்காமல், பிரதி மாதம் 1 மற்றும் 15 தேதிகளில் அவர் அறையில் போய், 'துக்ளக்'கிற்காக நிற்பேன்.
திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லுாரிக்கு சென்ற பின், சோ பாணியில் நாட்டு நடப்பை நண்பன் மனோகருக்கு கடிதங்களில் எழுத ஆரம்பித்தேன். அவை எல்லாவற்றையும் அவன் தாங்கிக் கொண்டது மட்டுமின்றி, தாங்கிப் பிடிக்கவும் செய்தான். அந்த கடிதங்கள் அப்படியே உறவுகள், நண்பர்கள் என, வளர ஆரம்பித்தது.
படிக்கும்போது கல்லுாரி மற்றும் ஹாஸ்டல் மலர்களில் எழுதி வெளியான பின், எழுத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
செயின்ட் ஜோசப் கல்லுாரி, எனக்கு ஒரு பொற்காலம். டாக்டர் அப்துல்கலாம், சுஜாதா, 'தினமலர்' ஆசிரியர் கி.ராமசுப்பு, எழுத்தாளர்கள் கே.ஜி.ஜவஹர், பட்டுக்கோட்டை பிரபாகர் என, பல மூத்தவர்கள் படித்த கல்லுாரியில் படித்தது.
ஆனால், எழுத்தில் முன்னேற, அதை உழைப்பு என்று சொல்ல முடியாது; பிசாசு மாதிரி திரிவேன்.
சகோதரர் ஜெயக்குமாரின் உரக்கடையில் அமர்ந்திருந்தபோது, ரெங்கராஜ் வாத்தியார், மதி, பெருமாள், சாரங்பாணி...
இப்படி பலரின் ஊக்கம், ஜெயிக்க, 'டானிக்'காக இருந்தது.
கேரள மாநிலம், கொச்சியில் வேலை கிடைத்து சேர்ந்தபோது, எழுத்தாளர் கே.ஜி.ஜவஹரின் மூலம் அங்கு முத்தமிழ் சங்கமும், டி.வி.எஸ்.,சில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த பி.வெங்கட்ராமனும் அறிமுகம் ஆயினர்.
பிப்., 1982ல், மறைந்த முன்னாள் பிரதமர், ராஜிவ் அங்கு வந்தபோது, அவருடன் கும்பலுடன் கும்பலாய் நடந்து சென்ற அனுபவத்தை, நான் எழுதினேன். ஜவஹரின் அறிமுகத்தில் அதை அனுப்ப, 'சாவி' இதழில் முதல் பக்கத்திலேயே வெளியானது. அது, எனக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.
குழந்தை எழுத்தாளர் பி.வெங்கட்ராமன் மூலம், எனக்கு பல பிரபலங்களின் தொடர்புகளும் கிடைத்தன. நகருக்கு யார் வந்தாலும், அவர் உடனே அழைத்து அறிமுகப்படுத்தி, பேட்டி எடுத்து எழுதச் சொல்வார்.
இப்படியாக, 'சாவி' இதழின், முதல் மற்றும் கடைசி பக்கங்கள், என் கட்டுரைக்காக ஒதுக்கப்படும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தேன்.
ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து, 'சாவி' மற்றும் அதன் குழுமத்தில் என் எழுத்துக்கள் வெளியாயின.
விடுமுறைக்கு சென்னை வரும்போதெல்லாம், ஆசிரியர் குழு சந்திப்பின் போது, என்னை இணைத்து, என் புது புது யோசனைகளை செயல்படுத்துவார், சாவி. அவருடைய குடும்பத்தில் ஒருவராக, செல்லப் பிள்ளையாக எழுத்தில் வளர்ந்து கொண்டிருந்தேன்.
அப்போது, 'ஏழரை' ஒன்றின் மூலம் சம்பந்தமே இல்லாமல், என் மீது பழி சுமத்தப்பட்டு, அதையும் தந்தை ஸ்தானத்திலிருந்த, சாவி நம்பிவிட, மனம் வெறுத்து, 'இனி எழுத்தே வேணாம்...' என்ற விரக்திக்கு தள்ளப்பட்டேன். அச்சமயம் எனக்கு, 'தினமலர்' நாளிதழின் வாசல் திறக்கப்பட்டது.
அதுவும் எப்படி தெரியுமா?
— தொடரும்
என். சி. மோகன்தாஸ்
