
எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செய்துவிட்டு, பின், காலம் முழுவதும் அவதிப்படுவது பெரும்பாலோரின் வழக்கம்.
முன்பெல்லாம் திருமணச் சடங்குகளில், ரிசப்ஷன் என்ற ஒன்று கிடையாது. பின், திருமணம் நடந்த மறுநாளோ அல்லது ஒரு சில நாட்கள் கழித்தோ வரவேற்பு நடந்தது. ஆனால், தற்போதோ, திருமணத்திற்கு முன்பே, மணமகளையும், மணமகனையும் ஒன்றாக உட்கார வைத்து, ரிசப்ஷனை முடித்து, மறுநாள் திருமணம் நடத்துகின்றனர்.
முன்னோர் வரையறுத்த நெறிப்படி, காலத்தை உணர்ந்து காரியம் ஆற்றாவிட்டால் ஏற்படும் விளைவுகளை கூறும் கதை இது:
ஒரு மாலைப் பொழுதில், தவசீலரான காசியப முனிவர் ஹோமங்கள் செய்து, இறைவனை பூஜித்து, அக்னி ஹோத்திரம் செய்து, பரப்பிரம்ம தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது, மிகுந்த தவ வலிமை கொண்டவளான அவர் மனைவி திதி, கணவரை வணங்கி, வெட்கத்துடன், 'ஸ்வாமி... என் மனம் குழந்தைக்காக ஏங்குகிறது; ஆகையால், எனக்கொரு குழந்தை பிறக்க, தாங்கள் அருள் புரிந்து, இப்போதே என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்...' என்றாள்.
அதற்கு காசியபர், 'திதி... அறம், பொருள், இன்பம் எனும் பேறுகள் எவளால் கிடைக்கிறதோ, அப்படிப்பட்ட மனைவியின் விருப்பத்தை, எந்த கணவன் தான் நிறைவேற்றி வைக்க மாட்டான்... கண்டிப்பாக, உன் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்; ஆனால், இப்போது நேரம் சரியில்லை. ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) செல்லட்டும்; உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்...' என்றார்.
ஆனால், அதை ஏற்காத திதி, கணவரை வற்புறுத்தி, தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.
அதனால், 'பெண்ணே... சந்தியா காலத்தில் உருவான உன் குழந்தைகள், மிகவும் கொடூரமானவர்களாக இருப்பர். அளவற்ற துயரங்களை உண்டாக்கும் அவர்களை, பகவானே சம்ஹாரம் செய்வார்...' என்றார்.
அக்குழந்தைகளே, இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு!
நேரத்தை மதிக்காவிட்டால், தவசீலர்கள் வயிற்றில் கூட, அரக்க குணம் படைத்தோர் பிறப்பர் என்பதற்கு, இக்கதை உதாரணம். அதனால், நேரத்தை மதிப்போம்!
பி.என்.பரசுராமன்
திருமந்திரம்!
நிற்கின்ற போதே நிலையுடையான் கழல்
கற்கின்ற செய்மின்; கழிந்து அனும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித் தொழுமின்; தொழுத பின்
மற்றொன்று இலாத மணி விளக்காமே!
கருத்து: கற்பதற்கு உரிய பருவம், இளமைப் பருவம்; இறைவனின் சிறப்பியல்புகளை கூறும் நுால்களைக் கற்பதற்கு உரிய பருவமும் இளமைப் பருவமேயாகும். அவ்வாறு கற்பதால், நம்மைப் பீடித்துள்ள பாவங்கள் நீங்கும். கற்பதோடு நில்லாமல், அக்கண்ணுதலோனை வணங்குங்கள்! அக்கல்வி, இயல்பாகவே என்றும் ஒளிவீசும் மணி விளக்காக நின்று உங்களுக்கு உதவும்.

