sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கடவுள் இருக்கான் குமாரு!

கடவுள் இருக்கான் குமாரு!

கடவுள் இருக்கான் குமாரு!


PUBLISHED ON : நவ 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குப்புற படுத்திருந்த கோவிந்தராஜன், 'குபீ'ரென, நட்டுகுத்தாய் எழுந்து அமர்ந்தார்.

சரக்கு அடித்த மிதப்பில், தலை சாய்ந்து இருந்தவருக்கு, 'டிவி' செய்தியைக் கேட்டதும், அம்மா, அப்பா, அப்பத்தா என முப்பாட்டன் பேர் வரைக்கும், மிகச்சரியாய், இன்ஷியலுடன் சொல்லும் அளவிற்கு, அத்தனையும் நினைவுக்கு வர, 'பொல பொல' வென வேர்த்து, தொடையெல்லாம் நடுங்க, அவிழ்ந்த வேட்டியை பிடித்தபடி, ஹாலுக்கு ஓடி வந்தார்.

'அய்யோ... அய்யயோ... இப்படியாகிப் போச்சே...' அவருடைய நாலாவது பொண்டாட்டி, தூக்க முடியாத உடம்பை தூக்கி, சோபாவில் தலையை மோதி, கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தாள்.

காட்டுத்தீயை விட, விஷயம், வேகமாய் கன்னா பின்னாவென பரவ, லோக்கல் வட்டம் கோவிந்தராஜன் வீட்டை, அவரது அடிபொடிகள் மொய்க்கத் துவங்கினர்.

எல்லா, 'டிவி' சேனல்களிலும், 'இன்று இரவில் இருந்து, 500, ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது...' என்று, கொட்டை எழுத்தில், 'ப்ளாஷ் நியூஸ்' ஓடியது.

சப்த நாடியும் அடங்கிப் போக, ஈரக்குலையை, யாரோ, 'ஸ்ட்ரா' வைத்து உறிஞ்சியது போல், சக்கையாகி போனார் கோவிந்தராஜன்.

குடித்த சரக்கு ஒன்பது வாசலிலும் கரைந்து போயிருக்க, வேட்டியை, நெஞ்சுக்கு தூக்கி கட்டி, தலையில் கை வைத்து, உட்கார்ந்தார்.

''எதுக்குண்ணே கவலைப்படறீங்க... காலையில, பெட்ரோல் பங்குக்கு போனா மாத்திடலாம்; ரெண்டு நாள் கழிச்சா, 4,000, 4,000ம்மா மாத்திடலாம்ண்ணே... நீங்க, இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்துட்டா, நாங்கெல்லாம் என்னண்ணே செய்றது...''

பக்கத்தில் வந்து, வாய்பொத்தி பேசிய வீரபாகுவை, முறைத்து பார்த்தவர், மடக்கி இருந்த கால்களை நீட்டி, ஓங்கி ஒரு உதை விட்டார்.

''கொய்யால... நான் என்ன செலவுக்கு காசில்லாமயா கலங்கிப் போய் நிக்கறேன்னு நினைச்சே... கறுப்பெல்லாம், எப்படிடா வெள்ளை ஆக்குறது...'' என்றார், தவிப்பாக!

''பேரென் லவ்லி போடுங்கண்ணே; ஆறே வாரத்துல, நல்ல நிறம் கிடைக்குதாம்; என், 'டாவு' கன்னியம்மா கூட, அதான் போடுது,'' என்றான், குப்புசாமி பல் இளித்தபடி!

''டேய்... கூமுட்டை பயலே... என் கோவத்தை தூண்டி, அநியாயமா, உன் பொண்டாட்டி தாலியை, அறுக்க வச்சுடாத; யாருடா இவனையெல்லாம் கட்சியில சேர்த்தது...''

''நீங்க தான்ணே சேர்த்து, உறுப்பினர் அட்டையெல்லாம் தந்தீங்க,'' எத்துப்பல் தெரிய, பல் இளித்தபடி, சட்டை பாக்கெட்டில் இருந்து, அட்டையை எடுத்துக் காட்டினான், குப்புசாமி.

''துப்புகெட்டவன்களா... ராத்திரியில வந்து, என் தாலியை அறுக்காம, உருப்படியா, ஒரு யோசனை சொல்லுங்கடா...''

''அண்ணே... உங்க பேர்ல, அக்கா, புள்ளைங்க, பங்காளி, தொங்காளி பயலுக பேர்ல எல்லாம் பணத்தை போட்டு விட்டுருங்க,'' என்றான் வீரபாகு.

''டேய்... தொகை ரொம்ப பெருசுடா... செத்து போன, என் முப்பாட்டன் வரைக்கும் பிரிச்சு போட்டாலும் கூட, மீந்தும் போல இருக்கேடா...''

கோவிந்தராஜனை ஏற, இறங்க பார்த்த வீரபாகு, 'போன மாசம் வீடு கட்ட, ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்ட போது, கட்சி தலைமையிடம் கேட்டுச் சொல்வதாக சொல்லி, கில்லி அடிச்சானே படுபாவி...' என்று மனதுக்குள் திட்டி, வெளியில், ''ஏதுண்ணே அம்புட்டு பணம்,'' என்றான் தலையை சொறிந்தபடி!

''நானும், உங்கக்காவும் உட்கார்ந்து விடிய விடிய, 'ஜெராக்ஸ்' அடிச்சோம்; கேட்குறான் பாரு கேள்வி... அம்புட்டும் உழைப்புடா. கட்சிக்காக, எம்புட்டு பாடுபட்டு இருப்பேன்னு தெரியுமா... மூணு வருஷத்துக்கு முன், நம்ம தொகுதியில, 'பை எலெக் ஷன்' வந்ததே... அப்ப, நம்ம எம்.எல்.ஏ., ஏகாம்பரம் கம்னாட்டி, எப்படி ஜெயிச்சான்னு நினைச்சே... ஒரு, 'சீட்' கூட இல்லாம இருந்த நம்ம கட்சிக்கு, ஒரு எம்.எல்.ஏ.,வை கொண்டு போய் உட்கார வைச்சு, அழகு பாத்தது எப்படி... எல்லாமே என் உழைப்பு; அதுக்கெல்லாம் கூலி வேணாமா...''

'அதுக்கு இம்புட்டு கூலியா...' என்று நினைத்தபடி, ''சரிண்ணே... சரிண்ணே... நீங்க யாருன்னு எனக்கு தெரியாதா,'' என்றான் கூழை கும்பிடு போட்டபடி!

''அதெல்லாம் விடுடா... இப்ப என்னடா செய்றது, அதுக்கு ஒரு வழி சொல்லுங்க...'' என்று கேட்கும் போதே, அவருடைய நாலாவது மனைவி,''என் தம்பிகிட்ட இப்ப தான் போன்ல பேசுனேன்; நிறைய இடத்துல பேசிட்டானாம்... 60, 40ன்னா மாத்தி தர்றதா சொல்றாங்களாம்,'' என்றாள்.

''அதுவும் கூட முடியாதுடி... தொகை பெருசே...'' என்று புலம்பினார்.

'எதுக்குமே ஒத்து வராத அளவுக்கு, அப்படி எம்புட்டு பணம் தான் வச்சிருக்காரோ...' என்ற ஆவல் மிகுந்தது தொண்டர்களுக்கு!

''டேய்... இவளையெல்லாம் நம்ப முடியாதுடா... காசை குடுத்தா, கம்பி நீட்டிடுவா,'' என்றார் தலையை தடவியபடி, கோவிந்தராஜன்.

''ஏன் குமாரு... நம்ம அண்ணன், பொண்டாட்டியையும், 'ப்ளாக்'குல தான் வச்சிருக்காரு போல,'' பக்கத்தில் நின்றவனிடம் மெதுவாய் சொல்லி, வாய் பொத்தி சிரித்தான் குப்புசாமி.

'சாதாரண வட்டமான இவரே இப்படின்னா, இனி, மாவட்டம், மாநிலம், கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர், கட்சி தலைவர் எல்லாம் எம்புட்டு வச்சிருப்பானுங்க... ம்... அவனுங்கெல்லாம் என்ன புலம்பு புலம்பிட்டு திரியுறானுங்களோ...' மனசுக்குள் அங்கலாய்த்தான், குமார்.

ஆட்காட்டி விரலை, கன்னத்தில் தட்டியபடி, தலையை உயர்த்தி, 'சீலிங்' பேனை பார்த்தவாறு, சிந்தனை சிற்பியின், 'எபெக்ட்'டோடு, ''எனக்கென்னமோ, இதுக்கு பின்னாடியும், இந்த வேட்டை தொடரும்ன்னு தோணுது,'' என்றான், இளைஞரணி செயலாளர் குசேலன்.

''டேய்... ஙொங்கக்கா மக்கா, என்னடா சொல்றான் இவன்... எனக்கு இங்கனயே பேதி ஆயிடும்யா,'' பதறிப் போய், சோபாவிலேயே குதித்தார் கோவிந்தராஜன்.

''முதல்ல நல்லபடியா தான் சொன்னாங்க; நாம கேட்கல... இப்ப காசெல்லாம் செல்லாதுன்னு சொல்றாங்க... இப்ப போய் காசை கட்டி, கணக்கை காட்டினா, திடீர்ன்னு ஒரே நாள்ல பேங்க்ல கொண்டாந்து, காசை போட்டவங்க எல்லாருடைய வீட்டுக்கும், 'ரெய்டு' வரும்ன்னு சொல்லிட்டா, என்ன செய்றது!''

அவன், புத்திசாலித்தனமாய் கேட்டு விட்டது போல், தெனாவட்டாய் அவரை பார்க்க, அவர் எம்பிக் குதித்து, அவன் வாயில், ஒரு போடு போட்டார்.

''அட கர்மம் புடிச்சவனே... உன் வாயில சாணியை கரைச்சு ஊத்த. நல்ல வார்த்தை பேசக் கூடாதாடா... இந்த ராத்திரி நேரத்துல, 'கணக்கு காட்டு கணக்கு காட்டு'ன்னா... இருந்தா காட்ட மாட்டேனாடா... என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை செய்றேன். 'எங்கப்பன் மாடு மேய்ச்சவன்; சாணி தட்டி, பாலை வித்து தான், நான் காசு சேத்தேன்'னு சொன்னா, நம்புமாடா இந்த ஊரு...''

''இப்ப, என்ன தான்ணே செய்றது...''

''கூமுட்டை பயல்ன்னாலும், அவன் சொன்னதுல, ஒரு நியாயம் இருக்குதுடா... திடீர்ன்னு, அம்புட்டு காசையும் பேங்குல போடவும் முடியாது; எவனை நம்பியும், குடுக்கவும் முடியாது.''

''அதான்ணே!''

''காசு போனா என்னடா... கட்சி இருக்கு; நாம சம்பாதிக்காமயா போயிடப் போறோம். அதுக்காக, வம்பாடுபட்டு சேர்த்த காசையெல்லாம், அடுத்தவனை நம்பி குடுத்துப்புட்டு, அவன் திருப்பி தருவான்னு காத்திருக்க, மனசு ஒப்பாதுடா!''

''இல்லய்யா பின்னே...''

''கண்டுபிடிச்சு, அவங்க நம்பள செல்லாக்காசு ஆக்கிறதுக்குள்ள, பண மூட்டையை, ஒதுக்குப்புறமா கொண்டு போய் எரிச்சுடுங்க.''

'பண மூட்டையா...' என, வாயைப் பிளக்க, பின் பக்கமாய் போனவர், 25 கிலோ அரிசி சாக்கை, தூக்க முடியாமல் தூக்கி வந்தார்; அதைப் பார்த்ததும், வாய் பிளந்து நின்றனர்.

''இது ஒண்ணு போனா தொலையுது... மிச்சமிருக்கிறதையாவது காப்பாத்த முடியுமான்னு பாக்குறேன். 'ரெய்டு - கிய்டு'ன்னு வந்தா, நமக்கு தாங்காதுல...''

'அப்ப, இன்னமும் இருக்காடா பயமவனே...' என, உள்ளுள் கொதித்தனர்.

''யாருக்கும் தெரியாம செஞ்சுட்டு, எனக்கு, 'போன்' செய்யுங்கடா; இதையாவது உருப்படியா செய்யுங்க.''

நான்கு பேரும், மூட்டையுடன், 'டாட்டா சுமோ'வில், கிளம்பினர்.

''ஏண்டா குப்பு... கட்சி வளர்ச்சி நிதியெல்லாம், வப்பாட்டி வீட்ல பதுக்கி வச்சிருக்கானே இந்த கருவாயன்... போய் எரிங்கடான்னு சொன்னவனுக்கு, 'குழந்தை பசங்க வளர வேண்டியவங்க... ஆளுக்கு ரெண்டு கட்டு எடுத்துகங்கடா'ன்னு சொல்ல, மனசு வந்துச்சான்னு பாரேன்,'' அங்கலாய்த்தான் குமார்.

''அந்தாளு யாருய்யா சொல்றது... நாம எடுத்துக்கிடுவோம்; அவருக்கு தெரிஞ்ச மாதிரி, நமக்கும் சம்பாதிக்க வழி தெரியும்ல,'' என்றபடி, ஆளுக்கு, நாலு கட்டை எடுத்து, இடுப்பில் பத்திரப்படுத்தினர்.

''என்னமோ போ... எல்லாம், சனங்களோட ரத்தம். திருடறதுலயும் ஒரு தர்மம் இல்லாத பயலுகயா எல்லாரும்... நோகாம வந்த காசுக்கு கூட, வரி கட்ட நொந்துக்கிட்டு, காசை ஆணவமா எரிக்கச் சொல்றானே... இவனையெல்லாம், ஆண்டவன் பாத்துக்கிட்டு தானே இருக்கான்.''

பேசியபடியே, வண்டியை, பாலத்து சுவரில் மோதாமல் இருக்க ஒடிக்க, பின்பக்கம் அமர்ந்து இருந்த குசேலன், திடீரென கதவு திறந்ததால், வெளியில் தடுமாறி விழுந்தான். அவன் கையில் இருந்த பண மூட்டை, பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிதறியது.

குனிந்து பார்த்தனர்; கும்மிருட்டு. இனி அங்கிருப்பது ஆபத்தென்று, வண்டியை கிளப்பிக் கொண்டு பறந்தனர்.

காலையில், 'தினமலர்' நாளிதழில், 'கட்டு கட்டாய், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்தது; அருகில் இருந்த குடிசைவாசிகள், அள்ளிச் சென்றனர்...' என்ற தலைப்பு செய்தி வெளியாகி இருந்தது.

பேப்பரை படித்த நால்வரும், ஒருவரை ஒருவர் பார்த்தபடி, தங்களுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிக்க, ''கடவுள் இருக்கான் குமாரு,'' என்றான், குசேலன் கை உயர்த்தியபடி!

எஸ். ஜைனப்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us