தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கேட்டதைக் கொடுக்கும் தெய்வம்!

கேட்டதைக் கொடுக்கும் தெய்வம்!

கேட்டதைக் கொடுக்கும் தெய்வம்!


PUBLISHED ON : பிப் 27, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 27, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேட்டதைக் கொடுக்கும் தெய்வம் என்பதை விவரிக்கும் நிகழ்வு இது:

கண்ணனின் அருளை பரிபூரணமாக பெற்ற மகான் ஒருவர், தீர்த்த யாத்திரை செய்தபடி, திருப்பதி சென்று, அங்கேயே சில காலம் தங்கவும் தீர்மானித்தார்.

அதிகாலையில் எழுந்து, நீராடி அனுஷ்டானங்களை முடித்து, கோவிலில் வலம் வந்து சற்று துாரத்தில் இருந்தபடியே சுவாமி தரிசனம் செய்வதுமாக நாட்கள் கழிந்தன.

ஒருநாள், தன் வழக்கப்படி சுவாமி தரிசனம் செய்து, துதித்தபடியே திரும்பினார், மகான். அப்போது, 11 வயதான சிறுவன், கை நிறைய இனிப்பு பட்சணங்கள் பலவற்றையும் எடுத்து வந்து, மகானின் பார்வையில் படும்படியாக நின்று, சாப்பிட துவங்கினான்.

அனைத்தையும் சாப்பிட்டு முடித்ததும், மறுபடியும் ஓடிப்போய், ஏராளமான பட்சணங்களுடன் திரும்பி வந்து, சாப்பிட துவங்கினான்.

அதைப் பார்த்த மகான், 'குழந்தை எவ்வளவு ஆசையுடன் உண்ணுகிறது...' என நினைத்தார்.

அதைப் பார்த்த சிறுவன், 'என்ன பாக்கற... நான் தான், உன் கூட ஒண்ணாப் படிச்ச கோபாலன். தெரியலியா என்னை, மறந்து போச்சா...' என்று கேட்டு, மகானின் பள்ளிப் பருவத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்தான்.

'நீ சொல்வ தெல்லாம் உண்மை. ஆனால், கோபாலன் வளர்ந்து, இப்போது பெரியவனாக இருப்பான். நீ சிறுவனாக இருக்கிறாயே...' என்றார்.

'ஆமா, நா(ன்) வளரல; அப்பிடியே தான் இருக்கேன்...' என்றான். அவன் பேசிக் கொண்டிருந்தானே தவிர, அவன் கை, பட்சணங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த மகான், 'இப்படிச் சாப்பிடுகிறதே இந்த குழந்தை. இதற்கு வயிறு வலி வந்து விடுமே...' என்று நினைத்தவர், 'உனக்கு வயிற்றை வலிக்குமே...' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, 'ஏன், நா(ன்) சாப்பிடறது, உன் வயிறு வலிக்கறதா...' என கேட்டான், சிறுவன்.

அதே விநாடியில், மகானை கடுமையான வயிற்று வலி தாக்கியது; துடி துடித்தார். தனக்கு அருள் புரிவதற்காகவே பகவான் வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார். அந்த நேரம் பார்த்து, 'என்ன, வயிறு வலிக்கறதா... உன் வயத்துல நா(ன்) என் கைய வெக்கட்டுமா? வயிறு வலி தீ(ர்)ந்திடும்...' என்றபடியே நெருங்கினான், சிறுவன்.

'கண்ணா... வயிறு வலி இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். உன் அருள் வேண்டி ஏங்கிக் கொண்டிருக்கும் அடியேன் தலை மேல் உன் திருக்கரத்தை வை...' என வேண்டினார். சிறுவனாக வந்த கண்ணனும், தன் உருவைக் காட்டி, மகான் கேட்டபடியே அருள் புரிந்து மறைந்தார்.

அந்த மகான், நாராயண தீர்த்தர். தெய்வம் நேருக்கு நேராக வந்தபோதும், அவன் அருள் ஒன்றே போதும் என வாழ்ந்தவர், நாராயண தீர்த்தர்.

கண்ணன் அருளால் வரகூரில், 'கிருஷ்ண லீலா தரங்கிணி' எனும் அற்புதமான பாடல்களைப் பாடி, நோய் நீக்கம் பெற்றது தனிக்கதை. கடுமையான வயிற்று வலி பாதிப்பிற்கு ஆட்பட்டவர்கள், வராகபுரி எனும் வரகூரில் எழுந்தருளி இருக்கும் கண்ணனைத் தரிசித்து நோய் நீக்கம் பெறுவது, இன்றும் கண்கூடு.

பி. என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us