PUBLISHED ON : பிப் 27, 2022

அன்புள்ள சகோதரி -
நான், 58 வயதான இல்லத்தரசி. கணவருக்கு 60 வயதாகிறது. மத்திய அரசு பணியில் இருக்கும் அவர், சில மாதங்களில் பணி ஓய்வு பெறப் போகிறார். எங்களுக்கு இரு பிள்ளைகள். மூத்த மகனுக்கும், இளைய மகளுக்கும், 10 வயது வித்தியாசம்.
மூத்த மகன், மொழியியல் துறையில் கிளார்க்காக பணிபுரிகிறான். அவன் காதலித்து, ஏழை வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டான்.
மருமகள் அமைதியாக இருப்பாள். ஆனால், அபூர்வமாய் வாய் திறந்தால், அமில வார்த்தைகளை கொட்டுவாள். உயரமாய் இருப்பாள். பெரிய கண்கள், சாப்பாட்டு பிரியை. அவளுக்கு பொறாமை குணமும், தாழ்வு மனப்பான்மையும் அதிகம். எப்போது பார்த்தாலும் என் மகளுடன் போட்டி போடுவாள்.
என் மகளை, ஆண்டுக்கு, 16 லட்சம் ரூபாய் செலவு செய்து, எம்.பி.ஏ., விளையாட்டு மேலாண்மை நிர்வாகம் படிப்புக்காக, கனடாவில் சேர்த்தேன். உடனே, கணவனிடம் கோள்மூட்டி பிரச்னையை பூதாகரம் ஆக்கி, ரகளை பண்ண ஆரம்பித்து விட்டாள், மருமகள்.
'உங்களுக்கு, 1,000 - 2,000 'பீஸ்' கட்டி படிக்க வச்ச உங்கம்மா, உங்க தங்கச்சிக்கு, லட்ச லட்சமா செலவு பண்ணி பாரின்ல எம்.பி.ஏ., படிக்க வைக்குது. பொட்டச்சிக்கு பாரின் படிப்பு எதுக்கு? இவளுக கல்யாணத்துக்கு பிறகு படிச்ச படிப்பை துாக்கி பரண் மேல போட்டுட்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயா குப்பை கொட்ட ஆரம்பிச்சிடுவாளுக.
'எப்படியும் பாரின் படிப்பை முடிக்க, ஒரு கோடி ரூபா செலவாகும். உங்கம்மா ஊரெல்லாம் கடன் வாங்கி, இருக்கிற ஒரு வீட்டையும் வித்திரும் பாருங்க. உங்கப்பனை கூட நம்பலாம்; உங்காத்தாவைதான் நம்ப முடியாது. மகனுக்கு துரோகம் பண்ணி, மகளுக்கு அள்ளி கொட்டுது...' என்பாள்.
இந்தியாவில் என் மகள் இருக்கும்போது, அவளுடன் நின்று இருவர் உயரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பாள், மருமகள். என் மகளின் தலைகேசத்தை தொட்டு ஆராய்ந்து, 'எனக்கும் கல்யாணத்துக்கு முன்ன, உன்னை விட நீளமா முடி இருந்துச்சு. இப்ப கொட்டி போச்சு. உனக்கும் பின்னாடி கொட்டும் பாரு...' என்பாள்.
கல்லுாரிக்கு புத்தாடை உடுத்தி புறப்படுவதை, 'ஸ்கைப்'பில் அனுப்புவாள், என் மகள். அதைப் பார்த்த மருமகள், 'காலேஜுக்கு போறாளா, அழகி போட்டிக்கு போறாளா...' என்பாள்.
நான் ஒரு தடவை மருமகளிடம் தனியாக பேசினேன்.
'அம்மாடி, உன் அப்பா, நீ, ஐந்து வயதாய் இருக்கும்போது இறந்து விட்டார். நீ, தாய் மாமனின் வளர்ப்பில் வந்தவள். உன்னையும், என் மகளையும் ஒப்பிட்டு பார்க்காதே. நான், பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவள். மகளை பெரிய படிப்பு படிக்க வைத்தே தீருவேன்.
'என் அப்பா, இரண்டாம் திருமணம் செய்து, எங்களை கொடுமைப்படுத்தினார். 10ம் வகுப்புடன் என் படிப்பை நிறுத்தினார். என் மகளுடன் என்னை ஒப்பிட்டு பார்த்து, நான் பொறாமை படலாமா? நமக்கு கிடைக்காதது அவளுக்கு கிடைத்திருக்கிறதே என சந்தோஷப்படுவோம்...' என்றேன்.
அவளது மனப்போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.
படிப்பை முடித்து, இந்தியா திரும்பினாள், மகள். நல்ல வேலை கிடைத்தது. மகளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தோம். நிறைய டாக்டர் வரன்கள் வந்தன.
'மகள், பாரின் எம்.பி.ஏ., - வர போகிற மருமகன், டாக்டர். கார், பங்களா என்று, ராஜ வாழ்க்கை வாழ போறா, என் நாத்தனார். எல்லாம் என் தலையெழுத்து...' என, மருமகள் மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள்.
அண்ணியின் வயித்தெரிச்சலை சிரித்தபடி கடந்து போனாள், மகள்.
மகளுக்கு திருமணம் செய்து முடித்தோம். சொல்லி கொடுத்து சொல்லி கொடுத்து, தன் சகோதரியை பரம விரோதியாக பார்க்கிறான், மகன்.
மகளுக்கு வாங்கிய கடன்களை கட்டி முடித்து விட்டோம். எங்கள் சம்பாத்தியத்தில் கட்டிய வீடு இருக்கிறது. இன்னுமே என் மகளை கரித்து கொட்டி கொண்டிருக்கும் மகன் - மருமகளை எப்படி சமாதானப்படுத்துவது என, தகுந்த ஆலோசனை தாருங்கள் சகோதரி.
— இப்படிக்கு,-
அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு -
பொறாமையை, 'பச்சைக் கண் பூதம்' என்பர். மருமகள் அவநம்பிக்கையாலும், பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அவளுக்கு அறிவுரை கூறுவது அனாவசியம்.
உன் கணவர் பணி ஓய்வு பெறும்போது கிடைக்கும் பணி கொடையை, இரு பாகங்களாக பிரி. ஒரு பாகத்தை, தபால்துறை சேமிப்பில் உன் கணக்கிலும், இன்னொரு பாகத்தை, மகன் - மருமகளுக்கு கொடு. அத்துடன், மகளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, நீங்கள் சம்பாதித்து கட்டிய வீட்டை, மகன் பெயரில் எழுதி கொடுத்து விடு.
மகளை பற்றி மகன், மருமகளிடம் பெருமையாக பேசாதே.
மகன் வழி பேரன் அல்லது பேத்தியை மருத்துவம் படிக்க வைக்க, உன்னாலான உதவிகளை செய். தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் உயர் படிப்பு படித்து, உயர் பதவிக்கு போக மகனுக்கு வலியுறுத்து.
பொதுவாக பொறாமை படுபவருக்கு கூறுகிறேன்...
பொறாமைப் படுவதை மனதார ஒப்புக் கொள்ளுங்கள்; பொறாமைப்படும் விஷயங்களை பட்டியலிட்டு தவிர்க்க பாருங்கள்; தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்; உணர்வுகளை நட்புகளிடம், உறவுகளிடம் மனம் விட்டு பகிருங்கள்.
உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்; யாரையும், 'நெகடிவ்' ஆக விமர்சிக்காதீர்கள்; பொறாமை எல்லை மீறினால், மன நல மருத்துவரை பாருங்கள்.
உயர் கல்வி படிக்காத நீ, மகளை உயர் கல்வி படிக்க வைத்துள்ளாய். உன் மன திண்மைக்கு வாழ்த்துகள்!
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.
