PUBLISHED ON : பிப் 27, 2022

சமையலறை வாசலில் வந்து நின்றாள், வினோ. அவளின் சிவந்த முகம் மேலும் சிவந்து கருஞ்சிவப்பாக மாறியிருந்தது. யதேச்சையாக திரும்பிப் பார்த்த விமலா, மகளின் கோபப் பார்வையை கண்டு திகைத்தாள்.
''என்னடா... ஏன் ஒரு மாதிரி இருக்க... மாத்ஸ் டென்ஷனா, அப்பாகிட்ட எப்படியாச்சும் கெஞ்சி, 'கோச்சிங்'ல போடட்டுமா?'' என்றாள்.
''அய்யோ, ஏம்மா உனக்கு வேற மாதிரி பேசவே தெரியாதா... அப்பாகிட்ட ஏன் இவ்வளவு பயப்படுற... மாத்ஸ் விஷயத்த நான் பார்த்துக்கறேன்... மொதல்ல உண்மைய சொல்லு, அக்கா விஷயத்துல என்ன நடக்குது இந்த வீட்டுல?''
''அய்யோ கத்தாதேடி வினோ... அப்பா வீட்டுலதானே இருக்காரு?''
''அப்படித்தாம்மா கத்துவேன். நான் ஒண்ணும் சின்னப் பொண்ணில்லே... 10வது போகிறேன்... மனோக்கா கல்யாண விஷயம் எனக்குத் தெரிஞ்சாகணும்.''
''எனக்கே இன்னும் சரியா தெரியலேடி வினோ,'' என்று கரகரத்தாள், அம்மா.
''என்ன?''
''ஆமாம்டி... இந்த வீட்டுல, உங்கப்பாதானே மிலிடரி ஆபிசர். என்கிட்ட எதுக்காவது ஆலோசனை கேட்டிருக்காரா சொல்லு... பாவம் அவள், உன்னை மாதிரி இல்ல. பொறுமையானவ, பொறுப்பானவ, அழகு, அன்பு, அறிவுன்னு இளவரசி குந்தவை.
''இவரு, மாதவன், கிஷோர்னு ரெண்டு பையன்களை, 'செலக்ட்' பண்ணியிருக்காரு... அவள், இந்த ரெண்டு பேர்ல ஒருத்தனை, 'செலக்ட்' பண்ணணுமாம்... அவ்வளவுதான், வேற வாய்ப்பு கிடையாது அவளுக்கு,'' என்று மூக்கை உறிஞ்சினாள், அம்மா.
கோபத்துடன் அம்மாவின் அருகில் வந்தவள், ''இது என்ன வீடா, இல்லே சர்வாதிகாரி நாடா... அப்பா என்னதான் நெனச்சிட்டிருக்கார் மனசுல... எல்லாமே அவர் இஷ்டம்தானா... அக்கா ஏன் இப்படி பயப்படணும்?
''இரு, என் விஷயத்துல எப்படி நடக்குதுன்னு பாரு. ஜெர்மனிக்காரன், இத்தாலிக்காரன்னு ஒருத்தனை இழுத்துகிட்டு வந்து நிற்கப் போறேன்.''
''அய்யோ... ஏன்டி இப்படி எல்லாம் பேசறே வினோ... எனக்கு மட்டும் அவள் மேல் பாசமில்லையா... அவளும் எனக்கு ஒரு கண். இரு, அப்பா மூடு பார்த்து பேசறேன்,'' என்று தழுதழுத்தாள், அம்மா.
''எனக்கு நம்பிக்கை இல்லம்மா... அப்பாக்கு, 'டெமாக்ரடிக் மைண்ட்' இருக்கும்,'' என்றபடி விருட்டென்று உள்ளே போனாள், வினோ.
விஸ்வம் அப்படித்தான். தான் சொல்வதெல்லாம் நன்மைக்கு தான்; அதைக் கேட்கத்தான் வேண்டும் என்பதில் அவனுக்கு இரண்டாம் கருத்தே கிடையாது. தன்னை விட யார் நல்லது செய்து விட முடியும் என்ற பிடிவாத எண்ணம்.
தினப்படி சமையல் கூட, அவன் கட்டளைப்படிதான். பீன்ஸ் கறி, வெண்டைக்காய் சாம்பார் என்றால் அதுதான். அதிலும் பீன்ஸை எந்த அளவில் நறுக்க வேண்டும், வெண்டைக்காயை எவ்வளவு நேரத்திற்கு வதக்க வேண்டும் என்பது வரை, அவன் சொல்வது தான்.
திருமணம் ஆன அடுத்த நாளே, விமலாவிற்குப் பிடித்த, 'லோ கட்' ரவிக்கையை விட்டு விட்டாள். நகச்சாயம் போடுவது, தொங்கும் காதணி அணிவது, அடர்த்தியாக கண் மை இடுவதை நிறுத்தி எவ்வளவோ காலமாகி விட்டது.
சரி... அவள் விதி, அடிமை வாழ்க்கை என்றாகி விட்டது.
பாவம் அவள் வயிற்றில் பிறந்த பாவத்திற்காக இரண்டு பெண் குழந்தைகளும், கொத்தடிமை வாழ்க்கை வாழ வேண்டுமா?
வினோ கூட பரவாயில்லை. கராத்தே, நீச்சல் என்று பிடிவாதமாக சேர்ந்தாள். சாரணக் குழுவுடன் இணைந்தாள். மலையேறுவது, 'காம்பிங்' என்று போகிறாள். விஸ்வத்துக்குப் பிடிக்கவில்லை தான். ஆனால், அப்பா பேச்சுக்கெல்லாம் ஒத்திசைவது போல நடிப்பாள். அதுவே அவருக்கு போதுமானதாக இருக்குமோ என்னவோ?
ஆனால், மனோ அப்படியல்ல. அப்பாவின் மனதிற்கேற்றபடி தன் கனவுகளை வடிவமைத்துக் கொண்டவள். கல்பாக்கத்து விஞ்ஞானியாக ஆகியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பாள். ஆனால், வங்கி அதிகாரியாக தன்னை ஒப்புக்கொடுத்து, ஓவியம், சிற்பம் என்று கலையார்வம் கொண்ட மனதை, ரங்கோலி, எம்பிராய்டரி என்று மாற்றிக் கொண்டாள். அப்பா ஆசைப்படி, வங்கி தேர்வு எழுதி, அதிகாரியாகி, மைசூரு பெண்கள் விடுதியில் தங்கி பணியாற்றுகிறாள்.
ஒரு தடவை கூட, தன் மனக்குறையாக எதையுமே சொல்ல மாட்டாள். இதுதான் ஒருவேளை சரியான அணுகுமுறையோ என்று கூட தோன்றியிருக்கிறது விமலாவுக்கு. அன்பின் பெயரால் அதிகாரம் செய்யப்படுவதைத் தான், மனித மனம் விரும்புகிறதோ?
''ஏய் விமலா.. என்ன பண்றே, காபி கேட்டேனே... காதுல விழலே?'' என்ற விஸ்வத்தின் குரல் கேட்டது.
''இதோ வரேன்,'' விரைந்தாள்.
ஆட்டோ வந்து நிற்கும் சத்தம்.
வினோ பரபரத்தாள்.
''அம்மா... அக்கா வந்துட்டான்னு நெனக்கிறேன். வா,'' என்று வாசலுக்கு ஓடினாள்.
''ஹாய் செல்லக்குட்டி... ஹலோ தங்க அம்மா,'' என்று, தன் வழக்கமான அழகுப் புன்னகையுடன் அவர்களை அணைத்துக் கொண்டாள், மனோ.
''ரொம்ப அழகா இருக்கேடி ராஜாத்தி... போன முறை பார்த்ததுக்கு, கல்யாண களை இப்பவே வந்துட்டுதோ?'' என்று, மகளின் முகத்தை வழித்து திருஷ்டி சுத்தினாள், விமலா.
''அட... என்னம்மா நீ, இயற்கையாவே அக்கா ரொம்ப அழகும்மா... அக்கா... நீ, 'ரெகமென்ட்' பண்ணின படம் பார்த்தேன்கா... செம்ம... அப்புறம் அந்த, 'தி கிரீன் மைல்ஸ்' அட்டகாசம்க்கா,'' என்று அக்காவை அணைத்துக் கொண்டாள், வினோ.
''ஓ சூப்பர்... வீட்டுல, 'நெட்ப்ளிக்ஸ்' பார்க்க விடுறாரா, ஜெயில் வார்டன்? பரவால்லயே... நல்ல முன்னேற்றம்தான்,'' சிரித்தாள், மனோ.
உதட்டைப் பிதுக்கியபடி, ''நீ வேறக்கா... அப்படி எல்லாம் அதிசயம் நடந்துடுமா என்ன? நான் பூர்ணி வீட்டுல பார்த்தேன். அக்கா உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்,'' என்றபடி, சகோதரியின் விழிகளையே உற்றுப் பார்த்தாள், வினோ.
''ஒண்ணு என்ன, ஒன்பது கேட்கலாம்... அதுவும் இப்படி எல்லாம், 'பர்மிஷன்' கேட்காம,'' மறுபடி சிரித்தாள், மனோ.
குறுகுறுப்பும், கவலையுமாக, இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள், அம்மா.
''நீ எப்பவும் புத்திக்கூர்மையானவள்க்கா... உன் ரசனை வித்தியாசமா இருக்கும். எல்லாரும், 'டைட்டானிக்' பத்தி பேசும்போது, மாலி என்கிற மார்கரெட், எப்படி படகுகளை முழுமையா ஈடுபடுத்தி நிறைய பேரைக் காப்பாற்றினார்ன்னு சொல்லுவே.
''மாத்ஸ், பிசிக்ஸ் எதுல சந்தேகம் வந்தாலும் எனக்கு நீதானேக்கா சொல்லித் தருவே... உனக்கு போய் அப்பா இப்படி கட்டாயக் கல்யாணம் பண்றாரே... ஏன்க்கா ஒப்புக்கறே, ரொம்ப மோசம்க்கா,'' படபடவென பொரிந்தாள், வினோ.
மனோவின் கரங்கள், பரிவுடன் வினோவை அணைத்துக் கொண்டன. இதழ்கள் அவள் உச்சந்தலையை முத்தமிட்டன. மெல்லிய வசீகரக் குரலில், ''கண்ணா... மேலோட்டமாக பார்க்கும்போது அப்படித்தான் இருக்கும். ஆனால், இது அப்படி இல்லே... நான் அந்த கிஷோரை, 'செலக்ட்' பண்ணிட்டேன். எப்படி தெரியுமா?''
''என்னக்கா, எதை வெச்சுக்கா, ஒரு தடவை கூட பார்க்காத கிஷோரை?''
''சொல்றேன்டா... எனக்கு காதல் மேலே மரியாதை உண்டு. காதல் கல்யாணம்தான், சிறப்புன்னும் அபிப்ராயம் உண்டு. ஆனால், அது இயற்கையாக வரணும். எனக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலே... கிடைச்சிருந்தா அப்பாகிட்ட போராடி ஜெயிச்சிருப்பேன். அதனால, வீட்டுல பார்க்கிற பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்.
''மாதவன், கிஷோர் ரெண்டு பேரையும், சல்லடை போட்டு சலிச்சு தேர்ந்தெடுத்து தான் எனக்கு சொன்னார், அப்பா. அதாவது, குடும்பம், படிப்பு, வேலை, தோற்றம் இதெல்லாம் அப்பாவுக்கு திருப்தி. ஆனால், எனக்கு இன்னும் சில விஷயங்கள் வேண்டியிருந்தது.
''அவன், 'சோஷியல் மைண்ட்' உள்ளவனா, நாட்டுல நடக்கிற அரசியல் புரிஞ்சவனா இருக்கணும். பிரச்னைன்னு வந்தா எந்தப் பக்கம் நிற்பான், யார் பக்கம் பேசுவான்னு தெரியணும்; உண்மையான உழைப்பை மதிக்கத் தெரிஞ்சவனா இருக்கணும்...
''பெண் மேலே மரியாதையும், பரிவும் கொண்டவனா இருக்கணும். வீடுங்கிறதும், குடும்பம்ங்கிறதும், நல்ல, 'பார்ட்னர்ஷிப்'ல இயங்கற அழகான கம்பெனி. அந்த, 'பார்ட்னர்ஸ்' எப்பவும், 'ஈக்வல் பார்ட்னர்ஸ்'ன்னு நம்பணும்.''
திகைப்புடன் பார்த்தாள், அம்மா; கண்கள் கவலையுடன் சுழன்றன.
அம்மாவின் கையை பற்றியபடியே, ''நேர்ல சந்திக்க வாய்ப்பில்லே... அதனால, அவங்களோட, 'சோஷியல் மீடியா'வை, 'செக்' பண்ணினேன். அஞ்சு வருஷ பதிவுகள், படங்கள், விமர்சனங்கள் எல்லாம் பார்த்தேன்.
''மாதவன், முகநுால் முழுக்க, டூர் போனது, நண்பர்களோட சுத்தினது, சினிமா பார்த்தது, ஏகப்பட்ட, 'செல்பி'கள். ஆபிஸ்ல பர்கர் சாப்பிட்டது, நண்பன் கல்யாணம், சொந்த தம்பட்டங்கள் மட்டும்தான் இருந்தது. தன்னைச் சுற்றி தனக்கான சுயநல உலகம் இருந்தால் அதுவே போதும் என்பதுதான், அவர் நோக்கம்ன்னு நல்லாவே புரிஞ்சது.
''கிஷோர் அக்கவுண்ட் முழுமையா வேற மாதிரி இருந்தது. நாட்டின் எகானமி, சுற்றுச்சூழல், ஆஸ்கர், அரசியல், தேர்தல் காட்சிகள், தமிழ்மொழி, இலக்கியம், 'லாக்டவுண்'ன்னு எல்லாத்துலயும் ஆழ்ந்த ஈடுபாடு இருக்கு. வாரக்கடைசியில் ஜவ்வாது மலை குழந்தைகளுக்கு ஆங்கில வகுப்பு இலவசமா எடுக்கிறார். அதை, தன் விளம்பரமா சொல்லவே இல்லை. மத்த, 'கமென்ட்'டுகள்ல இருந்துதான் தெரிஞ்சுது.
''பெண்கள் பற்றி எப்ப எழுதினாலும், அதில் ஒரு பரிவும், கண்ணியமும் இருக்கு. நான் எதிர்பார்த்த எளிய ராஜகுமாரன், இந்த கிஷோர் தான். வினோ, நீ கவலைப்படாதே... நேர்ல பேசத்தானே போறோம்... அதுல இன்னும் தெளிவாவே தெரிஞ்சுடும், சரியா... இப்ப என் கவலை எல்லாம் என்ன தெரியுமா?''
வினோவும், அம்மாவும், கண்களைச் சிமிட்டி தலையாட்டி, 'கிஷோருக்கு உன்னை பிடிக்கணுமேன்னு தான்...' என்றனர்.
மூன்று சிரிப்புகள், அந்த காலைப் பொழுதை அழகாக விடிய வைத்தன.
வானதி
