தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நல்லதோர் வீணை!

நல்லதோர் வீணை!

நல்லதோர் வீணை!


PUBLISHED ON : செப் 17, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தியேட்டரில், மனைவி ரம்யாவுடன், 12:00 மணி பகல் காட்சி பார்த்துக் கொண்டிருந்த, ரகுவின் மொபைல் போன், தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்தது.

அப்பா கணேசனிடமிருந்து தான் அழைப்பு எனத் தெரிந்ததும், அவனுக்குப் பதற்றம் அதிகமானது. படத்தில், அவன் மனம் லயிக்கவில்லை. இடைவேளை எப்போது வரும் என நெளிந்தபடியே, காத்திருந்தான்.

''என்னங்க, யாரு போன்ல. எடுத்துப் பேசுங்க. இல்லன்னா, 'சுவிட்ச் ஆப்' பண்ணுங்க,'' என்று கடுப்பானாள், ரம்யா.

பக்கத்து சீட்டில் இருந்த பெண்மணி, வந்ததிலிருந்து இதை கவனித்தபடியே இருந்தார். அவருக்கு வயது, 60க்கு மேலிருக்கும். அவரது பார்வை, இருவரிடமும் ஏதோ சொல்ல வருவது போலவே இருந்தது.

ஒருவழியாய் இடைவேளை வந்தது; அவசரமாய் வெளியே வந்து, அப்பாவுக்கு போன் செய்தான், ரகு.

''என்னப்பா செய்தி?''

''என்னடா ரகு... ரொம்ப முக்கியமான வேலையில் இருக்கியா? எப்போ பண்ணதுக்கு, இப்ப விசாரிக்கற?''

''ஏன் டென்ஷனா இருக்கீங்க. ஏதாவது பிரச்னையா?''

''ஆமாண்டா, பிரச்னை தான். என்னத்தச் சொல்ல!''

''என்னாச்சுப்பா?''

''திடீர்னு, ராஜம் ஒரு குண்டைத் துாக்கிப் போட்டிருக்கா.''

''கொஞ்சம் விபரமாத்தான் சொல்லுங்களேன்,'' ரகுவின் குரலில் இருந்த பதற்றத்தை, கணேசனால் உணர முடிந்தது.

''என்ன சொல்றதுன்னு தெரியல. போனில் வேணாம்; நீ, நேரில் வா பேசிக்கலாம்,'' என்றார்.

''சரிப்பா... 3:00 மணிக்கெல்லாம் நான் வீட்டில் இருப்பேன்,'' என சொல்லி, இணைப்பைத் துண்டித்த ரகு, குழப்பத்துடன் மீண்டும் இருக்கைக்குச் சென்றான்.

''என்னங்க, சாப்பிட எதுவும் வாங்கி வரலையா... முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?'' என கேட்டாள், ரம்யா.

அப்பாவிடமிருந்து போன் அழைப்பு வந்திருப்பதை சொன்னான், ரகு.

''ஏன் பதற்றப்படறீங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல படம் முடியப் போகுது. பிறகு, என்னன்னு போய் பார்த்துட்டு வாங்க. மொதல்ல சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாங்க,'' என உத்தரவிட்டாள், ரம்யா.

அடுத்த சில நிமிடங்களில், ரம்யாவின் கையில், பாப்கார்ன் பாக்கெட் இருந்தது. பக்கத்து இருக்கைப் பெண்மணி, ரம்யாவை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு, சட்டென தலையைத் திருப்பி, லேசாகப் புன்னகைத்தாள்.

''இந்த அம்மா என்ன பைத்தியமாங்க? வந்ததிலிருந்து நானும் கவனிக்கறேன். நாம பேசறதையே பார்த்துக்கிட்டிருக்கு. அவங்க பார்வை, வேற மாதிரி இருக்கு,'' என்றபடி, கையில் இருந்த பாப்கார்னை காலி செய்து கொண்டிருந்தாள், ரம்யா.

ரம்யா சொன்னது காதில் விழுந்தாலும், அதற்கு பதிலளிக்கும் மனநிலையில் இல்லை, ரகு. அவனுக்கு சிந்தனைகள் பல வந்து போனதால், படம் எப்போது முடியும் என்றிருந்தது.

ஒரு வழியாகப் படம் முடிந்ததும், தியேட்டரிலிருந்து வெளியேற அவசரம் காட்டினான், ரகு. அப்படியே, பக்கத்து இருக்கையை திரும்பிப் பார்த்தான்.

அப்பெண்மணி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரிந்தது. உடனே, வீட்டுக்குப் போக வேண்டும் என்பதைத் தவிர, அவன் கவனம் வேறு எதிலும் செல்லவில்லை.

ரம்யாவை ஆட்டோவில் அனுப்பி விட்டு, வீட்டை நோக்கி விரைவாய் பயணித்தான்.

வீட்டு வாசலை அடைந்தபோது, சரியாக, 3:10 மணி.

கூடத்து சோபாவில் அமைதியாய், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தாள், ராஜம். அதைப் பார்த்ததும், பதற்றமாக வந்தவனுக்கு, சற்று ஆறுதலாக இருந்தது.

ராஜத்தின் அருகே உட்கார்ந்த ரகு, ''எப்படி இருக்கீங்கம்மா... ஏன், முகம் ஒரு மாதிரி வாடியிருக்கு?'' என்றான்.

''நான் நல்லா தான் இருக்கேன். நீ என்ன, திடீர்னு இந்த நேரத்துல வந்திருக்கே. அப்பா ஏதாவது சொன்னாரா?''

பாசமாய் தோளில் கையை வைத்து குலுக்கி, ''நீ, ரொம்ப புத்திசாலிம்மா. ஆமா, அப்பா தான் போன் பண்ணினார்,'' என்றான், ரகு.

''தீர்க்கமா முடிவு பண்ணித்தான், அப்பாகிட்ட என் முடிவைச் சொன்னேன்,'' என்றாள், ராஜம்.

''என்னம்மா சொல்றீங்க?'' குழப்பத்தில் கேட்டான், ரகு.

துாரத்தில் நின்று, இருவர் பேசியதையும் கேட்டுக் கொண்டிருந்த கணேசன், சோபாவுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமைதியாய் உட்கார்ந்தார்.

நிதானமாகப் பேச ஆரம்பித்தாள், ராஜம்...

''வேலைக்குப் போறவங்களுக்கு, 60 வயசு முடிந்ததும், அரசாங்கமே ஓய்வு கொடுத்துடறாங்க. ஆனா, என்னைப் போல இல்லத்தரசிகளுக்கு எப்போ, எந்த வயசுல, யாரு ஓய்வு கொடுக்கறாங்க. அதுவும், தனிமையிலயே முக்கால்வாசிக் காலம் முடிஞ்சிடுது. அதான், நானே ஒரு முடிவு பண்ணிட்டேன்.''

''என்னம்மா சொல்றீங்க?''

''ஆமாம் ரகு... எவ்வளவு மாத்திரை, மருந்து எடுத்துக் கிட்டாலும், சக்கரை அளவும், ரத்த அழுத்தமும் குறையவே இல்ல. மனசுக்குள்ள

நிம்மதி இல்லைன்னா, மருந்து எப்படி வேலை செய்யும்.

''அதான், நானே விருப்ப ஓய்வு எடுத்துக்கிட்டு, எங்காவது முதியோர் இல்லத்தில் சேர்ந்து நிம்மதியா இருக்க, தீர்க்கமா முடிவு பண்ணிட்டேன். அவர்கிட்டயும் என் முடிவைச் சொல்லிட்டேன்.

''பேச்சுத் துணைக்கும், கூடமாட ஒத்தாசைக்கும் ஒருத்தி வந்தா நல்லா இருக்கும் என்ற நப்பாசையில், உனக்கு திருமணம் செய்து வச்சோம். ஆனா, கல்யாணமான மூணு மாசத்திலேயே, நீங்க தனிக்குடித்தனம் போயிட்டீங்க...

''இதோ, உன் அப்பா, ஓய்வுப்பெற்று ரெண்டு மாசமாகுது. ஏதாவது, சின்னச் சின்ன வேலைகள் செய்வார்ன்னு எதிர்பார்த்தேன். ஆனா, இவரோ, 'இதுவரைக்கும் உழைச்சிட்டேன். நிம்மதியா உட்கார்ந்து இருன்னு, அரசாங்கமே ஓய்வு கொடுத்திருக்காங்க'ன்னு, எந்த வேலையும் செய்யாம, 'கூலா' உட்கார்ந்திருக்கிறார்.

''காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை, காலத்துக்கும் உழைக்கிறதுக்கு, நான் என்ன மிஷினா... உழைப்பும், தனிமையுமே தான் என் வாழ்க்கைன்னா எப்படி, ரகு? நானும் மனுஷி தானே!''

தேக்கி வைத்திருந்த மன ஆதங்கத்தை, 'நா' தழுதழுக்க, 'படபட'வெனக் கொட்டித் தீர்த்த ராஜத்தின் கண்களில் கண்ணீர் அருவி போலக் கொட்டியது.

செய்வதறியாது, பதற்றத்தில் இருந்தார், கணேசன்.

அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலையில், ரகுவின் மனக்குழப்பம் படிப்படியாக அதிகரித்தது. முகம் கொடுத்துக் கூட பேசிக் கொள்ளாத இருவரிடமும் தனித்தனியே பேசினான்.

அதற்குள், ரம்யாவிடமிருந்து போன் அழைப்பு. கை கடிகாரத்தைப் பார்த்து பதற்றமான ரகு, ஹோட்டலில் இருந்து இரவு உணவை வாங்கி வந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, அவசரமாகக் கிளம்பினான்.

வீட்டுக்கு வந்ததும், ''என்னாச்சுங்க... ஏதாவது பிரச்னையா?'' பதற்றமாய்க் கேட்டாள், ரம்யா.

நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ரம்யாவிடம் சொல்லி முடித்த ரகு, பலத்த சிந்தனையில், 'டிவி'யில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக் கொண்டிருந்தான்.

அப்போது, தியேட்டரில் பக்கத்து சீட்டில் பார்த்த பெண்மணியைப் பற்றி, முக்கிய செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

சேனலை மாற்றாமல், ரம்யாவுக்கு குரல் கொடுத்துவிட்டு, பதற்றமாய் பார்த்தான், ரகு. தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பெண்மணி, இருக்கையில் மயங்கிக் கிடந்த காட்சிகளோடு இருந்தது, அச்செய்தி.

பெற்ற பிள்ளைகள் இருந்தும், ஆதரவின்றி தனிமையில் வாழ்ந்து வந்தார். மன அழுத்தம் அதிகமாகி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தது, செய்தி வாயிலாக தெரிய வந்தது.

'முதுமையடைந்த பெற்றோர், நம்மிடம் எதிர்பார்க்கும் அன்பும், அரவணைப்பும், அவர்களின் பாதுகாப்புக்கு தான். சில நேரங்களில், அந்த உண்மையை சொல்லக் கூட அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். அதற்குள், அவர்கள் வாழ்நாள் முடிந்திருக்கும்.

'சரியான நேரத்தில், எடுக்காத தீர்மானங்களும், முடிவுகளும், வாழ்நாள் முழுவதும் நம்மை வருத்தப்பட வைக்கும்...' என, செய்தி வாசித்தவர் முடிக்கும் போது, ரகுவின் கண்கள் குளமாகி

இருந்தன.

இரவு உணவு அருந்தப் பிடிக்கவில்லை; உறக்கமும் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து பொழுதைக் கழித்தான், ரகு.

மறுநாள் விடியற்காலை, 5:00 மணி.

அசதியாய் நன்கு துாங்கிய ராஜம், அலறியடித்து எழுந்தாள். கணேசனைப் படுக்கையில் காணவில்லை. தெருக்கதவின் தாழ்ப்பாள் திறந்து, வெறுமனே சாத்தப்பட்டிருந்தது. அவர் செருப்பும் இல்லை.

குழப்பத்தில் கழிப்பறைக்கு சென்று பார்த்தாள். 'பளீச்'சென படுசுத்தமாக, இருந்தது. அடுத்து, சமையலறைக்குச் சென்றாள். தொட்டியில் கிடந்த பாத்திரங்கள் கழுவி கவிழ்க்கப்பட்டிருந்தன. குளியலறையில், வாஷிங் மிஷின் இயங்கும் சத்தம் கேட்டது.

ஆச்சரியத்தில் அகல விரிந்தன, ராஜத்தின் கண்கள். தனக்குத்தானே புன்முறுவலித்து, குளித்து முடித்தாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, பூஜையறையில் இருந்த வீணையை எடுத்து மீட்டிய அவள் மனம், ஆனந்த வெள்ளத்தில் திளைத்தது.

சற்று நேரத்தில், வீட்டுக்குள் நுழைந்த கணேசன், இசையை ரசித்தபடி சோபாவில் சாய்ந்திருந்தார். சட்டென, வீணை ஓசை நின்றது.

பதற்றமுடன் ராஜத்தை நோக்கி ஓடினார். சமையலறையில் இருந்து, கையில் இரு காபி கோப்பைகளோடு மணப்பெண் போல மெதுவாக நடந்து வந்தாள், ராஜம்.

அப்போது, கணேசனின் மொபைல்போன் ஒலித்தது.

''என்னங்க... யாரு போன்ல?'' என்றாள், ராஜம்.

உடனே, மொபைல்போன், 'ஸ்பீக்கரை ஆன்' செய்தார், கணேசன்.

''இந்த மாசத்தோடு வீட்டைக் காலி செய்துட்டு, திரும்ப நம் வீட்டுக்கே வந்துடறோம். அம்மாகிட்ட சொல்லிடுங்கப்பா,'' ரகுவின் குரல் தெளிவாகக் கேட்டது.

''டேய் ரகு, அவசரப்படாதே. நீங்க இங்க வர வேண்டாம்.''

''ஏம்பா?''

''நானும் தனிக்குடித்தனம் செய்ய முடிவு செய்துட்டேன்,'' என, பேசி முடித்து இணைப்பைத் துண்டித்த கணேசன், காபியை அருந்தியபடியே, ராஜத்தை நோக்கினார்.

இருவர் முகத்திலும், சந்தோஷம் படர்ந்தது.

- பூபதி பெரியசாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us