sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

பசுமை நிறைந்த நினைவுகளே.... (21)

/

பசுமை நிறைந்த நினைவுகளே.... (21)

பசுமை நிறைந்த நினைவுகளே.... (21)

பசுமை நிறைந்த நினைவுகளே.... (21)


PUBLISHED ON : ஜன 26, 2014

Google News

PUBLISHED ON : ஜன 26, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'நாங்க ரொம்ப சமர்த்து' என்று சொன்ன வாசகிகளை அழைத்துக்கொண்டு, இரவு மெயினருவி குளியல் முடித்து, பஸ்சிற்கு திரும்பும் போது, ஒரு குழப்பம் காத்திருந்தது என்று, கடந்த வாரம் எழுதியிருந்தேன்.

உண்மையில் ஒரு குழப்பம் இல்லை; ஆறு குழப்பம்!

எந்த இடத்தில் பஸ்சை நிறுத்தி, திரும்ப கிளம்பினாலும், அனைவரும் வந்துவிட்டனரா, என்று எண்ணிப் பார்த்துவிட்டே, பஸ்சை எடுப்பது வழக்கம். அதே போல அன்று இரவு, மெயினருவியில், இரவு குளியல் முடித்த பின், பஸ்சிற்குள் முப்பது பேரும் வந்துவிட்டார்களா என்று எண்ணிப்பார்த்தபோதுதான், அந்த குழப்பம் வெளிப்பட்டது.

இதுவரை நடந்த டூர்களில், முப்பது பேர் வரவேண்டிய இடத்தில், 28 பேர் வந்திருப்பர். எங்கே அந்த இரண்டு பேர் என்று தேடிப்பிடித்தால், 'திரும்பும் வழியில் பால்ய சிநேகிதனை பார்த்தேன்; பேச்சு சுவாரசியத்தில் பஸ்சை மறந்துட்டேன்...' என்பர். பிறகு நிறைய, 'சாரி' கேட்டு, பஸ்சில் ஏறுவர். இது தான் ஒவ்வொரு டூரிலும் வழக்கமாக நடப்பது.

ஆனால், அன்று நடந்ததே வேறு. முப்பது பேர் இருக்க வேண்டிய பஸ்சில், முப்பத்தாறு பேர் இருந்தனர். பின்னிரவு என்பதால், தூக்க கலக்கமோ என்று எண்ணி, பஸ்சில் உள்ள அனைத்து விளக்குகளையும் எரியவிட்டு, திரும்ப திரும்ப, எண்ணிப்பார்த்த போதும், முப்பத்தாறு பேர்தான் இருந்தனர்.

'என்ன சார்... ராத்திரி ரொம்ப நேரமா ஒன் டூ த்ரி சொல்லிக்கிட்டே இருக்கீங்க...' என்று, அந்த சமர்த்து வாசகிகள் சிரித்தபடி கேட்டு, 'உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டோம். அருவியில குளிக்கும் போது, ஆறு பேர் புதுசா பிரண்ட்டானாங்க. குற்றாலத்துல ரூம் கிடைக்காததுனால தென்காசியில ரூம் போட்டுருக்காங்கலாம். 'நல்லா குளிச்சாச்சு. ஆனா, திரும்ப போறதுக்குத்தான் வழி தெரியலை'ன்னு சொன்னாங்க. அவங்க எல்லாம் நம்ம வாரமலர் வாசகிகள்தான். டூர் கூப்பன் போட்டாங்கலாம்; ஆனா, கிடைக்கலையாம். பாவமா இருந்துச்சு, நம்ம பஸ்சுல ஏறிக்குங்க, போற வழியில இறக்கி விடுறோம்ன்னு சொல்லி, நாங்கதான் கூட்டி வந்தோம்...' என்று சொல்லி, அவர்களோடு கலந்து உட்கார்ந்திருந்த ஆறு பேரை அறிமுகம் செய்ய, அவர்களும், 'வணக்கம் சார்' என்று பள்ளி மாணவிகள் பாணியில் சொல்லி, ரயில் சிநேகிதிகள் போல, அந்த அருவி சிநேகிதிகள் பேச்சில் ஆழ்ந்து போயினர்.

'நீங்க சொன்னா சரிதான். ஆனா, நாம போற வழியில தென்காசி வராது, இவங்களுக்காக தென்காசி போய்ட்டு திரும்ப வரணும்...' என்றபடி தென்காசி போய், அந்த ஆறு பேரை இறக்கிவிட்டு, அவர்கள் கூடவே இந்த சமர்த்து வாசகிகள் யாராவது இறங்கிப் போய் விடாமல் பார்த்து, மீண்டும் குற்றாலத்தை சுற்றிக்கொண்டு தங்கியிருந்த வில்லாவில் இறக்கிவிட்ட போது, விடிய துவங்கியிருந் தது.

தூக்கம் கண்ணைக் கட்டிக் கொண்டு வந்த போதும், சமாளித்து சிரித்து, அவர்களை அவர்களது அறைக்கு அனுப்பி வைத்தபோது, 'சாரைப் பார்... கொஞ்சம் கூட களைச்சு போகாம, சிரித்தபடி அடுத்த அரைமணி நேரத்தில் நம்மை பழைய குற்றாலத்திற்கு குளிக்க கூட்டிப்போக ரெடியாயிட்டாரு...' என்று, அடுத்த ஷெட்யூலை அவர்களே தீர்மானித்துவிட்டு, அறைக்கு சென்றனர்.

இப்படி குறும்பு செய்வது என்று முடிவெடுத்த பின், அதில் கொஞ்சம் கூட கஞ்சத்தனம் காட்டாமல் இருந்த வாசகிகள் போலவே, நெஞ்சத்தை உருக்கிய வாசகியர் சிலரும், அந்த வருட டூரில் கலந்து கொண்டனர்.

அவர்களில் ஒருவர் திண்டிவனம் வாசகி தேன்மொழி. இவர் தன் கணவரும், அரசு அதிகாரியுமான சுப்பராயனுடன் வந்திருந்தார்.

சுப்பராயன் தன் குடும்பம் மட்டுமின்றி, தன்னைச் சார்ந்தவர்களின் குடும்பத்தையும் கரை சேர்ப்பதற்காக, கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததால் டூர், சினிமா, நாடகம் என்பது போன்ற பொழுது போக்கு சிந்தனையே இல்லாமல் இருந்து விட்டார்.

சுப்பராயன் தேன்மொழி தம்பதியினருக்கு, அந்த வருடம் வெள்ளிவிழா வருடமாகும். திருமணமாகி இருபத்தைந்து ஆண்டுகளில், தம்பதி சமேதராய் வெளியே போவது, அதுவும் டூர் என்ற முறையில் அதுதான் முதல் முறை என்பதால், வாசகி தேன்மொழிக்கு, தேன்நிலவு வந்தது போன்ற மகிழ்ச்சி. இப்படி ஒரு சந்தோஷமான, அன்பான, இனிய உலகம் 'வாரமலர் குற்றால டூர்' என்ற பெயரில் இருக்கிறது என்பதை அறிந்த பின், கடந்த இருபத்தைந்து வருட இழப்பையும், ஈடு செய்யும் வகையில், மிக ஆனந்தமாக இருந்தனர்.

அவர்களின் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வகையில், வாசகர்கள் முன்னிலையில், வெள்ளிவிழா தம்பதியரான இவர்களை, கேக் வெட்ட வைத்து, கேக் வெட்டும் போது மேலே இருந்து பூக்கள் கொட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், அத்தம்பதியினரை குற்றால பின்னணியில் படம் எடுத்து, அன்றே அந்த படத்தை பிரேம் போட்டு கொடுத்ததும், தேன்மொழி ஆனந்தத்தால் அழுதே விட்டார். காரணம், திருமணமான இத்தனை வருடங்களில், கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரே படம் அதுதானாம்!

இப்படி, குற்றாலத்தின் மொத்த மகிழ்ச்சியையும் அள்ளிக்கொண்டு சென்ற தேன்மொழி, கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து, வெள்ளிவிழா டூருக்கு, 'பழைய வாசகி' என்ற தகுதியோடு விண்ணப்பித்து இருந்தார்.

'எல்லாம் சரி பழைய வாசகி என்றால் சான்றாக உங்களிடம் ஒரு படம் இருக்குமே அதை ஏன் இணைத்து அனுப்பவில்லை...' என்று போன் செய்து கேட்ட போது, மறுமுனையில் நீண்ட அமைதி. பின், விசும்பல்; விசும்பலைத்தொடர்ந்து அழுகை. அழுதபடியே அவர் சொன்ன பதிலைக்கேட்டதும், நம் கண்களிலும் கண்ணீர். காரணம், அடுத்த வாரம்.

— அருவி கொட்டும்

குற்றாலமும்,தென்காசியும்...

குற்றாலத்தில் இருந்து, 5 கி.மீ., தூரத்தில் உள்ளது தென்காசி. குற்றாலத்தில் அறைகள் கிடைக்காதவர்கள் பெரும்பாலும் தென்காசியில்தான் அறை எடுத்து தங்குவர். வருடம் முழுவதும் பிசியாக இருக்கும் சிறிய நகரம்.

சுமார், 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பராக்கிரம பாண்டியன் கனவில் வந்த சிவபெருமான், 'வடக்கே காசியில் இருப்பது போல, தெற்கே, எனக்கு ஒரு கோவில் எழுப்பு. கோவில் எங்கே எழுப்புவது என்பதை, எறும்பு கூட்டம் உனக்கு உணர்த்தும்...' என்றும் சொல்லியிருக்கிறார்.

அதே போல சிற்றாறின் கரையில் இருந்து கிளம்பிய எறும்பு கூட்டத்தை தொடர்ந்த போது, அது ஒரு செண்பகக்காட்டின் நடுவே இருந்த எறும்பு புற்றில் போய் முடிந்தது. அந்த புற்றில், ஒரு சிவலிங்கம் இருந்தது.

அந்த சுயம்பு லிங்கத்தையே, காசி விசுவநாதராக மூலஸ்தானத்தில் வைத்து கட்டப்பட்டது தான், இந்த தென்காசி காசிவிசுவநாதர் கோவில். இங்குள்ள ரதி, மன்மதன், தமிழணங்கு ஆகிய சிலைகள் மிகவும் நுண்ணிய வேலைப்பாடு கொண்டவை.

ஒன்பது நிலைகளுடன், 172 அடி உயரத்தில் கட்டப்பட்ட ராஜ கோபுரத்தை, இருநூறு ஆண்டு களுக்கு முன் இடி தாக்கியதில், கோபுரம் தீ பிடித்து பிளவுபட்டது. பின், கடந்த 1990ல் பல லட்சம் ரூபாய் செலவில் இந்த கோபுரம் புதுப்பிக்கப்பட்டது.

இந்த ராஜகோபுரத்தின் வழியாக போகும்போதும், வரும் போதும், திரிகூட மலைக்காற்று, 'ஜில்'லென்று வீசுவது, இங்குள்ள ஆச்சரியங்களில் ஒன்று.

எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us