தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே.... (46)

பசுமை நிறைந்த நினைவுகளே.... (46)

பசுமை நிறைந்த நினைவுகளே.... (46)


PUBLISHED ON : ஜூலை 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த, ஜூன், ௮ம் தேதி, 'வாரமலர்' இதழில், அந்துமணியின் கேள்வி - பதில் பகுதியில், கும்பக்கரை வாசகர் வி.எஸ்.செல்வேந்திரன், 'சாமுத்திரிகா லட்சணப்படி மீசையுடன், தாடியும் வளர்ப்பவர்கள், அர்த்தபூர்வமான வாழ்க்கையை விரும்புகிறவர்களாகவும், சாதனை விரும்பிகளாகவும் இருப்பராம். இதன்படி, நீங்கள் நடத்தும் அர்த்தபூர்வமான வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறீர்கள்?' என்று, ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

கதை, கட்டுரை, கவிதை எழுதும் ஆயிரக்கணக்கானோருக்கு களம் ஏற்படுத்தி கொடுத்ததுடன், 'வாரமலர்' இதழை வாசித்து, அந்துமணியை மட்டுமே நேசிக்கும் வாசகர்களின் குடும்பங்களை, பத்து பைசா செலவில்லாமல், குற்றால சீசனை ராஜ மரியாதையுடன் அனுபவிக்க செய்து வருகிறார் அந்துமணி. இது போன்ற பல விஷயங்கள் அவரது சாதனை பட்டியலில் இருந்தாலும், அது எதையுமே அவர் குறிப்பிடவில்லை. அது, அவரது இயல்பு.

ஆனால், அந்த கேள்விக்கு, 'நம்ம தாடி- மீசை விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்...' என்று, பதிலாக தந்து இருந்தார்.

இதே போல, கடந்த ஆண்டு, ஒரு வாசகியின் கேள்விக்கு, பதில் தரும்போது, 'நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதால், நான் கையில் வாட்ச் கட்டுவது கிடையாது...' என்று சொல்லியிருந்தார்.

'முழுக்கை சட்டை அணியும் பழக்கம் இல்லை; காலில் ஷூ இல்லாமல் நடப்பது பிடிக்காது; துடுப்பு போட்டு படகு ஒட்டுவது, ரொம்ப பிடிக்கும்' என்பது போன்ற தன்னைப்பற்றிய சிறு குறிப்புகளை, அவருக்கே தெரியாமல், ஆண்டிற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ கேள்வி - பதில் மற்றும் பா.கே.ப., பகுதியில் சொல்லியிருப்பார்.

இந்த குறிப்புகளை எல்லாம் பத்திரமாக சேகரித்து வைத்திருந்த, வாசகியர் சுகன்யா, சுமதி, பானுரேகா, வழக்கறிஞர் புவனேசுவரி, திவ்யா, ஜான்ஸி ஆகியோர், இரண்டாவது நாளன்று, அந்துமணியை படகு குழாமில் வைத்து, அடையாளம் கண்டு பிடித்து விட்டனர்.

'நான் அந்துமணி இல்லை...' என்று, அவர் சொன்னாலும், அவர்கள் நம்பத் தயாராக இல்லை. 'நீங்க யாராக வேண்டுமானாலும் இருங்க; ஆனா, நாங்க உங்கள அண்ணனாக எண்ணிக்கிறோம்...' என்று சொல்லி விட்டனர்.

அவர்கள் எண்ணிக் கொள்வதற்கு முன்பாகவே, அவர்கள் அனைவரையும் சகோதரிகளாக ஏற்றுக் கொண்டவர் அந்துமணி. அதை, தம்பதிகளாக வந்த வாசகியருடன், அவர் பழகும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். 'ஏம்மா தங்கச்சி... மாப்பிள்ள நல்லா பாத்துக்கிறாராம்மா?' என்று, அவர் வாஞ்சையுடன் கேட்கும் அழகேதனி.

அதுவும் அவருக்கு மூடு வந்துவிட்டால், அந்த இடமே பாசமழை பொழியும் உலகமாக மாறிவிடும். அவரே கைப்பட அனைவருக்கும் சாப்பாடு பரிமாறுவார்; சாப்பாட்டை எப்படி ஆரம்பித்து, எதை எப்படி ருசித்து சாப்பிட வேண்டும் என்று, அழகாய் சொல்லிக் கொடுப்பார்.

ஐந்தருவி ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த ரேக்ளா ரேசுக்கான குதிரை வண்டியை காண்பித்து, 'அண்ணா இந்த வண்டியில போகணும் போல ஆசையா இருக்கு...' என்று, திருப்பூர் சகோதரி கலா சொல்ல, 'அவ்வளவுதானே...' என்று சொல்லியவர், 'மாப்பிள குமார், வண்டியில ஏறி லகானை பிடியுங்க; தங்கச்சி... நீ, மாப்பிள்ளய கெட்டியா பிடிச்சுக்கும்மா. மாப்பிள்ள, தங்கச்சி பத்திரம்... எங்கே ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க...' என்று சொல்லி, குதிரைவண்டிக்காரர் துணையோடு அனுப்பி வைத்தார்.

சகோதரி கலாவைத்தொடர்ந்து, 'அண்ணா நானு நானு...' என்று, வரிசையாக வர, டாக்டர் குமரேசன், மணி, ராம் தம்பதியினர் அனைவருமே அன்று ஐந்தருவி ரோட்டில், அமர்க்களமாக குதிரை வண்டி பயணம் மேற்கொண்டனர்.

இதை பார்த்துக்கொண்டு இருந்த அந்துமணியின் நண்பர் குணா, 'நானும் ஒரு ரவுண்டு போய்ட்டு வாரேன்...' என்று சொல்லி, தனியாக வண்டியில் ஏறி உட்கார்ந்து, கையில் லகானை பிடித்தவர், 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராசா...' என்று, பாட்டெல்லாம் பாடியும், குதிரை இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. 'அடச்சே இந்த குதிரை கூட, சம்சாரத்தோட வந்தாதான்யா மதிக்குது...' என்று, குதிரையை மிதிக்காத குறையாக, வண்டியை விட்டு இறங்கினார்.

அந்த ஆண்டு, சிட்கோ நிறுவனம், குற்றால டூரில் தங்கள் பங்காக எதாவது செய்தே தீர வேண்டும் என்று, மதுரையில் அந்துமணியை சந்தித்து அடம்பிடிக்க, 'ஒண்ணும் செய்ய வேணாம்; சாப்பிட்டு போய்ட்டு வாங்க...' என்று, சொல்லி விட்டார்.

அவர்களோ மீண்டும் பெரிய சிபாரிசுகளோடு, குற்றாலம் வந்து, அந்துமணியைப் பார்த்து, 'நாங்க ஏதாவது செஞ்சே ஆகணும் ப்ளீஸ்...' என்று, கெஞ்சாத குறையாக கேட்க, 'சரி, எனக்கு ஒண்ணும் வேணாம்; இங்க இருக்கிற என் சகோதரிகளுக்கு வேணும்ன்னா உங்க அன்பளிப்புகள கொடுங்க...' என்று சொல்லி, அனுமதி கொடுத்தார்.

அடுத்த நாள், அப்போதே, 2,500 ரூபாய் பெறுமானமுள்ள லேடீஸ் வாட்ச், வந்திருந்த வாசகியர் அனைவரது கையிலும் தவழ்ந்தது. வாசகியர் அனைவரும் அந்துமணியை பார்த்து நன்றி கூறினர். பதிலுக்கு அவர், 'இனிமே உங்க எல்லாருக்கும், 'நல்ல நேரம்தான்...' என்று, சந்தோஷமாக வாழ்த்தினார்.

இப்படி அந்த ஆண்டு, அந்துமணியிடம் பாசம் காட்டிய வாசகர்களால், யாருமே எதிர்பாராத ஒரு இனிய நிகழ்வும் நடந்தது. ஆம்... அந்த ஆண்டு மட்டும் வாசகர்களின் அன்பு காரணமாக, ஒரு போனஸ் டூர் நடந்தது.

அது எங்கே என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

குற்றாலமும், சிவகாமி அம்மையாரும்...

குற்றாலம் வருபவர்கள் தவறாது பார்க்க வேண்டிய இடம், பண்பொழி திருமலைக்குமாரசாமி முருகன் கோவில்.

குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் இருந்து, வடக்கு திசையில், 5 கி.மீ., பயணம் செய்தால், இக்கோவில் வரும்.

மேற்கு தொடர்ச்சி மலையின் சிறிய குன்றில், 500 அடி உயரத்தில், பசுமையான சூழலுக்கு நடுவில் அமைந்து உள்ளது இக்கோவில்.

இத்தகைய அழகான கோவிலை கட்டியவர் சிவகாமி பரஞ்சோதி என்ற அம்மையார்.

பண்பொழி அருகிலுள்ள அச்சன்புதூரில் வசித்து வந்த இந்த அம்மையார், குழந்தை வரம் வேண்டி, இங்குள்ள இறைவனை வணங்கினார். பின், இந்த இறைவனையே மகனாக ஏற்று, தன் சொத்து முழுவதையும் எழுதி வைத்தார்.

ஒரு பெண் துறவியாக இருந்து, இங்குள்ள முருகனுக்கு நீண்டகாலம் தொண்டு செய்ததுடன், பெரும் சிரமப்பட்டு மலை மீது, கல்மண்டபம் கட்டி வைத்துள்ளார்.

இவரது தொண்டுள்ளத்தையும், பக்தியையும் பாராட்டி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்க்கும்படியாக, இவரது ஓவியத்தை வரைந்து வைத்துள்ளனர்.

— அருவி கொட்டும்.

எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us