PUBLISHED ON : ஜூலை 20, 2014

வேகமாகப் போகிற வண்டிகளில் ஏறினால், விபத்து நேர்ந்து விடக் கூடும் என்று, ராமசாமிக்கு அச்சம். 'மிக மெதுவாகப் போகிற வண்டி எது?' என்று, பல இடங்களில் விசாரித்து, அது, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும், பகல் நேர பாசஞ்சர் வண்டி என, கண்டுபிடித்து, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.
ரயில் மெதுவாக கிளம்பி, மெதுவாக ஊர்ந்து, பரமக்குடியை தாண்டி, அப்படியே நின்றது. 'என்ன... ஏது...' என்று, எல்லாரும் இறங்கிப் பார்க்க, தண்டவாளத்தில், ஒரு எருமை மாடு படுத்திருந்து. உடனே, எல்லாரும் ஓடி, அதை விரட்டி அடிக்க, கிளம்பிய ரயில், திரும்பவும் நிற்க, பழையபடி ஒரு எருமை மாடு! மீண்டும், அதை விரட்டிய பின், ரயில் கிளம்ப, மீண்டும் நின்று விட்டது. சற்று தூரத்தில், இப்போதும் ஒரு எருமை மாடு.
'இந்தப் பக்கம், எருமை மாடுகள் அதிகமா?' என்று, அருகில் இருந்தவர்களிடம் கேட்டார் ராமசாமி.
மற்றவர்கள் வேதனையோடு, 'அதெல்லாம் இல்லங்க; முதல்ல படுத்திருந்த எருமை மாடு தான், ரயிலை முந்தி முந்தி வந்து, தண்டவாளத்தில் படுத்துக் கிறது...' என்றனர்.
-முனைவர் கு.ஞானசம்பந்தம், 'வாழ்வியல் நகைச்சுவை' நூலில்.
ஸ்டாண்டர்ட் ஆயில் கம்பெனியின் (அமெரிக்கா) உரிமையாளர் ராக்பெல்லர். இவரது கம்பெனி தலைமை அதிகாரிகளில் ஒருவர், ஒருமுறை ஒரு காரியத்தை தவறாகச் செய்துவிட்டார். இதனால், கம்பெனிக்கு ஏகப்பட்ட நஷ்டம். இந்த விஷயம் ராக்பெல்லருக்கு தெரிய வந்தது. அவரை சந்திக்க யாருக்கும் தைரியமில்லை. கோபத்தில் என்ன பேசுவாரோ என்ற பயம்.
ராக்பெல்லரின் பார்ட்னர் பெட்போர்ட் என்பவர், ராக்பெல்லரின் மனநிலையை அறிய தைரியமாக அறைக்குள் நுழைந்தார். தவறு செய்த அதிகாரியைப் பற்றி, பொரிந்து தள்ளுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால், அறைக்குள் நுழைந்த போது, ராக்பெல்லர் எதையோ கவனமாக எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது.
'வாங்க, பெட்போர்ட். நமக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா...'என்று கேட்டார்.
'ஆமாம்...'
'அதுதான், தவறு செய்த அதிகாரியை அழைக்கும் முன், அவரைப் பற்றிய சிறு குறிப்பை எழுதிக் கொள்வது நல்லது என்று, எழுதிக் கொண்டிருக்கிறேன். படித்துப் பாருங்கள்...' என்று, ஒரு காகிதத்தை நீட்டினார் ராக்பெல்லர்.
அக்காகிதத்தில், தவறு செய்த அதிகாரியின் சாதனைகள், திறமை, எத்தனை முறை அவரது செயல்பாடுகள் கம்பெனிக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்துள்ளன என்பதெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
'அன்றிலிருந்து என்னுடைய அதிகாரிகள் ஏதாவது தவறு செய்தால், அவர்களை உடனே கூப்பிட்டு திட்டுவதை நிறுத்தி விட்டேன்...' என்று கூறிய பெட்போர்ட், 'தவறு இழைத்த அதிகாரியை பேச அழைக்கும் முன், அவரைப் பற்றிய, நல்லவை என்னென்னவோ, அவற்றைக் குறித்துக் கொள்வேன். அதன்பின், அவர் இழைத்த தவறு என்ன என்பதையும் குறிப்பேன். இரண்டையும், எடைபோட்ட பின், அவரைக் கூப்பிட்டு பேச ஆரம்பிப்பேன். இதனால், அனாவசியமாக என்னுடைய அதிகாரிகள் மீது, எரிந்து விழும் பழக்கம் என்னிடமிருந்து ஓடி விட்டது...' என்கிறார்.
— 'வெற்றியின் ரகசியம்' என்ற நூலிலிருந்து.
டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாக்களில், ஒரு கம்பீரமான படை நிற்கும். சிவப்பு நிற உடையில், தங்க ஜரிகை தலைப்பாகையுடன், உயர் ரக குதிரைகளின் மேல் வீற்றிருக்கும் அந்த வீரர்கள் இல்லாவிட்டால், ஜனாதிபதி மாளிகை விழாக்கள் பொலிவு பெறாது.
இந்த ஜனாதிபதி பாதுகாவல் படை, முழுக்க முழுக்க ஒரு அலங்கார படையே! 200 ஆண்டுகளுக்கு முன், வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆட்சி செலுத்திய காலத்தில், வாரன் ஹேஸ்டிங்ஸ் இப்படி ஒரு படையை ஏற்படுத்தினார். அதற்கு, 'கவர்னரின் காவல்படை' என்று பெயர். சுதந்திரத்திற்கு பின், அது, 'ஜனாதிபதி பாதுகாவல் படை' என்று, அழைக்கப்பட்டது.
இப்படையில் இருப்போர், மொத்தம், 216 வீரர்கள். இதில் சேர, ஆறு அடி உயரமும், வலுவான உடற்கட்டு மற்றும் குதிரை ஏற்றத்தில் திறமை கொண்டவராகவும், இருக்க வேண்டும்.
இவர்கள் இருப்பிடம், ஜனாதிபதி மாளிகையிலேயே இருக்கிறது. தினமும், காலை, 5:00 மணிக்கு எழுந்து, பயிற்சியை துவங்குகின்றனர். 6:30 மணிக்கு அணிவகுப்பு, அப்புறம் ஆயுதப் பயிற்சி.
இவ்வீரர்கள் எப்போதும் குதிரையில் தான் வருவர். தலைமை காவலர், சாம்பல் நிற குதிரையில் வருவர். இது ஒரு அலங்கார படை என்பதால், இவர்கள் போர்க்களத்துக்கோ
ஜனாதிபதியுடன் வெளியூர்களுக்கோ செல்வதில்லை. ஜனாதிபதி மாளிகை விழாக்களுக்கு, ஒரு, 'கெத்'தை உண்டு செய்யத் தான் இந்தப் படை!
-'ராஷ்டிரபதி பவன் வரலாறு' என்ற நூலிலிருந்து.
நடுத்தெரு நாராயணன்
