தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பசுமை நிறைந்த நினைவுகளே....(5) - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்!

பசுமை நிறைந்த நினைவுகளே....(5) - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்!

பசுமை நிறைந்த நினைவுகளே....(5) - வெள்ளி விழா கண்ட குற்றால டூரின் அனுபவங்கள்!


PUBLISHED ON : செப் 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த வாரம், குற்றால டூர் பஸ், திருமங்கலம் தாண்டி போகும்போது, பஸ் டிரைவர் பாட்சா, திடீர் பிரேக் அடித்தார் என்று, சொல்லி நிறுத்தியிருந்தேன்... அதற்கான காரணம், கைகளை நீட்டி, பஸ்சை மறித்தபடி, ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.

'யாரம்மா நீ... எதற்காக, பஸ்சை மறிக்கிறாய்...' என்று கேட்டபோது, 'நானும் வாரமலர் வாசகிதான். என்னையும், குற்றாலம் கூட்டிட்டு போங்க...' என்று சிணுங்கியவர், நம் அனுமதியை கேட்காமலே, விறு விறுவென, பஸ்சிற்குள் ஏறி உட்கார்ந்து விட்டார்.

அந்த பெண் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டதை, நாம் கூட ஏற்றுக் கொண்டோம். ஆனால், பரமக்குடி வாசகர் ரங்கநாதனோ, 'முடியவே முடியாது.... அந்த அம்மாவை இறக்கிவிடுங்க...' என்று, கடும் கோபத்துடன் ஆட்சேபம் தெரிவித்தார்.

அவரது கோபத்திற்கு ஒரு பின்னணி உண்டு.

இப்போதெல்லாம் வாசகர்களை சந்திக்க செல்வதற்கு முன், 'அவர் எங்கிருக்கிறார், எப்போது வரலாம்' என்று, மொபைல் போனில் கேட்டு விட்டு செல்கிறேன். அப்போது, மொபைல் போன் இல்லாத காலம்.லேண்ட் லைன் வைத்திருப்பது கூட அபூர்வமான விஷயம். இதன் காரணமாக, சீனியர் நிருபர், போட்டோகிராபர்களுக்கு, போன் அட்டை ஒன்று, பத்திரிகை அலுவலகத்தில் கொடுப்பர். வெளியூர் போகும்போது, அங்குள்ள தபால் தந்தி அலுவலகத் தில், டிரங்கால் பிரிவில், இந்த அட்டையை காண்பித்து, போன் செய்து, செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வோம். அதற்கான கட்டணத்தை, அலுவலகத்தில் வசூல் செய்து கொள்வர்.

இதன் காரணமாக, தேர்வு செய்யப்பட்ட வாசகரின் முகவரியை வைத்துக்கொண்டு, நேரில் போய் விவரம் சொல்வேன். தேர்வு செய்யப்பட்ட வாசகருக்கு, முன்கூட்டியே கடிதம் போடும் நடைமுறையும் அப்போது இருந்தது. தபால் துறையின், 'சுறுசுறுப்பான' சேவை காரணமாக, பல முறை அந்த கடிதம், டூரெல்லாம் முடிந்தபின், 'நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்' என்ற தகவலை சொல்லியபடி செல்லும் அல்லது நான் பார்த்து திரும்பிய பின், 'இப்படி ஒருவர் வருகிறார்' என்று, கட்டியம் கூறும்.

அந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட, பரமக்குடி வாசகர் ரங்கநாதன், தனக்கு, இப்படி ஒரு கடிதம் வந்ததும், சந்தோஷத்தில், வானத்திற்கும், பூமிக்குமாக குதித்துக் கொண்டிருந்தார். கூடவே, ஒரு பிரச்னையையும் சந்தித்தார். அது என்னவென்றால், அவரது மனைவியுடன், அவரது கொழுந்தியாளும், 'டூருக்கு வந்தே தீருவேன்' என்று, தீர்மானமாக சொல்லியது தான்.

தேர்வு செய்யப்பட்டவருடன், ஒருவர் மட்டுமே வரலாம் என்று தெளிவாக எழுதியிருந்ததால், 'மதுரை தினமலர் அலுவலகம் சென்று, தன் பிரச்னையை சொல்லி, மூன்று பேருக்கும், கெஞ்சி கதறி அனுமதி வாங்கி விடலாம்' என்று, பரமக்குடியில் இருந்து கடிதத்தோடு மதுரைக்கு சென்று விட்டார்.

இது தெரியாமல், நான் பரமக்குடி போய் விட்டேன். அவரது வீட்டில், 'இப்போதுதான் மதுரை அலுவலகம் போயிருக்கிறார்' என்று கூறினர். பின், பக்கத்தில் உள்ள தபால் நிலையம் போய், போன் அட்டையை உபயோகித்து, நான் பரமக்குடியில் அவருக்காக காத்திருக்கும் விஷயத்தை சொல்லி, காத்திருந்தேன்.

போன் தொடர்பு இல்லாததால், அவரைத்தேடி நானும், என்னைத் தேடி அவரும், எதிரும் புதிருமாக பயணம் மேற்கொண்டு, ஒருவழியாக, வெகு நேர காத்திருப்பிற்கு பின், அவரை சந்தித்தேன். நீண்ட நேரம் அவரிடம் பொறுமையாக பேசி, 'இருவர் மட்டுமே வரமுடியும். டூரில் தேர்வு செய்யப்படாதவர் யாருமே வர முடியாது' என்று சொன்னபின், கொழுந்தியாளின் கோபத்தையும், சாபத்தையும் வாங்கிக்கொண்டு, டூரில் கலந்து கொண்டார். 'தான் அவ்வளவுதூரம் கெஞ்சியும், கொழுந்தியாளுக்கு அனுமதி மறுத்தவர்கள், இங்கே, முன்பின் தெரியாத பெண்ணிற்கு மட்டும், எப்படி, நடுவழியில் பஸ்சை நிறுத்தி, இடம் கொடுக்கலாம்' என்பதுதான், அவரது கோபம்.

'ராசா, எம் மேல உனக்கு இன்னா கோபம். இன்னுமா என்னத் தெரியல...' என்று, கண்சிமிட்டியபடி அந்த, 'பெண்' கேட்டதும்தான், 'அடடா... நடுவழியில் பஸ்சை நிறுத்தி ஏறியது, நம்மைப் போன்ற வாசகர்களை குஷிப்படுத்துவதற்காக, பெண் வேடமிட்டு வந்த காமெடி நடிகர் லூஸ்மோகன்' என, உணர்ந்து, பின், கோபம் மறந்து, விழுந்து விழுந்து சிரித்தார்.

லூஸ்மோகனுக்கு எந்த அளவிற்கு பெண் வேடம், தத்ரூபமாக பொருந்தியிருந்தது என்றால், பஸ் ராஜபாளையத்தில் நின்ற போது, இயற்கை உபாதையை தணிப்பதற்காக, பெண் வேடத்திலிருந்த லூஸ்மோகன், அனிச்சை செயலாக, நேராக ஆண்களுக்கான பாத்ரூமிற்கு சென்றார். அங்கு இருந்த காவலர்,'ஏம்மா... உனக்கு அறிவில்லை. ஆம்பிளைங்க பாத்ரூமிற்கு வர்ற...' என்று திட்டினார். அந்த, அவசரத்திலும், 'தான் யார்' என்பதை, அபிநயம் பிடித்து காட்டியது பெரிய காமெடி.

இப்படி, காமெடி நடிகர்களின் கலாட்டா வையே, தாங்கமுடியாத வாசகர்களுக்கு, இன்னும் கொஞ்சம், சுவாரசியம் கொடுப்போம் என்று, மறு வருடம், இன்னொரு குழுவை அந்துமணி கொண்டு வந்தார். இன்று ஊர், உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் அந்த குழுவினர் யார் என்பதை, அடுத்த வாரம் பார்ப்போம்.

அருவி கொட்டும்.

தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய ரசிகமணி டி.கே.சி.,

டி.கே.சி., என்று அனைவராலும் அழைக்கப்படும், தமிழறிஞர், டி.கே.சிதம்பரநாதர், குற்றாலம் அருகேயுள்ள, தென்காசியில், திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்து, தமிழில் பெரும் புலமை பெற்றிருந்தார்.

கடந்த, 1882-ல், பிறந்த இவர், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் போது, தமிழ் மொழியின் மேல் இருந்த பற்றின் காரணமாக, திருக்குறள், பெரிய புராணம், காஞ்சிப்புராணம் உட்பட, பல்வேறு தமிழ் இலக்கியங்களை கற்று, அது குறித்து விவாதிக்கும் திறனை அடைந்திருந்தார்.

கம்பராமாயணத்தில் உள்ள, 10 ஆயிரத்து 500 பாடல்களில், பல பாடல்களை, 'கம்பர் இப்படி இயற்றியிருக்க மாட்டார்' என்று சொல்லி, தானே, கம்பராக மாறி, அதில் திருத்தம் செய்தவர். அது குறித்த சர்ச்சை எழுந்தபோது, 'தான் செய்தது சரி...' என்று வாதிட்டவர்.

நாட்டுப்புறப் பாடல்களில், பொருளாதாரம், காதல், வரலாறு, ஈகை என, எல்லாமே இருக்கிறது என்பதை, தகுந்த ஆதாரங்களோடு வெளிப்படுத்தி, அப்பாடல்களுக்கு, தமிழ் இலக்கிய அறிஞர்களிடத்தில், மரியாதை வருவதற்கு காரணமாக இருந்தார். மேலும், குற்றால குறவஞ்சி நூலை வெளிக் கொணர்ந்த, டி.கே.சி., அதை, நாட்டிய மேதை பாலசரஸ்வதியிடம் கொடுத்து, இந்நூலை நாட்டு மக்களுக்கு கொண்டு சென்றார்.

வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தாலும், அப்பணியை தொடராமல், தமிழுக்காகவே வாழ்ந்த டி.கே.சி., 1924-ம் ஆண்டு, 'இலக்கியச் சங்கம்' என்ற, அமைப்பை துவக்கினார். இந்த அமைப்புதான் பிற்காலத்தில், 'வட்டத்தொட்டி' எனப்பெயர் பெற்றது. இவரது இலக்கிய அமைப்பி<ல், பி.ஸ்ரீ.ஆச்சார்யா, மீ.ப.சோமு, தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான், ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, போன்ற அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

குற்றால அருவிகளில், இவர் குளித்ததைவிட, அதனைப் பார்த்து பார்த்து பூரித்து போய், எழுதியதுதான் அதிகம். அதே போல, இவரது விருந்தோம்பலும் புகழ்பெற்றது.

தமிழில், அறிவியல் மட்டுமின்றி, அனைத்துக் கலைகளையும், இயல்களையும் கற்க முடியும் என, முழக்கமிட்ட டி.கே.சி., தமிழ்க்கவிதைகளில், மறைந்து கிடந்த கருத்துகளை, வெளிக்கொணர்ந்த காரணத்தால், ரசிகமணி என, பெயர் பெற்றார்.

'இதய ஒலி, கம்பர் யார்' உட்பட, இவரது, முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் பதிப்புகளும், டி.கே.சி.,யின் சிறப்பை கூறும். வட்டத்தொட்டி நாயகர், வளர்தமிழ் ஆர்வலர், ரசிகமணி, குற்றால முனிவர் என, பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இவர், 1954-ல் மறைந்தார். மரணத் தறுவாயில், தன் நண்பர் மகராஜனை அழைத்து,'நீங்கள் ஒன்றை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்; தமிழர்களையும் சொல்ல வைக்க வேண்டும். 'உலகத்திலேயே தமிழை, விட சிறந்த மொழி வேறு ஒன்றும் இல்லை. கம்பனைப் போன்ற உயர்ந்த கவிஞன், வேறு ஒருவரும் இல்லை' என்று, சொல்லிக் கொண்டே இருங்கள். ஆயிரம் ஆண்டுகள் கழித்தாவது, இதை, உலகம் ஒப்புக் கொள்ளும்...' என்று சொன்னவர்.

அவர் மறைந்தாலும், அவரது தமிழ்ப்பணியை மறக்காது, இன்றளவும், அவருக்கு, விழா நடத்தப்படுகிறது.

***

எல். முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us