தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 29, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆகஸ்ட் போராட்டம்' என்று, அழைக்கப்பட்ட, 1942ம் ஆண்டு நடந்த போராட்டம் தான், இந்தியாவில் நடந்த இறுதி கட்ட சுதந்திரப் போராட்டம்.

ஜூலை மாத இறுதியில் காந்திஜி, 'அரிஜன்' பத்திரிகையில், 'முடிந்த வரை, இப்போராட் டத்தை, அமைதியான முறையில் நடத்தவே முயற்சிப்பேன். ஆனால், பிரிட்டிஷ் அரசையும், அதன் நேச சக்திகளையும், இந்த போராட்டம் கவர தவறினால், நான் எந்த எல்லைக்கும் செல்ல வேண்டி இருக்கும். அதன்பின், இந்தியாவில் நடக்கிற காரியங்கள் அனைத்திற்கும், பிரிட்டிஷ் அரசு பொறுப்பேற்க நேரிடும். நான் பொறுப்பேற்க இயலாது...' என்றார்.

அதைத் தொடர்ந்து, காந்திஜியின் சீடரான, கிஷோரி லால் மஷ்ருவாலா என்பவர், அதே, அரிஜன் ஏட்டில், 'சதிச் செயல்களும் கூட, சாத்வீக போராட்டத்தில் அடங்கும். பாலங்களை தகர்ப்பது, தபால், தந்தி தொடர்புகளை துண்டிப் பது போன்ற மனித உயிர்களுக்கு, ஆபத்து ஏற்படுத்தாத செயல்களும், சாத்வீக போராட்டத்திற்கு உட்பட்ட செயல்கள் தான்...' என்று எழுதியிருந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது, காந்திஜியின், அனுமதியோடு தான் எழுதப்பட்டது.

ஆகஸ்ட் 7ம் தேதி, காந்திஜி, பத்திரிகை நிருபர்களை சந்தித்தார். ஒரு நிருபரின் கேள்விக்கு, 'பிரிட்டிஷ் அரசு, முன்கூட்டியே, என்னை கைது செய்தால், நான், கைதான இரண்டு வாரங்களுக்குள்ளேயே, நாடு முழுக்க போராட்டம் துவங்கி விடும். அந்தப் போராட்டம் துவங்கியவுடனேயே, பலாத்கார செயல்கள், நாடு தழுவிய அளவில் வெடித்தெழும். இம்முறை, அப்படிப்பட்ட பலாத்கார புரட்சி ஏற்பட்டால், நான், அதை பொருட்படுத்த மாட்டேன்...' என்றார் காந்திஜி.

மும்பையிலிருந்து வெளிவரும், 'நியூஸ் கிரானிகிள்' பத்திரிகையில், காந்திஜி விடுத்த அறிக்கையில், 'ஒரு வெகுஜன இயக்கத்தில், பலாத்காரப் போராட்டங்களும், செயல்களும் அங்கீகரிக்கப்பட்டவை தான்...' என்று கூறியிருந்தார்.

அதே நாளில், காந்திஜிக்கு நெருங்கிய தோழரான, பட்டாபி சீத்தாராமையா, ஒரு சுற்றறிக்கையை, மாகாண காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்து, அதில், குறிப்பிட்டுள்ள போராட்ட முறைகளை, தத்தம் மாநிலங்களில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

'ஆந்திரா சுற்றறிக்கை' என்று, அழைக்கப்பட்ட அந்த அறிக்கையில், காங்கிரஸ்காரர்களை, 'தந்திக் கம்பிகளை அறுக்கவும், தபால் ஆபீசுகளை கைப்பற்றவும், தண்டவாளங்களையும், பாலங்களையும் வெடி வைத்து தகர்க்கவும்...' என, கேட்டுக் கொண்டது.

'வரலாறு படைத்த வழக்குகள்' நூலிலிருந்து...

***

நவகாளி யாத்திரையின் போது, ஒர் ஆங்கிலேயர், காந்திஜியிடம், ஒரு சிகரெட்டை நீட்டினார். காந்திஜியும், அதை வாங்கிக் கொண்டார். பக்கத்தில் இருந்தவர்களுக்கு ஆச்சரியம்.

மறுநாள், காந்திஜியை சந்திக்க, அதே ஆங்கிலேயர் வந்திருந்தார். காந்திஜி, அன்புடன் ஒரு சிகரெட்டை, அவருக்கு வழங்கினார். அது, முதல்நாள், அந்த ஆங்கிலேயர் காந்திஜிக்கு கொடுத்த அதே சிகரெட்.

***

ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த, ஆயிரக்கணக்கான மக்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தினான் ராணுவ அதிகாரி ஜெனரல் டயர். இதில், 400 பேர் பலியாயினர். தடையுத்தரவை மீறி, பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதால், இந்தக் கொலை பாதகச் செயலை செய்தான் அவன். நேரு அப்போது தான், அரசியலுக்கு வந்த புதிது. அவரை, வெளியுலகுக்குத் தெரியாது. 'என் இளமை நாட்கள்' என்ற நூலில் நேரு எழுதுகிறார்:

அந்த ஆண்டின் (1919) முடிவில், ஒரு நாள், நான், அமிர்தசரசிலிருந்து டில்லிக்கு செல்ல, இரவு, ரயில் வண்டியில் ஏறினேன். காலியாக இருந்த பலகையின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டேன். காலையில் தான் தெரிந்தது, அப்பெட்டியில் இருந்த அனைவரும், ராணுவ அதிகாரிகள் என்று. அவர்கள், ஒருவரோடொருவர் உரையாடிக் கொண்டு வந்தனர்.

அவர்கள் உரக்கப் பேசியதால், அவர்கள் பேசியது எனக்கு தெளிவாக கேட்டது. அவர்களில் ஒருவர், தாம் ஏதோ பெரிய செயலை சாதித்து விட்டவர் போல, வெற்றி முழக்கம் செய்தார். அவர் தான், ஜெனரல் டயர். ஜாலியன் வாலாபாக் படுகொலையை, விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட, ஹண்டர் குழுவினர் முன், சாட்சியம் கூறிவிட்டு, லாகூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவர், ஜாலியன் வாலாபாக் அனுபவத்தை, பெருமையாக பேசிக் கொண்டு வந்தார்.

நகரம் முழுவதுமே அவருடைய கட்டுப்பாட்டில் இருந்ததாம். கிளர்ச்சி செய்யும் மக்கள் நிறைந்த அந்நகரையே, எரித்துச் சாம்பலாக்க வேண்டும் என்று எண்ணினாராம். ஆனால், இரக்கம் தோன்றி, அதை அழிக்காமல் விட்டு விட்டாராம். அவர், இவ்வாறு, சிறிதும் மனிதத் தன்மையே இல்லாமல், பேசிக் கொண்டு வந்ததைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தேன்.

இப்படி எழுதியுள்ளார் நேரு.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us