
மணிமாறன் வீடு, பரபரப்பாக இருந்தது. காரணம், மூன்றாவது முறையாக, ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நிற்கிறார்.
'ஹாட்ரிக் அடி தலைவா...' என்று, அவரது ஆதரவாளர்கள் உரக்க முழங்கத் துவங்கினர்.
மனைவி பூர்ணாவோ, ''ஏங்க... உங்களுக்கும் வயசாகுது... பொதுப் பிரச்னையை இழுத்து போட்டுக்கணுமா... நம்ப கட்சியில புள்ளைங்களா இல்ல,'' என்றாள்.
சிரித்த மணிமாறன், ''அப்படி இல்ல... கட்சி, எனக்கு வாய்ப்பு தருது. இதுல பெரிய லாபம் இல்ல... கையை விட்டு செலவு தான் ஆகும். ஆனா, ஊர்ல, 'தலைவா... தலைவா...'ன்னு, பேர் நின்னிடிச்சு... அத இழக்கணுமான்னு, தோணுது... வேற வழியில்ல... அவனவன் பதவிக்கும், கவுரவத்துக்கும் நாயா, பேயா அலையறான்... எனக்கு தேடிகிட்டு வருது... நின்னு தான் ஆகணும்,'' என்றார்.
இன்று வேட்பு மனு தாக்கல்...
நேரம், சகுனம் பார்த்து, கிளம்ப தயாரானார்.
''அப்பா... நான் இன்னிக்கு கார் ஓட்டறேன்,'' என்று, ஆசையாய் சொன்னான் மகன், சுந்தர்.
''சரி... தீவட்டி எங்கடா?'' என்றார், மணிமாறன்.
''ஐயா!'' என, குரல் கொடுத்தபடியே, வாசலில் இருந்து வந்தான், தீவட்டி என்கிற முருகன்.
''டேய்... எங்கடா போய் தொலைஞ்ச... உன் பாறை மூஞ்சிய பாத்துட்டு போனாதாண்டா எனக்கு ராசி,'' என்று, மணிமாறன் சொல்ல, அனைவரும் சிரித்தனர்.
தலையை சொரிந்து, அசட்டு சிரிப்பு சிரித்தான், தீவட்டி.
தீவட்டி என்கிற முருகனுக்கு, 40 வயது இருக்கலாம். அந்த வீட்டில் மூன்று தலைமுறையாக அவன் குடும்பம், விசுவாசமாக வேலை பார்த்து வருகிறது.
மணிமாறன் தாத்தா காலத்தில், அந்த ஊருக்கு, மின்சார வசதி வரவில்லை. அப்போது, இரவில், தாத்தா வெளியில் சென்றால், அவருக்கு முன், ஒரு தீவட்டி பிடித்து செல்வாராம், முருகனின் பாட்டனார். அவரின் பேர் மறந்து, காரணப் பேராக, தீவட்டி நிலைத்தது.
'டேய் உனக்கு எப்படிடா முருகன்னு, பேர் வச்சாங்க... தீவட்டி தாண்டா, 'பெஸ்ட்!' பாரு, முகம் எவ்வளவு பிரகாசமா இருக்கு...' என, சிறு வயதில் மணிமாறன், ஒருமுறை சொன்னதுண்டு.
ஆனாலும், அந்த வீட்டின் செல்ல மகனான தீவட்டிக்கு, எல்லா உரிமைகளும் உண்டு. தளம் போட்ட வீடும் கட்டிக் கொடுத்திருந்தனர். அவனுக்கு, பூவிழி என்ற மனைவியும் உண்டு. இரவு மட்டும் தான், வீட்டில் இருக்கலாம். பகல் முழுவதும், மணிமாறன் வீட்டில், எடுபிடி தான். இதனால், தீவட்டி மீது மற்றவர்களுக்கெல்லாம் பயமும், கொஞ்சம் பொறாமையும் உண்டு.
மணிமாறன் வேட்பு மனு தாக்கல், 'ஜாம் ஜாம்' என்று நடந்து முடிந்தது.
''தீவட்டி... நீ முன்ன போய், ஒரு பூசணிக்காய் தயார் பண்ணு... அப்பா மேலே ஏகப்பட்ட திருஷ்டி,'' என்று, சுந்தர் சொல்ல, ஓட்டமும், நடையுமாக வீட்டிற்கு வந்து, திருஷ்டி பூசணிக்காயை தயார் செய்தான்.
மணிமாறன் வீடு வர, வாசலில் ஆரத்தி எடுக்கப்பட்டது. பின், பூசணிக்காயை சுற்றி, வாசல், 'கேட்' தாண்டி உடைத்தான், தீவட்டி.
சுளையாக, 2,000 ரூபாய் கொடுத்தார், மணிமாறன்.
''ஐயா... நான் உங்க வீட்டு உப்பு திங்கிற வேலைக்காரன்... ஏன்யா... அப்பப்ப பணம் தர்றீங்க,'' என்று, பணிவாக கேட்டான், தீவட்டி.
''டேய்... பாருடா... தீவட்டிக்கு வந்த வாழ்வை... பணம் வேணாங்கிறான்... போடா, பொண்டாட்டிகிட்ட கொடு. உன் மூஞ்சிய பாத்து கட்டிக்கிட்ட பாவத்துக்கு, கொஞ்சம் சந்தோஷப்படட்டும்,'' என்றார், மணிமாறன்.
வழக்கம் போல் தலை சொரிந்தான், தீவட்டி.
அடுத்த ஒரு வாரமும், ஊரே அமர்க்களப்பட்டது. பிரசாரத்தில் இறங்கினார், மணிமாறன். அவரது, 'பட்டம்' சின்னம், ஊர் முழுவதும் வரையப்பட்டது. அவருக்கு போட்டியாக கருதப்பட்ட, மற்றொரு பொது உடமை கட்சியின், 'வேல்' சின்னம், சிறிதளவே காணப்பட்டது.
தாராளமாக பணத்தையும் இறைத்தார், மணிமாறன்.
போட்டி வேட்பாளர், 'எனக்கொரு வாய்ப்பு தாருங்கள்...' என்று மட்டுமே கேட்டார்.
தேர்தலுக்கு முதல் நாள், 'டென்ஷன்' ஆக இருந்தார், மணிமாறன்.
'தலைவரே... இந்த தடவ போட்டி கடுமையா இருக்கும்ன்னு தோணுது...' என, நலம் விரும்பிகள் சிலர் கூறினர்.
'புதிய வாக்காளர்களான இளைஞர்களுக்கு, நம்மை பற்றி அவ்வளவாக தெரியாது. இந்த முறை நிற்காமல் இருந்திருக்கலாமோ...' என, யோசித்தார், மணிமாறன்.
'ஆனால், கட்சி சும்மா விடாதே... யாரையாவது நிறுத்தி, அவனுக்காக உழைப்பதை விட, நான் நின்றது சரி தான்...' என்று, சமாதானம் ஆனார்.
''டேய்... யாராவது வெளியூர் போயிருந்தா... உடனே போய், கார்ல அழைச்சிட்டு வாங்கடா... ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்,'' என்றார், மணிமாறன்.
நாலு கார்களை வாடகைக்கு எடுத்தார்.
''டேய் தீவட்டி... வேணுங்கிற பணத்தை வாங்கிக்க... வீடு வீடா போய், ஆளைப் பார்த்து கொடு... எப்படியாவது ஜெயிக்கணும்டா,'' என்றார்.
''ஐயா... என் உயிரை கொடுத்தாவது ஜெயிக்க வைப்பேங்க,'' என்று கூறி, தெருத் தெருவாக மணிமாறனுடன் போய், ஓட்டு போட கூறினான், தீவட்டி.
'ஏன் உங்கய்யாவை விட்டா யாருமில்லையா...' என்று கேட்டவனை, அடிக்கப் போனான்.
தடுத்தார், மணிமாறன்.
''நீங்க தடுக்காட்டி கொன்னிருப்பேன்,'' என்றான், தீவட்டி.
''போதும்டா, 'டயலாக்'கு... பொண்டாட்டிகிட்ட சொல்லிட்டு வந்துடு... இன்னிக்கு ராத்திரி, என் கூடவே இரு,'' என்றார்.
''சரிங்கய்யா,'' என்றான்.
அன்றிரவு, மணிமாறன் குடும்பம் துாங்கவில்லை.
மொட்டை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார், மணிமாறன்.
''டேய் தீவட்டி.''
மேலே ஓடி வந்தான்.
''உனக்கு என்னடா தோணுது?''
''ஏன்யா சந்தேகப்படறீங்க... ஒரு ஓட்டுலயாவது நீங்க தான் ஜெயிப்பீங்க.''
''எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?''
''நீங்க எந்த தப்பும் செய்யலையேங்க.''
''அட போடா... நல்லவங்களை யாருக்கு பிடிக்கும்... நீ, ரெண்டு மூணு பெத்து... அதுக்கு வயசாயிருந்தா கூட, நாலு ஓட்டு கிடைக்கும். ம்... நீயோ பொட்டையாயிட்ட,'' என்ற மணிமாறன், அந்த, 'டென்ஷனி'லும் சிரித்தார்.
'நல்ல வேளை, மனைவி, இதை கேட்கவில்லை...' என்று, நினைத்து கொண்டான், தீவட்டி.
மாடியில் உலாவிக் கொண்டிருந்த மணிமாறன், சற்று உட்கார்ந்தார்; அவர் கால்களை பிடித்து விட ஆரம்பித்தான், தீவட்டி.
''டேய்... ஒருவேளை இந்த தேர்தல்ல நான் தோத்துட்டா, நீ கூட மதிப்பியான்னு சந்தேகம்தாண்டா,'' என, நக்கலாக கூறினார், மணிமாறன்.
''ஐயோ... வாயை கழுவுங்கய்யா... இந்த அடிமை, உங்க வீட்டு நாய்ங்க... நான் வாழறதும், சாவறதும் உங்க பார்வையாலதாங்க இருக்கும். உங்கள தோக்க விட்டுடுவேணா... ஊரையே வெட்டி போட்டுட மாட்டேன்,'' என, ஆவேசமாக கூறினான், தீவட்டி.
பிறகு, தன்னையறியாமல் துாங்கினார், மணிமாறன்.
'தலைவர் வாழ்க... வாழ்க...' என்று, யாரையோ துாக்கி, யாரோ கத்தியது போல் கனவு வந்தது, மணிமாறனுக்கு.
தீவட்டி, துாங்கவில்லை.
மறுநாள் காலை, குளித்து முடித்து குடும்பத்துடன், ஓட்டுச்சாவடிக்கு கிளம்பினார், மணிமாறன். வழியில் அனைவரும் வணக்கம் தெரிவித்தனர்.
''எல்லாம் ஓட்டாக மாறுமா?'' என, கூட வந்தவனிடம் கேட்டார்.
''ஏண்டா தீவட்டி... நீயும் இப்பவே ஓட்டு போட்டுடு... அடையாள அட்டை எடுத்துக்கிட்டியா?'' என்றார்.
''இதோங்கய்யா,'' என்று, சட்டை பையிலிருந்து எடுத்து காண்பித்தான்.
ஓட்டுச்சாவடி -
அனைவருடனும், வரிசையில் நின்றார், மணிமாறன். அவர் குடும்பத்தினர் முறையாக நகர்ந்து சென்று, 'பட்டம்' சின்னத்தில் முத்திரை பதித்தனர். தீவட்டியின் முறை வந்தது...
''முருகன்... 784,'' என, ஒரு அலுவலர் படித்தார்.
'குபீர்' என சிரித்த, மணிமாறன், ''முருகனா... தீவட்டி, எவ்வளவு அழகான பேரு... போ... போ... முதல்ல உம்பேர, 'கெசட்'டுல மாத்தணும்டா,'' என்றார்.
கை விரலில் மை இட்டு, அந்த அட்டை கூண்டுக்குள் சென்றான், தீவட்டி.
'டேய்... பணக்கார நாயே... பொறம்போக்கு... உனக்கு கவுரவம், பதவி ஒரு கேடா... இந்த தேர்தல்ல, ஒரு ஓட்டுலயாவது தோக்கணும்டா பரதேசி... இவ்வளவு கவுரவம் எதிர்பார்க்கிற நீ... மத்தவங்களுக்கு... அதுவும் எனக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருக்கும்ன்னு தெரியாதாடா... பன்னி!
'எங்கப்பன் வெச்ச பேர மாத்த, நீ யாருடா... அயோக்கிய பேமானி... இந்த வாட்டி, 'வேல்'தாண்டா ஜெயிக்கப் போவுது...' என்று பொருமியபடி, 'வேல்' சின்னத்தில் தன் முத்திரையை பதித்தான், தீவட்டி.
அந்த கணம், மணிமாறனை காலில் போட்டு மிதித்த திருப்தி ஏற்பட்டது.
'உன்னை நேருக்கு நேரா எதிர்க்க முடியாது தான்... ஆனால், உன்னை போன்ற திமிர் பிடித்த மனுஷங்களுக்கு, எங்களை போன்றவங்க இப்படித்தாண்டா எதிர்ப்பை காட்ட முடியும்...' என, நினைத்து கொண்டான்.
ஓட்டுப் போட்டு வெளியே வந்தவனிடம், ''தீவட்டி... 'பட்டம்' சின்னத்துல போட்டியாடா?'' என்றார், மணிமாறன்.
''ஆமாங்கய்யா... அது, இந்த ஜென்மத்தோட கடமை தானேங்கய்யா... இந்த வாட்டி நீங்க அமோகமா ஜெயிக்கப் போறீங்கய்யா,'' என, தலையை சொரிந்தபடி சொன்னான், தீவட்டி.
தேர்தல் முடிவு வெளியான நாள் -
மணிமாறன் இரண்டு ஓட்டில் தோற்றதாக, 'டிவி' செய்தியில் கூறினர்.
தீவட்டி என்ற முருகனும், அவனது மனைவியும், ஒருவரை ஒருவர் பார்த்தபடி, நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
டி. சீனிவாசன்