PUBLISHED ON : டிச 17, 2017

சென்னை பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவில் கடற்கரை - உழைத்து பிழைக்க வேண்டும் என்று மனதில் உறுதிகொண்ட எளியோர் சிலர், சுண்டல் விற்றுக்கொண்டிருந்தனர். மற்றும் சிலர், குழந்தைகளுக்கான ராட்டினம் சுற்றிக் கொண்டு இருந்தனர். இன்னும் சிலர், பலுான் மற்றும் பட்டம் விற்றபடி இருந்தனர்.
இவர்களுக்கு நடுவே, நடுத்தர வயது பெண் ஒருவர், கழுத்தில் கேமராவுடன் சுற்றுலா பயணியரை நெருங்கி, 'சார் - மேடம், போட்டோ எடுத்துக்குங்க; 30 ரூபாய் தான்...' என்று ஏற்கனவே, தான் எடுத்த படங்களை காட்டியவாறு இருந்தார்.
அவர் சொன்னதை அலட்சியப்படுத்தி சென்றாலும், அதற்காக கவலைப்படாமல் அடுத்தடுத்து வந்தவர்களைப் பார்த்து, 'ஆர்டர்' பிடிக்க, கடற்கரை சுடு மணலில் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தார்.
கையடக்கமான, 'இன்ஜெக்ட் பிரின்டிங்' மிஷினுள்ள, பெரிய கேமரா பேக் இவரது தோளில் தொங்க, அதன் எடை காரணமாக, ஒரு பக்க தோளை சாய்த்து நடக்கிறார்.
வெயில் மற்றும் வேலை காரணமாக, கறுத்துப்போன உடம்பு, சாயம் போன சேலை - ஜாக்கெட், தேகம் போலவே வறண்டு சுருண்டபடி கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு. இவற்றுக்கு சொந்தக்காரரான லட்சுமி, காலையில் வீட்டு வேலையும், மாலையில் போட்டோகிராபியும் செய்து வருகிறார்.
கடலுார், தேவனாம்பட்டியை சேர்ந்த லட்சுமி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். வீட்டு சூழ்நிலை காரணமாக, படிப்பை பாதியில் விட்டு, வீட்டு வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்தார்.
திருமணமாகி நான்கு குழந்தைகள் பிறந்த நிலையில், கணவர் கைவிட்டு விட, பிள்ளைகளுடன் பிழைப்பு தேடி, சென்னைக்கு இடம் பெயர்ந்தார். பகலில் வீட்டு வேலை, இரவில் வயதான நோயாளிகளின் பராமரிப்பாளர் என, இரவு - பகலாக வேலை பார்த்து, நான்கு பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து விட்டார்.
இதற்கு பிறகும் இவரது சுமைகளும், பிரச்னைகளும் குறையாமல் இருக்கவே, அதை ஈடுகட்ட என்ன செய்வது என்று யோசித்த நிலையில், கடற்கரையில் போட்டோ எடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் கண்ணில் பட்டனர். தானும், அதுபோல போட்டோ எடுத்து பிழைப்பது என முடிவு செய்தார். அதுவரை கேமராவை கையால் கூட தொடாதவர், வீட்டு வேலை மட்டுமே செய்து பழகியவர், கிராமத்து சூழலில் வளர்ந்தவர், வாழவேண்டும் என்ற வைராக்கியம் காரணமாக, போட்டோகிராபராக முடிவு செய்தார்.
அங்கேயும், இங்கேயும் கடன் வாங்கி, கேமரா மற்றும் பிரின்ட்டருடன் தொழிலுக்கு தயாராகி விட்டார். எப்படி போட்டோ எடுப்பது என்பதை மிகுந்த போராட்டத்திற்கு பின் கற்றுக்கொண்டார். இப்போது, அதிகாலை எழுந்து வீட்டு வேலை செய்த பின், மாலையில், கடற்கரையில் போட்டோகிராபர் வேலை.
'போட்டோ எடுத்த அடுத்த இரண்டாவது நிமிடத்தில் பிரின்ட் போட்டு கொடுத்து, 30 ரூபாய் வாங்குகிறேன். எதற்கு, 30 ரூபாய் என்று பேரம் பேசுவோரும் இருக்கின்றனர். 'என்கிட்ட, 50 ஆயிரம் ரூபா மொபைல் போன் இருக்கு; அதுலயே நாங்க எடுத்துக்குவோம்... நீ போம்மா அப்பால...' என்று அலட்சியப்படுத்தி துரத்துவோரும் இருக்கின்றனர். 'இந்த வயதில் இவ்வளவு எடையை துாக்கி, படம் எடுத்து பிழைக்குதே இந்த அம்மா...' என்று அதற்காகவே படம் எடுத்து, 30 ரூபாய் கேட்ட இடத்தில், 50 ரூபாய் கொடுக்கும் புண்ணியவான்களும் இருக்கின்றனர்.
'சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பிழைப்பு நல்லா ஓடும். மற்ற நாட்களில் சுமாராகத்தான் இருக்கும். சில நாட்கள் ஒரு படம் கூட எடுக்காமல் சும்மாவே சுற்றி விட்டு போகவேண்டி இருக்கும். இருந்தாலும், இந்த தொழில் எனக்கு பிடிச்சிருக்கு.
'சினிமாக்காரர்களின், 'கட் - அவுட்' பக்கத்துல நின்னு போட்டோ எடுக்க விருப்பப்படுவாங்க, பசங்க. அதேபோல ராத்திரி நேரத்துல போட்டோ எடுக்க, பிளாஷ் லைட் வச்சுக்கலாமாம். இதெல்லாம் வாங்க, 10 ஆயிரம் ரூபாயாச்சும் வேணும்; அதுக்கு கொஞ்சம் காசு பார்க்கணும்; அதோ, ஒரு சுற்றுலா வேன் வருது... போய் நின்னா, யாராச்சும் போட்டோ எடுத்துப்பாங்க... நான் கிளம்பறேன் சார்...' என்று சொல்லி, சுமையை துாக்கி தோளில் மாட்டி, சாய்ந்தபடி வேகமாக நடக்க ஆரம்பித்தார்.
இவரது மொபைல் எண்: 88389 81482.
எல்.எம்.ராஜ்
