PUBLISHED ON : ஏப் 10, 2016

ஏப்.,14 தமிழ் புத்தாண்டு
தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; அவ்வகையில், 1956ல் பிறந்த இந்த துர்முகி ஆண்டு, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் பிறக்கிறது.
ஒரு காலத்தில், மனிதர்களில் பெரும்பாலானோர், 120 ஆண்டுகள் தீர்க்காயுளுடன் வாழ்ந்தனர். இதை அடிப்படையாகக் கொண்டே, சூரிய தசை 6 ஆண்டுகள், சந்திர தசை 10 ஆண்டுகள், செவ்வாய் தசை 7 ஆண்டுகள், ராகு தசை 18 ஆண்டுகள், குரு தசை 16 ஆண்டுகள், சனி தசை 19 ஆண்டுகள், புதன் தசை 17 ஆண்டுகள், கேது 7 ஆண்டுகள், சுக்கிர தசை 20 ஆண்டுகள் என, ஜோதிடத்தில் தசாபுத்தி காலம் வகுத்தனர். உதாரணமாக, ஒருவர் இந்த துர்முகி ஆண்டில் பிறக்கிறார் என்றால், அவர், 2136ம் ஆண்டு வரை வாழ்வார் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையிலேயே, ஜோதிட பலன்கள் சொல்லப்பட்டன.
இவ்வளவு காலம் நம் முன்னோர்கள் வாழ்ந்ததற்கு காரணம், சுற்றுப்புறத் தூய்மை, நல்ல எண்ணங்கள் மற்றும் ஆசைகளை தங்கள் தகுதிக்குள் வரையறுத்துக் கொண்டது! இத்தகைய மனநிலையை தமிழ் புத்தாண்டு சிந்தனையாக, நாம் எல்லாரும் ஏற்படுத்திக் கொண்டால், அமைதியான வாழ்க்கைக்கும், நீண்ட ஆயுளுக்கும் குறைவிருக்காது.
துர்முகி ஆண்டு குறித்த பாடல் ஒன்று...
மிக்கான துர்முகியில் வேளாண்மை ஏறுமே
தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறை தீரவே விளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்!
இதன் பொருள்: துர்முகி ஆண்டில் விவசாயம் செழிக்கும்; ஆண்டின் பின்பாதியில், (அக்டோபர், மார்ச்) மழை அதிகம் இருக்கும். (400 ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாம். அந்த அளவு, இந்த ஆண்டும் இருக்கும் என்கிறது வாக்கிய பஞ்சாங்கம்.) மலைப்பகுதிகளில் பயிர் செய்பவர்கள், நல்ல விளைச்சல் பெறுவர். மக்கள் பயமின்றி வாழ்வர். ஆனால், பால் மற்றும் வெண்ணெய் போன்ற வெள்ளை நிற பொருட்களுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படும்.
இந்த வெண்பாவின் பொருளின்படி, நாம் இந்த ஆண்டில், இரு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. ஒன்று, பெருமழையை சமாளிக்க, ஆறு, குளங்கள் தூர்வாரப் பட வேண்டும். கடந்த ஆண்டில், தமிழக மக்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது போன்ற நிலைமை வரக் கூடாது. பால் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால், பசுக்களை பராமரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. கோவில்களிலும், வீடுகளிலும் கோமாதா பூஜை செய்ய வேண்டும். லட்சுமி வழிபாடும் பால் உற்பத்தியை அதிகரிக்கும்.
இந்த ஆண்டிற்குரிய ராஜா, சுக்கிரன்; இவருக்குரிய தெய்வம் ரங்கநாதர். இவரை வணங்குவதுடன், தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் அருகிலுள்ள கஞ்சனூர் சுக்ரபுரீஸ்வரர் கோவிலுக்கும் சென்று வணங்குவதன் மூலம், மக்கள் நலமடைவர்.
எல்லார் வாழ்விலும் புதிய ஆண்டு மலர்ச்சியைத் தரட்டும்!
தி.செல்லப்பா

