PUBLISHED ON : ஜூன் 30, 2019

'ஏனப்பா... கொஞ்சங் கூட யோசிக்கவே மாட்டியா?' என்று, பலர் பேசக் கேட்டிருப்போம். இதை மனதில் பதிய வைத்து, ஜனக மன்னரை பற்றிய அபூர்வ தகவல் ஒன்றைப் பார்க்கலாம்...
பாரத தேசத்து ஞான நுால்கள் பலவும், ஜனகரை பற்றிப் பேசியிருக்கின்றன.
வேதியர் ஒருவர், பெரும் தவறு செய்து விட்டதாகச் சொல்லி, 'நீங்கள், என் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்...' என, உத்தரவிட்டார், ஜனகர்.
'மன்னா... உங்கள் ராஜ்ஜியத்தின் எல்லை, எதுவரை என்று சொல்லுங்கள்... அந்த எல்லையைத் தாண்டிப் போய் விடுகிறேன்...' என்றார், வேதியர்.
'என் ராஜ்ஜியத்தின் எல்லை எது?' என்று யோசிக்க ஆரம்பித்தார், ஜனகர்.
தன் அதிகாரம், பூமி முழுதும் பரந்து-விரிந்திருப்பதாக தோன்றியது. சில வினாடிகளில், 'என் அதிகாரம், இந்த மிதிலா தேசத்தில் மட்டும் தான்...' என்று தோன்றியது; மேலும், சில வினாடிகள் சென்றதும், 'இல்லை... இல்லை... என் அதிகாரம், இந்த அரண்மனை வரைக்கும் தான் செல்லும்...' என நினைத்தார்.
ஜனகரின் சிந்தனை மேலும் நீண்டது, 'அரண்மனை வரைக்குமா? இல்லையே... அதிகாரம் எல்லாம் என் உடம்பின் மீது தான். கண் பார்க்க, கால் நடக்க என்று, உடம்பு மீது மட்டும் தான் என் அதிகாரம்...' என்று நினைத்தார்.
சிந்தனை மேலும் நீண்டது... 'உடம்பின் மீது அதிகாரமா... எப்படி, உடல்நிலை சரியில்லை என்றால், என்ன தான் சொன்னாலும், உடல் செயல்பட முடியாமல் போகிறதே. ம்... ப்ச்... நம் உடம்பின் மீதும் நமக்கு அதிகாரமில்லை...' என்று சிந்தித்த மன்னர், திகைத்தார்.
'என்ன இது, எதன் மீதும் நமக்கு அதிகாரமில்லை. இப்படியிருக்க, இது, என் எல்லையென்று எப்படி வரையறுத்துக் கூறுவது?' என்று திகைத்தவர், தன் எதிரில் நின்ற வேதியரிடம் சற்று தெளிவோடு பேசத் துவங்கினார்.
'பெரியவரே... என் அதிகாரத்துக்கு உட்பட்டதாக, இந்த உலகத்தில் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, உங்கள் விருப்பப்படி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்...' என்று முடித்தார்.
'என்ன, மன்னா இது... இவ்வளவு பெரிய அரசாங்கத்தை வைத்திருந்தும், உங்களுக்கு யார் மீதும் அதிகாரம் இல்லையென்று கூறுகிறீர்களே... எப்படி?' எனக் கேட்டார், வேதியர்.
தன் எண்ணத்தில் எழுந்ததை எல்லாம் விரிவாக எடுத்துரைத்தார், ஜனகர்.
அவர் சொல்லி முடித்ததும், எதிரில் நின்றிருந்த, வேதியர் மறைந்து, தர்ம தேவதை நின்றாள்.
'மன்னா... நான், தர்ம தேவதை. உன்னைச் சோதிப்பதற்காகவே, இப்படி வேதியர் வடிவில் வந்தேன். உன்னைப் போன்றதொரு, பிரம்ம நிஷ்டரை பார்த்ததில்லை...' என்று கூறி, மறைந்தாள்.
பிரம்ம நிஷ்டர்களாக மாறுவது, சுலபமான செயலல்ல. இருந்தாலும், ஜனகரின் சிந்தனை எவ்வளவு அபூர்வமான உண்மைகளை வெளிப்படுத்தி இருக்கிறது என்பதை, சற்று கூர்ந்து படித்தால் போதும்; கலங்கி இருக்கும் நம் மனம், தானே தெளிவுபெறத் துவங்கும்.
பி. என். பரசுராமன்
