தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/தரம் காட்டும் மனிதர்கள்!

தரம் காட்டும் மனிதர்கள்!

தரம் காட்டும் மனிதர்கள்!


PUBLISHED ON : ஜூன் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிலர், நம்மை நோக்கி வீசிய வார்த்தைகளை, இப்போது நினைத்தாலும், நெஞ்சில் மறுபடி ரணம் புறப்படுகிறது. 'அவர் - அவள் அப்படி பேசியதில் என்ன நியாயம் இருக்கிறது...'

'நான் செய்யாத தவறுக்கு, அப்படி பேசி விட்டாரே... அவர், என் மீது காட்டிய கடுமையில் சற்றும் நியாயமில்லை; எப்பேற்பட்ட சுடு சொற்கள். நான் செய்தது தவறாகவே இருக்கட்டும்; அதற்காக, இப்படியா பேசுவது... அதுவும், அத்தனை பேர் முன்னிலையில்! நினைக்க நினைக்க, நெஞ்சு ஆற மாட்டேன் என்கிறது...' என, இப்படி ஒருவருக்குள் ஓடும் எண்ண ஓட்டங்களை வரையறுப்பதில், தோற்று விட்டேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு வேதனைகள் மனிதர்களுக்குள்!

ஆனால், இப்படி, எதிராளி வீசிய அமிலத்தை, ஏதோ தங்க குண்டுமணிகள் போல் சேகரித்து, வசனம் மாறாமல், வரி பிசகாமல், பலரிடமும் ஒப்பிக்க வேண்டிய அவசியம் என்ன!

மனம் என்பது பூக்கூடை; அதில், மணம் வீசும் மலர்களை சேகரித்தால் போதும்; அப்பூக்களின் மேல் தூவப்பட வேண்டியவை, நறுமணம் வீசும் பன்னீர் துளிகளே தவிர, கண்ணீர் துளிகளோ, சாக்கடையோ அல்ல.

அவர்கள் பேசிய தரமற்ற பேச்சுகள், ஏதோ அவர்கள் நமக்கு அளித்த சொத்து பத்திரத்தில் உள்ள வாசகங்களா என்ன... துர்நாற்றம் வீசுகிற, தூக்கி எறியப்பட வேண்டிய அந்த வாசகங்களை, திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து குமுறத்தான் வேண்டுமா... அவசியமே இல்லை.

இனி ஒரு விதி செய்வோம்; அதை எந்நாளும் காப்போம்...

எதிராளி, நம்மிடம் கடுமையாக பேசியதற்கு, பல காரணங்கள் இருக்கலாம்; நம்மையறியாமல், நம்மால் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த பாதிப்பிலிருந்து விடுபட தெரியாதவர்களுக்கு, பிறரை திட்டித் தீர்க்க தான் தெரியுமே தவிர, தீர்வு தேட தெரியாது. எனவே, பேசி விட்டு போகட்டும்.

இரண்டாவதாக, அவர்கள் நமக்கு புதியவர்கள் இல்லை எனில், நம் மீது அவர்களுக்கு ஏதோ பழைய கோபம், நாள்பட்ட வருத்தம் என, ஏதோ உள்ளத்தில் படிந்து போயிருக்கலாம். நாம், இப்படி தொடர்ந்து செய்கிறோம் என்ற எண்ணமே, இந்த எரிமலை வெடிப்பிற்கான பின்னணியாக இருக்கலாம்.

மேலும், இவர்கள் எங்கோ அடிபட்டு, நெஞ்சம் உலைக்களமாய் இருக்கும் நேரத்தில், நம்முடைய சில வார்த்தைகள் அல்லது சிறு செயல்கள் கூட, வெடித்து சிதற காரணமாக இருந்திருக்கலாம்; எனவே, நாம் மட்டுமே காரணமல்ல.

இவற்றிற்காக, நீங்கள் அவர்கள் மீது இரக்கப்பட வேண்டுமே தவிர, நம் மீது கோபப்பட்டதை, கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏனோ, உடலில் காயம்பட்டவர்களை பார்த்து, 'த்சோ... த்சோ...' என்று இரக்கப்பட்டு, முதலுதவி தருகிறோமே தவிர, மனக்காயங்கள் அடைந்தவர்களை பற்றிய நம் அக்கறை, மிக குறைவு தான்.

காயத்தின் பாதிப்பால், அவர்கள் பிதற்றுகிற பிதற்றலை கண்டுகொள்ள வேண்டாம்.

இறுதியாக ஒன்று... நம்மை தாக்கி பேசுவோர், தரக் குறைவாக பேசுவோர், தங்கள் தரம் என்ன என்று நமக்கும், இச்சமூகத்திற்கும், தங்களை அடையாளம் காட்டுகின்றனர்.

ஆம்... அவர்கள் தரம் அவ்வளவு தான்! பேசிவிட்டு போகட்டும்; அவர்கள் அளவிற்கு நாம் இறங்க வேண்டாம். நாய் குரைக்கிறது; நாம் திரும்ப குரைப்போமா...

இந்நிகழ்வை பார்க்கிற பார்வையாளர்களும், சம்பவத்தை கேள்விப்படுவோரும், நியாயம் பேசுவோரும், சமரசம் பேசுவோரும், 'என்ன இருந்தாலும் நீங்கள் இப்படி பேசியிருக்க கூடாது...' என்று, அவர்களை சுட்டிக்காட்டும் காலம் வரும்; அதுவரை, பொறுமை காப்பது அவசியம்.

இனியாவது, நம்மை காயப்படுத்தி பேசுவோரின் வார்த்தைகளை, நம் உடையில் படிந்த தூசி போல் தட்டி விட்டு போக வேண்டுமே தவிர, கல்வெட்டாய் நெஞ்சில் பதித்து விட வேண்டாம்.

இந்த பக்குவம், இந்நேரம் உங்களுக்குள் வந்திருக்கும் தானே!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us