தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குன்றென நிமிர்ந்தவள்!

குன்றென நிமிர்ந்தவள்!

குன்றென நிமிர்ந்தவள்!


PUBLISHED ON : ஜூன் 18, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காயத்திரியால் எதுவுமே செய்ய முடியவில்லை. எதிர்மறையான எண்ணங்கள், மனதில் அதிகரித்து, பய உணர்வை கூட்டியது; நூறு கிராம் இதயத்துள், நூறு டன் கனத்தை உணர்ந்தாள்.

விடுதியின் மாடி சுவரில், கைகளை ஊன்றி, இயந்திரத்தனமாய் இயங்கும் நகரத்து மனிதர்களை, வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள். 'இவர்களில், யாரேனும், பெற்றோர், உடன்பிறந்தோரை, கூடப் படித்த தோழிகளை, ஆடி, ஓடி விளையாண்ட கிராமத்தை விட்டு, இப்படி, நகரத்து தீவில் வந்து சிக்கி, வேதனைப்படுவோர் உண்டா...' என்று சிந்தித்தபடி இருந்தாள்.

தன்னை விட, இவ்வுலகில் கஷ்டப்படும் ஜீவன், யாரும் இருக்கப் போவதில்லை என எண்ணும் பலவீன மனம் அவளுக்குள்ளும் இருந்தது.

தனிமை ஒரு புறம் இருந்தாலும், கல்லுாரியின் முதல் நாள் நிகழ்வுகள், அவளுள் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. காயத்திரியின் கிராமத்து தோற்றமும், பனிரெண்டாம் வகுப்பு வரை, தமிழ் வழி கல்வியிலேயே படித்த அவளது ஆங்கில உச்சரிப்பும், சக மாணவ, மாணவியரின் ஏளன பார்வைக்கு உள்ளாவதாக உணர்ந்தாள். ஒருநாள் போவது, ஒரு யுகம் போவது போல் இருந்தது.

''ஏய் காயத்திரி... நீ, இங்கயா இருக்க...'' என்று கேட்டபடி வந்த ஜானவி, காயத்திரியின் தோளில் கையை வைத்து, தன் பக்கமாக திருப்பினாள்.

அவளின் கலங்கிய விழிகளைப் பார்த்து,''ஏய்... என்ன வீட்டு ஞாபகம் வந்துடுச்சா?'' என்று கேட்டாள்.

''இல்லக்கா... எனக்கு காலேஜ் போக பிடிக்கல; எல்லாரும், என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க; எனக்கு அவமானமா இருக்கு. நான் ஊருக்கே போறேன்.''

''அடி பைத்தியம், என்னாச்சு உனக்கு... வீட்டுக்கு போய் என்ன செய்யப் போற... பத்து பாத்திரம் தேய்ப்பியா; அடுப்படியில நின்னு, சமைச்சு போட்டு, ஒரு சாதாரண மனுஷியா வாழ்ந்து, செத்துப் போகப் போறியா?''

ஜானவியின் வார்த்தைகளில் இருந்த சூடு, காயத்திரியை சுட்டது.

''யாரு எப்படி பாத்தா உனக்கென்ன... உயர்ந்த நோக்கத்தோட, கிராமத்திலிருந்து இங்க படிக்க வந்திருக்க. படிப்பு தான் உன் லட்சியம். அதவிட்டுட்டு, ஓடிப் போய் கிராமத்தில உட்காந்துகிட்டா, எத்தன பேரோட கனவை, நீ பாழடிப்ப தெரியுமா?''

''அக்கா... நான், டவுன் புள்ளைங்க மாதிரி அழகா இல்ல; எனக்கு, இங்கிலீஷ் சரியா பேச வரல,'' என்றாள், காயத்திரி. ''அடி பைத்தியகாரி... உண்மையான அழகு எது தெரியுமா... அறிவும், தன்னம்பிக்கையும் தான். என்ன பொல்லாத இங்கிலீஷ்... நானும், தமிழ் மீடியத்துல படிச்சவ தான்; இந்த ரெண்டு வருஷத்துல இங்கிலீஷ்ல பேசக் கத்துக்கலயா... சுவாமி விவேகானந்தரோட புத்தகங்கள படிச்சு, எனக்கு நானே தன்னம்பிக்கைய வளர்த்துக்கிட்டேன். நீயும் அவரோட புத்தகங்களை படிச்சு தன்னம்பிக்கைய வளர்த்துக்க,'' என்றாள்.

தளர்ந்து கிடந்த காயத்திரியின் மனது, சற்று நிமிர்ந்து நிற்கத் துவங்கியது.

ஜானவிக்கும், காயத்திரிக்குமான நட்பு, வெறும் மூன்றே நாட்கள் தான். இயற்பியல் மூன்றாமாண்டு மாணவியான ஜானவியின் அறையில் தான், தங்க வைக்கப்பட்டிருந்தாள், காயத்திரி. அறிமுகமில்லாத இடத்தில், மகளை விட்டு செல்லும் போது, சக தோழியிடம், 'நீதாம்மா, எம்பொண்ண பத்திரமா பாத்துக்கணும்'ன்னு சொல்வது போலத் தான், காயத்திரியை பார்த்துக் கொள்ளும்படி, அவளது அப்பா, ஜானவியிடம் சொல்லிப் போயிருந்தார்.

'நீங்க கவலை இல்லாம போங்கப்பா... அவள, என் கூடப் பொறந்த தங்கச்சி போல பாத்துக்கிறேன்...' என்ற சொன்ன ஜானவி, அதன்படி இன்று பொறுப்போடு காயத்திரியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

''சரி வா சாப்பிட போகலாம்; சாப்பிட்டுட்டு, அப்படியே என் தோழிய பாத்துட்டு வரலாம்,''என்றாள், ஜானவி.

அவர்கள் அறை வாசலில், இரண்டு டிபன் கேரியர் இருந்தது. அவரவருக்கு உரியதை எடுத்து சாப்பிடத் துவங்கினர்.

''அக்கா... எனக்கு சாப்பிடவே பிடிக்கல,'' தயங்கித் தயங்கி சொன்னாள், காயத்திரி.

''இங்க பாரு... நாம நினைக்கறத சாதிக்க, மனவலிமை இருந்தா மட்டும் போதாது; எல்லாத்துக்கும் அடிப்படை அஸ்திவாரமாய் இருக்கிறது, உடல் நலம் தான். சரியா சாப்பிடாம கிடந்து, உடலை பாழாக்கி, நோய் நொடிகளுக்கு ஆளாகிட்டா, நம்ம கனவு, லட்சியம் எல்லாம் பாழாயிடும். நீ, சாதிக்க பிறந்தவ, இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் சோர்ந்து போயிடக் கூடாது,'' என்றாள்.

ஜானவியின் நம்பிக்கை வார்த்தைகள், காயத்திரியை சாப்பிட வைத்தன.

சாப்பிட்டு முடித்ததும், ''அக்கா... உங்க தோழிய பாக்கப் போகலாம்ன்னு சொன்னீங்களே... போகலாமா?'' என்றாள், காயத்திரி.

''கண்டிப்பா... நீ அவளை சந்திச்சே ஆகணும்.''

அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் ஜானவி.

அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து, இரண்டு தெரு தள்ளியிருந்தது அந்த வீடு; தனி வீடு. இரண்டு, மூன்று பேர் தங்கியிருக்கலாம் என்பதை, வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், காயத்திரிக்கு கோடிட்டு காட்டியது. அழைப்பு மணியை அடித்து, காத்திருந்தனர்.

வயதான பெண்மணி வந்து கதவை திறந்து, ''வாம்மா,'' என்று, ஜானவியை உள்ளே அழைத்தவள், ''இது யாரு... புதுசா இருக்கு...'' என்று விசாரித்தாள்.

''என் தங்கச்சி பாட்டிம்மா,'' என்ற ஜானவி, ''சாந்தி அக்கா எங்க... தூங்கிட்டாங்களா?'' என்று கேட்டபடி, உள்ளே போனாள்.

''வா ஜானவி... இவ தான் உன், 'ரூம்மெட்' காயத்திரியா...'' வீட்டு வரவேற்பறையின் ஒரு மூலையிலிருந்து குரல் வந்தது. ஆர்வமாய் திரும்பிப் பார்த்த காயத்திரிக்கு பேரதிர்ச்சி. போலியோவால் பாதிக்கப்பட்ட கால்களை, தரையில் நீட்டி அமர்ந்திருந்தாள், சாந்தி.

''ஆமாம்க்கா...'' என்றவள், ''அக்கா... இன்னிக்கி, இவ என்ன சொன்னா தெரியுமா... 'நான் அழகில்ல; இங்கிலீஷ் படிக்க வரல; அதனால கிராமத்துக்கே போறேன்'னு சொன்னா...'' என்று ஆதங்கத்தோடு சொல்லியபடி, சாந்தியின் அருகில் அமர்ந்தாள், ஜானவி. கூடவே, காயத்திரியையும் தன் அருகில் அமர்த்திக் கொண்டாள்.

''அப்படியா காயத்திரி?'' ஏளனமாய் சிரித்தாள், சாந்தி.

என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள், காயத்திரி.

''உன்னை விட, நான் ரொம்ப அழகா இருக்கேனா காயத்திரி?''

ஜானவியை பார்த்தாள், காயத்திரி. சிறிது நேரம் அங்கே மவுனம் நிலவியது. காயத்திரியின் கைகளைப் பிடித்து, ''இங்க பாரு காயத்திரி... என்னை பொறுத்தவரை, ஒவ்வொரு பெண்ணுக்கும் அவசியத் தேவை, அன்பு, அறிவு மற்றும் தன்னம்பிக்கை. இந்த மூணும் இருந்தா, நிச்சயமா, வாழ்க்கையில சாதிச்சுடலாம். புற அழகை விட, அக அழகு தான் முக்கியம். அந்த அக அழகு, இந்த மூணும் இருந்தால் தான் வரும்.

''என்னை பாரு... 'இந்த நொண்டிக்கு, படிப்பு ஒரு கேடா'ன்னு கேக்காத ஆளே இல்ல. சின்ன வயசுல இருந்து, எவ்ளோ அவமானங்கள், 'நெகடிவ்' பேச்சு... ஆனா, எதையும் பொருட்படுத்தாம, தன்னம்பிக்கையோட படிச்சேன். இன்னைக்கு நான் கல்லுாரியில் பேராசிரியர். படிப்புக்காக எத வேணா தியாகம் செய்யலாம்; ஆனா, எதுக்காகவும் படிப்பை பாதியில நிறுத்தக் கூடாது.

''அவமானங்கள தாங்கப் பழகு; அத உன்னோட, 'பாசிட்டிவ்' எனர்ஜியா மாத்து. விவேகானந்தர் புத்தகங்களை படிச்சு, தன்னம்பிக்கைய வளர்த்துக்கோ. புதுசா சிந்தி; சுறுசுறுப்பா இயங்கு; நிச்சயம் ஜெயிப்பே. ஜானவியும் உன்னை மாதிரி தான், என்னை சந்திக்கிற வரைக்கும், சோர்ந்து இருந்தவ தான். இன்று எப்படி இருக்கான்னு பாரு...'' என்றாள், சாந்தி.

தன் உள்ளங்கைக்குள் வைத்திருந்த காயத்திரியின் கைகளில், இப்போது, ஒருவித சூடு பரவுவதை உணர்ந்தாள், சாந்தி.

அதுவரை அமைதியாக இருந்த காயத்திரி, ''நான் எவ்ளோ பெரிய முட்டாள்தனம் செய்யப் பாத்தேன்னு புரியுதுக்கா... என்னை, நீங்க ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க. நான், நிச்சயம் வாழ்க்கையில சாதிப்பேன்; அந்த சாதனையை, நான் சமைச்சு, ருசி பாக்கணுமுன்னா, அதுக்கு, படிப்புங்கிற பாத்திரம் வேணும்; தன்னம்பிக்கைங்கிற நெருப்பு வேணும்; உழைப்புங்கிற அடுப்பு வேணும். நான் படிக்குறேன்,'' என்று சொல்லியபடியே, சடாரென எழுந்து நின்றாள்.

ஒரு குன்றென அவள் நிமிர்ந்து நின்றதை, மகிழ்ச்சியுடன் பார்த்தனர், சாந்தியும், ஜானவியும்!

புதுவை பிரபா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us