PUBLISHED ON : டிச 10, 2023

கதவைச் சாத்தி, அறையில் படித்துக் கொண்டிருந்தான், பிளஸ் 2 படிக்கும், வருண்.
மணி, 12:00ஐ நெருங்க, கதவைத் திறந்து, டீயுடன் வந்தாள், சாந்தி.
''ஏன்மா சிரமப்படறே... இன்னும் ஒரு மணி நேரத்தில் படுத்துடுவேன். எதுக்கு, டீ போட்டுட்டு வந்தே?'' என்றான்.
''இருக்கட்டும்பா... கண் முழிச்சு படிக்கிற. டீ குடிச்சா, துாக்கம் வராது,'' என சொல்லி, டீயை அவனிடம் கொடுத்து, கதவை மூடிச் சென்றாள்.
சிறிது நேரத்தில் பாட்டி இருமும் சத்தம் கேட்டது. இரண்டு நாட்களாக இப்படி தான் தொடர்ந்து இருமுகிறாள்.
கதவைத் திறந்து வெளியே வந்து, ''என்ன பாட்டி, தொடர்ந்து இருமற... மருந்து எடுத்துத் தரட்டுமா?'' என்றான், வருண்.
''இப்ப தான் குடிச்சேன். மருந்தும் தீர்ந்து போச்சு. அந்த ஜக்கில் இருக்கிற தண்ணீரை கொஞ்சம் ஊற்றித் தர்றியா... நாக்கு வறண்டு போச்சுப்பா,'' என்றாள், பாட்டி.
வயது, 70ஐ நெருங்கும் பாட்டி. ரொம்பவே தளர்ந்து விட்டாள். அடிக்கடி உடம்புக்கு வருகிறது.
தண்ணீரை டம்ளரில் ஊற்றி தந்தான், வருண்.
தண்ணீரை குடித்த பின், ''நீ, இன்னும் துாங்கலையா... காலையில் அப்பாகிட்ட சொல்லி, இருமல் மருந்து வாங்கிட்டு வரச்சொல்லணும். நான் இருமி இருமி, எல்லாரையும் துாங்க விடாமல் செய்யறேன். என்ன செய்யிறது?'' என்றாள்.
''பரவாயில்லை பாட்டி, நீ படுத்துக்க. எனக்கு இன்னும் பரீட்சைக்கு படிக்க வேண்டியிருக்கு,'' என, பாட்டியை படுக்க வைத்து, போர்வையைப் போர்த்தினான்.
காலையில் அப்பா செய்தி தாள் படித்துக் கொண்டிருக்க, அம்மா காபியுடன் வர, அங்கு வந்தான், வருண்.
''என்ன வருண், பரீட்சை வரப் போகுது. 'பிரிபேர்' ஆகிட்டியா?'' என்றார், அப்பா.
''படிச்சுட்டே இருக்கேன். இன்னும், 'டயம்' இருக்கே... ராத்திரி பூரா, பாட்டி ரொம்பவும் இருமிட்டு இருந்தாங்கப்பா,'' என்றான், வருண்.
''ஆமாம், நானும் கவனிச்சேன்,'' என்றார், அப்பா.
''இப்படி இருமினா, எங்கே நிம்மதியா படிக்க முடியும்?'' என, அலுத்துக் கொண்டாள், சாந்தி.
''சரி... இன்னைக்கு ஆபீசிலிருந்து சீக்கிரம் வந்து, அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன். தொடர்ந்து ரொம்ப இருமலா இருக்கு. போய் எல்லா, 'டெஸ்டும்' எடுத்து பார்ப்போம்,'' என்றார், அப்பா.
''நான் போய் குளிச்சுட்டு வரேன்,'' என்றான், வருண்.
''எதுக்கு இப்ப தேவையில்லாமல் செலவு. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய், 'டெஸ்ட்' பண்ணி என்ன ஆகப்போகுது... இருமல் போனா, இன்னொன்னு... தினம் ஏதாவது சொல்லிட்டுத்தான் இருக்காங்க.
''மருந்து, மாத்திரை வாங்கவே ஒரு தொகை செலவாகுது. இதில் டாக்டர் 'பீஸ், டெஸ்ட்'ன்னு ஆயிரக்கணக்கில் செலவாகும்,'' என்றாள், சாந்தி.
''என்ன பண்ண சொல்ற, பார்த்து தானே ஆகணும்,'' என்றார்.
''ஒண்ணும் வேண்டாம். இருமல் மருந்து தீர்ந்து போச்சு. கடையில் கேட்டு இருமல் மருந்து வாங்கிட்டு வாங்க போதும். 'கசாயம்' போட்டுத் தரேன். இரண்டு நாளில் சரியாயிடும்,'' என்றாள்.
''இல்லம்மா, எனக்கும் அவங்களைப் பார்க்க பாவமாக இருக்கு. சரியா சாப்பிடறதில்ல, எழுந்து நடக்கக் கூட தெம்பில்லாமல் சிரமப்படறாங்க... போய் டாக்டர்கிட்ட காண்பிச்சிட்டு வந்தால் நல்லதுன்னு தோணுது,'' என்றார்.
''உங்களுக்கு நான் சொல்றது விளங்குதா இல்லையா... இப்ப, உங்கம்மாவுக்கு ஆயிரக்கணக்கில் செலவு பண்ணி தான் ஆகணுமா... இல்லை, செலவு பண்ணியவுடன் எழுந்து ஓடப் போறாங்களா...
''பொழுதுக்கும் படுக்கையில் இருக்கிறவங்களுக்கு, இந்த வைத்தியம் தேவையா... நான் சொல்ற மாதிரி செய்யுங்க போதும்.
''சாயந்தரம் வேலை முடிஞ்சு வரும்போது, இருமல் மருந்து வாங்கிட்டு வாங்க. சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்காதீங்க... புரியுதா,'' கோபமாக கத்தினாள், சாந்தி.
பள்ளிக்கு கிளம்ப தயாரானான், வருண்.
''மதியத்துக்கு எலுமிச்சம்பழ சாதம், உருளைக்கிழங்கு வறுவல் செய்து, டிபன் பாக்சில் வச்சிருக்கேன். மிச்சம் வைக்காமல் சாப்பிடு. படிக்கிற பிள்ளை உடம்பைப் பார்த்துக்கணும்,'' என்றாள், சாந்தி.
''எதுக்கும்மா வேலையை இழுத்து விட்டுக்கிற... தயிர் சாதம் மட்டும் போதாதா?'' என்றான், வருண்.
''உனக்கு செய்யறதில் எனக்கென்ன சிரமம். நீ நல்லா சாப்பிட்டு வந்தால் அதுவே சந்தோஷம்,'' என்றாள்.
பாட்டி படுத்திருக்கும் அறைக்கு வந்தான், வருண். படுக்கையில் கண் மூடி படுத்திருந்தாள், பாட்டி.
''பாட்டி, துாங்கறியா... நான் ஸ்கூலுக்கு போயிட்டு வரேன்.''
மெல்ல கண் திறந்து, எதிரில் நிற்கும் பேரனைப் பார்த்து, ''போயிட்டு வாப்பா... பார்த்து ஜாக்கிரதையா போ,'' என்றாள், பாட்டி.
''சரி பாட்டி... இருமல், இப்ப பரவாயில்லையா?'' என்றான், வருண்.
''எங்கேப்பா... விடியற்காலையில் கொஞ்ச நேரம் அசந்து துாங்கினேன். என்னமோ, இந்த கடவுள் இன்னும் என்னை பூமியில் வச்சு, எல்லாரையும் சிரமப்படுத்தறான்,'' என்றாள், பாட்டி.
''சரி பாட்டி... அம்மா, கசாயம் போட்டு தர்றேன்னு சொன்னாங்க. குடிச்சுட்டு துாங்குங்க. சாயந்தரம் வந்து பார்க்கிறேன்,'' என்றான், வருண்.
சைக்கிள் கேரியரில், 'பேக்' மற்றும் 'லஞ்ச் பாக்ஸ்'வை வைத்து, ''சரிம்மா... நான் கிளம்பறேன்,'' என்றான்.
''சரி வருண், பார்த்து போ. ஒழுங்கா சாப்பிடு. சாயந்தரம் உனக்கு பிடிச்ச டிபன் ஏதாவது செய்து வைக்கிறேன்,'' என்றாள், சாந்தி.
சைக்கிளில் ஏறும் முன், அம்மாவைப் பார்த்து, ''அம்மா... நான் அப்பா மாதிரி இருக்க மாட்டேன். நீ எனக்காக எவ்வளவு செய்யுற... என் மேல் எவ்வளவு பிரியம், பாசம் வச்சுருக்கே...
''நாளைக்கு எனக்கு கல்யாணமாகி, வயசாகும் போது, உனக்கு உடம்புக்கு முடியாமல் வந்தால், என் மனைவி, 'மருத்துவமனைக்கு கூட்டிட்டு போக வேண்டாம். மருந்து மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும்... வீண் செலவு செய்ய வேண்டாம்'ன்னு சொன்னால்...
''அப்பா மாதிரி அதை கேட்டுக்கிட்டு வாயை மூடிட்டு போக மாட்டேன். 'உன் வேலையைப் பாரு... என் அம்மாவை எப்படி கவனிக்கிறதுன்னு எனக்கு தெரியும். பெண்டாட்டிங்கிறதுக்காக நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்ட மாட்டேன்'னு சொல்லிடுவேன்.
''உன்னை மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போய், காண்பிச்சு, உன்னை நல்லா பார்த்துப்பேன். சரிம்மா, நான் கிளம்பறேன்,'' என்றான், வருண்.
சைக்கிளில் ஏறும்போது அவன் பேசியது, மனதில் முள்ளெனத் தைக்க, அந்த இடத்தை விட்டு அசையாமல் அப்படியே நின்றாள், சாந்தி.
பரிமளா ராஜேந்திரன்