
''என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ தெரியாது. இன்னும் ஒரே மாசத்துல, வரதட்சணையா, 20 சவரன் நகை வந்தாகணும். அப்பத்தான் அடுத்த மாசம், உங்க பொண்ணுக்கு வளைகாப்பு நடக்கும். அதுக்கப்புறம் நீங்களும், அவளக் கூட்டிட்டுப் போய் பிரசவம் பார்க்க முடியும்.
''இல்லன்னா, உங்க பொண்ண அனுப்பவும் மாட்டோம்; நீங்க, இங்க வர, போகவும் முடியாது; உங்க பொண்ணுகிட்ட போன்ல கூட பேச முடியாது; ஞாபகம் வெச்சுக்கங்க,'' என்று, கறாராக சொன்னாள், மரகதம்.
ஊரிலிருந்து வந்திருந்த, சவும்யாவின் அப்பா, அம்மா, தம்பி மட்டுமின்றி, அதைக் கேட்டு, மிகவும் அதிர்ந்து போனாள், சவும்யா.
சவும்யாவுக்கு இது ஆறாவது மாதம். அதோடு வேலைக்குச் சென்று வர மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.
காலையும், மாலையும் மொத்தம், 50 கி.மீ., பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
காலை, 7:30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால், 10:00 -மணிக்கு தான் அலுவலகம் போய் சேர முடியும். மாலையில், வேலை முடிந்து வரும்போது, முண்டியடித்து, பயண களைப்பில் வீடு வந்து சேரும்போது கை, கால், இடுப்பு யாவும் தனித் தனியே கழண்டது போல் இருக்கும்.
மாமியார் சமைத்து வைத்திருப்பதை சாப்பிட்டு, அடித்துப் போட்ட மாதிரி துாங்குவாள்.
அதிகாலை, 5:30க்கு எழுந்து, சமையலில், மாமியாருக்கு உதவி, குளித்து தயாராகி, மீண்டும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொள்ள வேண்டும்.
அதுவும் ஒரு ஆண்டு முன்பு வரை, கோவை - பொள்ளாச்சி சாலையை, மேம்பாலங்களோடு நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்ததால், பேருந்துகள் மாற்று வழித் தடங்களில் சுற்றி செல்ல வேண்டியிருந்தது. அப்போது, இன்னும் தாமதமாகும்.
தினசரி பயணிகளுக்கு உடல் வலி ஏற்படும். சவும்யாவுக்கு அந்த சமயத்தில் முதுகு தண்டுவட வலி, தசைப் பிடிப்பு ஆகியவை ஏற்பட்டன.
அப்போதே, மாமியார் மரகதமும், கணவன் அறிவரசுவும், அவளது கஷ்டங்களைப் பார்த்து, 'இனி, வேலைக்குப் போக வேண்டாம்...' என்றனர்.
'கஷ்டத்த பாத்தா முடியுமா, சிரமம் எல்லாத்துலயும் இருக்கறது தான். வீட்டுலயே இருக்கறவங் களுக்கும் ஒடம்பு வலி, மூட்டு வலி வர்றதில்லையா...' என்று சொல்லி, அவள் தொடர்ந்தாள்.
அறிவரசு, மாதம், 30 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தான். அதில், 20 ஆயிரத்தை வீட்டு செலவுக்கும், மீதியை அவனது செலவு மற்றும் சேமிப்புக்கு வைத்துக் கொள்வான்.
மரக் கடை ஊழியரான அவனது தந்தைக்கு, 10 ஆயிரம் ரூபாய் சம்பளம். குடும்பத்தை நிர்வகிக்க, இருவரும் தரும் தொகையே தாராளமாக போதும். அதை வைத்துத்தான், குடும்பத்தை நடத்தியு, சீட்டு சேர்ந்தும், சேமிப்பும் செய்திருந்தாள், மரகதம்.
சவும்யாவுக்கு, 20 ஆயிரம் சம்பளம். அதை, அவள் தருவதுமில்லை; மாமியார், மாமனார், அது பற்றிக் கேட்பதுமில்லை.
மிகவும் கருத்தான பெண், சவும்யா. ஆடம்பரம் மட்டுமல்ல; அதிகப்படி செலவு கூட, அவளது அகராதியிலேயே கிடையாது; சிக்கனக்காரி.
சவும்யாவின் சம்பளத்தை வைத்து, அவள் வேறெந்த செலவும் செய்வதாகத் தெரியவில்லை. அவளுக்கே கூட நகை, பட்டுப் புடவை, உயர் விலையில் சுடிதார் என, எதுவும் வாங்குவதில்லை; அப்படியே சேமித்து விடுகிறாள் போலும்.
அதுவும் நல்லதுதானே... குழந்தைகள் பிறந்து விட்டால் செலவு அதிகமாகும். மற்ற செலவுகள் ஒருபுறம் இருக்க, கல்வி செலவே ஆளை விழுங்கி விடுமே!
'பால்வாடிக் குழந்தைகள, ப்ரீ கே.ஜி.ல., சேக்கறதுக்கே, 25 ஆயிரம், 50 ஆயிரம், 'டொனேஷன்' குடுக்க வேண்டியிருக்குது. பிரபலமான கான்வென்ட்டுகள்ல, 1 லட்சம், 2 லட்சம் புடுங்கறாங்களாமே... ஸ்கூல் முடிக்கறக்குள்ள கண்ணுமுழி பிதுங்கிடும்...
'தனியார் காலேஜுகள்ல, இப்பவே, 5 லட்சத்திலிருந்து, 'டொனேஷன்' கொள்ளை. இனி பொறக்கப்போற குழந்தைக, 17 - 18 வருஷம் கழிச்சு, காலேஜ் போகும்போது, நெலைமை எப்படி இருக்குமோ... குடும்பமே, கிட்னிய வித்தாலும் பத்தாது...' என்று சொல்வார், மாமனார்.
பிறக்கப் போகும் குழந்தை, பெண்ணாக இருந்தால், அதன் திருமணத்துக்கும் சேர்த்து வைக்க வேண்டும். அதையெல்லாம் தொலைநோக்காக சிந்தித்தே, சவும்யாவும், அறிவரசுவும் அவர்களது சம்பளத்தை வங்கியில் போட்டுக் கொண்டிருப்பர் போலிருக்கிறது.
அறிவரசுக்கு பெண் பார்க்கும்போதே, 'வரதட்சணை வாங்க கூடாது. படிச்ச பொண்ணா, குணமுள்ளவளா, நல்ல குடும்பமா இருக்கணும்... நம்மள விட வசதி கம்மியான, கஷ்டப்படற குடும்பத்துலயே பாருங்க... அப்படி செஞ்சா அந்தக் குடும்பத்துக்கு உதவி செஞ்சதாவும் இருக்கும்...' என்று சொல்லி விட்டான்.
அப்படித்தான், இந்த வீட்டு மருமகளானாள், சவும்யா.
சவுமியாவின் வீடு, கோவை, சரவணம்பட்டியில் இருந்தது. இவள் தான் மூத்தவள். ஒரு தம்பி, ஒரு தங்கை. பெற்றோர் இருவரும், கூலி வேலைக்கு செல்கின்றனர். கஷ்டப்பட்டாலும், கல்விக் கடன் வாங்கி, மூன்று குழந்தைகளையும் படிக்க வைத்து விட்டனர்.
சாதாரணமாக இருந்தபோதே, அவ்வளவு துாரம் பயணித்து வேலைக்குச் சென்று வருவது கஷ்டம். இப்போது, ஆறு மாத கர்ப்பிணி. அதோடு வேலைக்குச் சென்று வர மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள். வாடி வதங்கிய முகத்தோடு, இரவில் வீடு திரும்பும் அவளைக் காண, மரகதத்துக்கு, மிகுந்த வருத்தமாக இருந்தது.
'ஏதோ இங்க லோக்கல்லயே எங்கியாச்சும் வேலைக்குப் போயிட்டு வர்றதுன்னாலும் தேவல... தினமும், 100 கி.மீ., போயிட்டு வர்றதுன்னா சும்மாவா... மூஞ்சி எப்படிக் கருவளிஞ்சு போச்சு பாரு... மாசமா இருக்கறதோ, மொத குழந்தை உண்டாயிருக்கற பூரிப்போ மொகத்துல துளியாவது தெரியுதா...
'இந்த அளவுக்கு கஷ்டப்பட்டு சம்பாரிக்கோணும்ன்னு என்ன அவசியம்... ரெண்டு ஆம்பளைக சம்பாரிக்கிறது, நம் குடும்பத்துக்கு பத்தாதா... நாளைக்கு உன் புள்ளை குட்டிகளுக்கு வேண்டி, இப்ப இருந்தே பணம் சேக்கறதுன்னாலும், புள்ளைத்தாச்சியா இருக்கீல்ல...
'குழந்தை பொறந்து பச்சை ஒடம்பா இருக்கையிலும் கூட, படாத பாடு பட்டு சம்பாரிக்கோணும்கிறது இல்ல... பேசாம, 'மெடிக்கல் லீவு' போட்டுட்டு வீட்டுல இரு... குழந்தை பொறந்து அஞ்சாறு மாசத்துக்கு பிறகு வேலைக்குப் போயேன்...' என்றாள், மரகதம்.
'நீங்க சொல்றது, சரிதானுங்கத்தே... ஆனா, நான், 'லீவு' எடுக்க முடியாது. தம்பியோட காலேஜ் படிப்பு, தங்கச்சியோட ஸ்கூல் படிப்பு- எல்லாத்துக்கும், 'எஜுகேஷன் லோன்' வாங்கி இருக்கறோம்; அதோட வீட்டு லோன் வேற... இதுக்கெல்லாம், மாசம், 15 ஆயிரம் ரூபா கட்டணும். அதை நான் தான் கட்டிட்டு இருக்கேன். நான் வேலைக்குப் போகலைன்னா, 'லோன்' கட்ட முடியாம போயிடும்...' என்றாள்.
'ஏன், உங்க அப்பா, 'லோன்' கட்ட மாட்டாரா...' என்றாள், மரகதம்.
'அவரு சம்பாரிக்கிற பணம் வீட்டு செலவுக்கே சரியா இருக்கும்...' என்றவள், சற்று தயக்கத்தோடு, 'அப்பா, தினமும் குடிப்பாரு. அதோட, அவருக்கு வாரத்துல மூணு நாளாவது, 'நான்வெஜ்' வேணும். வீட்ல எல்லாருக்கும் எடுத்தா, செலவு அதிகம் ஆகும்ன்னு, ஓட்டல்ல அவரு மட்டும் சாப்பிட்டுட்டு வருவாரு... இதுக்கே அவரோட சம்பளத்துல பாதி செலவாயிடும்...' என்றாள்.
'ஏன், உன் தம்பி ஏதாவது வேலைக்கு போகலாமே, அவன் ஏன் போறதில்ல?'
'அவனோட படிப்புக்கு தகுந்த வேலை இன்னும் கிடைக்கல. அதனால தான் போகாம இருக்கிறான்...'
'படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கலைன்னா என்ன; அதுவரைக்கும், வேற ஏதாவது வேலைக்கு போகலாமே... குடும்ப நெலைமை அவனுக்கு தெரியாதா... நல்ல தகப்பன், நல்ல தம்பி...
'உங்கப்பா குடிகாரர்ன்னு, எங்களுக்கு மொதல்லயே தெரியும். அதனாலயே, இந்த சம்மந்தம் வேண்டாம்ன்னு நானும், உங்க மாமாவும் யோசிச்சோம்.
'அறிவு தான், 'இந்த காலத்துல காலேஜ் புள்ளைகளே குடிக்குதுக... ஆம்பளைக, கடின உடல் உழைப்பாளிக, குடிக்கிறது, அந்த காலத்துலருந்தே சகஜம்தானே... குடிச்சாலும், எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டாரு; வீட்லயும் அமைதியா இருப்பாருங்கும்போது, நமக்கென்ன பிரச்னை... மத்தபடி அது மரியாதையான குடும்பம்; ரொம்ப நல்ல பொண்ணு'ன்னு சொன்னான். இப்பத்தான தெரியுது, உங்க அப்பாவோட லட்சணம்...
'நீ, உங்க வீட்டுல இருந்த வரைக்கும், உன் சம்பாத்தியத்த, அவங்களுக்கு குடுத்தது சரி... உங்க வீட்டுல அப்பாவோ, தம்பியோ இல்லன்னாலும் கூட, நீ அந்தக் கடனைக் கட்டறதுல ஆட்சேபனை இல்ல... ஆனா, குத்துக்கல்லாட்டம் அவங்க ரெண்டு பேர் இருக்கும்போது, நீ எதுக்கு கடன் கட்டணும்... அதுவும், இவ்வளவு கஷ்டப்பட்டு... முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே...'
'என்னால முடியல; கஷ்டமா இருக்குது. மாமியாரும், வீட்டுக்காரரும், என்னை வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்றாங்கன்னு, எங்க வீட்டில் ஏற்கனவே சொல்லி இருக்கேன். 'நீ வேலைக்கு போகலீன்னா இந்த கடனை எப்படி கட்டறது... கடன் முடியிற வரைக்கும் நீ வேலைக்குப் போய்த்தான் ஆகணும்'ன்னு சொல்லிட்டாங்க, அத்தே...'
'அப்படியா சமாசாரம், இதுக்கு ஒரு முடிவு எடுத்தாகணும்... உடனே, உங்க வீட்டுக்கு போன் போடு, நாளைக்கே உங்க அப்பா, அம்மா, தம்பி மூணு பேரும் இங்க வந்தாகணும்; ரொம்ப அவசரம், நான் சொன்னேன்னு சொல்லு... என்ன, ஏதுன்னு கேட்டா, தெரியலன்னு சொல்லிடு... நாளைக்கு நீயும், 'லீவு' போட்டுடு...' என்றாள், மரகதம்.
சவுமியாவின் அழைப்பால், பதறியடித்து, வந்திறங்கினர்.
மரகதத்தின் பேச்சு, அவர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
''என்னங்க சம்பந்தியம்மா, திடீர்னு இப்படி குண்டை துாக்கிப் போடுறீங்களே... வரதட்சணை வேண்டாம்ன்னு சொல்லித்தானே திருமணம் பண்ணுனீங்க... இவ்வளவு ஆனதுக்கப்புறம், இப்ப போய் வரதட்சணை கேட்கறீங்களே... அதுவும், 20 சவரனுக்கு நாங்க எங்க போவோம்?'' என்று கலக்கத்தோடு கேட்டார், சவும்யாவின் அப்பா.
''ஆமா... உங்க பொண்ணு படிச்சிருக்கறா, வேலைக்குப் போயி, மாசம், 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கறா. அது எங்களுக்கு வருமே...
''அதனால, வரதட்சணை வேண்டாம்ன்னு சொன்னோம்... இப்ப என்னடான்னா, திருமணத்திலிருந்து அவளோட சம்பளம் முழுக்க உங்க வீட்டுக்குத்தான் அனுப்பிட்டு இருக்கறாளாமே...
''இது, எனக்கு தெரியாது; பையனும் என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டான். ஆனா, இனிமே இது நடக்காது. நீங்க, 20 சவரன் நகை குடுத்தாகணும். அப்படி இல்லையா, திருமணத்துக்கப்புறம் இதுவரைக்கும் அவகிட்டருந்து நீங்க, மாசம், 15 ஆயிரம் வீதம், ஒன்னரை வருஷமா வாங்குன தொகை, 2.௭௦ லட்ச ரூபாயையும், ஒரு மாசத்துல திருப்பிக் குடுத்துட்டு, குழந்தை பொறக்கறதுக்குள்ள, 10 சவரன் நகைய குடுத்துடுங்க.''
சவும்யாவின் தம்பி ஏதோ சொல்வதற்குள், மரகதம் அவனை தடுத்து, ''நீ எதுவும் பேசாத... உங்க அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னு நெனைச்சின்னா, உடனே ஏதாவது ஒரு வேலைக்குப் போ... உங்க அப்பாவையும், வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கச் சொல்லு...
''ரெண்டு பேரும் சேர்ந்து, ஆக வேண்டிய காரியத்தை பாருங்க... சொன்னபடியே, பணமும், நகையும், என் கைக்கு வர்ற வரைக்கும், உங்க மககிட்ட போன்ல கூட பேச்சு வெச்சுக்கக் கூடாது.
''சொன்னபடி நடக்கலைன்னா, அதோட விளைவு உங்க மகளுக்கு தான். கவனமா இருந்துக்குங்க. இப்ப, நீங்க எல்லாரும் கிளம்பலாம்,'' என்றாள்.
செய்வதறியாது திகைத்து, அவர்கள் விடைபெற்றனர்.
சவும்யாவிடம், ''இனி, நீ, உங்க வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டியதில்லை. குழந்தை பிறந்து, ஆறு மாசம் வரைக்கும் வேலைக்கும் போக வேண்டாம். அதுக்கப்புறம் கூட வேலைக்குப் போறதா இருந்தாலும், இங்கயே பக்கத்துல ஏதாவது வேலை கிடைச்சு, போனா போதும். சம்பளம் கம்மியா இருந்தாலும் பரவால்ல,'' என்றாள், மரகதம்.
தன் பிறந்த வீட்டினர், புகுந்த வீட்டினர் போலவும், புகுந்த வீட்டினர், பிறந்த வீட்டினர் போலவும் நடந்து கொள்வது, சவும்யாவுக்கு, இப்போது ஆழமாக உறைத்தது.
''அது சரிங்க, அத்தே... ஆனா, நீங்க கேட்ட பணத்தையும், நகையையும் எங்க அப்பா, தம்பியால குடுக்க முடியாது... அதுவும், இந்த ரெண்டு மூணு மாசத்துக்குள்ளன்னா கண்டிப்பா முடியவே முடியாது,'' என்று, வருத்தத்தோடு சொன்னாள்.
''அட, நீ வேற... நகையும், பணமும் யாருக்கு வேணும்... வாங்குன கடனை, உன் தலைல கட்டி, திருமணத்துக்கப்பறமும் உன்னை கஷ்டப்படுத்திட்டு இருக்கிறாங்களே உங்க வீட்டுக்காரங்க...
''அதனால, அவங்கள கூப்பிட்டு மிரட்டுறதுக்காக, நான் போட்ட மாமியார் அவதாரம் தான் அது.
''அப்படியே அவங்க கொஞ்ச நஞ்ச பணம், நகை ஏற்பாடு பண்ணி குடுத்தாலும், அதை உன்னோட தங்கச்சி திருமணத்துக்கு வெச்சுக்கலாம்,'' என்றாள், மரகதம்.
மரகதத்தை சேர்த்து அணைத்துக்கொண்ட சவும்யா, ''ஐ லவ் யூ மாமியார்...'' என்றாள், மகிழ்ச்சிப் பெருக்கோடு.
அமிர்தவர்ஷிணி