/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சீனாவை சுற்றிப் பார்க்க போனேன்.... (1)
/
சீனாவை சுற்றிப் பார்க்க போனேன்.... (1)
PUBLISHED ON : ஜன 06, 2019

முதல்லயே சொல்லிடறேன், நான் எழுத்தாளர் இல்லை. சாதாரண குடும்ப தலைவி.திருச்சி, சந்து கடையில் பிறந்தவள். வீட்டிலிருந்து பள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் முடிஞ்சா வீடு. யாராவது துணைக்கு வந்தா, உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கும், துணையில்லாமல், மைக்கேல் ஐஸ்கிரீம் கடைக்கும் போயிருக்கேன்.அப்புறம், கல்யாணம், குழந்தை, குடும்பம், கோவில், குருநாதர் என்று ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், திடீர் திருப்பமாக, சீனா நாட்டை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு.இத்தனைக்கும், சீனா மீது எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. திபெத், அருணாசல பிரதேசம் போன்ற, நம் எல்லைப் பகுதியில் தொல்லை கொடுப்பவர்கள், மலிவு விலையில் மட்டமான எலெக்ட்ரானிக் பொருட்களை அனுப்பி, நம் நாட்டை குப்பைக் காடாக்குபவர்கள்... பாம்பு, தேள் வகையறாக்களை சாப்பிடுபவர்கள் என்பதான பிம்பம் தான், அதற்கு காரணம்.ஆனால், நேரில் போன பின் தான் தெரிந்தது, நம் காதால் கேட்பது வேறு. நம் நாட்டின் வளர்ச்சிக்கு குறைவாக, நாம் கருதும் அதே மக்கள் தொகையை அவர்கள், பிளஸ் ஆக மாற்றியுள்ளனர். மனித வளத்தை, மனித சக்தியை அபாரமாக பயன்படுத்தி வளர்கின்றனர்.அங்கு, 50 மாடிக்கு குறைந்த கட்டடங்களே இல்லை. நாடு முழுவதும் நதிகள் வறண்டு விடாமல் ஓடுகிறது. நடுராத்திரியில், சாலையை தண்ணீர் விட்டு கழுவுகின்றனர். எங்கும் வளமையும், பசுமையும் பொங்கி வழிகிறது. வேலை இல்லாதவர்களே கிடையாது, அனைவரும் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றனர். அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். எதிர்க்கட்சி என்பதே இல்லாத ஒரே ஆட்சி. கிட்டத்தட்ட ஒரே மொழி, ஒரே கொள்கை.மக்களை மழுங்கடிக்கும் கிரிக்கெட் பற்றி யாருக்கும் தெரியவில்லை; வெட்டியாய் யாரும், டீக்கடை திண்ணையில் உட்கார்ந்து அரசியல் பேசுவது இல்லை; சினிமாவிற்கு முக்கியத்துவம் கிடையாது; எந்த இடத்திலும் ஒரு, 'போஸ்டர்' பார்க்க முடியாது; ஆங்கிலம் தெரியாது; அதற்காக, வருத்தமோ, வெட்கமோ கிடையாது.'எங்களுக்கு அறிவு இருக்கிறது, அந்த அறிவின் அடிப்படையில், என்ன தேவையோ அதை நிறைவேற்றிக் கொள்கிறோம், உழைக்கிறோம், நன்றாக பிழைக்கிறோம்...' என்கின்றனர்.இங்கு, 1 சதுர அடி கூட, தனிப்பட்ட யாருக்கும் சொந்தம் கிடையாது. எல்லாமே அரசுக்கு சொந்தம். ஆகவே, வீடு, நிலம் என்று, பரம்பரைக்கே சொத்து சேர்க்கும் மண்ணாசையின்றி, சம்பாதிப்பதை சந்தோஷமாக செலவழிக்கின்றனர்.இப்படி... இன்னும் பல நல்ல விஷயங்கள், சீனாவில் உண்டு. அதை, அடுத்த சில வாரங்களில் சொல்ல முயற்சிக்கிறேன்.அது சரி... நீ எப்படி சீனா போனாய் என்று கேட்கிறீர்களா?அந்துமணி அண்ணாவின் உடன் பிறவா சகோதரி என்ற ஒரே தகுதி தான். அதற்கு காரணம், 'வாரமலர்' இதழ் வாசகர்களுக்கான, குற்றால டூரில், அவருடன் கொஞ்சம் ஒத்தாசையாக இருந்து, வாசகர்களுக்கு உதவியாக இருப்பேன். அதற்கு கிடைத்த பெரிய பரிசு தான் இது.அவரின் ஆயிரக்கணக்கான, உடன்பிறவா சகோதரிகளில் ஒருவளான நான், போகிற போக்கில், 'ஆயுசுல ஒரு வெளிநாடாவது பார்க்கணும்ன்னு ஒரு ஆசை இருக்கு...'ன்னு சொல்லியிருந்தேன். அதை, மிக சீரியசாக எடுத்து, இந்த பயண ஏற்பாட்டை செய்து தந்தார்.சென்னை, அண்ணாசாலையில் உள்ள, ஸ்ரீ டிராவல்ஸ் மூலம், சீனா சுற்றுலா பயணம் திட்டமிடப்பட்டது.சென்னையிலிருந்து, 'ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ்' மூலம் கொழும்பு சென்று, விமானம் மாறி, சீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காய் சென்றோம். அங்கிருந்து, எக்சீயன், லுாயிங் மற்றும் செங்காவ் சென்று, கடைசியாக தலைநகர் பீஜிங்கை அடைந்து, சென்னை திரும்புவதாக பயண ஏற்பாடு.தெரியாத்தனமாக, 'நான் சீனா போறேன்...'னு சிலரிடம் சொல்லிட்டேன். ஆகா, சரியான அடிமை கிடைச்சிருக்கான்னு நினைச்சாங்களோ என்னவோ, ஆளாளுக்கு ஆலோசனை என்ற பெயரில், என்னை உட்கார வைத்து, வகுப்பெடுத்தனர்.விமானத்தின் உள்ளே எடுத்து செல்லும் பையில், சிகரெட் லைட்டர், கத்தி எல்லாம் எடுத்து போகக் கூடாது என்பதெல்லாம் அந்த ஆலோசனைகள்.'நடு ராத்திரியில, நான் ஏண்டா சுடுகாட்டுக்கு போறேன்...' என்று, நடிகர் வடிவேலு, 'டயலாக்' சொல்லும் பாணியில், மனதிற்குள், 'எனக்கு எதுக்குடா லைட்டரும், கத்தியும்...' என்று நினைத்துக் கொண்டேன்.'புளியோதரை, லெமன் சாதம், பொடி இட்லி எல்லாத்தையும், விமான நிலைய வாசல்லயே விட்டுட்டு போயிடு... இல்லை, உன் கண் முன்னாடியே குப்பையில துாக்கிப் போட்டுருவாங்க... அப்புறம், பழங்களை பார்த்தாலே, சீனாகாரனுக்கு ஆகாது, பார்த்துக்க...' என்றான், பெரிய பிள்ளை.'சைதாப்பேட்டை, இடும்பாடி அம்மன் கோவில் பிரசாதமான, ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டுமாவது எடுத்து போக, அனுமதி வாங்கிக் கொடுடா...' என்றேன். தலையில் அடித்துக் கொண்டான்.'அங்கே... பாம்பு, தேள் எல்லாம் சாப்பிடுவாங்க... நீங்க தான் முட்டை போட்டுருக்கும்ன்னு சொல்லி, 'கேக்' கூட சாப்பிடாத சுத்த சைவமாச்சே; எப்படி சமாளிப்பீங்க...' என்று, சின்னவன் வேறு, பீதியை கிளப்பினான்.வீட்டுக்காரரும், நேரங்கெட்ட நேரத்தில், ஆபீசிலிருந்து வந்து, அவர் பங்கிற்கு, ஒரு சின்ன கேமராவை கொடுத்து, 'இது தான் கேமரா... இப்படி அமுக்கினா, போட்டோ வரும்; அப்படி அமுக்குனா வீடியோ வரும்...' என்று சொல்லிக் கொடுத்தார். எனக்கு, கொட்டாவி தான் வந்தது.இதெல்லாம் சொல்லிக் கொடுத்தவர்கள், 'இமிகிரேஷனில்' எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லித் தரவில்லை. என் டிக்கெட், பாஸ்போர்ட் எல்லாவற்றையும் வாங்கி வைத்து, 'எங்கேம்மா போறீங்க...' என்றார், ஆபீசர்.என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.
* ஷாங்காய் நகரம், 4,000 ஆண்டுகளுக்கு மேலானது. பழமையை போற்றும் அதே நேரம், உலகில் உள்ள அனைத்து புதுமைகளையும் வரவேற்பவர்கள்.* உலகிலேயே, மணிக்கு, 416 கி.மீ., வேகமாக செல்லும், அதிவேகமான காந்த ரயில், இங்கு தான் உண்டு. இதே போல, மணிக்கு, 325 கி.மீ., துாரம் பறக்கும், 'புல்லட்' ரயிலையும், நாட்டின் பல பகுதிகளில் விட்டுள்ளனர். இதன் காரணமாக, யாரும் வேலை காரணமாக, தங்கள் சொந்த இடத்தை விட்டு இடம் பெயர்வதில்லை. * இந்த ரயில் இங்கே இருந்தால், மதுரையிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு வந்து, வேலை பார்த்து, பின், மாலையில், மதுரையில் உள்ள வீட்டிற்கு போய் விடலாம். இப்படி இருந்தால், எதற்காக, கொள்ளை வாடகை கொடுத்து சென்னையில் இருக்கப் போகிறோம்.* தலைநகரம்: பீஜிங். வர்த்தக நகரம்: ஷாங்காய். பேசுவது, சீன மொழி. உலகில் அதிகம் பேசப்படும் மொழி, ஆங்கிலம் இல்லை... சீன மொழியே.* அதிபர்: ஜீ ஜின் பிங். மக்கள் தொகை, 2015 கணக்கெடுப்பின்படி, 137 கோடி; நம் நாட்டின் மக்கள் தொகை, 100 கோடி! பிறப்பு - இறப்பு விகிதத்தை பூஜ்யத்திற்கு கொண்டு வந்து விட்டதால், எல்லாருக்கும் வேலை கிடைக்கிறது.* நாணயம்: யுவான்; நேரம், நம்மை விட, இரண்டரை மணி நேரம் முன்னால் இருக்கிறது. நமக்கு, காலை, 9:00 மணி என்றால், அவர்களுக்கு, பகல், 11:30 மணி. பகல் பொழுது நீளமானது. காலை, 5:00 மணிக்கு விடிந்து விடும்; இரவு, 7:30 மணி ஆனாலும் வெளிச்சம் இருக்கும்.
— தொடரும்.
எம்.கலைச்செல்வி

