
நெய்யில் பொன்னிறமாக வெந்த குளோப்ஜாமூன் உருண்டைகளை ஜீராவில் போட்டாள், லட்சுமி.
கையில் பையுடன், கடைக்குப் போகத் தயாராக வந்த வாசுதேவன், ''பால் இரண்டு லிட்டர், அப்புறம் வேறென்ன வேணும், லட்சுமி,'' என்றார்.
''முந்திரி பக்கோடா, அரைகிலோ வாங்கிக்குங்க; அபிக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் மாமாவுக்கு, கனிந்த பூவன் வாழைப்பழம் வாங்கிட்டு வாங்க.''
''சரி, வாங்கிட்டு வரேன். கிளம்பட்டுமா?''
''சிவா, வர சாயந்திரம், 6:00 மணி ஆகிடும் இல்லையா?''
''ஏன், மகன் - மருமகள், பேரனை இப்பவே பார்க்கணும்ன்னு மனசு துடிக்குதா, லட்சுமி. வந்துடுவாங்க... விமானம், 4:00 மணிக்கு. ஹைதராபாத்திலிருந்து வர்றதே, உன்னைப் பார்க்கத்தான். பெருமையாக இருக்கா, லட்சுமி?''
''அப்புறம், இருக்கத்தானே செய்யும். சிவா, புத்திசாலி; அருமையா படிச்சான். மருத்துவ ஆய்வாளராக இருக்கான். இப்ப அவங்க, 'டீம்' கண்டுபிடிப்புக்கு பாராட்டு விழா நடத்தறாங்களாம். கேள்விப்பட்டதும், எனக்கு எவ்வளவு பெருமையாக இருந்தது தெரியுமா?'' என, கண்கள் மின்ன சொன்னாள்.
''ஆமா, லட்சுமி... 'ஸ்டெம்செல் காக்டெயில்' என்ற, புதிய தொழில் நுட்பத்தின் மூலம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகள் பயனடைவராம். உறுப்பு தானம் செய்பவரின் எலும்பு மஜ்ஜையிலிருந்து, 'ஸ்டெம்செல்' எடுப்பராம்.
''அதிலிருந்து, 'ஸ்டெம்செல் காக்டெயில்' உருவாக்கப்பட்டு, தானம் பெறுபவரின் கல்லீரலில் செலுத்துவராம். அதனால் உருவாகும் உயிரணுக்கள், பொருத்தப்படும் மாற்று உறுப்பை பாதுகாக்குமாம். இதனால், சிறுநீரக நோயாளிகள் பயனடைவர்ன்னு சிவா சொன்னான்.''
''இதெல்லாம் எனக்கெங்கே புரியுது. என்னைப் பொறுத்தவரை, என் மகன், நோயாளிகளின் உயிர் காக்க நல்ல விஷயங்களை கண்டுபிடிக்கிறான். அதுதான் தெரியுது.''
''எப்படியோ, உன் மகன் இதேபோல மருத்துவ உலகில் பல விஷயங்களை கண்டுபிடிப்பான். ஒரே மகனை பெற்றோம். அவனும், அடுத்தவங்க பாராட்டும் நல்ல நிலையில் இருப்பது, நமக்குப் பெருமை தான்.
''அதோட, பெத்தவங்களை தேடி வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போகணும்ன்னு நினைக்கிறானே... அதுக்கே நாம் கொடுத்து வச்சிருக்கோம். சரி, வாசல் கதவை தாழ் போட்டுக்க. நான் கடைக்குப் போயிட்டு வந்துடறேன்.''
கதவைத் தாழிட்டு, உள்ளே வந்து, மாமனார் இருக்கும் அறை கதவை மெல்ல திறந்தாள், லட்சுமி.
வழக்கம்போல ஜன்னல் அருகில், சேரில் உட்கார்ந்திருந்தார். பஞ்சு போன்ற துாய்மையான பொன்னிற தாடி, கழுத்து வரை தொங்கிற்று. குழி விழுந்த கன்னங்கள். கண்கள் சிறுத்து இமை முடிகள் கூட நரைத்திருந்தது. வயோதிகம் அவர் உடலை தளர்வடையச் செய்தது.
வயது, 90ஐ நெருங்குகிறது. பேச்சு குறைந்து, இப்போது சுத்தமாக நின்று விட்டது.
வயோதிகம் காரணமாக மூளையின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தது. இரவு, பகல் வித்தியாசமின்றி, நினைத்தபோது துாங்கி எழுந்து, வாழ்க்கையின் கடைசி அத்தியாயங்களை, நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
காலை, 5:00 மணிக்கு எழுந்ததிலிருந்து இதே நிலையில் இருந்ததால், ''மாமா, ரொம்ப நேரமா உட்கார்ந்திருக்கீங்க. கொஞ்ச நேரம் கட்டிலில் படுங்க,'' என, எலும்பும் தோலுமாக தளர்வடைந்து இருக்கும் அவர் கையை மெல்லப் பிடித்து எழுப்பினாள்.
அவருடைய வெறித்த பார்வையில் எந்த மாற்றமுமில்லை. அருகிலிருந்து படுக்கையில் உட்கார வைத்தவள், மெல்ல அவர் தலையை தலையணையில் சாய்த்தாள்.
''படுத்துக்குங்க மாமா...''
வாசுதேவனின் கைபிடித்து முதன்முதலாக அந்த வீட்டிற்குள் நுழைந்த நாள் ஞாபகம் வருகிறது.
'அம்மா லட்சுமி, பேருக்கேத்த மாதிரி மகாலட்சுமியாட்டம் இருக்கே. இது பொம்பளை இல்லாத குடும்பம். உன் புருஷனை பெத்தவ, அவன், நாலு வயசாக இருக்கும்போதே போய் சேர்ந்துட்டா.
'இன்னையிலிருந்து இந்த வீட்டின் பொறுப்பு, உன்னைச் சேர்ந்தது. நீ, மருமகளாக இருந்தாலும், என் கண்ணுக்கு மகளாகத்தான் தெரியற... உன் புருஷனோடு, இந்த அப்பாவை நீதான்மா பார்த்துக்கணும்...'
கனிவோடு அவர் சொன்ன வார்த்தைகளை அவள் மறக்கவில்லை. 35 ஆண்டுகள். அப்பாவும், மகளுமாகத் தான் வாழ்ந்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாகத்தான் அவரின் இயக்கங்கள் நின்று விட்டது. நினைவு தப்பி, தான் யார், எங்கே இருக்கிறோம் என்பது கூட தெரியவில்லை.
''உன்னை மிஸ் பண்றேன், பாட்டி. எப்ப எங்க ஊருக்கு வருவீங்க?'' பாட்டியின் மடியில் உட்கார்ந்து அழகாக மழலையில் பேசினான், அபிஷேக்.
''வரேன்டா கண்ணா.''
ஸ்பூனால் எடுத்து அவன் வாயில் ஊட்டியபடி, ''குளோப்ஜாமூன் எப்படிப்பா இருக்கு?''
''யம்... யம்...''
''அம்மா, அபிஷேக் சொல்றது சரி... எங்களால் அடிக்கடி வரமுடியலை... வேலை சரியா இருக்கு. இப்பகூட பாரு, இரண்டு நாளில் ஓடி வந்திருக்கேன்,'' ஆதங்கத்துடன் சொன்னான், சிவா.
''அதனால் என்னப்பா, நீங்க வந்து முகத்தைக் காட்டறீங்களே. அதுவே எனக்கு போதும்.''
''நீங்க அத்தைய பக்கத்தில் வச்சுக்க ஆசைப்பட்டாலும், உங்க தாத்தா இருக்கும் வரை, அது நடக்காது,'' என்றாள், மருமகள்.
''உன்னை நினைச்சு நானும், அப்பாவும் பூரிச்சுப் போறோம், சிவா. ஆராய்ச்சி பண்ணி, புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்களாம். உன் படிப்பும், அறிவும், புத்திசாலித்தனமும் உன்னை உயர்த்தியிருக்கு, சிவா.
''உன் கண்டுபிடிப்பை பத்தியெல்லாம் அப்பா சொல்வாரு. நான் அதிகம் படிக்காதவள். எனக்கு அதெல்லாம் புரிபடறதில்லை. இருந்தாலும், என் மகன் விஞ்ஞான உலகத்தில் பல புதுமைகளைக் கண்டுபிடிக்கிறான்னு நினைக்கும்போது பெருமையாக இருக்கு,'' நெகிழ்ச்சியுடன் சொன்னாள்.
மூடியிருந்த கதவைத் திறந்தாள், லட்சுமி.
சேரில் சுவற்றை வெறித்தபடி உட்கார்ந்திருப்பவரைப் பார்த்தான், அபிஷேக்.
''பாட்டி, இவர் அப்பாவோட தாத்தாவா?''
''ஆமாம், உனக்கு பெரிய தாத்தா. நீ அவருக்கு வணக்கம் சொல்லு.''
அவர் எதிரில் நின்று, இருகரம் கூப்பி, ''வணக்கம் தாத்தா,'' என்றவன், ''என்ன பாட்டி, இவர் எதுவுமே சொல்லாமல் இருக்காரு. பேச மாட்டாரா?''
''இல்லடா கண்ணா... இவர் மனசு நம்பகிட்ட பேசிட்டுதான் இருக்கு. அபி கண்ணா, நல்லா இருக்கியான்னு கேட்டாரே!''
''அப்படியா, எனக்குக் கேட்கலையே!''
''எனக்கு கேட்டுச்சு அபி. உன்னை சமர்த்தா இருக்கச் சொன்னாரு. உன் அப்பா போல பெரிய படிப்பெல்லாம் படிக்கணும்ன்னு சொன்னாரு.''
''சரி தாத்தா!''
அவரைப் பார்த்து மழலையில் சொல்லும் பேரனை அணைத்தாள், லட்சுமி.
இதைப் பார்த்தபடி கதவருகில் நின்ற சிவா, பரிதாபத்துடன், ''தாத்தாகிட்டே எந்த மாறுதலும் இல்லை. நாலு வருஷமாக இப்படியேதான் இருக்காராம்மா?''
''ஆமாம்பா. கடைசி காலத்தில், கடவுள், தாத்தாவை இப்படி ஆக்கிட்டாரு. 60 வயதில் எவ்வளவு சுறுசுறுப்பா இருப்பார் தெரியுமா?''
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, அதை கவனிக்காமல், எழுந்து, கட்டிலில் படுத்தார்.
''என்னம்மா, இந்த நேரத்தில் படுக்கிறாரு.''
''அவருக்கு நேரம், காலம் தெரியாதுப்பா. துாக்கம் வரும்போது படுத்துப்பாரு. ராத்திரி 2:00 மணிக்கு எழுந்து உட்கார்ந்திருப்பாரு. பசி, துாக்கம் எல்லாமே நேரத்துக்கு நடப்பதில்லை. சரிப்பா வாங்க, உங்களுக்கு சாப்பாடு வைக்கிறேன். தாத்தா துாங்கட்டும்.''
கதவைச் சாத்திவிட்டு வருகிறாள்.
தாத்தாவை நினைக்கும்போது, சிவாவுக்கும் மனது வருத்தமாக இருந்தது. இவர் கதை சொல்ல, கை பிடித்து நடந்த நாட்கள் நிழலாடியது. இதுதான் வாழ்க்கை, எல்லாமே ஒரு முடிவை நோக்கி பயணப்படத்தான் வேண்டியிருக்கிறது.
இரவு அடுப்படியில் பாத்திரம் உருளும் சத்தம் கேட்டு எழுந்தான், சிவா. மொபைல் போனில் மணி பார்த்தான்; அதிகாலை, 3:00 மணி.
'இந்த நேரத்தில் அம்மா என்ன செய்கிறாள்?' என, நினைத்தபடி, துாங்கும் மனைவியையும், அபியையும் தொந்தரவு செய்யாமல், மெல்ல வெளியே வந்தான்.
அடுப்படியில் விளக்கு எரிய, சாதத்தில் பாலை ஊற்றி, குழைவாக ஒரு கிண்ணத்தில் பிசைந்தாள், லட்சுமி.
''என்னம்மா செய்யற?''
''நீ துாங்கலையா, இந்த நேரத்தில் ஏன் எழுந்து வந்தே, சிவா. போய் படுப்பா.''
''இருக்கட்டும்மா, நீ இப்ப என்ன செய்யிற. சாதம் யாருக்கு?''
''உன் தாத்தாவுக்குப்பா. அவர் பசியேடு இருக்காரு. பால் சாதம் பிசையறேன்.''
கிண்ணத்துடன் தாத்தாவின் அறைக்குள் நுழையும் அம்மாவை பின்தொடர்ந்தான்.
கட்டிலில் எழுந்து உட்கார்ந்தவரிடம்,''சாப்பிடுங்க, உங்களுக்கு பசிக்குதுதானே... பால் சாதம் சாப்பிட்டு, ஒரு பழம் சாப்பிட்டு படுத்துக்கலாம். காலையில் ஈசியா மோஷன் போயிடும்.''
வெறித்த பார்வையில் மாற்றமில்லை.
கையில் ஒவ்வொரு கவளமாக சாதத்தை எடுத்து ஊட்ட, அவசர அவசரமாகச் சாப்பிடுகிறார்.
பசியில் இருக்கிறார் என்பது, அவர் சாப்பிடுவதிலிருந்தே சிவாவுக்கு தெரிந்தது.
ஐந்து நிமிடத்தில் கிண்ணம் காலியாக, வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்து, வாயை ஈரத்துணியால் துடைத்து, குடிக்க தண்ணீர் தந்தாள்.
அவராகவே கட்டிலில் படுக்க, கழுத்து வரை போர்வையை போர்த்தினாள்.
''போகலாம் சிவா, இனி தாத்தா துாங்கிடுவாரு.''
''அம்மா, தாத்தா பசியா இருப்பாருன்னு உனக்கு எப்படி தெரிந்தது. நடு ராத்திரியில் எழுந்து வந்து சாதம் கொடுக்கிறே.''
''எப்போதும் ராத்திரியில் இரண்டு, மூணு தடவை முழிப்பு வரும்போதெல்லாம் வந்து பார்த்துட்டு போவேன். அவர் முகம் பார்த்து, பசியாக இருக்காருன்னு என்னால் கண்டுபிடிக்க முடியும். அவர் உள் மனசு எனக்கு புரியும். வாய் பேசாவிட்டாலும், அவர் மனதில் ஓடும் எண்ணங்களை என்னால் புரிஞ்சுக்க முடியும்பா.''
குரல் நெகிழ பேசும் அம்மாவை, பெருமிதம் மேலிடப் பார்த்தான்.
''அவர் முகம் பார்த்து, உன்னால் அவர் பசியைக் கண்டுபிடிக்க முடியுமாம்மா?''
''அவர் மனதின் எண்ண ஓட்டங்களை என்னால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். அதுக்கு பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. இது, என் குடும்பம், என்னைச் சார்ந்த உறவுகள்ங்கிற அடிப்படை அன்பு மட்டும் இருந்தால் போதும், சிவா.''
''என் படிப்பு, அறிவு, புத்திசாலித்தனம் தான், கண்டுபிடிப்புகளுக்கு உதவியாக இருந்து உயர்த்தியிருப்பதா சொன்னியேம்மா. உன் பாசமும், அன்பான குணமும், தாத்தாவின் பசியை கண்டுபிடிச்சு, ராத்திரி நேரம்ன்னு கூட பார்க்காமல் அன்புடன் ஊட்ட வச்சுதே... அந்த பரிவுக்கு முன்...
''வயசானாலும், நினைவு தடுமாறின நிலையிலும் சொந்தங்களை அரவணைச்சுப் போறியே... அந்தக் கருணைக்கு முன், என் கண்டுபிடிப்புகள் சாதாரணமாக தெரியுதும்மா,'' என, கையில் சாதக் கிண்ணத்துடன் நின்றவளை, நெஞ்சாரத் தழுவினான், ஆராய்ச்சியாளன் சிவா.
- பரிமளா ராஜேந்திரன்

