
''அண்ணே... என்ன சொல்லுதிய...''
அதிர்ச்சியாய் கேட்டபடி, அய்யா சாமியை, நிமிர்ந்து பார்த்தான் அப்புராஜ்.
''ஏம்ல அலர்ற... எனக்கு அந்த ஆசை வரப்புடாதோ...'' அவனை அலட்சியமாகப் பார்த்தார், அய்யாசாமி.
''மைனிக்கு தெரிஞ்சுச்சுன்னா...''
''எப்புடிடே தெரியும்... நாளா மக்கா நாளு, அலமேலு, அவ அம்மா வூட்டுக்கு போறா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போவும் போதும், வர நாலு நாளாவுமுல்லா... அதுக்குள்ள வச்சிருவேன்டே கச்சேரிய...'' கண்ணடித்துச் சிரித்தார்.
''அதுக்கு துட்டு...''
''ஒரு ஐடியாவ புடிப்போம்ல; ரெண்டு நாளு பொறுடே...''
அய்யாசாமி சொன்னாலும், நம்பிக்கை இல்லாமல் அவரை பார்த்தான் அப்புராஜ். பின்ன, 'காபி குடிக்கணும்'ன்னு சொல்வதைப் போல், 'பிராந்தி குடிக்கணும்'ன்னு சொன்னால், அதிர்ச்சி அடைய மாட்டானா!
அய்யாசாமியும், அப்புராசும் ஹாலில் உட்கார்ந்திருந்தனர்.
''அண்ணே... மையினி ஊருக்குப் போயாச்சு... மூணு நாளைக்கி புளியோதரையும், இட்லி, தோசை சுட்டுத் திங்க மாவாட்டியும் வச்சிட்டாவ; வழக்கம் போல, கையில நயா பைசா குடுக்கல. பிராந்தி வாங்கணும்ன்னா, துட்டு வேணுமுல்லா; என்ன செய்யப் போறிய?''
''பேசி முடிச்சிட்டியாடே... ரெண்டு நாளா என்ன செய்தேன்னு நெனச்ச... மூளைய கசக்கிப் புளிஞ்சு, ஒரு ஐடியா புடிச்சிருக்கம்லா... ஹ... அ... பம்பம் பஜக் ஜம்...'' என, கண்ணடித்து சிரித்தார், அய்யாசாமி.
சிறிது நேரத்திற்கு பின், ''ஏல... ஒரு விஷயம் தெரியுமா... இன்னிக்கி நமக்கு மட்டுமில்லடே... ஊருக்கே, 'ஓசி' குடிதான்...'' என்றார்.
''எப்புடிண்ணே...''
''இந்த, 'வேலண்டைன்ஸ் டே, பிரண்ட்ஷிப் டே, உமன்ஸ் டே'ன்னு, தினமும் ஒரு, 'டே'ய வச்சுக்கிட்டு, சளம்பிகிட்டு திரியுதானுவல்லா... அதமாரி, 'மது டே'ன்னு ஒண்ண கௌப்பி விடப் போறம். இந்த, 'மது டே'க்கு, எல்லா பார்லையும் ரெண்டு, 'பெக்'கு ப்ரீ... அ... பம்பம் பஜக் ஜம்... எப்படிலே என் யோசனை...''
அவரை விழி விரியப் பார்த்தான், அப்புராஜ்.
''அசத்திபுட்டியளேண்ணே... நெசமாலே நீங்க ஐடியா மன்னன் தான்...'' என்றவன், அடுத்த நொடியே கேள்விக்குறியானான்.
''நாம சொல்லுதம் சரி... மத்தவியளுக்கு எப்புடி தெரியும்?''
''அதுக்கு வழி பாக்காமலா இருப்பேன்... இப்பத்தான் எவனப் பாத்தாலும் கையில ஒரு, 'அன்ட்ராயர்' போன வச்சுகிட்டு, 'வாட்ச் - ஆப்'ப நோண்டிக்கிட்டே அலையுதானுவளே... அதுல போடுல... அஞ்சு நிமிசத்துல தீயா பரவிரும்...''
''சூப்பர்ண்ணே...'' என்ற அப்பு, 'டியர் டிரிங்கர்ஸ்... டுடே இஸ் இன்டர்நேஷனல் லிக்கர் டே... ட்டூ பெக்ஸ் ப்ரீ இன் ஆல் பார்ஸ்...' என்று ஆங்கிலத்தில், 'டைப்' செய்து, தன் நண்பர்களுக்கு, 'வாட்ஸ் - ஆப்' செய்தான்.
''போட்டாச்சி...''
''சரி இருடே... இருவது நிமிஷத்துல, நாம கௌம்பிரலாம்...'' என்ற அய்யாசாமி, அடுத்த சில நிமிடங்களில் சலவை செய்த ஜிப்பா - பைஜாமாவில் தயாராகி வந்தார்.
''நாம மொத போயிரணும்டே... இந்த விஷயம் யாரோ கௌப்பி விட்ட டுபாக்கூருன்னு தெரியிறதுக்குள்ள, ரெண்டு பெக்க போட்டுட்டு, கமுக்கமா வந்திரணும்...'' என்றார் அய்யாசாமி.
வீட்டைப் பூட்டி, திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி.
''அண்ணே... ரோட்ல பாத்தியளா...''
சாரை சாரையாய், வேக நடையில், விரைந்தது ஒரு கூட்டம்.
''எறப்பாளி பயலுவ; இன்னிக்கி பாத்து, மாரத்தான் போட்டி வச்சுட்டானுவளா... நம்ம ஐடியாவுல, வேட்டு விளுந்திடும் போல இருக்கடே...'' சலிப்பாக சாலைக்கு வந்தார்.
''எதுக்காக மாரத்தான் நடத்துதாவன்னு தெரியலியே... ஒரு வேளை, இன்னிக்கி ஏதாவது, 'கேன்சர் டே, ஹார்ட் டே, கிட்னி டே'ன்னு ஏதாவது விழிப்புணர்வு பேரணி நடக்குதா... அது தெரியாம, 'மது டே'யை, கிளப்பி, சொதப்பிட்டமா...''
குழம்பிப் போன அய்யாசாமி, ஒரு மாரத்தான் ஆசாமியை மடக்கி விசாரித்தார். அவரும் விரைவு நடையை நிறுத்தாமல், ''ஒமக்கு விசயமே தெரியாதாவே... இன்னிக்கி பெக்கு டே...'' என்றார்.
''அப்படீன்னா...''
''நீரு ஒரு கூறு கெட்ட மனுசன்யா... இன்டர்நேசனல் உமன்ஸ் டே, மதர்ஸ் டே மாதிரி, இன்னிக்கு இன்டர்நேஷனல் மது டே... உலகம் பூரா கொண்டாடிட்டு இருக்கானுவல்லா...'' என்று பேசியபடியே நகர்ந்தார்.
''அட... நாம கொளுத்திப் போட்ட தீ தான், இம்புட்டு வெரசா பரவிருக்கா...'' 'குபுக்'கென மலர்ந்த அய்யாசாமி, பெருமையாய் அப்புராஜைப் பார்த்தார்.
''என்னவே நின்னுட்டிருக்கீரு... 'மதுடே'க்காக எல்லா பார்லயும் இன்னிக்கு, ரெண்டு பெக்கு ப்ரீ...'' என்று சொல்லி ஓடினான், மற்றொருவன்.
''அங்குட்டு வச்சே தான் குடிக்கணுமாம்வே... வீட்டுக்கெல்லாம் எடுத்திட்டு வரக்கூடாதாம்...'' இன்னொரு மாரத்தான், 'பார்ட்டி' சொல்லிக் கொண்டே, மூச்சு வாங்க ஓடினார்.
''அப்பு... என்னல இது... ஊரே திரண்டு ஓடிகிட்டு இருக்கு... நாம தான் லேட்டு மாதிரி தெரியுது...''
''வாங்கண்ணே வெரசா போவம்... பக்கத்துல ஏதாவது, 'பார்' இருந்தா சாடிரலாம்...''
அய்யாசாமியும், அப்புராஜும் விரைவாக நடந்தனர்.
சிறிது தூரத்தில், ஒரு இடத்தில் பெரும் கூட்டம் முண்டியடித்தது. 'ரெண்டு குடு... மூணா குடு...' என்று கலவைக் குரல்கள்.
''ஏல... இங்கன, 'பார்' எதையும் பாத்த மாதிரி நெனவு இல்லயேடே... எதுக்கு இம்புட்டு கூட்டம்...'' என்று கேட்டு, உற்றுப் பார்த்தார், அய்யாசாமி.
கூட்டத்திலிருந்து நடுத்தர வயது ஆசாமி ஒருவர், நசுங்கிப் போய் வெளிவந்தார். கும்பல் இருந்த திசை நோக்கி, ''கோட்டிக்கார மூதி... ரெண்டு தண்ணி பாக்கெட்டு குடுத்தா என்ன... ஒண்ணு தான் குடுக்கான். துட்டு குடுத்து தானே வாங்குதன்...'' என, கோபமாய் கத்தினார்.
அவரை மடக்கி, ''யாரவே ஏசுதீரு?'' என்று கேட்டார், அய்யாசாமி.
''பொட்டிக்கடக்கார மூதிகிட்ட ரெண்டு தண்ணி பாக்கெட்டும், ஒரு ஊருகா பாக்கெட்டும் கேட்டேன்; கூட்டமா இருக்கதால, ஒண்ணு தான் தருவானாம்...''
வாட்டர் பாக்கெட் மற்றும் ஊறுகாய்க்காக தான் இந்த கும்பல், பெட்டி கடையை மொய்த்துள்ளது என்பது, இருவருக்கும் புரிந்தது.
''அண்ணே... பொட்டிக்கட யாவாரியல்லாம் இன்னிக்கு லச்சாதிபதியாயிருவாம் போல...'' சிரித்தான் அப்புராஜ்.
''சிரிக்காதல... நாமளும் வாங்கணுமுலா... வா... முக்கு கடையில போயி பாப்பம். நீ துட்டுக்கிட்டு வச்சியிருக்கியால...''
''ஐம்பது ரூபா சொச்சம் இருக்குண்ணே...''
இடது பக்கம் இருந்த பிள்ளையார் கோவில் தெருவுக்குள் திரும்பினர் அய்யசாமியும், அப்புராஜும்!
எதிரே, பரபரப்பாக வந்தார், ரிட்டயர்ட் வாத்தியார் கணபதி.
''வணக்கம் சார்வாள்... என்ன திரும்பி வாரிய போலருக்கு...''
''ஆமாவே... இந்த, 'மது டே'க்கு ரெண்டு, 'பெக்'கு ப்ரீ தாராவல்லா... அதுக்கு, ஆதார் அட்டை வேணுமாவே... அது இல்லன்னா தர மாட்டாவளாம். இப்ப தான் லேட்டஸ்ட்டா, 'வாட்ஸ் - ஆப்'ல நூஸ் வந்தது. அதான், சடக்குன்னு வீட்டுல போய் எடுத்துட்டு வந்திரலாமேன்னு போறேன்...'' வேறு எதையும் கேட்டு, நேரத்தை வீணடித்து விடுவாரோ என்ற முன்னெச்சரிக்கையில், அவசரமாய் நகர்ந்தார், கணபதி வாத்தியார்.
''என்னடே இது... புதுசு புதுசா கிளப்பி விடுறானுவ...'' அய்யாசாமி சொல்ல, ''அண்ணே யோசிக்க நேரமில்ல... வாங்க, 'டக்'குன்னு எதாவது பாருக்கு சாடிரலாம்...'' என்று அவரை துரிதப்படுத்தினான் அப்புராஜ்.
''அப்பு... பேசாம, 10ம் நம்பர் பாருக்கு போயிரலாம்டே... நம்ம சேக்காளிங்க எல்லாம் அங்க தான இருக்காவ. கூட்டம் முன்னப்பின்ன இருந்தாலும், யாராது ஒருத்தர், நம்மள உள்ள கூட்டிட்டு போயிருவாவ...''
''சூப்பர் ஐடியாண்ணே... வாங்க போவம்...''
அவர்கள், 10ம் நம்பர் பாருக்கு வந்த போது, அங்கும் கட்டுக் கடங்காத கூட்டம் இருந்தது. வந்திருந்த குடிமகன்களில், நான்கு பேர், தற்காலிக தலைவராக உருவெடுத்து, கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, வரிசை அமைத்துக் கொண்டிருந்தனர்.
''வே... ஊதா சட்ட... நீரு லேட்டா தான வந்தீரு... பொறத்தால போம்வே...''
''நா ஆதார் கார்டு ஹோல்டர்... அது, இந்திய குடிமகனின் அடையாளம்...'' என்றான் ஒருவன்.
''நானும் ஆதார் அட்டை, பான் கார்டு கூட வச்சிருக்கிறேன். டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, ஓட்டர் ஐ.டி., ஆல் ஆர் அவைலபிள் வித் மீ... கிவ் மீ பிரையாரிட்டி...'' இன்னொருவர் சவுண்டு விட்டார்.
''ஏல... இங்கிலீசுல பேசுனா நீ பெரிய இவனா... மொத பெக்கு உள்ள போனா, நாங்கூடத்தான் இங்கிலீசு பேசுவேன். பின்னாடி வாவே...'' மற்றொருவன் எகிறினான்.
''எஸ்கிஸ் மீ சார்வாள்... எனக்கு வீசிங் டிரபுள்... கூட்டத்துல நிக்க முடியல; கொஞ்சம் முன்னாடி விட்டியன்னா, அப்படி ஓரமா நின்னுக்கிடுதேன்...''
''எனக்கு கூடத்தான் முட்டி வலிவே... கையில எக்ஸ்ரே, மருந்து சீட்டெல்லாம் வச்சிருக்கேன்; நானே வரிசையில நிக்கமுல்லா... வாரும்வே இங்கன...''
''என்னவே ஓரேடியா சளம்பிட்டு இரிக்கிய... 12:00 மணி ஆவதற்கு இன்னும் அஞ்சு நிமிஷந்தான் இரிக்கி... அப்புறம், 'பார்' ஓப்பன் பண்ணிடுவாவ... வரிசையா போய், 'டக்கு டக்கு'ன்னு பெக்கை போட்டுட்டு வந்திட்டா, யாருக்கும் சிரமம் இரிக்காது பாரும்...''
சின்ன சின்ன சலசலப்புகளுடன் கூட்டம் காத்திருந்தது.
மணி, 12:00 ஆனது; 'பார்' திறக்கப்படவில்லை. மேலும், 10 நிமிடங்கள் கடந்தன; அப்போதும், 'பார்' திறக்கப்படவில்லை.
''அண்ணே... என்ன இப்பிடியே நிக்கிய... நம்ம சேக்காளிங்க கமலையோ, மகேந்திரனையோ பாருங்க... நாம உள்ளுக்குள்ள போயிருவம்...''
''அப்பல இருந்து பாத்துகிட்டுதாம்ல இருக்கேன்... அவிய எங்கன இரிக்காவன்னு ஒரு அசுவயும் தெரியலயடே...'' என்று கூறி, கூட்டத்தில் அவர்களை தேடினார், அய்யாசாமி. ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வரிசையில் கமலும், மகேந்திரனும் நின்றிருந்தனர்; அவர்கள் அந்த பாரில் வேலை செய்பவர்கள்.
''ஏம்டே... வரிசயில நிக்கிய?''
''அய்யாசாமி அண்ணே... இன்னிக்கு, 'மதுடே'ல்லா... அதா நாங்க லீவு போட்டுட்டு, 'ப்ரீ' பெக்குக்காக வந்திட்டோம். இந்தக் கூட்டத்துல, நாங்களே முன்ன போவ முடியல; நீரு ஒண்ணு பண்ணும்... அப்படியே எங்க கிட்ட வந்து, பழக்கம் உட்டுகிட்டே நில்லும்; நாங்க போவும்போது, உம்மயும் சேத்து, உள்ள கூட்டிட்டு போயிடுதோம்...''
''நம்ம மத்த சேக்காளிங்க எல்லாம்...''
''அவியல்லா... எங்களுக்கும் பின்னால, ரொம்ப தள்ளி வரிசையில நிக்காவ... கேட்ட தொறக்கறதுக்குள்ளயே கூட்டம் சாடிட்டுல்லா...''
நொந்து போனார் அய்யாசாமி.
''பாரை தொறக்க வேண்டியவளே, வரிசையில நிக்காவ... வௌங்கிரும்; வாடே அப்பூ... எனக்கு பசி வயித்தக் கிள்ளுது. நீ தான் என்னமோ துட்டு வச்சிருக்கேன்னியே... பக்கத்து டீக்கடையில ஒரு டீ வாங்கி குடுடே...''
இருவரும் டீக்கடைக்கு வந்தனர். அங்கிருந்த சின்ன, 'டிவி'யில் செய்தி சேனல் ஒன்றில், 'இன்று சர்வதேச மது தினம் என்றும், அதை முன்னிட்டு மதுக்கூடங்களில், விலையில்லா மது வழங்கப் பட உள்ளதாகவும் வதந்தி பரவியுள்ளது; இதனால், பலரும் விடுப்பு எடுத்து, மது கூடங்களை நாடி செல்ல துவங்கியதால், அலுவலகங்கள் வெறிச் சோடியுள்ளன.
'அலுவலகங்களில் நடை பெறும் வழக்கமான பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளன. மேலும், மதுக்கூடங்களின் முன், விலையில்லா மதுவுக்காக, ஆயிரக்கணக்கானோர், ஒரே சமயத்தில் குவிந்துள்ளதால், பல்வேறு பகுதிகளில், கலவர சூழல் நிலவுவதாக, நம் பெண் செய்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
'இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 'மது தினம்' எனும் இந்தச்செய்தியில், சற்றும் உண்மை இல்லை என்றும், இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், வதந்தியை பரப்பியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...' என்று செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
'டிவி' செய்தியை பார்த்த அப்புராஜ் கண்களில் கடும் மிரட்சி; ''அண்ணே... நீங்க கிளப்பி விட்ட வதந்தியில, நாடே ஸ்தம்பிச்சுப் போச்சி. நாளைக்கு சைபர் க்ரைம்காரவுக நம்மள புடிச்சிருவாவ... அப்புறம் என்கவுன்டர் தான்; எனக்கு பயமா இருக்குண்ணே...''
நடுங்கும் குரலில் பேசிய அப்புராஜ், அப்போதே, அப்ரூவர்ராஜ் ஆக மாறி விடுவான் போல் இருந்தது.
''டேய் அப்பு... எனக்கும் உள்ளுக்குள்ள கொஞ்சம் கலவரமாத்தாண்டே இருக்கி... நாம் உருவாக்கின, 'மது டே' யை, இப்பிடி தேசிய விடுமுறை லெவலுக்கு கொண்டாடுவாவன்னு நான் எதிர்பாக்கல...''
''இப்ப நாம என்ன செய்யறதுண்ணே...''
''ஏல... இனிம ஒரே ஐடியா... நாமள போயி போலீஸ்ல சரண் அடைஞ்சிடுறது தான். வாடே... கிளம்பு...''
அவனை இழுத்து கொண்டு, அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார் அய்யாசாமி. வாசலில் பெண் போலீஸ் ஒருவர் நின்றிருந்தார்.
''என்ன வேணும்?''
''வதந்தி கேஸ்ல சரணடையனும்...''
''சரண்டரா...'' என்று யோசித்த அந்த பெண் போலீஸ், ''ம்... போயிட்டு நாளைக்கு காலையில வாரியளா...'' என்றாள், வேண்டுகோள் குரலில்!
''ஏம் மேடம்?''
''இன்னிக்கு எல்லாரும் டூட்டிக்கு லீவப் போட்டுட்டு, மப்டியில போயிட்டாவ... நீங்க நாளைக்கு வந்து சரணடையுங்க...''
அய்யாசாமிக்கு தலை கிறுகிறுத்தது.
குபீரென கொட்டிய தண்ணீரோடு, அலமேலுவின் குரலும் ஒலிக்க, கனவு கலைந்து திடுக்கிட்டு எழுந்தார் அய்யாசாமி.
''விடிஞ்சு நேரம் என்ன ஆவுது... எந்திரிச்சி பல்லுகில்லு வௌக்காம தூங்கிட்டு கெடக்கதப் பாரு... இரு வாரியலால ரெண்டு சாத்து சாத்துதேன்...''
அலறி எழுந்த அய்யாசாமி, அப்படியே, 'எஸ்கேப்!'
- ஆழ்வார்க்குறிச்சி ஜே. டி. ரஞ்சிதா

