
ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
தேவைகளுக்கும், திருப்திகளுக்கும்
மனம் விட்டு பேசும்
மந்திரம் இருக்கும் போது
திரைமறைவில் புரையோடும்
தீவிரவாதம் எதற்கு!
விருட்சத்தின் விளைச்சலில்
விருந்து உண்டு
வேர்களுக்கு விஷம் விதைக்கும்
விந்தை இதயம் படைத்த
வினோத மனிதர்களே...
புறமிருந்து சிரம் சாய்க்க
பேடியின் அஸ்திரங்களை பிரயோகிக்கும்
பிள்ளைப்பூச்சிகளா நீங்கள்!
வாழ்க்கையெனும் நந்தவனம் வழங்கும்
வசந்தத்தின் சுகந்தத்தை
சுவாசிக்காதவரா நீங்கள்!
நட்பெனும் நவரசம் நல்கும்
அறுசுவையின் அடித்தளம் அறியாமல்
வழித்தடம் தவறியவர்களா நீங்கள்!
அப்படியானால்
வாருங்கள் கற்றுத் தருகிறோம்!
முறம் பிடித்து புலி துரத்திய எம்
வீரமங்கையிடம் வினவிப் பாருங்கள்...
மரணமே எனினும் மார்பில் தாங்கும்
மரபை கற்றுத் தருவாள்!
சிறகடித்துச் செல்லும்
எம் சிட்டுக்குருவிகளை
கேட்டுப் பாருங்கள்...
சிதறியே கிடந்தாலும்
கூடி கொத்தி தின்னும்
கொள்கையை கற்றுத்தரும்!
முற்றத்தில் முளைத்து நிற்கும்
எம் முல்லைப் பூக்களை
கேட்டுப்பாருங்கள்...
மற்றவர் வாழ்க்கையில் வாசம் வீசும்
வழியை கற்றுத்தரும்!
எறும்புக்கும் இரை போடும்
என் இளவல் இதயங்களில்
இரும்புத் துண்டை எறியும்
இறுகிய மனம் படைத்த
எந்திர மனிதர்களே...
ஆயிரமாயிரம் அணு குண்டுகளையும்
அள்ளித் தெளித்துப் பாருங்கள்
அத்தனையும் அடி பணியும்
அகிம்சையெனும் எங்கள்
ஒற்றை ஆயுதத்தின் முன்!
ஆகவே உங்கள்
முள்வேலி முகாமை
முடக்கிவிட்டு
நல்வழிப் பூங்காவில்
நடைபயில முயலுங்கள்...
நாளைய நம் தலைமுறைகள்
நட்புறவுடன் வாழ
ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
— க.திருவழகர், கொச்சி.

