sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/ஒன்றோடு ஒன்று!

ஒன்றோடு ஒன்று!

ஒன்றோடு ஒன்று!


PUBLISHED ON : ஜூலை 30, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 30, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கையில் காபியோடு வந்த பிருந்தா, பேப்பர் படித்துக் கொண்டிருந்த, ராஜ்குமார் கையில் கொடுத்து, பக்கத்தில் அமர்ந்தாள்.

''என்னங்க, ஒரு வாரத்துக்கு முன், பேப்பரில் வந்த செய்தியை படிச்சதிலிருந்து, என் மனசே சரியில்லைங்க.''

''எந்த செய்தியை சொல்ற?''

''புருஷனும், பெஞ்சாதியும் வேலைக்கு போனதும், தனியாக இருந்த அவரது தாயின் கழுத்தை நெரிச்சு கொன்னுட்டு, நகையெல்லாம் எடுத்துட்டு போயிட்டான்னு போட்டிருந்ததே. அதை படிச்ச பிறகுதான் எனக்கும் மனசுல ஒரு பயம் வந்துடுச்சு.

''பாவம், அந்த வயசான அம்மா எப்படி துடிச்சு போயிருப்பாங்க. நகைகளுக்காக இப்படி பண்ணிட்டானே. ஆனா, போலீஸ்காரங்க மறுநாளே அதை கண்டு பிடிச்சுட்டாங்களே,'' என்றாள், பிருந்தா.

''ஆமா, நம்ம போலீஸ்காரங்க நல்ல திறமையானவங்க. அதனால் தான் ஒரே நாள்ல கண்டுபிடிச்சுட்டாங்க.''

''வீட்டுல நாம ரெண்டு பேரும் வேலைக்கு போன பிறகு, அத்தை மட்டும் தனியா இருக்காங்களேன்னு, நெனச்சா பயமா இருக்குங்க,'' என்றாள், பிருந்தா.

''பிள்ளைங்க ஸ்கூலுக்கு போயிடுவாங்க. கதவை உள்பக்கமா சாத்திக்குங்க. யாராவது தெரிஞ்சவங்க வந்தா மட்டும் கதவை திறங்கன்னு அம்மாகிட்ட நாம சொல்லி வச்சுருக்கோம்ல,'' என்றான், ராஜ்குமார்.

''இப்ப நடந்த கொலையை, தெரிஞ்சவங்கதானே செய்திருக்காங்க. அதுக்கு அந்த வீட்டு வேலைக்காரியே துணையாம். அவதான் கதவை திறந்து விட்டுருக்கா. இதையெல்லாம் பார்த்தா, யாரை நம்புறதுன்னே தெரியல,'' என்றாள், பிருந்தா.

''அப்போ ஒண்ணு செய்வோமா... நீ வேலையை விட்டுட்டு, வீட்லயே இருந்து, அம்மாவையும், பிள்ளைகளையும் கவனிச்சுக்க. நீ சம்பாதிச்சு தான் குடும்பம் நடத்தணும்ன்னு இல்லியே. நாம வசதியா தானே இருக்கோம்,'' என்றான், ராஜ்குமார்.

''அதில்லைங்க. இப்போ, புதுசா ஒரு முதியோர் இல்லம் திறந்திருக்காங்களாம். எல்லா வசதியும் இருக்காம். அங்கே அத்தையை சேர்த்து விட்டால், பாதுகாப்பாகவும் இருப்பாங்க இல்லையா?''

''முதியோர் இல்லத்துலயா... 'பெத்த தாயை பார்த்துக்க முடியலையா'ன்னு, நாலு பேர் நம்மள பார்த்து கேவலமா கேட்பாங்க.''

''அத்தை தனியா இருப்பாங்களே, அதுக்கு இந்த இடம் எவ்வளவோ பாதுகாப்பானதுன்னு, என் தோழி சொன்னா.''

''எனக்கு என்னமோ முதியோர் இல்லம்கிற பெயரை கேட்டாலே, 'அலர்ஜி'யா இருக்கு. இனிமேல் இதைப் பற்றி என்கிட்ட பேசாத. உன் விருப்பம் எதுவோ அதன்படி செய்.

''ஆனா, அம்மாவை என்கிட்டயிருந்து பிரிக்கிறது எனக்கு பிடிக்கலை. வயசான காலத்துல, அவங்க நம்மோட தான் இருக்கணும்ன்னு, நான் விரும்பறேன்.''

இரண்டு நாட்கள் இதை பற்றிய பேச்சாகவே இருந்தாள், பிருந்தா.

அவளுக்கு, மாமியார் தனியாக இருப்பதால் பயம். அதற்காக தான் பார்க்கும் வேலையை விட விருப்பமில்லை. அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும் என்பர்.

பிருந்தாவின் இரண்டு நாள் நச்சரிப்பில், தன் தாயின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்குமே என்று எண்ணி, அரைகுறை மனதோடு முதியோர் இல்லத்தில் சேர்க்க சம்மதித்தான், ராஜ்குமார்.

''உன் விருப்பப்படி செய். ஆனால், நான் வரமாட்டேன். ஏன்னா, என் தாயை பிரிய மனமில்லை,'' என்று மன வருத்தத்துடன் சொல்லி, அலுவலகம் கிளம்பினான்.

அலுவலகத்தில் விடுப்பு சொல்லி, அத்தை அம்புஜத்தை அழைத்து, தோழி சொன்ன முதியோர் இல்லத்துக்கு சென்றாள், பிருந்தா. அங்கே சேர்க்கும் முன், அவர்களுக்கு இங்கு வசதிபடுமா என்று தெரிந்து கொள்ள விடுதியை சுற்றிப் பார்த்தாள்.

வயதானவர்கள் நிறைய பேர் பேசியபடியும், 'டிவி' பார்த்தபடியும் இருந்தனர்.

''என்ன பிருந்தா, அம்மாவை பார்க்க வந்தியா?'' என்ற குரல் கேட்டு திரும்பியவளின் அருகில், கல்லுாரி தோழி சாந்தி நின்றிருந்தாள்.

''சாந்தி, நீ இங்கே எப்படி?''

''இந்த இல்லம் துவங்கியபோது வேலைக்கு ஆள் எடுத்தாங்க. அப்போலேர்ந்து இங்கே தான் வேலை பார்க்கிறேன். போன வாரம், உங்க அண்ணி வந்திருந்தாங்க.

''அப்போ நடந்த கொலையை நினைச்சு, அவங்க வேலைக்கு போன பிறகு, உங்கம்மா தனியா இருப்பாங்களேன்னு, இங்கே கொண்டு வந்து சேர்த்ததா சொன்னாங்க. நீ, அவங்கள பார்க்கதான் வந்தியா?'' என்றாள், சாந்தி.

சாந்தி சொன்னதும் திடுக்கிட்ட பிருந்தா, தன் தாய் இங்கிருப்பது தனக்கு தெரியும் என்பது போல் சுதாரித்து, ''ஆமா சாந்தி... அண்ணி போன் பண்ணி சொன்னதும், அம்மாவை தான் பார்க்க வந்தேன். அம்மா எப்படி இருக்காங்க?'' என்றாள்.

''இங்கே வந்ததும் முதல் இரண்டு நாள் மனசு சரியில்லாமல் தான் இருந்தாங்க. இப்போ பரவாயில்ல. எல்லாரிடமும் பேசுறாங்க. அதிலும், நீ என் தோழின்னு தெரிஞ்ச பிறகு என்கிட்ட ரொம்ப அன்பா பேசுறாங்க,'' என்றாள், சாந்தி.

''இல்லத்தின் தலைமை மேடத்தை நான் சந்திக்கணும், சாந்தி. அழைச்சுகிட்டு போறியா,'' என்றாள், பிருந்தா.

மேடத்தை பார்க்க அழைத்துப் போனாள், சாந்தி.

''வணக்கம் மேடம். போன வாரம், இங்க காந்திமதின்னு ஒரு அம்மா வந்தாங்க இல்லியா, அவங்க மகள் தான் நான். அவங்களை அழைச்சுகிட்டு போக வந்திருக்கேன்,'' என்றாள், பிருந்தா.

தேவையான விண்ணப்பங்களில் கையெழுத்திட்ட பிருந்தா, தன் அம்மாவையும், மாமியாரையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

மாலை, 6:00 மணி. வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான், ராஜ்குமார்.

இன்று அம்மாவை இல்லத்தில் சேர்த்திருப்பாள், பிருந்தா. அம்மாவை பிரிந்து ஒருநாள் கூட நான் இருந்ததில்லை.

வெகுநேரம் ஆகவே, பைக்கை எடுத்து வீட்டிற்கு வந்தபோது, அங்கே ஒரு கலகலப்பான சூழ்நிலையை உணர்ந்தான். அவன் தாய் அம்புஜமும், பிருந்தாவின் தாய் காந்திமதியும் பல்லாங்குழி விளையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் ரிதன்யாவும், ராகுலும் கலகலப்போடு சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்தனர்.

ராஜ்குமாரின் அருகில் வந்த பிருந்தா, ''காலையில் அத்தையை கூட்டிட்டு முதியோர் இல்லத்திற்கு போனேன். அங்கே என் அம்மாவை பார்த்ததும் மனசுக்கு சங்கடமாயிடுச்சு.

''அப்போ தான் உங்க உணர்ச்சியை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. அதனால தான் ரெண்டு பேரையும் அழைச்சுகிட்டு நம் வீட்டுக்கு வந்துட்டேன். இப்போ சந்தோஷம்தானே,'' என்றாள்.

''ம்... ரொம்ப சந்தோஷம். உன் அண்ணா, அண்ணிகிட்ட சொல்லிட்டியா?''

''சொன்னேங்க. ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷம். அப்புறம் இன்னொன்னு, என் வேலையை விட்டுட்டு வீட்டோட இருந்து, நம் பிள்ளைகளையும், இவங்களையும் கவனிச்சுக்க போறேன்,'' என்றாள்.

தன் தாயாரையும், மாமியாரையும் பார்த்தபடியே, ''இப்போ ரெட்டிப்பு சந்தோஷம் தான்,'' என்றான்.

அவர்கள் இருவரும், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்ததும், ராஜ்குமாரின் மனதில் எல்லையில்லாத சந்தோஷம் குடி கொண்டது.

விஜயா கிருஷ்ணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us