PUBLISHED ON : ஜூலை 30, 2023

மதுரையை ஆண்ட, ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சியில், நாட்டின் எல்லைக்குட்பட்ட ஒரு பகுதியாக இருந்தது, சிவகாசி.
காசி என்று அழைக்கப்படும் வாரணாசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து இங்கு நிறுவினான், ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன். எனவே, காசி சிவலிங்கம் பெயராலே, சிவன்காசி ஆகி, நாளைடைவில், சிவகாசி என மருவியது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகவும், முக்கிய தொழிலாகவும் இருக்கும் தீப்பெட்டி தொழிலுக்கு, இது, 100வது ஆண்டு.
கரிசல்பூமியான சிவகாசியில், புகையிலை விளைச்சல் பிரதானமாக இருந்து வந்த காலகட்டத்தில், கடுமையான வறட்சி ஏற்பட்டு, விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர், மக்கள். வறட்சி ஏற்பட்டு விவசாயம் குறைந்து போன, 1916ல், சிவகாசி பகுதியைச் சேர்ந்த அய்ய நாடார் மற்றும் சண்முக நாடார் இருவரும், புதிய தொழில் ஒன்றை கற்றுக் கொள்வதற்காக, கல்கத்தா மாநிலத்திற்கு சென்றனர்.
அங்கு பெருவாரியாக நடைபெற்று வந்த தீக்குச்சி மற்றும் தீப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிலைப் பார்த்தனர். அதில் ஆர்வம் ஏற்பட்டு, அங்கேயே சில ஆண்டுகள் தங்கி, தீப்பெட்டி தொழிலை சிறப்பாக கற்றுத் தேர்ந்தனர்.
சிவகாசிக்கு திரும்பிய இருவரும், 1923ல், தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்தனர்.
சிவகாசியின் முதல் தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான, 'நேஷனல் தீப்பெட்டி' 1923ல் ஆரம்பிக்கப்பட்டது.
சிவகாசியில் தயாரான தரமான தீப்பெட்டிகள், தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், நல்ல வரவேற்பை பெற்றன.
சிவகாசியில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலை, குடிசைத் தொழிலாக உருவாகி, சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகள், சாத்துார் மற்றும் கோவில்பட்டி வரை விரிவடைந்தது.
இன்று, ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிற்சாலைகளின் மூலம், பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தீப்பெட்டி தொழில் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில், தீப்பெட்டிகளுக்கு கண் கவரும் வகையில் வண்ண வண்ண லேபிள்கள் ஒட்டி விற்பனை செய்யும் யோசனை தோன்றியது.
வண்ண லேபிள்கள் அச்சடிக்கும் தொழிலை கற்று வருவதற்காக, அய்ய நாடார், சண்முக நாடார், ஞானகிரி நாடார் ஆகியோர், மீண்டும் கல்கத்தாவுக்கு சென்று, அச்சுத் தொழிலையும் கற்றுத் தேர்ந்தனர்.
அங்கிருந்து தொழில் நுட்பங்களை, சிவகாசிக்கு கொண்டு வந்தனர். 'ட்ரெடில்' என்ற அச்சக இயந்திரம் வரவழைக்கப்பட்டு, தீப்பெட்டிக்கு தேவையான வண்ண லேபிள்கள் அச்சிடப்பட்டன.
பின்னர், தீக்குச்சி, மத்தாப்பூ என்ற புதிய வடிவத்தை எடுத்தது. அடுத்த கட்டமாக கேரளா மாநிலம், திருச்சூரிலிருந்து வாணவெடி தொழில் நுட்பம் கொண்டு வரப்பட்டு, இன்று வண்ண வண்ண வாணவெடிகளின் முதன்மையானதாக, சர்வதேச அளவில் பெரும் பெயரை பெற்றுள்ளது, சிவகாசி.
தீப்பெட்டி, அச்சகம், மத்தாப்பூ, பட்டாசு, வாணவெடிகள் என, அனைத்திற்கும் முதன்மையானதாக இருப்பது, சிவகாசியின் தீப்பெட்டி தொழில் தான்.
குடிசைத் தொழிலாக இருந்து, நவீன இயந்திர மயமாக்கலால், புது வடிவங்கள் பெற்று, பல வெளிநாடுகளில் இன்றும் வரவேற்பை பெற்று வருகிறது, சிவகாசி தீப்பெட்டி தொழில்.
ஒரு தொழில், ஒரு ஊரை அடையாளப்படுத்தும். அந்த அடையாளம், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பக்கபலமாக இருந்து வருவது, தீப்பெட்டி தொழிலுக்கு சரியாக பொருந்தும்.
சிவகாசியின் தொழில் வளர்ச்சியை பார்த்து தான், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அதை, 'குட்டி ஜப்பான்' என்று, பெருமையுடன் குறிப்பிட்டார்.
-மு.ஆதினி
