
பனையேற்றத்தில் மும்முரமாய் இருந்தான், முருகன். பதநீர் காய்ச்சும் அடுப்பில், காய்ந்த பனை மட்டைகளை போட்டு எரிய வைத்தாள், வள்ளி.
முருகன் மனைவியை அழைக்க, பதநீர் பானையுடன் விரைந்தாள், வள்ளி.
கணவன் இறக்கி வைத்திருந்த பதநீர், தகரத்தாலான டப்பா நிறைய இருந்தது. அதை பானையில் நிரப்பி வந்து குடிசையில் வைத்தாள், வள்ளி. பனையேறி முடித்து இறங்கிய முருகன், வேட்டியை மடித்துக் கட்டி, குடிசைக்கு வந்து, கை கால், முகம் கழுவினான்.
அடுப்பில், பெரிய அண்டாவை துாக்கி வைத்து, பதநீரை ஊற்றுவதற்காகப் பானையைத் துாக்கினாள், வள்ளி. அதைப் பார்த்த முருகன், அவசர அவசரமாக ஓடி வந்து, ''பானைய இப்படி குடு, நா ஊத்துறேன்,'' என வாங்கி, அண்டாவில் ஊற்றினான்.
பதநீர் பானைகள் ஆறு இருந்தன. ஆறாவது பானையை முருகன் துாக்கியபோது, ''செத்த நில்லுங்க மனுசரே,'' என்றாள், வள்ளி.
ஊற்றுவதை நிறுத்தி, முருகன் விழிக்க, ஒரு கலயத்தைக் கழுவி எடுத்து வந்து நீட்டினாள். பானையிலிருந்து தெளிந்திருந்த பதநீரை, கலயத்தில் ஊற்றினான். அரைக் கலயம் நிரம்பியதும், ''காணும் காணும், அண்டாவில் ஊத்துங்க மனுசரே,'' என்றாள்.
''நீ என்னாளும் இப்படித்தான் அரக்கலயம் பயினி எடுத்துத் தனியா வைக்குற. ஆனா, நீதான் குடிச்ச மாதிரியில்லயே... பின்ன எதுக்கு எடுத்து வைக்கணும்?'' வெள்ளந்தியாகக் கேட்டான், முருகன்.
''நாங் குடிப்பேனோ இல்லியோ... நம் குடிசைக்கு வந்தா, பயினி குடிக்கலாமேன்னு ஆராச்சும் வந்து ஏமாந்து போயிறப்புடாதுல்ல மனுசரே... அதுதான்,'' என்றவள், பதநீர் கலயத்தை ஒரு மூலையில் மூடி வைத்து, அடுப்பருகே வந்தாள்.
பதநீர் முழுவதையும் ஊற்றிய முருகன், மரத்தினடியில் கிடந்த தென்னந்தட்டியில் படுத்தான்.
அடுப்பில் காய்ந்த பதநீர், வற்றிச் சுண்டத் துவங்கியது. அடுப்புத் தீயைத் தணித்து, முத்து முத்தாய் மேற்பரப்பில் குமிழ் விட்டுத் திரளும் திரவத்தை, ஆள் காட்டி விரலால் தொட்டெடுத்தாள். தண்ணீருக்குள் விட்டு உருட்டும்போது, திரவமாயிருந்த கருப்பட்டி, திரண்டு உருண்டது.
கருப்பட்டி பதத்திற்கு வந்துவிட்டதை அறிந்ததும், அடுப்பிலிருந்து அண்டாவை இறக்கி வைக்க, கணவன் விழித்திருக்கிறானா என, எட்டிப் பார்த்தாள். அப்போதுதான் எழுந்து அமர்ந்திருந்தான், முருகன்.
''ஒங்களத்தான மனுசரே... செத்த எழும்பி வாங்க. கருப்பட்டி பதம் வந்தாச்சு... அண்டாவை எறக்குறியளா?'' என, குரல் கொடுத்தாள், வள்ளி.
எழுந்து வந்த முருகன், அண்டாவை இறக்கி வைத்தான். வழக்கமாக கருப்பட்டி ஊற்றும் சிரட்டைகளை ஊற வைத்திருந்த தண்ணீர் சட்டிக்குள்ளிருந்து அள்ளி, மணல் விரிக்கப்பட்ட தரையில் அடுக்கி வைத்தாள், வள்ளி. அண்டாவை சாய்வாக வைத்து துளாவு மட்டையால் உள்ளிருக்கும் கருப்பட்டி திரவத்தை துளாவ ஆரம்பித்தாள்.
முருகன் அமைதியாக இருப்பதைப் பார்த்த வள்ளி, ''ஏ மனுசரே...'' என்று அழைத்தாள்.
''என்னளா வள்ளி?''
''நம்ம பய கதிரேசன், இவ்ளோ நல்லா படிச்சி, இந்த வட்டாரத்திலயே அதிக மார்க் வாங்கி இருக்கான்னு, 'பிரைஸ்' விருதுன்னு கை நெறைய வாங்கி வந்தான். டாக்குட்டருக்கு படிக்கிறேன்னு ஒத்தக் கால்ல நிக்கான்.
''அங்கன இங்கன கெடச்சப் பணத்த வச்சி புள்ள என்னம்மோ, 'நீட்'டாமே அந்தப் பரிட்சையும் எழுதிட்டு வந்து நிக்கான். ஊருல யாரப் பார்த்தாலும், 'ஒம் மவன் டாக்குட்டராகிருவான், டாக்குட்டராகிருவான்'னு சொல்லுறாக,'' என்றாள், வள்ளி.
''நம்ம வகையறாவுல இதுக்கு முந்தி யாருமே பள்ளிக்கூடத்துக்கு ஒதுங்குனதில்ல. ஆனா, இந்த பய புள்ளய்க்கி எங்கனருந்துதான் இந்தப் படிப்பு வந்துச்சோ... நம்மள படச்ச பரமசிவனுக்குத்தான் வெளிச்சம்... வேண்ணா பாரேன், பய என்னபாடு பட்டாவது டாக்குட்டரு ஆகியே தீருவான்,'' சந்தோஷமாகச் சொன்னான், முருகன்.
''அவன் படிச்சு பாஸ் பண்ணி, மேல வருவான்னு எல்லாருக்கும் தெரியுது. ஆனா, இன்னும் கன வருஷம் படிக்கணுமாமே... அதுக்கு நோட்டு நோட்டால்ல பணம் குடுக்கணும்? அதுக்கு நாம எங்க போறதாம்... நீங்க ஒரு நல்ல மனுசரா இருக்கதுனால நல்ல கஞ்சி ஊத்துறிய...
''இந்த வட்டாரத்தில எவனும் பனையேத்ததுல ஒங்கள அடிச்சிக்கிட மாட்டான்... ஒரு பீடி, சுருட்டு வாயில வைக்க மாட்டிய; கள்ளு, சாராயம்ன்னு எதுமே ஆவாது. தந்திர பனையேத்துல பத்து தரம் பயினி எறக்கிப்புடுவிய... அதனாலயாக்கும் இவ்வளவு நாளும் கடன் இல்லாம குடும்பம் நடக்குது. புள்ளயும் படிச்சிக்கிட்டிருக்கான். ஆனா, இனிமே எப்படி சமாளிப்பியளாம்?''
''அதுக்கு ஒரு வழி இருக்கு புள்ள.''
''என்ன வழி?''
''இப்பம் முன்ன மாதிரி பனையுங் கெடையாது; பனையேற ஆளுங் கெடையாது. அதனால, கருப்பட்டியும் கெடையாது; கல்கண்டும் கெடையாது. ஆனா, கருப்பட்டி வேணும், கல்கண்டு வேணும்ன்னு மனுஷங்கல்லாம் தேடுதாங்க... வெலையும், 300 ரூபா வரைக்கும் ஒசந்தாச்சு...
''அதனால, எல்லாரும் பயினி காய்ச்சும்போதே, ஒண்ணுக்கு அஞ்சு மடங்கு சீனிய போட்டுக் காய்ச்சிப்புடுறாக... ஒரு வித்தியாசமும் தெரியாது. இப்படி லாரி லாரியா ரேஷன் சீனிய கள்ளத்தனமா கடத்திட்டு வந்து, கெடைக்கறப் பயினி எல்லாத்திலயும் கலப்படம் பண்ணி, கருப்பட்டி அல்லது கல்கண்டு ஊத்தி, துட்ட லச்ச லச்சமா பாக்குறாங்க.''
''அதனால?''
''நாமளும் சீனியக் கலப்படம் பண்ணினா எவ்வளவு பணம் வரும் தெரியுமா... ஒரு கிலோ சீனி ரேஷன்ல, 30 ரூவா. இதையே சந்தையில வாங்கினா, 40 ரூவா. 40 ரூவாச் சீனிய, 300 ரூவாய்க்கி வித்தா, ஒன் மவன டாக்குட்டராக்குறது பெரிய விஷயமாளா... நாமளும் நாளையிலருந்து அப்பிடி செய்துருவமா புள்ள?'' கண்களில் ஆவல் பொங்கக் கேட்டான், முருகன்.
''அடச் சீ... வாயை மூடு மனுசா... கலப்படம் பண்ணணுமாம் கலப்படம். அதுவும் எதுல, நம்ம கற்பக விருச்சம். வெயில்லயும், மழையயும் பெரிசா எடுத்துக்கிடாம... வெட்டவெளிப் பொட்டல்ல தவங்கெடந்து, தன் தலையில ஏறி மிதிக்கிற பனயேறி மக்களுக்கு, பாலத் தர்ற மாதிரி தர, பயினியிலயா கலப்படம் பண்ணணும்கறீரு மனுசரே...
''பன மரத்தையோ, பயினியையோ வெளையாட்டாவா நெனைக்கிறீக... நம்மள காக்கறதுக்காக நாராயணரு ஏற்பாடு பண்ணின பத்திரகாளியம்மன், அவ பிள்ளைகளான நம்மை காப்பாத்துறதுக்காக படச்சதுதான் பன மரம். அதோடத் தலைய வளச்சுப்பிடிச்சி பயினிய எறக்கி பாலாத் தந்தாளாம்.
''அதான் பனையில கெடக்கற மனுசனுவல்லாம், யாரக் கண்டாலும் பட்டய்க்கி ஓல போட்டு, வயிறாரப் பயினியக் குடுத்து அனுப்புறானாம். கடவுளு குடுத்த பயினியிலயோ அல்லன்னா கருப்பட்டி, கல்கண்டுன்னு எதுல கலப்படம் பண்ணினாலும், ஏழேழு சென்மத்துக்குப் பாவம் வந்து சேரும். எவன் கலப்படம் பண்ணினாலும் பண்ணிட்டு போகட்டும், நமக்கு அந்தப் புத்தி ஆவாது.''
''பொழைக்கத் தெரியாத பொண்டாட்டியக் கெட்டுனவன் எப்பிடிளா பணக்காரனா ஆவ முடியும்... நீ சொல்ற கதயச் சொல்லிகிட்டிருக்கிறவ சொல்லிட்டு போவ வேண்டியதுதான். பொழப்புத்தான் பொரட்டிப் பொரட்டி அடிக்கும்.
''இந்தக் காலத்தில பணத்துக்குத்தாம்ளா மருவாதி. நீ சும்மாக் கெட. எம்மவன ஒரு டாக்குட்டராக்கணும்ன்னா இப்படித்தான் செஞ்சாவணும். நாளையே சீனி மூட்டைய வாங்கிட்டு வந்து, வேலய ஆரம்பிச்சிற வேண்டியது தான்.''
''இதுதான் ஒம்ம முடிவா மனுசரே?''
''ஆமாளா... நெதம், 10 எட கருப்பட்டின்னாலும், 10 - 12 ஆயிரம் வரும். ஒரு நாளைக்கி, 12 ஆயிரம்ன்னா ஒரு மாசத்துக்கு, 3 லட்சத்துக்கு மேல. கையில வெண்ணய வச்சிகிட்டு எவம்ளா நெய்க்கு அலைவான்? கருப்பட்டியில சுளுவாக் கலப்படம் பண்ணிப்புடலாம்... நம்ம கதிரேசன கடன் வாங்காமயே நா படிக்க வைப்பேன்... சொன்னாக் கேளு.''
''மொதல்ல நாஞ் சொல்லறத நீங்க கேளும். நான் பொறந்த பொறப்பிலருந்து, பயினி கூட ஒரு பாசத்தோட தான் பழகிட்டு வந்திருக்கேன். அதுக்குள்ள கலப்படம் பண்றதுக்கு ஒரு இம்மியளவு கூட எனக்கு மனசு ஒப்பாது. இப்பிடி சம்பாத்தியம் பண்ணுற பணத்தில படிச்சி, எம் புள்ள டாக்குட்டரு ஆனான்னா நான் நாண்டுகிட்டு செத்துருவேன்.
''இப்பிடி கலப்படம் பண்ணித் தர்ற பணத்த வாங்கி அவன் படிக்கறத விட, பேசாம படிப்பத் துாக்கிக் குப்பையிலப் போட்டுட்டு பனயேறிப் பொழைக்கலாம்... ஏழ பாள சனங்க சோத்துக்கு வழில்லாம பட்டினி கெடக்கும். ஆனா, அடுத்தவங் குடியக் கெடுக்காது. பட்டினிக் கெடந்து சாவலாம்...
''பணத்துக்காகப் பாவம் பண்ணக் கூடாது. நீரு இப்படிதான் கலப்படம் பண்ணணும்ன்னு முடிவெடுத்தா, எடுத்துக்கிடும் மனுசரே... ஆனா, நா இந்தப் பக்கமே வர மாட்டேன்... ஒம்ம சங்காத்தமே எனக்கு வேண்டாம்ன்னு நா எங்கயாவது போயிருவேன் பாக்குறியா?'' கருப்பட்டி ஊற்றிக் கொண்டிருந்த வள்ளி, இடையில் நிறுத்தி, திரும்பி அமர்ந்து சீற்றத்தோடு முறைத்தாள்.
''கருப்பட்டி ஊத்துறத எதுக்கு நிறுத்திட்டே... நாஞ் சொன்னா நீ கேக்கவா போற? பொண்டாட்டி இப்பிடியிருந்தா ஆம்புள என்னாள செய்ய முடியும்... நீனே இவ்வளவு வைராக்கியமா இருக்கறச்ச, நா மட்டும் எதுக்கு ஆசப்படணும்? உட்டுற்றம்ளா, என் திட்டத்தையே கை உட்டுற்றேன்... போதுமா?''
''நெசந்தானா மனுசரே... நானும் பயந்தே போயிட்டேன். என்னடா, இந்த பாசக்கார மனுசருக்கு புத்தி பேதலிச்சுப் போச்சேன்னு... நாங் கும்பிடுற என் சொயம்புலிங்கய்யா என்னிய கைவுடல... அந்த சாமி நம்ம பிள்ளையையும் கை உட்டுறாது மனுசரே,'' என, சந்தோஷத்தோடு இடையில் நிறுத்திய வேலையை, மீண்டும் துவங்கினாள்.
கருப்பட்டி ஊற்றி முடிக்கவும், அவர்களின் மகன் கதிரேசன் சந்தோஷமாக ஓடி வந்தான்.
''அம்மா...'' குரல் கேட்டு திரும்பினாள், வள்ளி.
''எம்புள்ளா வந்துட்டியா... ஏம்ல இப்டி எறைக்க எறைக்க ஓடியாற?''
''நா டாக்டராகப் போறேம்மா.''
''என்னல சொல்த நீ?''
''அம்மா... இப்ப அரசாங்க பள்ளிக்கூடத்துல படிச்சவங்களுக்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு குடுக்கறதனால, நான், 'நீட்'ல வாங்கின மார்க்குக்கு எனக்கு இஷ்டப்பட்ட காலேஜுல எடம் காத்திருக்கும்மா.''
'பணம் கட்டணமாக்கும்?' முருகனும், வள்ளியும் கேட்டனர்.
''வேண்டாம், லட்ச லட்சமா கட்ட வேண்டாம். 'பீஸ்' மட்டும் கட்டினா போதும். 4ம் தேதி கவுன்சிலிங். நானும், அப்பாவும் சென்னைக்கு போயி, நமக்கு பிடிச்ச காலேஜுல எடத்த வாங்கிட்டு வரவேண்டியது தான். எல்லாம் நீ கும்பிடற சாமியும், அப்பாவோட ஒழைப்பும்தாம்மா காரணம்,'' சந்தோஷத்தில் குதுாகலித்தான்.
''அப்பாவால ஒண்ணும் இல்ல மக்கா... ஒங்கம்மகிட்டருக்கிற நியாயமும், தர்மமும் தான் காரணம்ய்யா,'' கண்ணீர் மல்க சொன்னான், முருகன்.
பதிலேதும் சொல்லாமல் எழுந்து நின்று, சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் இருக்கும் திசையை நோக்கி, கண் மூடி கும்பிட்ட வள்ளி, நெடுநெடுவென நின்றிருந்த பனை மரங்கள் எனும் கற்பக விருட்சங்களையும் கண் மூடி கை கூப்பினாள்; முருகனும் தான்!
தாமரை செந்துார்பாண்டி

