தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கலைவாணர் என்.எஸ்.கே. (20)

கலைவாணர் என்.எஸ்.கே. (20)

கலைவாணர் என்.எஸ்.கே. (20)


PUBLISHED ON : ஜன 15, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 15, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆதௌ கீர்த்தனாரம்பத்தில்...' என்று தான், காலட்சேபம் செய்யும் பாகவதர்கள், ஹரி கதையை, ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், அதிலும் ஒரு புரட்சியை செய்தார், கலைவாணர். அவர், 'கிந்தனார்' காலட்சேபம் செய்யும் கிருஷ்ண பாகவதராக மாறி, 'படார்' என்று கதையை துவங்கி, வந்தவர்களை திகைப்படைய வைத்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ண பாகவதராக மாறியது, எதிர்பாராத செயல். நடிகை, டி.ஆர்.ராஜகுமாரி, சென்னை அபிபுல்லா சாலையில், புது வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்யவிருந்தார். அவ்விழாவில், சங்கீதக் கச்சேரி நடத்த, பிரபல பாடகி ஒருவரை ஏற்பாடு செய்திருந்தார் கலைவாணர்.

புதுமனை புகுவிழா நடைபெற ஒரு வாரம் இருந்த நிலையில், ஒருநாள் காலையில், கிருஷ்ணா பிக்சர்ஸ் லேனா செட்டியார் பங்களாவிற்கு சினத்தோடு காரில் வந்திறங்கினார் கலைவாணர். அங்கே, லேனா செட்டியார் மற்றும் உடுமலை கவி ஆகியோர் இருந்தனர். அவர்கள் அருகில் வந்தவர், 'என்ன, இப்படியாகி விட்டதே... ராஜகுமாரி வீட்டு விசேஷத்துல, இனி யாரை பாட்டுக் கச்சேரி செய்யச் சொல்வது...' என்று, தமக்குள் பேசியபடி, இங்கும் அங்குமாக நடை போட்டார்.

லேனா செட்டியாரும், கவிஞரும், 'என்ன விஷயம்...' என்று கேட்க, 'ராஜகுமாரி வீட்டு விழாவில், பாட ஒப்புக் கொண்டிருந்த பாடகி, இப்ப போன் செய்து, பாட வர இயலாது'ன்னு சொல்றார்...' என்று கோபத்தோடு, அவர்களிடம் தெரிவித்தார்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அப்போது, உடுமலைக் கவி, 'கிந்தனார்ங்கிற பெயர்ல, வேடிக்கையாக, ஒரு காலட்சேபம் நடத்தலாம்ன்னு, சில நாட்களுக்கு முன் பேசினோமே நினைவிருக்கா...' என்று கேட்டார்.

'இருக்கு...' என்றார், கலைவாணர்.

'அதை இப்பொழுதே, செட்-அப் செய்திடலாம்; புதுமையான நிகழ்ச்சியாக இருக்கும். நீ, கிருஷ்ண பாகவதராக மாறி, ராஜகுமாரி வீட்டு கிரகப்பிரவேச விழாவில் காலட்சேபம் செய்துடு...' என்று ஐடியா கொடுத்தார்.

அந்த யோசனை, கலைவாணருக்கு நல்லதாக தோன்றினாலும், ஒரு வாரத்திற்குள் அந்நிகழ்ச்சியை, சிறப்பாக அமைத்து விட முடியுமா என்ற கவலையும் எற்பட்டது. ஆனால், கவிஞரும், செட்டியாரும், உற்சாகப்படுத்தவே, கிந்தனார் காலட்சேப அமைப்பில், இரவு பகலாக ஈடுபட்டார் கலைவாணர்.

அதற்கென்று, உடுமலைக் கவி எழுதித் தந்த பாடல்களை, பொருத்தமான மெட்டுகளில் அமைத்து, பாடி மனப்பாடம் செய்தார் கலைவாணர். தேவையான தமாசுகளை இடம் பார்த்து பொருத்தினார். புளிமூட்டை ராமசாமி மற்றும் பின் பாட்டுக்காரர் ஆகியோருடன், ஒத்திகைகள் மும்முரமாக நடைபெற்றன.

கிரகப்பிரவேசம் அன்று, பாகவதருக்குரிய பஞ்சகச்சம் அணிந்து, சரிகை வேட்டியை, மேல் உத்திரியமாக தரித்து, 'கமகம'வென்று, நறுமணம் கமழும் சந்தனம் பூசி, கிந்தனார் காலட்சேபத்தை, மகத்தான முறையில் அரங்கேற்றினார், கலைவாணர். ஏராளமான பிரமுகர்களும், ரசிகர்களும் கிருஷ்ணனின் புதுமுறை காலட்சேபம் கண்டு, கேட்டு பரவசமுற்றனர்.

கதையின் துவக்கத்தில், 'படார்' என்று ஆரம்பித்து, சில நிமிடம் இடைவெளி தந்து, பின், 'விடப்படார், கைவிடப்படார்' என்றெல்லாம், படிப்படியாகச் சொல்லி, கடைசியாக, 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்...' என்று துவக்கப் பாடலைப் பாடி முடித்ததும், வந்திருந்தோர் கரகோஷம் எழுப்பி, மகிழ்ந்தனர்.

கிந்தனார் கதையை காலட்சேபமாக மேடையேற்றிய போது, சிறிது அச்சம் அடைந்த மதுரம், 'நந்தனாரை கேலி செய்து, தயாரிக்கப்பட்ட இதைக் கேட்டால், ஆஸ்திகர்கள் ஆத்திரமடைவர்...' என்ற தன் எண்ணத்தை கலைவாணரிடம் தெரிவித்தார்.

அதனால்,காலட்சேபம் ஆரம்பிப்பதற்கு முன், 'கிந்தனார் வேடிக்கையான கதையென்றும், யாருடைய மனமும் புண்படுவதற்காக எழுதப்பட்டது அல்ல...' என்று, அறிவிப்பு செய்தார், கலைவாணர். இது, நல்ல பலனை அளித்தது.

'திருப்பங்கூருக்கு தன் தோழர்களோடே வந்து சேர்ந்தான், கிந்தன்; அது என்ன பெரிய பட்டணமா... இல்லே; சின்ன ஊரு. அந்த ஊர்லே, ஒரே ஒரு புள்ளையார் கோவில் இருந்தது; அந்த புள்ளையாருக்கும், தும்பிக்கை ஒடைஞ்சிருந்தது. ஒடைஞ்ச புள்ளையாரை, அங்கே போய் ஏன் பாக்கணும், இங்கேயே பாக்கலாமே...' என்று, கிருஷ்ண பாகவதராகிய கலைவாணர், காலட்சேபம் செய்தபடி, தனக்கு பின் இருக்கும், புளிமூட்டை ராமசாமியை, சுட்டிக் காட்டுவார். அப்போது அவரும் சிரிப்பார்; மக்களும் சிரிப்பர்! அக்காலட்சேபத்திற்கு நடுவே, பல நகைச்சுவைகளை புகுத்தி, எல்லாரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார், கலைவாணர்.

அத்துடன், காலட்சேப கலையை, வெறும் பொழுது போக்காக மட்டுமின்றி, திருமணம் மற்றும் கலை விழாக்களிலும், அரசியல் மாநாடுகளிலும், வெற்றிகரமாக நடத்தினார், கலைவாணர்.

ஈரோட்டில் நடந்த கிந்தனார் காலட்சேபத்தைக் கேட்ட ஈ.வெ.ரா., 'நாட்டுக்கு நல்லது செய்யவும், முன்னேற்றவும், கிருஷ்ணன் போன்றோர் பெருஞ்சேவை செய்கின்றனர். இவ்வளவு பெரிய புரட்சிகரமான செயல் செய்து, அதில், பெரும் வெற்றி பெற்றிருக்கும் கிருஷ்ணனை பாராட்டுகிறேன்...'என்று குறிப்பிட்டார்.

ஒருமுறை, கிந்தனார் காலட்சேபத்தை சிதம்பரத்தில் நடத்துவதற்காக சென்றிருந்தார், கலைவாணர். ஆனால், 'அங்கே காலட்சேபத்திற்கு எதிர்ப்பு இருக்கும்; ஆஸ்திகர்கள் ஆத்திரமடைந்து கிளர்ச்சி செய்வர்...' என்று, அவரிடம் சிலர் தெரிவித்தனர். ஆனாலும், கலைவாணர் பயப்படாமல், 'இதில், ஆஸ்திகர்கள் மனம் புண்பட எதுவுமில்லை. என்னுடைய கிந்தன், வேடிக்கை பையன். அவன் என்ன செய்கிறான் என்பதை, சிதம்பரத்து ஆஸ்திகர்களும் கேட்டு விட்டுப் போகட்டுமே...' என்றார்.

ஆனால், சிதம்பரத்தில் நடைபெற்ற கிந்தனார் காலட்சேபத்தில், எவ்விதமான கிளர்ச்சியும், எதிர்ப்பும் கிளம்பவில்லை. மாறாக, ஏராளமான ஆஸ்திகர்கள், அதைக் கேட்டு, வாய் விட்டு சிரித்தனர். சிதம்பரத்து ஆஸ்திகர்களையும் சிரிக்க வைத்த தனிச்சிறப்பை, 'கிருஷ்ண பாகவதர்' பெற்றார்.

காஞ்சிபுரத்தில், ஒருமுறை, கிந்தனார் காலட்சேபம் நடைபெற்ற போது, அதைக் கேட்க, அண்ணாதுரை மற்றும் திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களும் வந்திருந்தனர். காலட்சேபம் முடிந்ததும், அறிஞர் அண்ணாதுரையின் இல்லத்திற்கு சென்றார், கலைவாணர்.

கிந்தனார் கதையை பற்றிக் கூறி, 'உன்னுடைய காலட்சேபத்தை மக்கள் மிகவும் ரசித்தனர்; அக்காட்சியை நான் கண்டேன்...' என்றார், அண்ணாதுரை.

'நானும் கூட கண்டேன்... மேடைக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் மிகவும் ரசித்தார்...' என்று, அதை ஆமோதிப்பவர் போல் சொல்லி, 'நான் குறிப்பிட்டது, என்னுடைய கிந்தனார் காலட்சேபத்தைப் பற்றியல்ல; அந்த மனிதர் ரசித்தது, என் கையில், 'பளபள'வென்று மின்னிக் கொண்டிருந்த வைர மோதிரத்தை...' என்று சொல்லவே, அங்கிருந்த அனைவரும் வாய் விட்டு சிரித்தனர்.

கிந்தனார் காலட்சேபத்தை பற்றி, எழுத்தாளர் கல்கி, 'ஜாதி உணர்ச்சியை போக்கி, கல்வியின் பெருமையை நிலைநாட்டும் கிந்தனார் காலட்சேபம், எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை...' என்று எழுதினார்.

தமிழகம், இதற்கு முன், எத்தனையோ கலைஞர்களை கண்டிருக்கிறது; பாராட்டியிருக்கிறது; அவர்களின் கலை தொண்டுகளை புகழ்ந்திருக்கிறது. ஆனால், கலைவாணரை போன்ற அதிசய கலைஞரை கண்டதில்லை. அவர், மக்களின் மாசுகளை துடைக்க, தம் அருமையான நகைச்சுவைகளை, சரியானபடி பயன்படுத்தினார். தாம் ஈட்டிய பொருள்களையெல்லாம், மக்களுக்கே செலவிட்டு, மனமகிழ்வு கொண்டார்.



- முற்றும்

நன்றி: வ.உ.சி., நூலகம்

பதிப்பாளர் மற்றும் நூல் விற்பனையாளர்.

மா. பாலசுப்ரமணியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us