PUBLISHED ON : ஜன 15, 2017

நன்றாக படிக்காவிட்டால், 'நீ எல்லாம் மூடை தூக்கத்தான் லாயக்கு...' என்று திட்டுவர் பெற்றோர். ஆனால், படிப்பதற் காகவே மூடை தூக்குகின்றனர், சில கல்லுாரி மாணவர்கள்.
விடிந்தும், விடியாத காலை வேளையிலேயே, களைகட்ட ஆரம்பித்து விடுகிறது, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டம், கீழச்சீவல்பட்டி வாரச்சந்தை. சிறிய, பெரிய லாரிகளில் காய்கறி மூட்டைகள் சந்தைக்குள் வர, அம்மூட்டைகளை லாரிகளிலிருந்து இறக்கி, அந்தந்த கடைகளுக்கு கொண்டு செல்லும் பணியினை சுறுசுறுப்பாக செய்கின்றனர், மூடை தூக்கும் தொழிலாளர்கள்.
அவர்களில், மெக்கானிக்கல் இன்ஜீனிரிங் படிக்கும் வெங்கடேஷ் மற்றும் சூரியா; எம்.எஸ்சி., விலங்கியல் படிக்கும் விக்னேஷ், பி.எஸ்சி., மாணவர் சண்முகம் போன்றோரும் இருக்கவே, ஆச்சரியப்பட்டு அவர்களை அணுகினோம்...
'நாங்க, கஷ்டப்படுற குடும்பத்த சேர்ந்தவங்க. பள்ளிக்கல்வியை தாண்டி, மேலே படிக்க வசதியில்ல. ஆனா, கல்லுாரியில் சேர்ந்து, விருப்பப்பட்ட படிப்பை படிக்கணும்ன்னு ஆசை. அதனால, படிப்புக்கான செலவுகளை நாமே பார்த்துக்கணும்; அதுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்ச போதுதான், மூடை சுமக்கும் கூலி வேலை இருப்பது நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. இதில் எந்த சங்கடமும் எங்களுக்கு இல்லை; மாறாக, எங்க உழைப்புல படிக்கிறோம்ங்ற பெருமைதான் இருக்கு...' என்றனர் ஒரே குரலில்!
'திருப்புத்தார், காரைக்குடி, கிழச்சீவல் பட்டின்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் வாரச்சந்தை கூடும். காலை, 4:00 மணியிலிருந்து, 8:00 மணி வரை வேலை. வேலையை பொறுத்து ஒரு நாளைக்கு, 200 ரூபாயில் இருந்து, 400 ரூபாய் வரை கிடைக்கும். இதன்மூலம், படிப்பு, உடை மற்றும் எங்கள் செலவிற்கு போக வீட்டிற்கும் கொடுக்க முடியுது; அத்துடன், காலையில் உடற்பயிற்சியாகவும் இருக்கு...' என்று குறிப்பிட்டனர்.
இவர்களை அறிமுகப்படுத்திய மூடை சுமக்கும் தொழிலாளர் அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு, 'இது போல இன்னும் சில மாணவர்கள் இருக்கிறாங்க; படிப்பு முடிச்சு வேலைக்கு போகும் போது சொல்லிட்டு போவாங்க; பெருமையா இருக்கும். அவர்கள் போவதும், புதுசாய் மாணவர்கள் வருவதும் நடந்துகிட்டேதான் இருக்கு. 'நல்லா படிக்கணும்ப்பா அதுதான் முக்கியம்'ன்னு சொல்லித்தான் இங்கே வரச்சொல்வோம். அதே போல இந்த மாணவர்கள் யாருமே அரியர்ஸ் இல்லாமல் நல்லா படிக்கிறாங்க. இவர்களது படிப்பிற்கு எங்களால் இந்தளவிற்காகவது உதவ முடிகிறதே என்பதில் திருப்தி...' என்றார்.
படிக்கும் போதே ஆண்ட்ராய்டு போன், சினிமா, பப் என்று ஆடம்பரத்திற்காக காலம், பணம், உடம்பு என வாழ்க்கையை விரையமாக்கும் மாணவர்கள், இவர்களைப் பார்த்து திருந்தி, நன்றாக படித்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும்!
- எல்.எம். ராஜ்
