தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கறார் கண்ணம்மா!

கறார் கண்ணம்மா!

கறார் கண்ணம்மா!


PUBLISHED ON : ஜூலை 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெரு முனையில், ப்ளாஸ்டிக் பாயை விரித்து, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் என, பசுமை மாறாத காய்கறி குவியல்களை பரப்பியிருந்தாள், கண்ணம்மா.

'கண்ணம்மா, நல்ல காயாக தான் பார்த்து வாங்கிட்டு வருவா. அவகிட்ட காய்கறிகள் நல்லா இருக்கும். ஆனால், விலையை மட்டும் குறைச்சுத் தரமாட்டா...' என, அவளைப் பற்றிய கணிப்பை வைத்திருந்தனர், அந்த தெருவாசிகள்.

''இன்னைக்கு காலிபிளவர், கீரை மட்டும் வாங்கிட்டு வாங்க. கண்ணம்மாகிட்ட, பட்டர் பீன்ஸ் இருந்தால் மார்க்கெட்டில் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. நாளைக்கு, செழியன் வர்றான். அவனுக்குப் பிடிக்கும்,'' என்றாள், கமலா.

''சரி சரி, கதவை தாழ் போட்டுக்க,'' என கிளம்பினார், ஓய்வுப்பெற்ற வக்கீல் சம்பத்.

காலிபிளவர் நல்லதாக எடுத்தவர், ''கீரை கட்டு, 20 ரூபாயா, அநியாயம் கண்ணம்மா. கட்டு சின்னதா தான் இருக்கு. விலையைக் குறைக்கக் கூடாதா?'' என்றார்.

''வக்கீல் ஐயா, உங்க வாதமெல்லாம் கோர்ட்டில். கீரை புதுசா இருக்கு. பழைய கீரை இல்லை; இதான் விலை. வாங்கிட்டு போங்க,'' என்றாள், கண்ணம்மா.

''நாளைக்கு இருந்தால் பழைய கீரை தான். விலையைக் குறைச்சுத் தந்தால் இன்னைக்கே வித்துடும்.''

''கீரை பழசுன்னா, விற்க மாட்டேன். மாட்டுக்கு கொடுத்துடுவேன்.''

''பழசு, விற்கலைன்னாலும் பரவாயில்லை. விலையைக் குறைத்து தரமாட்ட, அப்படித்தானே?''

''சரி, வக்கீல் ஐயா... அப்படியே வச்சுக்குங்க,'' என்று சொல்லி, அடுத்தடுத்த வியாபாரங்களை கவனிக்க ஆரம்பித்தாள்.

சம்பத்திற்கு கோபம் வரத்தான் செய்தது. என்ன செய்வது, அடுத்த தெருவில் ஒரு காய்கறிக் கடை இருக்கிறது. அங்கு, இவளைப் போல புதிதாக வைத்திருக்க மாட்டார்கள். பழசும் கலந்திருக்கும்.

வீட்டுக்கு வந்தவுடன், வாங்கி வந்த காய்கறிகளை அடுப்பு மேடையில் வைத்து, ''கமலா... இந்த காய்கறி கடை கண்ணம்மாவிற்கு வாய் கொஞ்சம் அதிகம். ஒரு நயா பைசா கூட குறைக்க மாட்டேன்கிறா... அவள் சொன்ன விலை தான். இந்த கீரைக்கட்டு, 20 ரூபாய்,'' என்றார்.

''தெரிந்த கதை தானே... அவகிட்ட வாங்கற காய்கள் நல்லதா, புதுசா இருக்கும். ஏன் அவகிட்ட போய் பேரம் பேசறீங்க,'' என்றாள், கமலா.

''அதுக்குன்னு இப்படி இருக்கக் கூடாது. 'வக்கீல் ஐயா, உங்க வாதத்தை கோர்ட்டில் வச்சுக்குங்க'ன்னு சொல்றா, கமலா.''

அதைக் கேட்டதும், கமலாவுக்கு சிரிப்பு வந்தது. இவர், பேச்சு அவளிடம் எடுபடவில்லை.

முனிசிபாலிடி ஸ்கூல் கேட் அருகில் நிற்கும் வாட்ச்மேனிடம், ''இங்கே, சுமதி டீச்சர் வேலை செய்யறாங்கள்ல, அவங்களைப் பார்க்கணும்,'' என்றாள், கமலா.

''அந்த பேரில் இருவர் இருக்காங்க. நான்காம் வகுப்பு, சுமதி டீச்சர் தானே?'' என்றான், வாட்ச்மேன்.

''ஆமாம்!''

''அதோ அந்த காரிடாரில், 'வெயிட்' பண்ணுங்க. போய் சொல்லிட்டு வரேன், உங்க பேரு என்ன?'' என, கேட்டு சென்று, திரும்பி வந்து, ''வரேன்னு சொன்னாங்க. யாரோ ஒரு மாணவியோட அம்மா, எதுக்கோ வாக்குவாதம் பண்ணிட்டு இருக்காங்க; வந்துடுவாங்க,'' என்றான்.

அங்கு விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்தபடி நின்றாள், கமலா.

சிறிது நேரத்தில் அங்கு வந்தாள், சுமதி.

''வா கமலா... ஏன், நேரில் தேடி வந்துட்ட?'' என்றாள்.

''எல்லாம் போனில் சொன்னது தான். 'கன்பார்ம்' பண்ணிக்க தான், நேரில் வந்தேன். அடுத்த வாரம் திருச்செந்துார், 'ட்ரிப் அரேன்ஜ்' பண்ணியாச்சு. நீ வர்றது உறுதிதானே?'' என்றாள், கமலா.

''ஆமாம் கமலா, கட்டாயம் வரேன். மூணு நாள், 'லீவு' சொல்லிட்டேன். ரொம்ப நேரம் காக்க வச்சுட்டேனா. உள்ளே வாயேன், ஒரு பெண்ணோட அம்மா வந்து, வாக்குவாதம் பண்ணி, நேரம் போனதே தெரியல,'' சற்று எரிச்சலுடன் சொன்னாள், சுமதி.

அதே நேரம், வாசல் கேட் அருகில் வந்த கண்ணம்மாவைப் பார்த்தாள், கமலா.

கமலாவைப் பார்த்ததும், புன்னகைத்து, ''என்னம்மா, ஸ்கூலுக்கு வந்திருக்கே... சுமதி டீச்சர், உனக்கு தெரிஞ்சவங்களா?'' என்றாள், கண்ணம்மா.

''கமலா, இவள் தான் நான் சொன்ன மாணவியின் அம்மா,'' என்றாள், சுமதி.

''என்ன விஷயம் கண்ணம்மா... ஸ்கூலுக்கு சண்டை போட வந்தியா. உன் மகள் இங்கே படிக்கிறாளா?''

''அது ஒண்ணுமில்லைம்மா. சின்ன விஷயம் தான். என் பொண்ணு அபர்ணாவுக்கு கலர் பென்சில் டப்பா, நேத்து தான் வாங்கிக் கொடுத்தேன். இன்னைக்கு தொலைச்சுட்டு வந்துட்டா. கேட்டால், டீச்சர் வாங்கி அதை இன்னொரு பெண்கிட்டே கொடுத்துட்டாங்கன்னு சொல்றா.

''அந்த பெண், கலர் பென்சில் பாக்ஸ் அவளோடதுன்னு சொன்னாளாம். என் பாக்சில் கருப்புக் கலர் பென்சில் இருக்காது. எங்க அம்மா, காய்கறிக் கடைக்கு கணக்கு எழுத வேணும்ன்னு எடுத்துக்கிட்டாங்கன்னு சொல்லியிருக்கா, அபர்ணா. டீச்சர், சரியா விசாரிக்காமல் கொடுத்துட்டாங்களாம். அதான் கேட்க வந்தேன்.''

''இரண்டு பேரும் ஒரே மாதிரி வச்சிருந்திருக்காங்க. கடைசியில் அவள் பாக்ஸ், வீட்டில் இருந்துச்சுன்னு, கொண்டு வந்து கொடுத்துட்டா. இருந்தாலும், 'அது எப்படி விசாரிக்காமல் கொடுத்தீங்க. தப்பு இல்லையா'ன்னு என்கிட்ட இவ்வளவு நேரம் வாக்குவாதம் பண்ணிட்டாங்க,'' என்றாள், சுமதி.

''என்னை மன்னிச்சிடுங்க டீச்சர். நாங்கெல்லாம் ஏழைங்க. உழைச்சா தான் நாலு காசு பார்கக முடியும். நஷ்டங்களை எங்களால் தாங்க முடியாது. அது மட்டுமில்லை, நேத்து ராத்திரி, அபர்ணா அழுதுகிட்டே இருந்தா. அதான் நேரில் வந்து கேட்கலாம்ன்னு வந்தேன்.

''அவள், என் மகள் இல்லை. என் புருஷன், நான் அழகா இல்லைன்னு நாலு வருஷம் முன், இன்னொருத்தியோடு ஓடி போயிட்டான். அபர்ணாவோட அம்மா நாலு வீட்டுல வேலை பார்த்து, மகளோடு வாழ்ந்தா. உடம்பு முடியாமல், மூணு வருஷத்துக்கு முன் அவளும் போய் சேர்ந்துட்டா.

''உறவு ஜனம் யாரும், அபர்ணாவை கூட்டிட்டு போகலை; ஆசிரமத்தில் விட்டுடுவோம்ன்னாங்க. யாருமில்லாத எனக்கு ஒரு ஆதரவாக இருக்கட்டும்ன்னு, நானே வளர்க்கிறேன்னு பொறுப்பை ஏத்துக்கிட்டேன்.

''ஏதோ என்னால முடிஞ்சது. அதுக்கு பிழைக்கிற வழியை சொல்லி கொடுத்தா, பெரியவளானதும், இந்த சமூகத்தில் அவளை நிலைநிறுத்திப்பா. எங்களால காசு, பணம் சேர்த்து வைக்க முடியாது. சம்பாதிப்பது கைக்கும், வாய்க்கும் சரியாயிடும். ஆனால், நிலையான கல்விச் செல்வத்தை அவளுக்கு கொடுப்போம்ன்னு ஸ்கூலில் சேர்த்து படிக்க வைக்கிறேன்,'' என்று கூறி கண் கலங்கினாள், கண்ணம்மா.

சம்பத், பையுடன் கடைக்கு கிளம்பும்போது, ''கண்ணம்மா, பட்டர் பீன்ஸ் வாங்கிட்டு வந்திருப்பா... அவகிட்ட பேரம் பேசாமல், சொன்ன விலையைக் கொடுத்து வாங்கிட்டு வாங்க,'' என்றாள்.

''என்னடி சொல்ற கமலா, நிச்சயம் கூடுதல் விலை தான் சொல்வா. நமக்கு ஒரு கிலோ போதும், கேட்டால் தான் குறைச்சுதருவா.''

''வேண்டாங்க... அவளுக்கு அது நியாயமான விலையா தான் இருக்கும். இனி, அவகிட்டே பேரம் பேச வேண்டாம். நல்ல பொருளா கொடுக்குறா... அதுக்கு ஒரு ரூபா, இரண்டு ரூபா கூடுதலா கொடுத்தால் தப்பில்லை,'' என்றாள், கமலா.

'அநியாய விலை சொல்றான்னு, என்னோடு சேர்ந்து சொல்லும் கமலாவுக்கு இன்று என்ன ஆயிற்று...' என, நினைத்தபடியே, கண்ணம்மா கடையை நோக்கி நடந்தார், சம்பத்.

ராஜ் பிரபா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us