PUBLISHED ON : மார் 09, 2014

சாவதைத்தவிர, வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்திருந்தாள் கவுசல்யா. அப்பா வயலுக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த, பாலிடால் டப்பாவை எடுத்து, யாருக்கும் தெரியாமல், ஒரு பைக்குள் வைத்துக் கொண்டாள். தன்னை புரிந்து கொள்ளாமல் பேசிய அப்பாவை நினைத்தபோது, அவளுக்கு அழுகை பீறிட்டது. அந்த வேதனையான நிகழ்ச்சிகள், மறுபடியும் மனசுக்குள் திரையிட்டன.
அன்று, கம்ப்யூட்டர் சென்டரை விட்டு, வெளியே வந்த கவுசல்யாவைப் பார்த்து, முனீஸ்வரி அப்படியொரு கேள்வியைக் கேட்பாள் என்று, அவள் எதிர்பார்க்கவில்லை.
'என்னடி... கம்ப்யூட்டர் கத்துக்க வந்த இடத்துல காதலா? அந்த அஜய் கூட, அவ்வளவு நேரம் என்னடி பேச்சு உனக்கு? வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகும்ன்னு தெரியும்ல...' என்று, பேசிக் கொண்டே போனாள் முனீஸ்வரி.
முனீஸ்வரி, கவுசல்யாவின் தோழி மட்டுமல்ல, ஒன்றுவிட்ட சித்தப்பா மகள்.
'புரியாம பேசாதடி, அஜய் சார் எனக்கு கோச்சிங் மாஸ்டர், அவ்வளவு தான். என்னோட கம்ப்யூட்டர் ஆர்வத்த பாத்து, டைம் முடிஞ்ச பிறகும், ரிஸ்க் எடுத்து நிறைய நேரம் கத்து தர்றாரு. இத தப்பா நினைச்சுக்கிட்டு, கண்டபடி கற்பனை செய்து, கதை கட்டி விட்டுடாத...'
'கவுசல்யா, இந்த பசங்களே இப்படித்தான்டி, நம்ம மேல அக்கறை இருக்கிற மாதிரி நடிச்சு, மடக்கப் பாப்பாங்க. நாம தான் கவனமா இருக்கணும். அந்த அஜயைப் பத்தி உனக்கு தெரியாது. ஏற்கனவே, இந்த கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை பார்த்த ஒரு பொண்ணு கூட பழகியிருக்கான். இப்போ, அவள கழட்டி விட்டுட்டு, அடுத்த ஆளுக்கு அலைஞ்சிட்டு இருக்கான். நீ அகப்பட்டுக்காத... அவ்வளவு தான் சொல்வேன்...'
'அஜயைப் பத்தி எனக்கு எந்த விவரமும் தெரியாது. அவரைப் பத்தி தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல. என்னைப் பொறுத்தவரைக்கும், அஜய் சார் எனக்கு, கம்ப்யூட்டர் மாஸ்டர். பாடத்தை தாண்டியும், பல நல்ல விஷயங்களை கத்துதர்றார்...
'இன்னைக்கு கூட, ஒரு தனியார் நிறுவனம், தேசிய அளவுல நடத்தின, 'ஐ.ஐ.டி., குவிஸ்-விஸ் போட்டிக்கு, ஆன்-லைன்ல ஆன்சர் செஞ்சேன். நெட்ல சரியான நேரத்துக்கு ஆன்சர் செய்ய, என்னோட சிஸ்டத்துக்கு, சிக்னல் பிராப்ளம் வராம பாத்துகிட்டாரு...' என்றாள் கவுசல்யா.
'அவனப் பத்தி, இவ்ளோ பேசறத பாத்தா... நீ அவன்கிட்ட கவுந்துட்டன்னு தான் தோணுது. நீ அடுத்த வருஷம், பிளஸ் 2 எழுதப்போற. உன்னை என்ஜினியர் ஆக்கணும்ன்னு, உங்க அப்பா கனவு கண்டுகிட்டு இருக்காரு. நீ எல்லாத்தையும் காலி செய்திடுவேன்னு நினைக்கிறேன். நான், இந்த விஷயத்தை, உங்க அப்பாகிட்ட நிச்சயமா சொல்லத்தான் போறேன்...'
'லூசு மாதிரி பேசாத. ஒரு பையன் கூட ஒரு பொண்ணு பேசினா, அது 'லவ்'வாதான் இருக்குமா... நாம கம்ப்யூட்டர் அறிவ வளர்த்துக்கணும்ன்னுதான், அரசே நமக்கு இலவசமா, லேப்-டாப் தர்றாங்க. அதை வாங்கி வீட்டுல பத்திரமா பூட்டி வைக்கச் சொல்றியா இல்ல, மத்தவங்க மாதிரி, பாதி விலைக்கு வித்துட சொல்றியா? பிளஸ் 2 முடிச்ச பிறகு, எந்த கோர்சுக்கு அப்ளை செய்தாலும், ஆன்-லைன்லதான் அப்ளை செய்யணும். கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இல்லாம, எந்த கோர்சும் படிக்க முடியாது. அதான் கம்ப்யூட்டர் கத்துக்கறேன். நீ பாட்டுக்கு எதையாவது வீட்ல சொல்லி, என்னை படிக்க விடாம ஆக்கிடாத...' என்று, கோபமாக சொன்னாள்.
'என்னடி கொஞ்சம் விட்டா, ஓவரா பேசிக்கிட்டே போற. எல்லாம், அந்த அஜய் கொடுக்கிற தைரியமா... இரு, பெரியப்பா கிட்ட சொல்லி, உன் வாய அடைக்கச் சொல்றேன்...' என்று, கோபமாக பேசி விட்டுப் போனாள் முனீஸ்வரி.
பிளஸ் 2 முடித்து விட்டு, ஐ.ஐ.டி.,யில் சேர வேண்டும் என்பது தான் கவுசல்யாவின் கனவு. நெட்டில் தேடினால், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு, ப்ரி ஸ்டடி மெட்டிரியல்ஸ் சிக்கும். அதை, அப்படியே டவுன்லோடு செய்து, பிரின்ட்-அவுட் எடுத்துக் கொள்வாள். இதனாலே, அவளுக்கு பிரவுசிங் சென்டர் போக பிடிக்கும்.
'ஏய்... நீங்களும் கம்ப்யூட்டர் சென்டருக்கு வாங்கடி; நிறைய கத்துக்கலாம். நமக்கு கொடுக்குற இலவச லேப்-டாப்ல நெட் கனெக் ஷன் கொடுத்து, புகுந்து விளையாடலாம்...' என்று, பலமுறை தன் தோழிகளை கூப்பிட்டிருக்கிறாள்.
'தூரமா இருக்குடி; பஸ் புடிச்சு, டவுனுக்கு போய்ட்டு வரணும்; எங்க அப்பா அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டார்...' என, ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்லி, ஒதுங்கிக் கொண்டனர்.
இவள், யாரையும் கண்டு கொள்ளாமல், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும், கம்ப்யூட்டர் சென்டரே கதி என்று, கிடப்பாள்; அதேசமயம், படிப்பிலும் படு சுட்டி. பத்தாம் வகுப்பில், மாவட்ட அளவில், முதலிடத்தில் வந்தாள். கடைசியாக நடந்த, பிளஸ் 1 இறுதி திருப்புத் தேர்வில், இவள் தான் ஸ்கூல் பர்ஸ்ட்! அதனால் தான், கவுசல்யாவின் அப்பாவும், 'அவள் விருப்பப்படியே படிக்கட்டும்' என்று, விட்டிருந்தார். ஆனால், முனீஸ்வரி அப்படி பேசி விட்டுப் போன பின், நிலைமை, தலைகீழாக மாறியிருந்தது.
'பளார்' என்று, அப்பா ஓங்கி அறைந்த போது, அதை சற்றும் எதிர்பார்க்காத கவுசல்யா, கன்னத்தை தடவியபடி, நிலை குலைந்து போனாள்.
'கழுத... இந்த காதல், கருமாந்திரம் செய்றதுக்காகத்தான், கம்ப்யூட்டர் படிக்க போறேன்னு சொன்னியா...அந்த முனீஸ்வரி வந்து, கதை கதையா சொல்லிட்டு போறா. இனி, நீ ஸ்கூலுக்கு போக வேணாம், ஒரு மண்ணுக்கும் போக வேணாம்; வீட்லயே கெட...' என்று, தன் மகளை பார்த்து, சாமி வந்தது மாதிரி கத்தினார் பாண்டிச்சாமி.
'அப்பா... என்னை நம்புங்கப்பா... நான் எந்தத் தப்பும் செய்யல. அஜய் சார் எனக்கு, கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுக்கற மாஸ்டர். அதத் தவிர அவரைப் பத்தி, வேற எதுவுமே எனக்கு தெரியாதுப்பா. அந்த முனீஸ், தேவையில்லாம என்னை பத்தி தப்பா சொல்றாப்பா...' என்றாள்.
'அவள குறை சொல்லாத... அவ தங்கமான பொண்ணு. உன் மேல இருக்குற அக்கறையில, வீடு தேடி வந்து, விஷயத்த சொல்லிட்டு போறா...'
'அப்பா இனிமே, அஜய் சார்கிட்ட ஒரு வார்த்தை கூட தேவையில்லாம பேச மாட்டேம்ப்பா. முனீஸ்வரி சொல்ற மாதிரியெல்லாம், நான் தப்பா நடக்கலப்பா. இன்னும் ஒரு மாசத்துல, இந்தக் கோர்ஸ் முடிஞ்சுடும்ப்பா. அப்புறம், அந்தக் கம்ப்யூட்டர் சென்டர் பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன். தயவு செய்து, என்னை படிக்க விடுங்கப்பா...'
'உன்ன, அங்க அனுப்பிட்டு, நாங்க வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்க முடியாது. பொட்டப்புள்ளைக்கு, இந்தப் படிப்பு போதும். நல்லா படிக்கிறியேன்னு, வெளியில அனுப்பினா, படிக்கிற புள்ள புத்திய காமிச்சிட்டில்ல...
'பசங்களை தலை நிமிர்ந்து பாக்க கூடாதுன்னுதான், உன்ன, பொம்பளப் புள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டிருக்கேன். அதையும் தாண்டி, நீ அந்தப் பய கூட பழகுறேன்னா, உனக்கு எவ்வளவு திமிரு. நாளைக்கே பள்ளிக்கூடத்துக்கு போயி, உன், 'டிசி'யை வாங்கிட்டு வந்துடறேன். போதும் நீ படிச்சு கிழிச்சது...'
'அப்பா உங்களுக்கு என் மேல நம்பிக்கையில்லன்னா, வேற சென்டர்ல கூட சேர்த்து விடுங்கப்பா... நான் நல்லா படிக்கணும்ப்பா. படிப்பை மட்டும் நிறுத்திடாதீங்கப்பா...' கவுசல்யா கதறுவதை கண்டு கொள்ளாமலே, போய் விட்டார் பாண்டிச்சாமி.
அடுத்த நாளே, அப்பா, 'டிசி'யை வாங்கி விடுவார் என்று, கவுசல்யா எதிர்பார்த்திருக்கவில்லை.
'நீ படிச்ச படிப்புக்கு இந்த தாள் போதும். கல்யாணம் செய்து கொடுக்கறப்ப, கவர்ன்மென்ட் காசு கொடுக்குதுல்ல, அதுக்கு ஆவும்...' டி.சி.,யை பெட்டியில் வைத்து பூட்டி, அப்பா அலட்சியமாக சொன்ன போது, மயக்கம் போட்டே விழுந்து விட்டாள் கவுசல்யா.
'நல்லா படிக்குற பொண்ணாச்சே... ஏன் இப்படி திடீர்ன்னு நிறுத்திட்டாங்க' என்ற விவரத்தை தெரிந்து கொள்வதற்காக, கவுசல்யாவின் வீட்டிற்கு வந்தார், இயற்பியல் ஆசிரியர் பாஸ்கர்.
அப்பா சொன்னதக் கேட்டு, பாஸ்கர் வாத்தியாரும், அறிவுரை சொல்ல ஆரம்பித்தது, இன்னும் அதிர்ச்சியாக இருந்தது கவுசல்யாவிற்கு.
'என்ன கவுசல்யா... நல்லா படிக்கிற பொண்ணு நீ. அடுத்த வருஷம் உன்னை வச்சி தான், ஸ்டேட் ரேங்க் எடுக்கலாம்ன்னு நினைச்சிட்டிருந்தோம். இப்படி செய்துட்டியே... இன்னிக்கு ஸ்கூல் முழுக்க, உன்னை பத்தி தான் பேச்சு. 'கவுசல்யாவா... இப்படி'ன்னு எல்லாரும் கேக்குறாங்க...'என்றார்.
'சார், ஒரு விஷயத்த, என்ன ஏதுன்னு கூட விசாரிக்காம, இப்படி பேசுறீங்களே... இதோ பாருங்க சார்... நான் நெட்ல தேடி எடுத்த மெட்டீரியல்ச...'
கவுசல்யா எல்லா பிரின்ட்-அவுட்களையும் கொண்டு வந்து, பாஸ்கர் வாத்தியார் முன் கொட்டினாள்.
'அதெல்லாம் சரிம்மா... நீ நல்லா படிக்கிறது தான் ஊருக்கே தெரியுமே! நீ ஏன் இப்படி செய்தேன்னு தான் கேட்கறேன்...'
தலையில் அடித்துக் கொண்டாள் கவுசல்யா.
'என்ன சார் நீங்களும் திரும்பத் திரும்ப அதையே சொல்றீங்க... அவர், என் கம்ப்யூட்டர் மாஸ்டர் சார். கோர்ஸ் முடிஞ்ச பின், அவர் யாரோ... நான் யாரோ...'
'நெருப்பில்லாம புகையாது கவுசல்யா. பசங்க, இப்படித்தான் ஆரம்பிப்பாங்க. அப்புறந்தான் காதல், கல்யாணம்ன்னு கலாட்டா செய்வாங்க, நீ சின்ன புள்ள... ஏமாந்துடுவே...'
தன் ஆசிரியரிடம் அதிகம் பேச முடியாமல் முகத்தைப் பொத்திக்கொண்டு, மறுபடியும் அழுதாள் கவுசல்யா.
'பாரு கவுசல்யா... அப்பா பேச்சை கேட்டு மனச மாத்திக்கோ. காதல், கத்திரிக்கா, பார்க்ன்னு சுத்தாம, நல்ல பொண்ணா இருக்கணும். அதான் என்னோட விருப்பம்...' என்ற, பாஸ்கர் வாத்தியார், தன்னால் முடிந்த அளவுக்கு, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிவிட்டு சென்றிருந்தார்.
அதற்குப்பின் தான், தற்கொலை முடிவுக்கு வந்தாள் கவுசல்யா. 'இவ்வளவு தூரம், அவமானப்பட்ட பின், எதற்காக நான் உயிரோட இருக்கணும்! ஊர் பூரா, என் மானம் போயிடுச்சி... அக்கம் பக்கத்துல அப்பா அசிங்கப்படுத்திட்டார். பாஸ்கர் வாத்தியார், பள்ளிக்கூடம் முழுக்க அசிங்கப்படுத்திட்டார். இனிமே மத்தவங்க முகத்திலே எப்படி முழிப்பேன். என் பிரண்ட்சுகள எல்லாம் எப்படி பார்ப்பேன். பொம்பளைப்புள்ளையா பொறந்ததே பெரிய பாவம்...' என, சுய பச்சாதாப உணர்ச்சிகள், கவுசல்யாவை ஆக்ரமித்துக் கொண்டன. அதிலிருந்து விடுபட முடியாமல் தவித்தாள்.
'ஐ.ஐ.டி., கனவு கரைந்து விட்டது. பள்ளிக்கூடம் போவதே பகல் கனவாய் போச்சு. இனிமேல், உயிரோடு இருந்து என்ன செய்யப் போறோம்...' என்று நினைத்த கவுசல்யாவிற்கு, வீட்டுக்குள்ளயே அடைந்து கிடப்பது, பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.
அவள் பாலிடால் பாட்டிலை எடுத்து, பத்திரப்படுத்தி கொண்டாள்.
''அம்மா... வயல்ல ஆடு, மாடு மேய்ஞ்சுக்கிட்டு இருக்காம். நான் வயல பாத்துட்டு வர்றேன்,'' என்று அம்மாவிடம், ஒரு பொய்யை சொல்லிவிட்டு, பண்ணைத் திடலுக்கு கிளம்பினாள் கவுசல்யா.
திடீரென்று, கம்ப்யூட்டர் சென்டருக்கு, ஒரே ஒரு தடவை போய்விட்டு வந்துவிடலாம் என்று, அவள் மனசு துடித்தது. 'யார் கண்ணிலும் படாமல் போகணுமே' என்ற பயத்தில், கைகால் உதறலெடுத்தது.
துணிச்சலை வரவழைத்து, பஸ் ஏறி, டவுனிலிருந்த கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றாள். அவளைப் பார்த்ததும், ''வாம்மா... கவுசல்யா, ஒரு வாரமா சென்டர் பக்கம் ஆளையே காணோமே,'' அக்கறையோடு கேட்டார் அஜய் மாஸ்டர்.
''உடம்புக்கு முடியல சார்... இன்னைக்கும் காய்ச்சல் இருக்கு; கொஞ்ச நேரம் பிரவுசிங் மட்டும் செய்துட்டு கிளம்பணும் சார்.''
''ஓ.கே., கவுசல்யா, நாலாவது கேபின் ப்ரீயா இருக்கு, அங்கபோயிப் பாரு.''
கம்ப்யூட்டருக்கு முன்னால் உட்கார்ந்து, சிஸ்டத்தை ஆன் செய்து, 'குவிஸ் விஸ்' வெப்சைட்டை திறந்தாள்.
'இன்னைக்குத்தானே, போட்டி முடிவுகள் வர்ற தேதின்னு சொல்லிருந்தாங்க...'
அவசர அவசரமாய் ரிசல்ட் பக்கத்திற்கு, 'லிங்க்' கொடுத்தாள்.
''ஓ... வாவ்! மாஸ்டர்... 'ஐ.ஐ.டி., குவிஸ் விஸ்' போட்டில, எனக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு,'' கம்ப்யூட்டர் சென்டரே அதிர, உரக்கக் கத்தினாள் கவுசல்யா.
வேகமாய் வந்து, மானிட்டரை பார்த்த மாஸ்டர் அஜய், ''ஓ... க்ரேட் கவுசல்யா. அவ்ளோ சீக்கிரம் யாரும் வாங்க முடியாத பரிச நீ ஈசியா வாங்கியிருக்க... எதிர்காலத்துல நிச்சயமா, பெரிய ஆளா வருவ. வாழ்த்துகள்! இந்த பரிசு மூலமா, உனக்கு ரெண்டு லட்ச ரூபா கிடைக்கும். அது மட்டுமல்ல, ஐ.ஐ.டி., என்ட்ரன்ஸ் எக்சாம் எழுத, ப்ரீ கோச்சிங் கிளாசுக்கும், உன்னை செலக்ட் செய்திருக்காங்க. இனிமே, இந்த சென்டரோட தேவையே உனக்கு இருக்காது. ஆல் தி பெஸ்ட் கவுசல்யா.''
வாழ்த்தி, வழி அனுப்பினார் கம்ப்யூட்டர் மாஸ்டர்.
''ரொம்ப தேங்க்ஸ் மாஸ்டர். உங்க உதவியை, நான் என்னைக்கும் மறக்கமாட்டேன்.''
ரிசல்ட் பக்கத்தின், 'பிரின்ட் அவுட்'டை வாங்கிக் கொண்டே சொன்னாள் கவுசல்யா.
ரிசல்ட், 'பிரின்ட் அவுட்'டைப் பாக்க பாக்க, கவுசல்யா சந்தோஷத்தில் பறப்பது போல உணர்ந்தாள்.
'நமக்கு, எவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைச்சுருக்கு. எத்தனையோ பேருக்கு மத்தியில, நான் முதலாவதா வந்திருக்கேன். இதைக் கேட்டால், அப்பா, அம்மா, எவ்வளவு சந்தோஷப்படுவாங்க. மத்த மாணவர்களுக்கெல்லாம், 'அட்வைஸ்' செய்ற நிலையில் இருக்கும் நான், எதுக்காக அவங்க பேச்சக் கேட்டு, சாகணும். ச்சே... என்ன ஒரு முட்டாள்தனமான முடிவ எடுக்கப் போனேன். இப்படி, ஒரு பரிசு வாங்கவும், இது மாதிரி சாதனை செய்யவும் தான், நான் கம்ப்யூட்டர் சென்டருக்கு போனேன்னு, ஊருக்கு போயி சொல்லணும்...'
அவள் ஒரு தீர்மானத்தோடு, கம்ப்யூட்டர் சென்டரைவிட்டு வெளியே வந்தாள்.
'தன்னம்பிக்கையோடு முன்னேறும் பெண்களுக்கு, இந்த சமுதாயம் எந்த தடையும் விதிக்க முடியாதுன்னு ஊருக்கே உரக்கச் சொல்லணும். அதுக்கு, நாம்தான் முன்னுதாரணமா இருக்கணும்' என்று நினைத்து, பாலிடால் பாட்டிலோடு, தாழ்வு மனப்பான்மையையும், தற்கொலை எண்ணங்களையும், ரோட்டோரம் இருந்த குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிய கவுசல்யா, கம்பீரமாக நடந்து போனாள்.
ஆதலையூர் சூரியகுமார்
