PUBLISHED ON : மார் 09, 2014

மகிழ்ச்சி ராஜாங்கம் செய்யட்டும்!
என்றும் மகிழ்ச்சி
இதுவே மந்திரம்!
மழை பொழிகிறதா
வெயில் காய்கிறதா
வெறுக்க வேண்டாம்
குடை பிடிப்போம்
குதூகலமாய் செல்வோம்!
சேறு அடித்துவிட்டதா...
நீரிருக்கு
தூய்மையாக்க!
இழப்பா...
அழ வேண்டாம்
ஈட்டிக் கொள்ளலாம்!
நோயா...
நூதன மருந்துகள்
வேதனை போக்கும்!
கவலை நுழைகிறதா...
மனதின் வாசலை
மாற்றி அமைப்போம்!
கண்ணீர் திவலையா...
கண் ஒளியில்
காய வைத்திடுவோம்!
புள்ளிபோன்ற கவலையையே
பூதாகரமாக்கும்
உள்ளம் தவிர்ப்போம்!
சிறுதானிய மகிழ்ச்சியிலேயே
குறுமுகை விண்மீன்
குளிர் ஒளியை ரசிப்போம்!
ஏற முடியாதவனுக்கே
அடிவாரத்தில்
ஆயிரம் துயரங்கள்!
துயரத்தின்
உயரத்தில்
துள்ளும் மகிழ்ச்சி
துரத்திப் பிடிப்போம்!
வானம்
நிலவொளியை
மண்ணுக்கு அனுப்புகிறது
பதிலுக்கு நாம்
பரவச மனங்களைப்
பறக்க விடுவோம்!
பறக்கும்
திசையெங்கும்
இசை பரப்பும்
பறவை போல்
நாம்
வாசம் செய்யும்
இடமெங்கும்
மகிழ்ச்சி
ராஜாங்கம் செய்யட்டும்!
— கே.ஜி.ராஜேந்திரபாபு, சென்னை.
