PUBLISHED ON : ஜூன் 18, 2023

தப்புக்கு - ஒரு
அப்பு வாங்கி
பதிந்த ரேகைகள்...
தவறே கூடாதென
தடயங்களாகப் பதிந்த
முதல் தகவல் அறிக்கை
அப்பாவின் சட்டம்!
நெஞ்சு நிமிர்த்தலையும்
மரியாதை நிமித்தத்தையும்
உரிய இடத்தில் காட்ட
புத்தகம் புரட்டாத
ஆசிரியராய்
அப்பாவின் பாட நுால்!
காலை கடனுக்கும் - முறையான
மாலை பயிற்சிக்கும்
கால அட்டவணை தரும்
உடற்பயிற்சி இயக்குனராய்
அப்பாவின் ஒழுங்கு!
மனமும், ஆரோக்கியமும்
மணம் வீச
மேனி சுத்தத்தையும்
பேணிட அக்கறையுடன் வரும்
மானிட சுகாதார நிலையமாய்
அப்பாவின் கட்டுப்பாடு!
பாசமிகு சகோதரர்களை
பங்காளி ஆக்கிடாமல்
பங்கு சொத்தில்
பஞ்சாயத்து வராமல்
துல்லியமாக
பாகப்பிரிவினை செய்யும்
நீதித்துறையாய்
அப்பாவின் தீர்ப்பு!
பொய்யெனும் பூட்டை
சாய்க்கும் சாவி
உண்மை என்பதை
நெற்றிக்கண் திறந்தாலும்
நக்கீரனாய்
நின்று உணர்த்தி
தர்ம சக்கரம் சுழற்றும்
அறநிலையத் துறையாய்
அப்பாவின் பூர்வீகம்!
மாய, 'வலை'தளங்களில்
மாட்டிக்கொள்ளாமல்
மந்திர சொல்லின்
மகத்துவம் கற்று
மண்ணின் மைந்தர்களாக
தலை நிமிர்ந்திடும்
தலைமுறைகள்
நாங்கள்
உங்களுக்கு வழங்கிட
பெருமைப்படுகிறோம்
சிறந்த குடிமகன் விருதை
ஒவ்வொரு
அப்பாக்களுக்கும்!
— சு. பிரபாகர்,
வில்லாபுரம், மதுரை.
